![](pmdr0.gif)
ஆதவன் சிறுகதைகள்
தொகுப்பு: இந்திரா பார்த்தசாரதி
aatavan ciru kataikaL
nA. pArtacArati (ed.).
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India
for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
R. Aravind, Ashok Paskalraj, Govindarajan, Senthan Swaminathan, Kanthavel Swaminathan,
S. Karthikeyan, Nalini Karthikeyan, V. Ramasami, K. Ravindran, Santhosh Kumar Chandrasekaran,
S Sundar, Ponnu Ganesh Kumar , Venkatesh Jambulingam, R. Navaneethakrishnan and Thamizhagazhvan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2011.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
ஆதவன் சிறுகதைகள்
தொகுப்பு: இந்திரா பார்த்தசாரதி
-
Source:
அனைத்திந்திய நூல் வரிசை
"ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு"
இந்திரா பார்த்தசாரதி
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
ஊக்குவிப்பாளர்:விநியோகிப்பாளர்
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிமிட்.
41-பி,சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098
முதற்பதிப்பு:1992 (சக 1914)
©: திருமதி ஹேமலதா சுந்தரம்
ISBN 81-237-0108-X ரூ. 38.00
Aadhavan Short Stories (Tamil)
வெளியீடு: டைரக்டர். நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
ஏ-5, கிரீன் பார்க், புது டில்லி - 110016
-----------------------------------------------------------
உள்ளடக்கம்
0 | முன்னுரை | vii |
1. | முதலில் இரவு வரும் | 1 |
2. | மூன்றாமவன் | 9 |
3. | கருப்பை | 27 |
4. | நிழல்கள் | 35 |
5. | ஞாயிற்றுக் கிழமைகளும், பெரிய நகரமும் அறையில் ஓர் இளைஞனும் | 48 |
6. | சிகப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் | 66 |
7. | கால்வலி | 89 |
8. | ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும் | 115 |
9. | அப்பர் பெர்த் | 142 |
10. | ஒரு தற்கொலை | 164 |
11. | இண்டர்வியூ | 178 |
12. | இறந்தவன் | 196 |
முன்னுரை
'கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போட லாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.'
'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில், ஆதவன் தம்முடைய சிறுகதைகளைப் பற்றி இவ்வாறு விமர்சிக்கிறார். அவர் 'கூடாரங்கள்' என்று குறிப்பிடுவது அவருடைய சிறுகதைகளை. இந்தப் புத்தகந் தான் ('முதலில் இரவு வரும்') அவருக்குச் சாகித்திய அகெதமி விருதை வாங்கித் தந்தது.
இலக்கியத்தைப் பற்றி ஆதவன் கொண்டிருக்கும் கொள்கையையும், மேற்காணும் கூற்று நிறுவுகிறது. ஆரவார மற்ற அமைதியான சூழ்நிலையில், தனிமையின் சொர்க்கத் தில், தன்னுருவ வேட்டையில் இறங்கி, தன் அடையாளத்தைக் காணும் முயற்சியே இலக்கியம்.
இவ்வடையாளம், சூன்யத்தில் பிரசன்னமாவதில்லை 'நான் - நீ' உறவில்தான் அர்த்தமாகிறது. இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் என்பதால் இது நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது எண்ணத்தின் நிழல். வாசகன் மீது நம்பிக்கை வைக்காமல் தனக்குத்தானே உரக்கச் சிந்தித்துக் கொண்டிருக்கும் எழுத்து இலக்கியமாகாது.
ஆதவன் தன் கதைகள் முழுவதிலும் 'உரக்கச் சிந்திக்கிறார்' என்பது உண்மை. ஆனால் வாசகனுடன் உரையாடுகின்றோம் என்பதை அவர் மறக்கவில்லை என்பது தான் அவர் எழுத்தின் வெற்றி.
அவர் தன் எழுத்தின் மூலம், சமூகத்துடனிருக்கும் தம் உறவை, அடையாளத்தை, மிக நளினமாக, கலை நேர்த்தியுடன் உறுதிப்படுத்திக் கொள்ள முயலுகிறார்.
தில்லியில் சிறுவயதிலிருந்தே இருந்து வந்த இவர், தமிழில் எழுதுவதென்று துணிந்ததே, தம் வேரைத் துண்டித்துக் கொள்ள முயலவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அதே சமயத்தில், தமிழ் நாட்டின் தற்காலத்திய கலாச்சாரச் சூழ்நிலையிலிருந்து ஒதுங்கி, ஒரு பார்வையாளராக இச் சமூகத்துக்குள் தம் முகத்தைத் தேடுவதையே ஓர் இலக்கிய விளையாட்டாகக் கொண்டிருப்பதுதான் இவர் எழுத்தின் பலம்.
இவர் தம்முடைய நூல்களுக்கு எழுதிய பல முன்னுரைகளில், தாம் எழுதுவதை, ஒரு 'விளையாட்டு' என்றே குறிப்பிடுகிறார். 'விளையாட்டு' என்றால் வெறும் பொழுதுபோக்கு என்று கொள்ளக் கூடாது. தத்துவக் கண்ணோடு பார்க்கும்போது, எல்லாமே, பாவனைதான். 'அலகிலா விளையாட்டுடையார்' என்று முத்தொழில் செய்யும் இறைவனையே குறிப்பிடுகிறான் கம்பன். இலக்கியமும் முத்தொழில் ஆற்றுகின்றது. எழுத்தாளனை இவ்வகையில் இறைவன் என்று கூறுவதில் எந்தத் தடையுமிருக்க முடியாது.
'விளையாட்டு' என்று கொள்ளும் சிந்தனையில்தான், எழுத்தாளனால் தன்னைச் சமூகத்தோடு ஆரோக்கியமான உறவு கொண்ட நிலையில், தத்துவார்த்தமாக 'அந்நியப் படுத்தி'க்கொள்ளவும் முடியும். இதுதான் அவனுக்குப் 'பார்வையாளன்' என்ற தகுதியைத் தருகிறது. 'பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன், உலகத்தினர் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையோ அல்லது சமரஸம் செய்து கொள்வதையோ, ஒதுங்கிய நிலையில் தன் கை விரல் நகத்தைச் சீவியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்று ஜேம்ஸ் ஜாய்ஸ் கூறுவது போல், எழுத்தாளனும் இறைவன் நிலையிலிருந்து, பார்வையாளனாக இருக்கும் போதுதான் அவன் படைக்கும் இலக்கியம் கலைப் பரிமாணத்தைப் பெறுகின்றது.
ஆதவன் கூறுகிறார்: 'சொற்களைக் கட்டி மேய்ப்பது எனக்குச் சின்ன வயதிலிருந்தே பிடித்தமான காரியம். அவற்றின் இனிய ஓசைகளும், நயமான வேறுபாடுகளும், அவற்றின் பரஸ்பர உறவுகளும், இந்த உறவுகளின் நீந்துகிற அர்த்தங்களும், எல்லாமே எனக்குப் பிடிக்கும். மனிதர்களையும் எனக்குப் பிடிக்கும். மனிதர்களுடன் உறவு கொள்வது பிடிக்கும்.'
சொல், தனி மனிதன் சமூகத்தோடு கொள்கின்ற உறவை நிச்சயப்படுத்தும் ஒரு கருவி. சமூகரீதியாக உணர்ச்சிப் பரிமாற்றங்களைத் தெரிவிப்பது சொல். சமுதாயத்தில் மனிதச் சந்திப்பினாலோ அல்லது மோதலினாலோ ஏற்படும், அல்லது ஏற்பட வேண்டிய மாறுதல்களை அறிவிப்பது சொல் விஞ்ஞானத்தின் பரிபாஷை கலைச்சொற்கள். (Technical language) இலக்கியத்தின் பரிபாஷை அழகுணர்ச்சி (aesthetics). சமுதாய ஒப்பந்தமான சொல், இலக்கியமாகப் பரிமாணமமுறும்போது, அது அச்சொல்லை ஆளுகின்றவனின் உள் தோற்றமாக (Personality) அவதாரம் எடுக்கின்றது. இதுதான் அவனது சமூகத்தில் அவனுக்கேற்படும் அடையாளம். சொல்தான் சமுதாய உணர்ச்சியைத் தெரிவிக்கும் கருவி. சமுதாய ஒப்பந்தத்தின் செலாவணி.
ஆதவன் தம் உருவ வேட்டையில் தம்மை இழந்து விடவில்லை. 'இயற்கையைப் பற்றிப் பாடிய இருவர்களில் ஷெல்லி இயற்கையில் தம்மை இழந்தார். வேர்ட்ஸ்வொர்த் தம்மைக் கண்டு தெளிந்தார்' என்று விமர்சகர்கள் கூறுவார்கள். ஆதவன் தன்னை, 'சொற்களை மேய்த்து' 'விளையாடி'க் கண்டு கொள்ளும் முயற்சிகளாகத்தாம் அவர் எழுத்து அமைகின்றது.
இவருடைய 'அடையாளம்' என்ன? அவரே எழுதுகிறார். என்னுடைய 'நானை' இனம் கண்டு கொள்வதற்காக நான் எழுதுவதுண்டு. என்னுடைய 'நானி'லிருந்து விலகி இளைப்பாறவும் எழுதுவதுண்டு. எல்லா 'நான்'களுமே நியாயமானவையாகவும், முக்கியமானவையாகவும் படும். ஆகவே, என்னுடைய 'நான்' என்று ஒன்றை முன் நிறுத்திக் கொள்வதும், பிறருடைய 'நான்'களுடன் போட்டியிடுவதும் குழந்தைத் தனமாகவும் தோன்றும். ஆமாம். நான் ஓர் 'இரண்டு கட்சி ஆசாமி'
இரண்டு கட்சி ஆசாமி எனும்போது அவர் தம்மை ஒரு Paranoid Schizo Phrenic ஆகச் சித்திரித்துக் கொள்ளவில்லை. உளவியல் தர்க்கத்தின்படித் தம்மை வாதியாகவும் பிரதி வாதியாகவும் பார்க்கும் தெளிவைத்தான் குறிப்பிடுகிறார். இதனால், தனிமனிதனுக்கும், சமுதாயத்துக்குமிடையே உள்ள உறவில் காணும் முரண்பாடுகளை அவரால் புரிந்துகொள்ள முடிகின்றது. புரிந்து கொள்கின்றாரேயன்றித் தீர்ப்பு வழங்க முன் வருவதில்லை. இது தம்முடைய பொறுப்பில்லை என்று ஒதுங்கி விடுகிறார்.
இதனால்தான் இவருக்கு இலக்கியம் பற்றிய கொள்கைத் தீவிரம் எதுவுமில்லை என்ற ஓர் அபிப்பிராயம் இவரைப் பற்றி சில இலக்கிய விமர்சகர்களிடையே உண்டு.
இதைப் பற்றியும் அவரே கூறுகிறார்: 'திட்டவட்டமான சில எதிர்பார்ப்புகளைத் திசை காட்டியாகக் கொண்டு இலக்கியத்தில் ஏதோ சில இலக்குகளைக் கணக்குப் பிசகாமல் துரத்துகிற கெட்டிக்காரர்கள் மீது எனக்குப் பொறாமை உண்டு. திசைகாட்டி ஏதுமின்றி, பரந்த இலக்கியக் கடலில் தன் கலனில் காற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட விரும்பும் சோம்பேறி நான். இலக்குகளிலும், முடிவுகளிலும் அல்ல, வெறும் தேடலிலேயே இன்பங் காணும் அனைவரையும் இனிய தோழர்களாக என் கலன் அன்புடன் வரவேற்கிறது!'
எழுத்தாளன் ஒருவனுக்குக் 'கொள்கைத் தீவிரம்' தேவையா என்ற கேள்வி எழுகின்றது. பட்டயத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு, அப்பட்டயத்தை நியாயப்படுத்துவதற்காக எழுதுவதுதான் 'கொள்கைத்தீவிரமா' என்றும் கேட்கலாம்.
படைப்பாளி படைக்கிறான். விமர்சனப் பாதிரி நாம கரணம் சூட்டுகிறான். இதுவே பட்டயமும் ஆகிவிடுகின்றது. பல சமயங்களில், இப்பட்டயத்தையே ஓர் சிலுவையாக எழுத்தாளன் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது தான், அவன் படைப்பாற்றல் ஒரு வரையறைக்குள் குறுகி, அவன் எழுத்து, சலிப்பைத் தரும் ஓர் 'எதிர்பார்க்கக் கூடிய' (Predictable) விஷயமாக ஆகிவிடுகின்றது.
கலையின் சிரஞ்சீவித் தன்மை, அது தருகின்ற 'ஆச்சர்யத்தில்' தான் இருக்கிறது. ஒரே ராகத்தை ஒரு சங்கீத மேதை பல்வேறு சமயங்களில், பல்வேறு விதமாகப் பாடுவது போல. ஆதவன் எழுத்தில் இந்த 'ஆச்சர்யத்தை' என்னால் காண முடிகின்றது. 'ஒரு பழைய கிழவர், ஒரு புதிய உலகம்' எழுதிய ஆதவன் தான், மிக நளினமான காதற் கதைகளும் எழுதியிருக்கிறார்.
ஆனால் எல்லாக் கதைகளிலும், அடிப்படையாக ஒரு விரக்தியை நம்மால் உணர முடிகின்றது. அவர் கதை 'இன்டர்வியூ'வில் வரும் சுவாமிநாதன் கூறுவது. ஆசிரியருடைய மன நிலையையும் பிரதிபலிக்கின்றது. 'முதலாவதாக இருப்பதற்கும் கூச்சம், கடைசியாக இருப்பதற்கும் வெறுப்பு' 'முதலில் இரவு வரும்' என்ற தலைப்பே, இவர் மன இயல்பை வெளிப்படுத்துகின்றது. 'குளிர் காலம் வந்தால், இதற்குப் பிறகு வசந்தம் நிச்சயம் வந்துதானே ஆகவேண்டும்?' என்று ஷெல்லி கூறுகிறான். ஆதவனும் வரவேற்பது 'முதலில் இரவு'; அக்கதையில் ராஜாராமன் சொல்லுகிறான்: 'ராத்திரி, ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடியும் சூரியன் வரும். வெளிச்சமா ஆயிடும். அதுதான் நாளைக்கு'.
நிகழ்காலம் நரகம், வருங்காலம் சொர்க்கம், நிகழ்கால விரக்தியைத் தவிர்க்க முடியாது. ஆனால் 'நாளைக்கு' என்பதும், 'இன்றைக்கு' என்று ஆகிவிட்டால், அப்பொழுதும் சொர்க்கம் நரகமாகிவிடும். அது, நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய 'நாளை'யாக இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புதான் வாழ்க்கையின் கால அட்டவணை.
'ஒரு பழைய கிழவர், ஒரு புதிய உலகம்' என்ற கதையில் ஆதவன் (இக்கதையை எழுதும்போது இவர் வயது 31) ஒரு கிழவரின் அகத்தில் புகுந்து கொண்டு சிந்தனை ஓட்டமாகக் கதையில் சொல்லுகிறார். புற நிகழ்ச்சி ஒவ்வொன்றும் அவருடைய சிந்தனை, விளக்கை ஒளி வீசச் செய்வதற்காகப் பயன்படும் மின்சார 'ஸ்விட்ச்'. மனைவியை இழந்த கிழவர் மகன் வீட்டிலிருக்கிறார். தம் உலகை இழந்து விட்ட தவிப்பில் அவர் புதிய உலகைக் கண்டு மருள்கிறார். அவருக்குப் பிடித்தமான நாவிதன் கடைக்கு முடி வெட்டிக் கொள்ளச் செல்லும்போது, தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும், இக்கால இளைஞர்களைக் கண்டு, புதிய உலகம் இப்படி 'உருப்படியான தீவிரப் பிடிப்பில்லாமலும், நம்பிக்கை இல்லாமலும் ஆழமான எதனுடனும் தம்மைச் சம்பந்தப் படுத்திக் கொள்ளாமலும் இருக்க வேண்டுமா என்று மனம் வருந்துகிறார். தம் உலகத்திய வாழ்க்கை மதிப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்கிறார். தம் மண வாழ்க்கையையும், தம் மகனின் மண வாழ்க்கையையும் பற்றி எண்ணிப் பார்க்கும் போது, இத்தகைய அந்தரங்க உறவுகளில் கூட இக்காலத்தில் போலித் தனம் மேலோங்கி இருக்க வேண்டுமா என்பதுதான் அவர் வேதனை. அவர் மகனும், மகளும் கல்லூரி ஆசிரியர்கள்.
அன்று மாலை பல்கலைக் கழகப் பேராசிரியாகிய மோத்வானியும், அவர் மனைவியும் பேச வருகிறார்கள். மோத்வானி இக்கால அறிவு உலகின் பிரதிநிதி. போலி அறிவு ஜீவி. இடம், வலம், நடு ஆகிய எல்லா அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர். அதாவது, வாழ்க்கையில் வெற்றி அடைவது எப்படி என்று அறிந்தவர். விஸ்கி குடித்துக் கொண்டே, வறுமையற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முயலுவதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த 'ட்ராயிங் ரூம்' சோஷலிஸ்டுகளின் உரையாடலில் பங்கு கொள்ளாமல் கிழவர் ஒதுங்குகிறார். அவருக்கு அன்று காலை மயிர் வெட்டிவிட்ட நாவிதனை போலித் தனமான மனக் கிளர்ச்சியின் வெளியீடாக ஓர் இளைஞன் கத்தியால் குத்தி விட்ட விபரீத செய்தியைக் கெட்கிறார். கள்ளங் கபடமற்ற தன் பேத்தியை இறுகத் தழுவிக் கொள்வதுடன் கதை முடிகிறது.
இளைஞனின் 'அந்நியமாதல்' கதைகளைப் படித்த நமக்கு ஒரு கிழவரின் 'அந்நியமாதல்' கதை ஒரு வேறு வகையான அனுபவம். இக்கிழவர் உலகை வெறுக்கவில்லை. நாவிதனின் ஸ்பரிஸம், முடி வெட்டிக் கொண்டு வெந்நீரில் குளித்தல், நல்ல காப்பி ஆகிய வாழ்க்கையில் சின்ன சின்ன சலுகைகள் கூட அவருக்குச் சொர்க்கமாக இருக்கின்றன. வாழ்க்கையை வெறுத்துப் போலிப் பரவசங்களில் ஆழ்ந்து நிலை கொள்ளாமல் தவிக்கும் இக்கால இளைஞர்கள் மீது தான் இவருக்குக் கோபம்.
வர்க்கப் பேதங்களுடைய சமூகத்தில், தொழில் வளர்ச்சிகளின் காரணமாகச் சமூகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொருளாதாரக் காரணங்களினால் குடும்ப வாழ்க்கை நிலை குலைகின்றது. அடிப்படையில், பிரபுத்துவ சமூக அமைப்பை உடைய ஒரு சமுதாயத்தின் மீது, தொழில் யுக வாழ்க்கைக்குரிய மதிப்புக்கள் சுமத்தப்படும்போது, முரண் பாடுகள் மேலோங்குகின்றன. வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டு வதிலும், போலிப் பரவசங்களிலும், விளையாட்டுக்காகச் செய்யும் வன்முறைகளிலுந்தான் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியுமென்று இளைஞர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு நிறையக் கோபம் இருக்கிறது. யார் மீது என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை; 'இன்று', 'இன்றாக' இருப்பதற்குக் காரணம் 'இன்று', 'நேற்றைய தினத்தின்' தொடர்ச்சிதான் என்று 'நேற்றைய தினத்தை' அடியோடு வெறுக்கும் மனப்பான்மையில், 'நாளை'யைப் பற்றிய நினைவே இல்லாமலிருக்கிறார்கள். பழைமையை அடியோடு அழிக்கும் ஆவேசந்தான் இக்கதையில், அந்த முள்ளங்கி இளைஞனைப் பழமையின் சின்னமாக இருக்கும் நாவிதனைக் கொல்லத் தூண்டுகிறது. ஆனால் கிழவருக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை போய்விடவில்லை.
அந்தச் சிறிய குழந்தையை அக்கிழவர் தழுவிக் கொள்வதாகக் காட்டும் குறியீடு மூலம், ஆதவன், இதை அழகாக விளக்குகிறார். கிழவருக்குப் பழமையின்பாலிருக்கும் பிடிப்பு, போலித் தனமான, வெறுக்கத்தக்க ஈடுபாடன்றி, சமூக உறவுகளில் ஒருவன் தன் 'சுதந்தரத்தை' உணர முடியுமென்று புரிந்து கொள்ளும் கேண்மையுணர்வு. 'சமூக உறவுகள்' என்றால், கிழவரின் மகனுக்கும், மோத்வானிக்குமிடையே இருக்கின்ற போலித் தனமான உறவு அன்று; அவர்களுக்கும், நாவிதர் களுக்குமிடையே உள்ள உறவு, கிழவர் புதிய உலகுக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளத் தயாராகவிருப்பது ஒரு முக்கியமான விஷயம்.
'பழமை நேர்மையும் ஆழமும் கொண்டிருந்தால், ஒருவனால் தன்னை நியாயமான, சரித்திர நிர்ப்பந்தங் களினால் ஏற்படுகின்ற புதிய மாறுதல்களுக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். அத்தகைய உள் வலு அதற்கு உண்டு' என்று ஜார்ஜி மார்க்காவ் கூறுகிறார்:
ஆதவனின் ஒவ்வொரு கதையும் உள் நோக்கிச் செல்லும் பயணம். அப்பயணத்தின் விளைவாகப் புலப்படும் மதிப்பீடுகளின் அடிப்படையில், புற நிகழ்ச்சிகள் பரிசீலனைக் குள்ளாகின்றன.
ஆனால் ஆதவன் தீர்ப்பு வழங்குவதில்லை. மென்மையும், நளினமும், நாசூக்கும் கலந்த நடையின் மூலம், சொல்ல விரும்பும் கருத்தை, எழுத்தின் வடிவத்தின் வழியாக உணர்த்துகின்றார்.
இதுவே அவர் கலையின் வெற்றி.
-- இந்திரா பாத்தசாரதி
.....----------------------------------------------------------
1. முதலில் இரவு வரும்
பஸ் ஒரு 'ட' திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா... மனம் ஒரு துள்ளுத் துள்ளியது...
அவன் இன்னும் இளைஞனாக இதே பூங்காவில் தான் அன்றொரு நாள் அமர்ந்து கோதையிடம் தன் குடும்ப பிரச்சினைகளைச் சொல்லி அழுதான். "எங்கள் அப்பா-அவர் தான் பெரிய பிரச்சினை. வீட்டில் அமைதியைக் குலைக்கும் ராட்சஸன்" என்றான்.
கோதை சிரித்தாள். கன்னத்தில் குழி விழ, நேர்த்தியான பல் வரிசை பளிச்சிட, சிரித்தாள். இந்த நேர்த்தி அவளுடைய டிரேட் மார்க். நேர்த்தி கச்சிதம். அவனுடைய அம்மாவைப் போல அவள் 'வழ வழா கொழ கொழா'வாக இல்லாமலிருந்ததே அவனை அவள்பால் ஈர்த்திருக்கலாம்.
"ஏன் சிரிக்கிறாய்?" என்றான்.
"ரவி, ராமு, பாஸ்கர், யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்கிறார்கள். அவரவர் வீட்டில் அவரவர் அப்பாக்கள்தான் பிரச்சினைகளென்று."
கொழுப்பு! இவள் இவ்வளவு பையன்களுடன் சிநேகிதமாக இருப்பதாக அவன் மிரள வேண்டுமாம். சீண்டல் தளுக்கு. ஆனால் இந்தச் சீண்டல்தான் அவனுக்கு இப்போதெல்லாம் வேண்டியிருந்தது.
"அவர்களுடைய அப்பாக்கள் குடியர்களா?" என்று கேட்டான்.
"இந்தக் காலத்தில் குடிக்காதவர்கள் யார்?"
"அவர்களுடைய அப்பாக்கள் அவர்களுடைய அம்மாக்களை அடிப்பார்களாமா?"
"லுக், அவர்களும் என் நண்பர்கள். அவர்கள் என்னுடன் சகஜமாக உணர்ந்த வேளைகளில் என்னிடம் கொட்டியதை யெல்லாம் எல்லாரிடமும் நான் திருப்பிச் சொல்லுவது நாகரிகம் இல்லை".
"சகஜமாக உணர்ந்த வேளைகளில் என்றால் புரியவில்லையே?"
"சந்தேகப் பிராணி!" என்று அவள் அவன் கை மீது பட்டென்று ஒரு அடி கொடுத்தாள்.
"எல்லாருடனுமே சில சமயங்களிலாவது நாம் சகஜமாக உணருகிறோமல்லவா-நம் அப்பாக்களுடன் கூட?"
அப்பா! குப்பென்று அவனுக்குள் கோபம் பொங்கியது.
"என் அப்பாவுடன் நான் எப்போதுமே சகஜமாக உணர்ந்ததில்லை" என்றான். "அதை அவர் ஊக்குவிப்பதுமில்லை... தன்னை யாராவது நேசிப்பதோ அல்லது தன்னிடம் நேசத்தை எதிர்பார்ப்பதோ அதிகப்பிரசிங்கத்தனம் என்று அவர் நினைப்பது போல் தோன்றுகிறது, அதாவது நேசம் வீழ்ச்சி போல... எனக்கு எப்படி விளக்குவதென்று தெரிய வில்லை".
"அவ்வகை மனிதர்கள் சிலருடன் எனக்கும் பரிச்சயமுண்டு" என்று அவள் அனுதாபத்துடன் தலையை ஆட்டினாள்.
"அப்படியா? எனக்கென்னவோ என் அப்பா மாதிரி ஒரு மிருகம் வேறு எங்குமே இருக்க முடியாதென்றுதான் தோன்றும்...மிருகம்! மிருகம்! ஓ, எப்படி என் அம்மாவை அடித்து நொறுக்குவார் தெரியுமா? ஆனால்... ஃபன்னி... அம்மா அவருடைய வசவுகளையும், முரட்டுப் பாணியையும் உள்ளூர ரசிக்கத்தான் செய்கிறாளோ என்றும் எனக்குச் சில சமயங்களில் தோன்றும்...".
"அப்படி ரசிக்கிற சில பெண்கள் உண்டுதான்"
"உனக்கு இந்தப் பதினெட்டு வயதில் நிறையவே தெரிந்திருக்கிறது".
"ஒன்று மட்டும் தெரியாது".
"என்ன?"
"உன்னைப் பற்றி" என்று அவள் மறுபடி தன் கன்னங்களில் அவனுக்காகக் குழி பறித்தாள்.
"ஸாரி-உங்களைப் பற்றி என்று சொல்ல வேண்டும், இல்லை?"
"சீச்சீ!வேண்டவே வேண்டாம்...நீங்கள், உங்கள், இதெல்லாம் மறுபடியும் என் அப்பாவின் கனிவில்லாத தன்மையையும், என் அம்மாவின் சலிப்பூட்டும் பொறுமையை யும் நினைவூட்டுகிறது...நீ நான் என்றே நமக்குள் பேசிக் கொள்ளலாம். அதுதான் நம்மிடையே நெருக்கத்தைப் பலப் படுத்தும்".
"நீ நீ நீ நீ நீ" என்று அவள் அவனுடைய ஒவ்வொரு விரலாகப் பிடித்து நசுக்கினாள். அவன் விளையாட்டாக அலறினான்...
ஆம். நேற்றைக்கு நடந்தது போல அந்த மாலை நேரம். அந்தப் பூங்கா, அவள் முகத்தில் குமிழியிட்ட உல்லாச வெறி எல்லாம் பசுமையாக நினைவு வருகின்றன. கூடவே ஒரு வெறுமையுணர்வு. "ஆடும்கூத்தை நாடச் செய்தாயென்னை" என்று முணுமுணுக்கிறான்.
"கையைக் கொஞ்சித் தொடுவாய்
ஆனந்தக் கூத்திடுவாய்
அன்னை அன்னை
ஆடுங்கூத்தை நாடச் செய்தாயென்னை..."
கூத்து, இயக்கம்.
வாழ்வென்னும் இயக்கம்.
அவனைச் சீராக இயங்கச் செய்யும் - முழுமையை நோக்கி அழைத்துச் செல்லும் -ஒரு அழகிய உந்து சக்தியாக அவளை அன்று கண்டான். அவன் யாசித்த புத்தம் புதிய ஒரு ஆண் பிம்பத்துக்கு உரைகல்லாக. ஆனால் அவள் மூலம் அவன் பெற்றது புதுமையின் விளக்கமல்ல, பழமையின் விளக்கம் தான்.
அதாவது அன்பின் விளக்கமல்ல, வெறுப்பின் விளக்கம். அன்புதான் வெறுப்பைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
வேடிக்கைதான்.
"காப்பி இந்தா" என்று அம்மா காப்பி டம்ளரை நீட்ட, அவன் கை நீட்டி வாங்கிக்கொண்டான். திடீரென்று நூறு அல்லது நூற்றைம்பது வருடங்கள் பின்னோக்கிச் சென்று விட்டது போலிருந்தது. அவனுடைய தாத்தா அல்லது கொள்ளுத் தாத்தா கூடத்தில் ஈஸிச் சேரில் அமர்ந்திருக்க, அவர்களுக்காக காப்பி எடுத்து வரும் பாட்டி அல்லது கொள்ளுப்பாட்டி; பித்தளை டம்ளரில்தான் எடுத்து வந்திருப்பார்கள். அப்போது எவர்சில்வர் கிடையாது. பித்தளைப் பாத்திரங்களுக்கு-தம்ளர்-கூஜா-குடம்-ஒரு பிரத்தியேக வாசனை உண்டு; கண்ணாடி டம்ளருக்கு வாசனை கிடையாது. அதிக விஸ்கியை ஊற்றுகிற வரையில் அப்பாவும் ஒரு கண்ணாடி டம்ளர் போலத்தான். "அப்பா வாசனை, அப்பா வாசனை என்று சின்ன வயதில் கூறிக்கொண்டிருப்பான். அதாவது அப்பா அவனை முத்தமிடும்போது அடிக்கும் வாசனை. ரொம்ப நாள் கழித்துத்தான் அது விஸ்கி வாசனை என்று புரிந்தது.
அந்த வாசனையை அம்மாவால் சுமுகமாக ஏற்றுக் கொள்ள முடியாததே அவர்களிடையே விரிசல் ஏற்படக் காரணமாயிருந்திருக்கலாம். அல்லது அம்மாவின் வாசனை அப்பாவுக்குச் சலிப்புத் தட்டத் தொடங்கியதுதான் பிரச்சினையா?
மல்லிகை பூ வாசனை.
அந்த வாசனையை அணியும் உரிமையை அம்மா இழந்து ஐந்து வருடங்களாகின்றன. அந்த வாசனைக்கு இன்னமும் உரிமை பெற்றவளான கோதைக்கோ அதில் சிரத்தையில்லை.
அவளுக்கு அந்த வாசனை ஒத்து கொள்ளாது என்பதும் ஒரு காரணம்: அலெர்ஜி.
கோதை என்ற பெயருள்ளவளுக்கு பூ மணம் அலர்ஜியாக இருப்பது நல்ல வேடிக்கைதான்.
"அப்பாஜி!" என்று உ ஷா ஓடி வந்து அவன் காலைக் கட்டிக் கொண்டாள்.
"அப்பா! இன்னிக்கு எனக்கு இங்கிலீஷ் டிக்டே ஷன் எல்லாமே ரைட்டுப்பா!"
"அப்படியா? எங்கே காட்டு?"
உ ஷா தனது அன்றைய ஸ்கூல் சாதனைகளை ஒவ்வொன்றாக அரங்கேற்ற, ராஜாராமன் வெரிகுட், வெரிகுட் என்று ஒவ்வொன்றையும் பாராட்டினான். அவளை அணைத்துக் கொஞ்சினாள். அப்பா நல்ல மூடில் இருக்கிறார். இப்போது எது கேட்டாலும் கிடைத்துவிடுமென்று அவளுக்குப் புரிந்தது.
"அப்பா, எனக்கு ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து ரொம்ப நாளாச்சுப்பா" என்றாள்.
"நிஜமாவா?" "இத்தனை நாளாச்சு" என்று உ ஷா இரு கரங்களையும் பெரிதாக விரித்துக் காட்டினாள்.
"அடேயப்பா! அவ்வளவு நாளாச்சா? சரி, வா".
"பாட்டி, நீயும் ஐஸ் கிரீம் தின்ன வரயா பாட்டி?" "எனக்கு வேண்டாண்டி கண்ணு. நீ போய் சாப்பிடு".
"ஐஸ் கிரீம் ரொம்ப ஜோராயிருக்கும் பாட்டி".
அம்மா சிரிக்க முயன்றாள். ஆனால் புதிதாக குதிரையேற முயன்றது போலிருந்தது. படுதோல்வி. "நீ போய்ச் சாபிட்டுக்கோ. நீ சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி" என்றாள்.
ராஜாராமன் சோர்வுடன் தன அம்மாவைப் பார்த்தான். குழந்தை ஆசையாகக் கூப்பிடுகிறது. பாவம் இவள் வந்தாலென்ன? ஐஸ் கிரீம் சாப்பிட்டாலென்ன?
ஆனால் மாட்டாள். வாழ்கை முழுவதும் வேண்டாம் வேண்டாமென்று சொல்லியே பழகி விட்டது. விலகி விலகி, தனக்குள் சுருங்கிச் சுருங்கியே பழகி விட்டது. பூஜை, மடி, விரதம். அப்பா அம்மாவை மூர்க்கமாக அடித்த அந்த இரவுகள்... அன்பையும் கொடூரத்தையும் பிரிக்கும் கோடு எத்தனை மெலிதானது! அவருடைய அன்புக்கு அதே அலைவரிசையில் அவளிடம் எதிரொலி கிடைக்காமல் போனதே அவர்களிடையே பிரச்சினையாக இருந்திருக்கலாம். அப்பா 'வேண்டும். வேண்டும்' என்ற போது அம்மா 'வேண்டாம், வேண்டாம் என்றிருப்பாள்.
"ஆடும் கூத்தை நாடச் செய்தாயென்னை..."
ஐஸ்கிரீம் பார்லரில் டிஸ்கோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது. உ ஷா தன்னிச்சையாக, அவளையுமறியாமல், அந்த இசைக்கேற்ப குதிக்கத் தொடங்கினாள். குழந்தைகளின் பரிசுத்தம், அந்தந்த நேரத்து ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிற எளிய லாவகம்.
பெரியவர்களான பிறகு நம்முடைய ஆசைகளைப் புரிந்து கொள்வதே கடினமாகி விடுகிறது.
சுற்றிலும் சோபாக்கள் போடப்பட்டிருந்தன. ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு உஷாவுடன் சோபாவில் அமர்ந்தான். பக்கத்து சோபாவில் இரு இளம் ஜோடி ஒரே டம்ளரில் இருந்து இருவரும் மில்க் ஷேக் உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். பாவம், அப்பா! அம்மாவுடன் இப்படி ஒரே தம்ளரிலிருந்து உறிஞ்ச வேண்டுமென்று அவர் ரொம்ப ஆசைப்பட்டிருக்கலாம். இத்தகைய சின்ன சின்ன ஆசைகள் மறுக்கப்பட்டதே அவருடைய உள்ளத்தைக் கடைந்து கடைந்து வெறுப்பு வெண்ணெயைத் திரளச் செய்திருக்கலாம்.
சீப்பிக் குடிக்காத அம்மா.
கடித்துத் தின்னாத அம்மா.
தனக்குத் தானே எப்போதும் பூட்டுப் பூட்டிக் கொள்கிறவள். நெருக்கத்துக்கு அஞ்சுகிறவள்.
அன்பு செலுத்தப் பயம்.
அன்பின் குழந்தைதான் வெறுப்பு.
விஸ்கியும் ரம்மும் அப்பாவுடைய அவமதிக்கப்பட்ட அன்பின் தற்காப்பு நடவடிக்கைகள். "சரிதான் போ சனியனே. உன் தூய்மை எனக்கு வேண்டியதில்லை. நான் என்னை மேலும் மேலும் அழுக்காக்கிக் கொள்கிறேன் என்னிடம் வரவே வராதே" என்று சண்டி செய்வது போல.
அப்பா அழுக்கான, கசங்கின சட்டைகளுடன் ஆபீஸ் போன நாட்கள் உண்டு. மடிப்புக் கலையாத சட்டை, பாண்டுடன் படுத்துத் தூங்கின நாட்கள் உண்டு.
எதிர்ப்பு, எதிர்ப்பு, எதிர்ப்பு.
அம்மாவின் தூய்மைப் பித்துக்கு எதிர்ப்பு.
ஐஸ்கிரீம் பார்லரிலிருந்து வெளிப்பட்டபோது வெளியே இருட்டி விட்டது. "அப்பா, நாளைக்கு ஆயிடுத்தா?" என்று உஷா கேட்டாள். ஐந்து வயது. ஒன்றாம் வகுப்பு. நேற்று, இன்று, நாளை எல்லாம் அவளுக்கு இன்னமும் குழப்பம்தான்.
"இப்ப நாளைக்கு இல்லை... இப்ப ராத்திரி... ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடி சூரியன் வரும். வெளிச்சமா ஆயிடும் - அது தான் நாளைக்கு"
"அப்போ அம்மா வந்துடுவா"
"ஆமாம்"
"அப்பா, அம்மா இப்படி சும்மாச் சும்மா என்னை விட்டுட்டு ஊருக்குப் போனா, எனக்கு பிடிக்கவேயில்லைப்பா".
ஆஃபீஸ் வேலை, என்று அவன் குழந்தைக்குப் புரிய வைக்க முயன்றான். கோதையின் ஆஃபீஸ் முதியோர் கல்வி இலாகா. கருத்தரங்குகள், கிராமங்களில் தகவல் சேகரிப்பு, என்று அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வருகிறது.
வீட்டுக்குத் திரும்பினால் குழந்தைக்கு அம்மாவின் நினைவு மேலும் அதிகமாகுமென்று தோன்றியதால், குழந்தையின் கையைப் பிடித்தவாறு சற்று நேரம் கடைத் தெருவிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். குழந்தையின் முகத்தில் - ஆர்வம் மின்னும் கண்களில் தன் சிறு வயது தோற்றம் தெரிவது போலிருந்தது. சின்னப் பையனாக அவன் அம்மாவுடன் கடைத் தெருவுக்குச் சென்ற அந்த மாலை நேரங்கள்-
அப்பா எப்போதும் லேட்டாகத்தான் வருவார். அம்மாதான் கடைகண்ணிக்குச் சென்று வரவேண்டும். இவன் தான் அவளுக்குத் துணை. அவனுக்குப் பெருமையாக இருக்கும். "அம்மாவின் முகத்தில் ஒரு நாள் சிரிப்பை வரவழைப்பேன்" என்று அவன் அப்போது நினைத்துக் கொள்வான். ஒரு குழந்தையின் அசட்டு நம்பிக்கை ஆர்வம்.
ஆனால் அம்மா இன்னமும் சிரிக்கத் தொடங்கவில்லை. முதியோர்களுக்குக் கல்வி கற்பிக்க முடிகிறது. ஆனால் யார், எப்படி, அவர்களுக்குச் சிரிக்கக் கற்றுக் கொடுப்பது? துன்பங்களின் சுமைக்கடியில் நசுங்கிப் போனவர்களின் நசுங்கல்களை நேராக்குவது எப்படி?
திடீரென்று கோதையின் கடுகடுத்துக் கொள்ளும் முகம் அவன் நினைவில் எழுந்தது. அவனுடைய அம்மாவின் அசட்டு ஆதாரங்கள், நம்பிக்கைகள், ஆகியவற்றின் உரசலினால் கோதையின் முகத்தில் ஏறும் வெறுப்பின் கோடுகள்... மாலையில் பஸ்ஸில் திரும்புகையில் அவன் பார்த்த கோதையின் சிரித்த முகம் இப்போது மறந்து போயிற்று.
கோதையின் முகமும் அம்மாவின் முகம் போல 'வேண்டாம். வேண்டாம்' என்று சொல்லுகிற முகமாகிவிடாதே?
இந்த 'வேண்டாம்' இந்த வீட்டின் சுவர்களுக்கிடையில் இறுக்கத்தின் தாயாக, இன்பத்தின் எதிரியாக, என்றென்றும் உலவியவாறிருக்கிறது-
இரவுச் சாப்பாடு, உஷா, ராஜாராமன், அவன் அம்மா.
இன்று கடைசித் தடவையாக மூன்று குழந்தைகள் உட்கார்ந்து சாப்பிடுவதாய் ராஜாராமன் நினைத்துக் கொண்டான். உஷா நிஜக் குழந்தை; அவன் தன் அம்மாவின் குழந்தை; அவனுடைய அம்மா தாவணி அணிவதற்கு முன்பே தாலியில் சிறையான குழந்தை. அந்தக் குழந்தையைப் பெரியவளாக்க அப்பா முயல்வதும், அந்த முயற்சியை அம்மா எதிர்ப்பதுமாகவே அவர்களுடைய வாழ்நாள் கழிந்துவிட்டது.
இப்போது தாலி இல்லை. சிறை இல்லை. விடுதலை! கிழவியின் முகம். ஆனால் மனத்தளவில் வெறும் குழந்தை.
ராஜாராமனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்க மனதில் இரக்கம் சுரந்தது. பூங்கா, ஐஸ்கிரீம் பார்லர், இந்தக் கிழவி.
நாளைக்கும் தன் மனதில் இந்த இரக்கம் நிலைத்திருக்குமென்று சொல்வதற்கில்லை. நாளைக்குக் கோதை வந்துவிடுவாள்.
உஷா தூங்குவது வரையில் ராஜாராமன் காத்திருந்தான். பிறகு அம்மாவிடம் சென்றான். "அம்மா!" என்று கூப்பிட்டான்.
சமையலறைக்குள்ளிருந்த அம்மா அவனைத் திரும்பிப் பார்த்தாள். கண்களில் அதே சோகம். அந்தச் சோகம் பரிசுத்தமானதாகத் தோன்றியது. உலகம் தொடங்கிய நாள் முதல் நிலவி வந்துள்ளதும் என்றென்றும் நிலைத்திருக்கப் போவதுமான ஒரு சோகமாகத் தோன்றியது.
"அம்மா!" என்று தேம்பியவாறு ராஜாராமன் அம்மாவை அணைத்துக் கொண்டான். அவனுடைய அம்மா எந்த வித எதிர்ப்புமின்றி அவனுடைய அணைப்பினுள் புதைந்து கிடந்தாள். அப்பா, நீயும் அழுதிருக்க வேண்டும். இளகியிருக்க வேண்டும். குழந்தையாக மாறியிருக்க வேண்டும்.
ஒரு நாளாவது.
"இப்போது ராத்திரி" என்று குழந்தைக்குச் சொல்லுவது போல ராஜாராமன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். "ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடி சூரியன் வரும் வெளிச்சமா ஆயிடும் அதுதான் நாளைக்கு..."
--------------
2. மூன்றாமவன்
பரசு வீட்டில் மூன்றாவது குழந்தை. "மூன்றாவதைத் தவிர்க்கவும்" என்ற அரசின் பிரசாரம் தீவிரப்படும் முன்னரே பிறந்தவன். அவனுடைய அக்கா லட்சுமிக்கும் அவனுக்குமிடையே பத்து வருஷ வித்தியாசம். அண்ணா மாதவனுக்கும் அவனுக்குமிடையே ஐந்து வருஷ வித்தியாசம்.
'நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்!' என்று மிகச் சிறு வயதிலிருந்தே பிரகடனப்படுத்தத் தொடங்கி விட்டான் பரசு. அவனுடைய அக்காவும் அண்ணாவும் குழந்தையாயிருந்த போது சப்பியது கட்டை விரலை; ஆனால் பரசு பாம்பு விரல், மோதிர விரல் இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக் கொண்டு சப்பினான். அவனுடைய அக்காவும் அண்ணனும் ரோஷக்காரர்கள். பெற்றோர் சற்றே உரக்க அதட்டினால் போதும். விசித்து விசித்து அழத் தொடக்கி விடுவார்கள். ஆனால் பரசு சரியான கல்லுளிமங்கனாக இருந்தான்.
அவனை மிரட்டுவது, திட்டுவதெல்லாம் சுவரில் போய் முட்டி கொள்வதைப் போலத்தான். யார் என்ன சொன்னாலும் லட்சியம் செய்யாமல் தன்பாட்டில் ஜரூராக விஷமம் செய்தபடி இருப்பான்: வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களையும் நாசம் செய்வான்; வெளியே தூக்கி எறிவான்: அவனுடைய பிடிவாதம் எதையாவது சாதித்துக் கொள்ள வேண்டுமானால், 'ஆ, ஊ' என்று அவன் பெரிதாக ஊளையிட்டு அழுவதையும், 'தொம்தொம்' என்று குதிப்பதையும், தரையில் விழுந்து புரள்வதையும், இதையெல்லாம் பார்த்து, "சரி, போய்த் தொலை" என்று பெற்றோர் அவனுடைய பிடிவாதத்துக்கு இணங்குவதைப் பார்த்து லட்சுமியும் மாதவனும் ஒருவரையொருவர் சற்றே சோகத்துடன் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு இந்த வித்தைகள் தெரியாமல் போயிற்றே!
சமூகத்தில் உரிமைப் போராட்டங்கள் தீவிரமடைந்து, அது ஒரு வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்ட காலத்தில் பரசு பிறந்தது அவனுடைய தான்தோன்றித் தனத்துக்குக் காரணமாயிருக்கலாம் என்று அவனுடைய அப்பா குயுக்தியாக நினைத்துக் கொள்வார். இப்படி சமூக நிகழ்ச்சிகளுக்கும் தன் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், தளுக்காக முடிச்சுப்போட்டு பிறகு மணிக்கணக்காக அந்த முடிச்சின் அழகைப்பார்த்து வியந்து கொண்டிருப்பது அவருக்கு ஒரு பொழுது போக்கு. ஆமாம் அவர் ஒரு அறிவு ஜீவி; அவருடைய வம்சமே அறிவு ஜீவிகளின் வம்சம்தான். அவருடைய அப்பா தத்துவப் பேராசிரியர். அவருடைய தாத்தா சமஸ்கிருத பண்டிதர். அவருடைய கொள்ளுத் தாத்தா அரச குடும்பத்துக்குக் கல்வி போதித்து நிலங்கள் மான்யமாகப் பெற்றவர்- இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பெரிய குழந்தைகளான லட்சுமியும் மாதவனும் மிகச் சிறு வயதிலிருந்தே புத்தகங்களில் ஆர்வம் காட்டினார்கள். வீட்டில் கிடக்கும் புத்தகங்கள், பத்திரிகைகளையெல்லாம் வைத்துக் கொண்டு அவற்றில் அவர்கள் 'பொம்மை' பார்க்கத் தொடங்குவதைப் பார்த்து, அவர்களுடைய பெற்றோருக்கு ஒரே பெருமையாக இருக்கும். அப்போதே அந்தக் குழந்தைகள் படிக்கத் தொடங்கிவிட்டதைப் போல பூரித்துப் போவார்கள். 'யாருடைய ரத்தம் அவர்களுடைய உடலில் ஓடுகிறது?' என்று வம்சச் சிறப்பைக் கர்வமாக நினைவு கூறுவார்கள்.
ஆனால் பரசுக்குப் புத்தகங்களில் பொம்மை பார்ப்பது பிடிக்கவில்லை. நாலு, ஐந்து வயதிலும் கூட கைக்கு அகப்படும் புத்தகங்கள், பத்திரிகைகளெல்லாம் சுக்குநூறாகக் கிழித்தெறிவதுதான் அவன் பொழுதுபோக்காக இருந்தது. அந்தப் புத்தகங்களைத் தன் எதிரிகளாக அவன் நினைப்பது போலிருக்கும்.வீட்டிலிருப்பவர்கள் அவனைக் கொஞ்சிய வாறும், அவனுடைய விஷமங்களை ரசித்தவாறும் இருப்பதற்குப் பதிலாக கேவலம் அந்தப் புத்தகங்கள், பத்திரிகைகளைச் சதா கைகளில் வைத்துச் சீராட்டியவாறிருப்பதை அவன் இவ்வாறு மூர்க்கமாக எதிர்ப்பதைப் போலிருக்கும் பரசுவின் அப்பா ஒரு தடவை ஒரு மனோத்துவ நிபுணரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் இதைத்தான் கூறினார். "உங்கள் கவனத்தைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காக அவன் கடைப்பிடிக்கும் வழிகளே இவை" என்றார் அவர். அதையே விளக்கமாகவும் கூறினார்.
அவன் ஒரு மூன்றாவது குழந்தையல்லவா? தனக்கு மூத்த இருவர் இருக்கிறார்கள். அவர்களுடைய வருடக்கணக்கான சாதனைகளை முறியடித்துத் தன்னைத் தானே நிலை நாட்டிக் கொள்ளமுடியும் என்ற ஒரு பீதியும் மிரட்சியும் அவனைச் சதா ஆட்டி வைக்கின்றன. குறுக்குவழிகளில் ஹோதாவைத் தேடிக் கொள்ள முயல்கிறான். நீங்கள் அவனுடைய அண்ணாவுடனும் அக்காவுடனும் அவனை ஒப்பிடுவதாக அவன் உணரும்படி செய்யக் கூடாது. "அக்கா சமர்த்தா சாமி கும்பிடறா பாரு! அண்ணா சமர்த்தா ஸ்கூலுக்குப் போகிறான் பாரு! என்றெல்லாம் சொல்லியவாறு இருக்கக் கூடாது. அவனுடைய தனித் தன்மையை அவன் கண்டு கொள்வதற்கு நீங்கள் நாசூக்கான முறையில் உதவி, அவனுடைய தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்".
டாக்டரின் முக பாவனைகளிலும் அபிநயங்களிலும் ஒரு நடிகனின் சாதுரியமும் தளுக்கும் இருந்தன. அவருடைய மூதாதையரில் சிலருக்காவது தெருக்கூத்து, பாய்ஸ் கம்பெநி போன்றவற்றுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்று பரசுவின் அப்பாவுக்குத் தோன்றியது. 'ஒரு வேளை பரசுவும் பெரியவனான பிறகு மனோதத்துவ டாக்டராகப் போகிறானோ?' என்ற ஒரு குயுக்தியான எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது.
மனோதத்துவ நிபுணரிடம் சென்று வந்த பிறகு பரசுவைக் கொஞ்சநஞ்சம் கண்டித்து வந்ததையும் அவனுடைய அப்பா நிறுத்திவிட்டார். பரசுவின் தனித்தன்மை விபரீதமான முறையில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. அவனுடைய அக்காவும் அண்ணாவும் சதா வீட்டிலேயேதான் இருப்பார்கள். இதற்கு நேரெதிரிடையாக பரசு சதா வீட்டுக்கு வெளியே அண்டை அயல் வீடுகளில் கன் நேரத்தைக் கழித்து வரத் தொடங்கினான். இந்த வீடுகளில் அவனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் அசட்டுப் பிசட்டென்று குழந்தைத்தனமாகப் பதில் சொல்வான். இந்தப் பதில்கள், அவர்களுக்கு சொகுசாகவும் ரசமாகவும் இருக்க, மென்மேலும் அவன் வாயைக் கிளறியபடி இருப்பார்கள். எல்லாம் வெறும் கேலிதான். இந்த உலகில் யாரும் யாரையும் தம்மைவிடக் கெட்டிக்காரனாக அங்கீகரிக்கவே மாட்டார்கள் என்பது பரசுவுக்குத் தெரியவில்லைதான். தான் அக்காவையும், அண்ணாவையும் விடக் கெட்டிக்காரனென்றும், அதனால் தான் தன்னைப் பார்த்தவுடனேயே எல்லாரும் பூரித்துப் போகிறார்கள் என்றும் அவனுடைய போட்டியுணர்வுகள் எண்ண வைத்தன.
வீட்டில் பரசுவின் அதிகார தோரணையும் முரண்டும் ரகளையும் அதிகமாயின. அக்காவும் அண்ணாவும் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது வேண்டு மென்றே உரக்கப் பாடத் தொடங்குவான். அல்லது அப்பா வாங்கித் தந்த மௌத்-ஆர்கனை வாசிப்பான்.
"ஓ! இவனுக்கு இசையில் ஆர்வமிருக்கிறது!" என்று அவனுடைய அப்பா மகிழ்ந்து போவார். மனோதத்துவ டாக்டரிடம் சென்று வந்ததிலிருந்து வெறும் புத்தக அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு மேதைத்தனம் பரசுவிடம் ஒளிந்திருப்பதாகவும் அதைக் கண்டுபிடிப்பதைத் தன் பரந்த கண்ணோட்டத்துக்கு ஒரு சவாலாகவும் அவர் நினைக்கத் தொடங்கியிருந்தார். பரசுவின் பாட்டும் மௌத்-ஆர்கனும் தம்முடைய படிப்புக்கு இடைஞ்சலாக இருப்பதாக லட்சுமியும் மாதவனும் புகார் செய்தால் "கதவைச் சாத்திக் கொண்டு படியுங்கள்" என்று அவர் அவர்களுக்கு உபதேசித்தார். ரேடியோவைத் திருகிவிட்டு அவனைத் தன்னுடன் அமர்த்தி வைத்துக் கொண்டு அவற்றைக் கேட்கச் செய்வார். பரசுவும், அண்ணாவுக்கும் அக்காவுக்கும் பழிப்புக் காட்டுவதற்காகவே அந்தப் பாட்டுகளை மிகவும் ரசிப்பது போலத் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டுவான். தாளம் போடுவான். அப்பா அந்தத் தாளங்களைத் திருத்துவார்.
அவன் பாசாங்குதான் செய்கிறான். அவனுக்கு இசையில் விசே ஷப் பற்றுதல் ஏதுமில்லை என அவனுடைய அப்பா தெரிந்து கொள்வதற்குப் பல வருடங்கள் ஆயின. அதற்குள் அவர் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஒரு பாட்டு வாத்தியாரை ஏற்பாடு செய்து, அவனைத் தன்னுடன் சங்கீதக் கச்சேரிகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று---பாவம்! கடைசியில் இதனாலெல்லாம் ஏற்பட்ட விளைவு, லட்சுமிக்கும், மாதவனுக்கும் கர்நாடக சங்கீதத்தில் சிரத்தை இல்லாமல் போனது. பரசுவுக்கு அவன் பெற அருகதையற்ற கௌரவத்தை அப்பா அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில், பெரியவர்கள் இருவரும் சாஸ்திரீய இசை என்றாலே அலட்சியம் காட்டினார்கள், லட்சுமிக்கு, பரசு பிறக்கிற சமயத்தில் பாட்டில் ஓரளவு ஞானமும் தேர்ச்சியும் ஏற்படத்தொடங்கியிருந்தது. ஆனால் , பிறகு பரசு காரணமாக இசையில் அவளுக்கு அசிரத்தை ஏற்படவும், ஏற்கனவே தெரிந்த பாட்டுக்களும் அவளுக்கு மறந்து போயின. அவள் கல்யாண வயதடைந்தபோது, பாட்டு கற்றுக் கொள்ள மாட்டேனென்ற அவளுடைய வீம்பு அதிகமாயிற்றேயொழிய குறையவில்லை. இதன் காரணமாகவே சில நல்ல இடங்கள் தட்டிப்போயின. கடைசியில், பீஹாரில் ஏதோ ஒரு நகரில், வீட்டுச் சமையலுக்காக ஆலாகப் பறந்து கொண்டிருந்த ஒரு பிள்ளையாண்டான், அதற்காகவே அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான். அது ஒரு தனிக் கதை!
பாட்டு ஒரு உதாரணந்தான். இப்படிப் பல விதங்களில் பரசுவின் இயல்புக்கும், இந்த இயல்பு பெற்ற அங்கீகாரத்துக்கும், எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென்ற முரண்டு காரணமாகவே, லட்சுமியும், மாதவனும் தம்முடைய பல இயல்புகளைக் குறுக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய பெற்றோர்களுக்கெதிராக ஒரு இடையறாத கறுப்புக்கொடி ஊர்வலம் குழந்தையாயிருந்தபோதே மாதவன் அப்படி யொன்றும் உம்மணா மூஞ்சியாக இருக்கவில்லை. குறும்புகளிலும் விளையாட்டுகளிலும் ஈடுபடாதவனாக இருக்கவில்லை. ஆனால் பரசுவின் அட்டகாசங்கள் அதிகமாக அதிகமாக, மாதவன் தனக்குள்ளேயே சுருங்கிப் போனான்.
அவன் முகத்தில் சிரிப்பு மறைந்து, எப்போதும் ஒரு தீவிரபாவமும் கவலைப் பளுவும் தெரிந்தன. உலகத்தின் கவலையெல்லாம் அவன் ஒருவனே படுவதைப் போலிருக்கும், அவன் முகத்தைப் பார்த்தால். ஒரு வேளை தான் தன் தம்பியைப் போல இல்லை என்று எல்லாரையும் உணரச் செய்கிற தீவிரமும் கவலையுமாகவே இது இருந்திருக்கலாம். பரசு ஒரு 'கஷ்டமான மாணவன்' 'அடங்காப்பிடாரி' 'முரடன்' 'போக்கிரி என்று பலவாறு, அவனுடைய உபாத்தியாயர்கள் அவனைப் பற்றிப் புகார் செய்யத்த தொடங்கியிருந்தார்கள். இந்தப் புகார்கள் முதலில் மாதவன் காதுகளைத்தான் எட்டும். அவனுள் அவமானமும் ஆத்திரமும் பொங்கி எழும். படிப்பிலோ விளையாட்டுக் களிலோ விசே ஷ சாதனை ஏதும் நிகழ்த்தாத ஒரு சராசரி மாணவன் அவன். ஆனால் குறைந்தபட்சம் மோசமானவ னென்று பெயர் வாங்கவில்லை. இப்போது அவனுடைய தம்பி இவ்வாறு பிரபலமாகிக் கொண்டிருந்தான்.
அந்தத் தம்பியின் அண்ணனாக அவனும் பிரபலமாகிக் கொண்டிருந்தான். கூச்ச சுபாவமுள்ளவனான அவன் இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினான். பள்ளிக்கூட வராந்தாக்களில் நடந்து போகும்போது திடீரென்று யாராவது அவனைச் சுட்டிக் காட்டி "அவன்தான் பரசுவின் அண்ணா" என்று சொல்வது காதில் விழும். அப்படியே காற்றில் கரைந்து மறைந்து விடலாம் போல அவனுக்குத் தோன்றும்.
வீட்டுக்கு வரும் உறவினர்கள், விருந்தினர்களுக்கிடையேயும் பிரபலமாக விளங்கியதும் பரசுதான். அவர்களுக்கு வேண்டிய சிசுருஷைகளை எல்லாம் அவன்தான் பார்த்துப் பார்த்துச் செய்வான். அவர்களிடம் தன் பிரதாபங்களையெல்லாம் அளந்தவாறிருப்பான். அவர்களை ஊர் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் செல்வான். கோணங்கித்தனங்கள் காட்டி அவர்களைச் சிரிக்க வைப்பான். இதற்கு மாறாக, வீட்டில் வெளி மனிதர்கள் வந்துவிட்டால் லட்சுமியும் மாதவனும் இருக்கிற இடம் தெரியாது. இது ஒனிந்து கொள்ளல் அல்ல.ஒரு பகிஷ்காரம். பரசுவின் மலிவான கவர்ச்சி உத்திகளின்பால் தம் அதிருப்தியைக் வெளிப்படுத்த அவர்கள் நிகழ்த்திய 'சத்தியாக்கிரகம்!'.
ஆனால் சத்தியாக்கிரகங்களின் தலைமுறையைச் சேர்ந்தவராயிருந்தும் பரசுவின் அப்பாவால் இதைப் புரிந்து கொள்ள முடியாமற் போனதுதான் ஆச்சரியம். 'பெரிய குழந்தைகள் இருவரும் பயந்தாங்கொள்ளிகள்; பரசுதான் துணிச்சலும் அடாவடி சாமர்த்தியங்களும் உள்ளவன்; இந்தக் காலத்தில் இத்தகைய சாமர்த்தியந்தானே தேவையாயிருக்கிறது?' என்று அவர் மனம் மேலோட்டமான தீர்ப்பு வழங்கியது. அவருடைய ஆபீஸில் அவருக்கு நேர்ந்த சில கசப்பான அனுபவங்களும் இத்தகைய எண்ண ஓட்டத்துக்கு வித்திட்டிருக்கலாம். அவருடைய ஜுனியர்கள் மேலதிகாரிகளைக் காக்காய் பிடித்து, நியாயமாக அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளைத் தாம் அபரித்துக் கொண்டார்கள். அவருடைய எதிரிகள் அவரைப் பற்றிக் கிளப்பி விட்ட அவதூறுகளின் அடிப்படையில், சரியான விசாரணையின்றி மூன்று வருடங்கள் மேலதிகாரிகள் அவரைப் பற்றி மோசமான ரிப்போர்ட்கள் எழுதினார்கள். இதெல்லாம் கடமையுணர்வு, நேர்மை, கட்டுப்பாடு போன்றவற்றில் அவர் வைத்திருந்த நம்பிக்கை கலகலத்துப் போகும்படிச் செய்தன. தான் இவ்வளவு வெகுளியாக இருந்திருக்க வேண்டாமென்று தன்மீதே வெறுத்துக் கொள்ள வைத்தன. எவ்வித வம்பு தும்புகளும் பேசாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த லஷ்மியையும், மாதவனையும் பார்க்கும்போது அவருக்குத் தம் முகத்தையே கண்ணாடியில் பார்ப்பது போலிருந்தது; வெறுப்பும் கோபமும் அதிகமாயின.
பரசுவின் அடாவடித்தனம்தான் அவருக்குக்கவர்ச்சியாகவும், ஆறுதலாகவும் இருந்தது. பற்றிக்கொள்வதற்கேற்ற கைத்தடியாகத் தோன்றியது. "பரசுதான் எங்களை ஷேத்ராடனமெல்லாம் கூட்டிண்டு போகப் போறான். நாங்க அவன் கூடத்தான் போய் இருப்போம். மாதவனுக்கு சமர்த்துப் போறாது" என்கிற ரீதியில் தன் முதுமையைப் பற்றி அவர் உரக்கச் சிந்திப்பார். இந்தக் கட்டத்துக்குள் லஷ்மிக்கு திருமணம் ஆகிவிட்டிருந்தது. மாதவனுக்கு பாவம் தன் மனத்தாங்கலைப் பகிர்ந்து கொள்வதற்குக் கூட ஆள் இல்லை. அவன் தன் எரிச்சலில் தானே வெந்தவாறிருந்தான். மனம் கருகிக் கொண்டே வந்தது.
வாழ்க்கையில் எதுவுமே முழுதும் கருப்பு இல்லை; முழுவதும் வெளுப்பும் இல்லை. பரசுவை அடாவடிக்காரன், பொல்லாதவன் என்று நினைத்து அவனுடைய அப்பா மகிழத் தொடங்கியதும் இது போலத்தான். ஒருவிதத்தில் பார்த்தால், சூதுவாதுகள் அல்ல-மிதமிஞ்சிய நேர்மையே பரசுவின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று என்று கூடச் சொல்லலாம். ஒண்ணங்கிளாஸ் டீச்சரைக் "குண்டச்சி" என்று அவள் காதுபட வர்ணித்த நேர்மை; இரண்டாங்கிளாஸ் டீச்சரின் விசுக்கு நடையையும், மூன்றாங் கிளாஸ் ஸாரின் கீச்சுக் குரலையும் 'விமரிசனம்' செய்த நேர்மை; தன் ஆசிரியர்களின் குறைகள் - பலவீனங்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றைத் தன் சகாக்களிடம் ஒலிபரப்புவதிலேயே அவன் எப்போதும் குறியாக இருந்தான். எந்த ஸார் எந்த ஸ்டைலில் மூக்குப் பொடி போடுகிறார் என்பதிலிருந்து எந்த ஸார் எந்த டீச்சருடன் அதிகமாகக் குலாவுகிறார் என்பது வரையில் அவனுக்கு எல்லாம் அத்துப்படி. 'முதலில் நீ ஒழுங்காக இரு. அப்புறம் எனக்குச் சொல்லித் தர வா' என்பது போலிருக்கும் அவன் நடத்தை.
அவனுடைய ஆசிரியர்களுக்கு அவனைப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை.
இதைத் தவிர அவனுடைய ஆசிரியர்களின் பால் ஒரு போட்டி உணர்ச்சி வேறு. வகுப்பை ஒரு நாடகக் கொட்டகையாகவும், ஆசிரியர்களை நடிகர்களாகவும் நினைத்து (எவ்வளவு மோசமான நடிகர்கள்!) மாணவர்களின் கருத்தைக் கவருவதற்கு அந்த நடிகர்களுடன் போட்டி. 'வாங்கடா, ஸாருக்குத் தெரியாத வித்தைகளெல்லாம் எனக்குத் தெரியும்!" என்கிற ஒரு வீம்பினால் உந்தப்பட்டு, சக மாணவர்களை மகிழ்விக்க சதா புதிது புதிதான குறும்புத் தங்கள், கோமாளித் தனங்களில் ஈடுபட்டு அவர்களிடையே அவன் ஒரு கதாநாயகனாக விளங்கினான்.
அவனுடைய ஆசிரியர்களிடையே அவ்வப்போது முதிர்ச்சியும், விவேகமும் உள்ள சிலர் இல்லாமல் போகவில்லை. அவர்கள் 'ஏட்டுச் சுரைக்காயின்' துணை யின்றியே கதாநாயகனாக ஜொலிக்க விரும்பிய அவனு டைய ஏக்கத்தைப் புரிந்து கொண்டு, அவனுடைய வேறு வகையான திறமைகளென்னவென்று தாமாகப் புரிந்து கொள்ள முயன்றார்கள். அந்தத் திசைகளில் அவனுக்கு ஊக்கமளிக்க முற்பட்டார்கள். ஒரு ஆசிரியர் அவனைப் படம் போடுமாறு உற்சாகப்படுத்தினார். இன்னொருவர் அவனை நாடகங்களில் பங்கேற்குமாறு தூண்டினார். "பரசு ரொம்ப புத்திசாலியாக்கும்" என்று இந்த ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களிடம் கூறுவார்கள். "அவனை யாரும் சரியாக அணுகவில்லை. அதுதான் பிரச்சினை".
ஆனால் பரசுவின் மனதில் என்ன இருந்ததோ, இப்படி அவன் மீது யாராவது அனுதாபம் காட்டினால் அவர்களையும் குரூரமாகத் தண்டிக்கவே முற்பட்டாந் அவன். படம் போடுமாறு ஒரு ஆசிரியர் ஊக்குவித்ததைத் தொடர்ந்து தினசரி கரும்பலகையில் அவரைக் கிண்டல் செய்து கேலிச் சித்திரங்கள் வரையத் தொடங்கினான். சில ஆபாசப் படங்களையும் அவர் வருகிற சமயம் பார்த்து-கரும் பலகையில் வரைந்து வைப்பான். இதையெல்லாம் அவர் பொறுமையாகச் சகித்துக் கொண்டார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவன் பள்ளிக்கூடச் சுவர்களில் எங்கு பார்த்தாலும் படம் வரைந்து தள்ளத் தொடங்கினான். பிரின்ஸிபால் அவனைக் கூப்பிட்டு, விசாரித்தபோது, "கணபதி ஸார்தான் என்னை நிறையப் படம் வரையச் சொன்னார்" என்றான். அதன் பிறகு கணபதி ஸார் அவன் வழிக்கே போகவில்லை.
நாடகத்தில் நடிக்கும்படி அவனை உற்சாகப்படுத்திய உபாத்தியாயருக்கும் இதே கதிதான் நேர்ந்தது. நாடக ஒத்திகைகளின்போது தன் பங்கை அருமையாக நிறைவேற்றி னான்; அழகாக ஒத்துழைத்தான். ஆனால் நிஜமான நிகழ்ச்சி நாளன்று வேண்டுமென்றே வசனங்களைக் கொனஷ்டைத் தனமாக உச்சரித்து, சொந்தச் சரக்காக சம்பந்தா சம்பந்தமற்ற அபிநயங்கள், கூத்தாடல்களில் ஈடுபட்டு, அந்த ஆசிரியரின் முகத்தில் கரியைப் பூசினான்.
எளிமைப்படுத்தப்பட்ட லேபில்கள் தன்மீது ஒட்டப்படு வதற்கு அவன் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தானா? அல்லது தான் எந்தப் பாதையில் செல்ல வேண்டுமென்பது பற்றிப் பிறர் யோசனை கூற முன்வந்தது தன் அந்தரங்க வாழ்வில் அவர்கள் குறுக்கிடுவதாக அவனுக்குப்பட்டதா? அவனுடைய பிரச்சினை என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. ஐந்தாவது வகுப்புவரை எப்படியோ ஒழுங்காகப் பாஸ் ஆகிவிட்டான். ஆனால் ஆறாவது வகுப்பிலிருந்து அவன் பெயிலாகத் தொடங்கினான்.
ஆறாவது வகுப்பில் ஒரு தடவை, ஏழாவது வகுப்பில் இரண்டு தடவை; எட்டாவது வகுப்பில் இரண்டு தடவை; ஒன்பதாவது வகுப்பில், மறுபடி இரண்டு தடவை...
ஒரு தடவை ஒரு கட்டத்தில் தாமதாகிவிடும் ரயில் தொடர்ந்து பயணம் முழுவதும் தாமதமாகச் செல்வதைப் போல, தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் அவன் பெயிலாகிக் கொண்டே சென்றான். ஒருவிதத்தில், மென்மையும் பக்குவமும் அற்ற ஆசிரியர்களும் அவனுடைய நிலைக்கு ஒரு காரணம். அதே சமயத்தில் அவன் நாளுக்கு நாள் கையாளுவதற்கு கடினமான ஒரு மாணவனாக ஆகிக் கொண்டு வந்தானென்பதும் உண்மைதான். இது ஒரு விஷச் சுழலாகி விட்டிருந்தது. பக்காத் திருடனையும் போலீஸையும் போல். ஊரையெல்லாம் கிடுகிடுக்கச் செய்யும் ஒரு கேடி இருந்தால், அவனைப் பிடித்து அவன் திமிரை ஒடுக்குவது ஒவ்வொரு போலீஸ்காரனுடைய கனவாகவும் ஆகிறது. அதேபோல் பரசுவுடன் மோதி அவனைத் தலைகுனியச் செய்வது அந்தப் பள்ளியிலிருந்த ஒவ்வொரு ஆசிரியருடைய கனவாகவும் ஆகியது. முதன் முதலாக அவனை மாணவனாகப் பெறும் ஒவ்வொரு ஆசிரியரும் வெகுஜன வதந்திகளின் அடிப்படையில் அவனைப் பற்றித் தாமாகவே பயங்கரமாக ஏதோ கற்பனை செய்து கொண்டு, நிஷ்டூரமும் கிண்டலுமாக அவன் மீது பொழிந்து தள்ளுவார்கள். அவனுடைய கர்வத்தைச் சீண்டுவதாக நினைப்பு. உதாரணமாக ஒரு கணக்கு வாத்தியார் கரும்பலகையில் ஏதாவதொரு பிராப்ளத்தைச் செய்து காட்டிவிட்டு, "எல்லோருக்கும் புரிந்ததா?" என்று கேட்பார். ஒரு நிமிடம் இடைவெளி கொடுப்பார். பிறகு, "பரசுராமன், உனக்கு?" என்பார். கொல்லென்று வகுப்பில் சிரிப்பு பரவும். பரசுதான் அதமப் பொது மடங்கு; அவனுக்குப் புரிந்தால் எல்லோருக்கும் புரிந்தது மாதிரியாம்! இன்னொரு வாத்தியார் அவனைச் சதா 'பெரியவாள், பெரியவாள்' என்பார்; போலிப் பணிவுடன். வகுப்பில் எல்லா மாணவர்களையும் விட அவன்தானே வயதில் பெரியவன்!
என்ன செய்ய; பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நிரந்தரமான இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். படிக்காத மாணவர்களை இழிவுபடுத்துவதன் மூலமாகத்தான் தமக்கென ஒரு ஹோதாவைப் பெற வேண்டிய நிலை. மேலும் ஆசிரியர் தொழிலே ஒரு அறுவையான தொழில். அவ்வப்போது சிரிப்புகள் தேவைப்படுகின்றன. பரசுவைப் போன்றவர்கள் இத்தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்.
ஆசிரியர்களால் தொடர்ந்து அவமதிக்கப்பட்ட பரசு தவிர்க்கமுடியாமல் காலிப்பையன்களின் குழுவில் போய்ச் சேர்ந்தான். ஆசிரியர் என்ற பொதுவான பகைவருக்கெதிராக இத்தகைய கூட்டணிதான் தெம்பாகவும் ஆறுதலாகவும் இருந்தது. சிகரெட், சுருட்டு, மது, கஞ்சா போன்ற பழக்கங்கள் படிப்படியாக ஏற்பட்டன. எல்லாம் அவனுடைய ஆசிரியர்கள் மீதுள்ள கோபத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக. இப்போது அவனை அவர்கள் அவனை ரவுடி என்று சொல்லும்போது அவனுக்கு வருத்தமாக இல்லை; அவர்களைப் பார்த்து வில்லன் சிரிப்பு சிரித்தான்.
ஒருநாள் அவர்களுடைய வகுப்பில் ஒரே பரபரப்பாக இருந்தது. ஒரு பெண் விசித்து, விசித்து அழுதாள். அவளுக்கு யாரோ லவ்லெட்டர் எழுதி டெஸ்கில் வைத்திருந்தானாம். ஆசிரியருக்கு உடனே பரசுவின் மீதுதான் சந்தேகம் எழுந்தது; அவனை விசாரித்தார். பரசுவுக்கு எரிச்சலாயிருந்தது. என்ன அபாண்டமான குற்றச்சாட்டு! "எனக்கு இந்தப் பெண்களுடைய மூஞ்சியைப் பார்க்கக் கூட பிடிக்காது; அவங்களுக்கு லவ்லெட்டர் ஒரு கேடா?" என்றான் திமிராக.
"அடிக்கடி உன் பார்வை அந்தப் பக்கம் மேயறதை நான் கவனிச்சிருக்கேன்" என்றார் ஆசிரியர்.
பரசு தன் இடத்தை விட்டு எழுந்து விடுவிடுவென்று அவரருகில் சென்றான். பளாரென்று கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். புயல் போல வகுப்பை விட்டு வெளியேறினான்.
அதன் பிறகு அவன் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இதுவரையில் பரசுவின் அம்மாவைப் பற்றி எதுவும் சொல்லாதது மறதியினால் அல்ல, ஒரு ஸஸ்பென்ஸ் கருதித்தான். கதையின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டதால் இனி அவளைப் பற்றிக் கூறலாம்.
அவள் அதிகம் படித்தவளில்லைல. ஆனாலும் கெட்டிக்காரி. புத்திசாலியும் கூடத்தான். அவளுடன் பரசுவுக்கு அன்பும் வெறுப்பும் கலந்த உறவு. பரசுவைக் கண்டிக்க வேண்டும், அடிக்க வேண்டும் என்றெல்லாம் அவள் அடிக்கடி அவனுடைய அப்பாவுக்கு சிபாரிசு செய்தபடி இருப்பாளாதலால் அவள் மீது வெறுப்பு. அதே சமயத்தில் அப்பாவின் அறிவு ஜீவித்தனமான 'அசத்தல்கள்' இல்லாமலிருந்ததால் அவளிடம் ஒரு ஒட்டுதல். சின்ன வயதிலேயே அம்மாவுக்குச் சமையலறையில் கூடமாட ஒத்தாசைகள் செய்யத் தொடங்கி அவளுடைய நன்றிக்குப் பாத்திரமானவனாகி விட்டான். அவளுடைய சமையலறை தனிமையை உணர்ந்து அதன் பளுவைக் குறைப்பதில் சிரத்தை எடுத்துக் கொண்டது அவன் ஒருவன்தான். "நீ பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியதுடா!" என்று அவனுடைய அம்மா அடிக்கடி அவனிடம் ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் கூறுவாள். "புத்தகம் படிச்சாப்லே ஆச்சா? வீட்டிலே என்ன நடக்கிறது, எபபடி நடக்கிறதுன்னு ஒரு கவலை கிடையாது" என்று அறிவு ஜீவிகளின் ஏட்டுச் சுரக்காய்த்தனத்தை சாடியபடி இருப்பாள்.
பத்து வயது ஆவதற்குள்ளேயே பரசுவுக்குத் தனியாக எல்லாச் சமையலும் பண்ணத் தெரிந்துவிட்டது. அவனுடைய அப்பா, அண்ணா, அக்கா மூவருடைய அறிவு ஜீவித் தனத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அவன் இவ்வாறு சமையலில் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கலாம். அப்பாவும், அண்ணாவும் ஆண்கள் சமையலறை வேலைகளில் ஈடுபடுவது கௌரவக் குறைச்சலென்று நினைத்தார்கள். அக்காவுக்கோ, ஒரு பெண்ணின் மரபு வழிக் கடமைகளை அதற்குள்ளாகத் தான் சுமக்கத் தொடங்க வேண்டுமா என்ற வெறுப்பு. எனவே, இம்மூவரின் எரிச்சலையும் கிளப்பி அதே சமயத்தில் அம்மாவின் பிரியத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்கு, பரசுவுக்கு சமையலறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
அதே சமயத்தில் இதன் மூலம் அப்பாவை நுட்பமாக அவமதித்து அவருக்குத் தண்டனை வழங்கும் திருப்தியையும் அவன் பெற முடிந்தது. அவர் அவன் மீது மிகுந்த அனுதாபம் காட்டி வந்தவரல்லவா? எனவே அவனுடைய இயல்பின்படி அவரையும் அவன் தண்டித்தாக வேண்டும்! அவர் மிகவும் பெருமையாகப் பேசிக் கொண்டே அவருடைய 'அறிவுஜீவிகள் வம்சத்தில்' பெண்கள் மட்டும் எவ்வித அறிவொளியும் பெறாமல் "ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினராக" விளங்கிய முரண்பாட்டை அவர் முகத்தில் எறிந்து அவரைக் காயப்படுத்துவதற்கு அவன் கையாண்ட பல வழிகளில் ஒன்று, அவனுடைய சமையலறை ஈடுபாடு.
பள்ளிக்கூடத்துக்கு இறுதியாக முழுக்குப் போட்டுவிட்டு வந்தபிறகு, வீட்டில் அநேக நாட்களில் பரசுதான் சமையல் செய்து வந்தான். அவனுடைய அம்மாவுக்கு, கல்யாணமான நாளிலிருந்து தான் செய்து வந்த இந்த வேலை, அலுப்புத் தட்டத் தொடங்கியிருந்தது. அவ்வப்போது ஓய்வு தேவைப்பட்டது. அவனுடைய அப்பாவுக்கும் அக்காவுக்கும் அண்ணாவுக்குமோ வேறு 'அதிமுக்கியமானதும் உயர்வானதுமான' தேட்டங்களுக்குத் தம் நேரத்தை அர்ப்பணித்து விட்ட நிலையில், 'வெட்டி வேலைகளில்' நேரத்தை 'வீணடிக்க' முடியாத நிர்ப்பந்தம். இதையெல்லாம் பரசு தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். அவன், சமையல் இலாகா உதவி மந்திரிப் பதவியை அபகரித்துக் கொண்ட நாளிலிருந்து, அப்பாவும் அண்ணாவும் அக்காவும் அவனை நேரடியாக விரோதித்துக் கொள்ளப் பயந்தார்கள். ஏனென்றால் பசி வேளைகளில் அவனுடைய கருணை மிகவும் தேவையாயிருந்தது;
அம்மாவினுடையதைப் போல அவனுடையது பாரபட்சமற்ற செங்கோல் ஆட்சியல்ல.
சமையலறைக் காரியங்கள் நீங்கலாகவும், ஒரு வீட்டில் பொழுது விடிந்தால் எத்தனையோ காரியங்கள். வீட்டை ஒழித்துத் துப்புறவாக வைத்திருத்தல், தோட்டி, வேலைக்காரி ஆகியோரின் வேலையை மேற்பார்வை பார்த்தல், ரே ஷன் கார்டில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை அந்தந்த தினங்களில் க்யூவில் நின்று வாங்கி வருதல், பழுதான பொருள்களைச் செப்பனிடுதல், யாசகம் கேட்டு வருபவர்களை விரட்டியத்தல், பரசு இத்தகைய பல பொறுப்புகளைச் சுமக்கத் தொடங்கி வீட்டில் தன் அதிகார தளத்தை மேலும் விஸ்தரித்து, அவனை விரோதித்துக் கொள்வதை மேலும் அசாத்தியமாக்கினான். அவனுடைய அண்ணாவும் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தான்.
அவனுக்கும் அப்பாவுக்கும் தமது வெளியுலகப் பொறுப்புக்களுக்காகத்தான் நேரம் சரியாயிருந்தது. அக்காவுக்கு அந்த வீட்டு விவகாரங்கள் யாவும் சலித்துப்போய் விட்டிருந்தன. ஒரு பெண் என்ற முறையில் அந்த வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியே சென்றுவிடக் கூடிய வாய்ப்பைத் தனக்கு வழங்கியிருந்த சம்பிரதாயங்களின் பால் நன்றி பாராட்டியவாறு, அந்த நன்னாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவுக்கோ, முன்பே சொன்னதுபோல, வீட்டு வேலைப் பளுவைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளப் பரசு முன் வந்தது சௌகரியமாகவே இருந்தது. அவன் கிட்டத்தட்ட அவதார புருஷனாகவே அவளுக்குத் தோன்றினான்.
சமையல் இலாகா உதவி மந்திரியாக இருந்தவன் சில நாட்களிலேயே உள்விவகார இலாகாவின் முழு அதிகாரம் பெற்ற மந்திரியாக உயர்ந்து விட்டான். அக்காவுக்குக் கல்யாணமான பிறகோ, அவன் கிட்டத்தட்ட வீட்டின் பிரதம மந்திரியாகவே ஆகி விட்டான். அம்மாவின் ஆதரவு அவனுக்குத்தான். அப்பாவோ கூட்டுச் சேராக் கொள்கையைக் கடைபிடித்து வந்தார். மேலும் பூஜை, கோவில் ஆகியவற்றில் பரசு தீவிர ஈடுபாடு காட்டி வந்ததால் (அது வே ஷமா, இல்லையா என்பது வேறு விஷயம்) அம்மாவுக்கும் அவன் மீது ஒரு வாஞ்சை, ஒரு நம்பிக்கை. அப்பாகூட அவன்தான் தனக்கு சிரார்த்தம் முதலியவற்றை ஒழுங்காகச் செய்து தன் ஆத்மாவைக் கடைத்தேற்றப் போகிறானென்று நம்புவதாகத் தோன்றியது. பரம்பரை அறிவு ஜீவிகளும் கூட, வயதாக வயதாக மறு உலகத்தைப் பற்றிய மாட்சியினால் 'பல்டி' அடிக்கத் தொடங்குவதுண்டு!
இதையெல்லாம் பார்த்த மாதவனுக்கு மரபு, சம்பிரதாயம், ஆகிய யாவற்றின் மீதும் தாளாத வெறுப்பு ஏற்பட்டது. கடைசியில் பரசு போன்றவர்கள் ஊரை ஏய்த்துப் பிழைக்கத்தான், மரபும் மண்ணாங்கட்டியும் உதவுகின்றன. கோவில், குளம் என்றாலே மாதவன் எரிந்து விழத் தொடங்கினான். பரம நாஸ்திகனாக மாறிப் போனான். அவனுடைய நாஸ்திகப் போக்கும் அவனுடைய தம்பியின் கையைப் பலப்படுத்தவே உதவியதென்பதை அவன் உணராமலில்லை. ஆனால், வேறு வழியில்லை. இத்தகைய வேஷங்களில் தம்பியுடன் போட்டியிடும் அளவிற்கு அவனுக்குப் பொறுமையில்லை. தம்பியுடன் எந்த விஷயத்திலும் போட்டியிடுவது தனக்கு கௌரவக் குறைச்சலென்று அவன் நினைத்தான். அவன் இயங்கும் தளம் வேறு, நான் இயங்கும் தளம் வேறு.
தனக்கும் தன் தம்பிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தன் பெற்றோருக்கு ஆணித்தரமாக நிரூபிக்கும் வெறி அவனுக்கு ஏற்பட்டது. தன்னைப் போலவே அமெரிக்கன் லைப்ரரியிலிருந்து ஃபிலிப் ராத்தையும், பெர்னாட் மாலமூடையும் இரவில் வாங்கிப் படித்துக் கொண்டிருந்த மாக்ஸ்முல்லர் பவனில் நடக்கும் மாலை நேர ஜெர்மன் வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந்த, ஃபிலிம் சொஸைட்டியில் ஸப்-டைட்டில் போட்ட படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் (இவள் ஒரு மார்க்ஸிய அறிவுஜீவி) சிநேகம் வளர்த்துக்கொண்டான். திடீரென்று ஒருநாள் அவளை வீட்டுக்கு அழைத்து வந்து தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவளுடைய பெல்ஸையும், பனியனையும் அவர்கள் மிரட்சியுடன் பார்க்க, "இவளைத்தான் நான் கல்யாணம் செய்துக்கப் போறேன்" என்று மாதவன் அறிவித்து அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான். "என்னடா, பிராம்மணச்சி தானே?" என்று அவனுடைய அம்மா பிற்பாடு விசாரித்தபோது அவனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.
பத்மா ஐயர் (அதுதான் அந்த பெண்ணின் பெயர்) ஒரு கிருஸ்தவச்சியாகவோ, முஸ்லீமாகவோ இருந்திருக்கக் கூடாதா? என்று தோன்றியது. "நாங்கள் ஜாதியற்றவர்கள்" என்றான் அவன் விறைப்பாக."ஜாதி, சடங்குகள், பூஜை கோவில் இதிலெல்லாம் என்னைப் போலவே அவளுக்கும் நம்பிக்கை கிடையாது. கிளாஸிகல் மியுசிக் என்னைப் போலவே அவளுக்கும் போரடிக்கிறது. அவளுக்கும் பாப் மியுசிக்தான் பிடிக்கிறது - நாங்கள் ஒருவருக்கொருவர் பிறந்தவர்கள். சந்தேகமேயில்லை"
பத்மா ஐயரைத் திருமணம் செய்துகொண்டு அவளுடன் தனி அபார்ட்மெண்டில் இருந்து வரலானான் மாதவன். அவளுக்கு சிகரெட்டும் விஸ்கியும் பழக்கமுண்டு. இவற்றை அவள் மாதவனுக்கும் பழக்கப்படுத்தி வைத்தாள். அவனுக்குத் தன் புதிய ரூபம் குதூகலத்தையும்,கர்வத்தையும் அளித்தது. பரசுவையும், தன் பெற்றோரையும் நன்றாகப் பழிவாங்கிவிட்டதாக மகிழ்ந்தான். அறிவு ஜீவிகளின் வட்டாரத்தில் அவனுடைய அபார்ட்மெண்ட் மிகவும் பிரபலமடைந்து போயிற்று. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் விஸ்கியருந்த வரலாயினர். பரசுவும் அங்கு ஒருதடவை வந்தான். அப்போது பத்மா ஐயரின் ஆங்கிலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் திணறியது, மாதவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. 'உன் யோக்கியதையை இப்போது தெரிந்துகொள்' என்று மனதுக்குள் குரோதத்துடன் முணுமுணுத்தான்.
ஆனால் இறுதியாகக் கொக்கரித்தது பரசுதான். தனக்குத் தெரிந்த ஒரு சமையற்காரர் மூலமாக அமெரிக்கன் எம்பஸியில் யாரையோ பிடித்து அங்கு ஒரு ஸ்டெனோகிராபராகச் சேர்ந்தான் அவன். அங்கு தற்செயலாக ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் அவனுக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. அவள் இந்தியர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் பற்றிய ஒரு தீஸிஸ் தயாரிப்பதற்காக இந்தியா வந்திருந்தாள். அவளுடைய தீஸீஸை டைப் அடிப்பதில் தொடங்கிய நட்பு, கல்யாணத்தில் போய் முடிந்தது. பரசுவின் அப்பா சொன்ன சம்ஸ்கிருத சுலோகங்கள், அவர் பாடிய கர்நாடக சங்கீத மெட்டுக்கள், அவனுடைய அம்மாவின் பூஜை புனஸ்காரங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக தென்னிந்தியச் சமையலில் பரசுவின் நிபுணத்துவம் எல்லாம் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டன. அந்த வீட்டின் மருமகளாக வரவேண்டுமென்று அவளுக்கு ஆசை ஏற்பட்டு, அந்த ஆசையைச் செயல்படுத்தினாள். பரசுவின் பெற்றோருக்கும் அவளுடைய வரவு, தம் நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகிய எல்லாவற்றினுடையவும் ஓர் அங்கீகாரமாக அமைய, அவர்கள் அவளை ஆவேசத்துடன் அரவணைத்துக் கொண்டார்கள்-
மாதவன், மீண்டும் தம்பி தன் முகத்தில் கரியைப் பூசிவிட்டதாக உணர்ந்தான். தன் மனைவியின் ஆங்கிலப் பேச்சு, அவளுடைய சிகரெட் குடித்தல், மது அருந்துதல் இவையெல்லாம் இப்போது அவன் பெருமையாக உணர முடியவில்லை. அவள் ஒரு போலி என்று தோன்றியது. ஒரு நகல். அவளுடைய பாணிகள், சார்புகள் எல்லாமே நகல். அந்த அமெரிக்கப் பெண்ணோ விசாலமானவள். மனதின் அந்தந்த நேர உந்துதல்களை நேர்மையுடன் பின்பற்றுகிறவள்.
பரசுவும்தான். அவனுக்குத் தனக்கென்று ஒரு சொந்தமுகம் இருக்கிறது. ஆனால் நான்? என் உண்மையான முகம் எதுவென்று நான் தெரிந்துகொள்ளவே இல்லை. என் பெற்றோரைத் திருப்திப்படுத்துவதற்காக அணிந்த ஒரு போலி முகம். என் தம்பிவை விமர்சிக்கவும், அவனிடமிருந்து என்னைப் பிரித்துக் காட்டிக் கொள்ளவும் ஒரு முகம். பிறகு என் பெற்றோரைக் காயப்படுத்த ஒரு முகம்...
இப்போது திடீரென்று நான் அவர்களுக்கு ஒரு மூன்றாம் மனிதன் - ஆம்! நான்தான் மூன்றாமவன், கடைசியில் -
ஒரு சனிக்கிழமை காலை பரசுவிடமிருந்து போன் வந்தது. அவனையும், பத்மாவையும் மறுநாள் டின்னருக்குக் கூப்பிட்டான். பிரண்டாவுக்கு அவர்களை நன்கு தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது என்றான் ...
அந்தப் போன் அவனுள் ஏதோ ஒரு மர்மமான விசையைத் தட்டிவிட்டது போலிருந்தது ...
ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்த தண்ணீர் நிரம்பிய பாட்டில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கி அப்படியே ஆத்திரத்துடன் வீசியெறிந்தான் மாதவன். பாட்டில் சில்லுச் சில்லாக உடைந்து சிதறியது. அடுத்துக் கண்ணாடித் தம்ளரையும் அதே போல் வீசியெறிந்தான். பிறகு பூ ஜாடியை. பிறகு புத்தக ஷெல்ப் மீதிருந்த அழகுப் பொருட்களை; சுவரில் மாட்டியிருந்த படங்கள்; மனைவியின் ஹேர் ஆயில், ஷாம்பூ, ஸென்ட் பாட்டில்கள்; பாப் மியூசிக் இசைத் தட்டுக்களை -
போனை வைத்துவிட்டு மாதவன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டான். பிரெண்டாவுக்கு அவர்களைப் பார்க்க வேண்டுமாம்! பிளடி பாஸ்டர்ட்.
மார்க்கெட்டுப் போயிருந்த பத்மா ஐயர் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவுடன், அவள் முகத்தில் சொத்தென்று ஒரு தக்காளி வந்து விழுந்தது. தொடர்ந்து மாதவனின் கடகடவென்ற சிரிப்பு. அடுத்ததாக ஒரு விஸ்கி பாட்டில் கிட்டத்தட்ட அவள் காதை உரசியவாறே சென்று சுவரில் மோதி விழுந்து சிதற .....
அவளைப் பீதி கவ்வியது. வந்த வழியே திரும்பி ஓடினாள். முதல் மாடித் திருப்பத்துக்கு வந்ததும் நின்றாள். இப்போது என்ன செய்வது? டாக்டருக்கு போன் செய்வதா அல்லது அவன் பெற்றோருக்கா?
மேலேயிருந்து மாதவனின் சிரிப்புச் சத்தம் மிக உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்திலிருந்த சிலர் கதவைத் திறந்து பார்த்தார்கள். அவளுக்கு அவமானம் தாங்கவில்லை. மாதவன் சிரித்துக்கொண்டே இருந்தான். அவன் வாழ்க்கையில் அதுவரை அவன் சிரிக்காததற் கெல்லாம் சேர்த்து வைத்து அவன் இப்போது சிரிப்பது போலிருந்தது.
---------------
3. கருப்பை
பிரசாத் நகரில் ஒரு ஃப்ளாட் காலியாக இருப்பதாக நண்பனொருவன் சொன்னதன் பேரில் காலை ஆறு மணிக்கே வெறும் காப்பியைக் குடித்துவிட்டுக் கிளம்பியவன்தான். இப்போது நல்ல நடுப்பகல் வெய்யிலில்* வீடு திரும்பிக்-கொண்டிருந்தான். சோர்வு, பசி எரிச்சல்.
வீட்டு வாசலில் அவன் கண்டது எரிச்சலை அதிகப்படுத்தியது. அவனுடைய ஒன்றரை வயதுப் பையன் தெரு மண்ணை ஆசையாக அள்ளித் தின்று கொண்டிருந்தான். பாய்ந்து சென்று குழந்தையைத் தூக்கி, பளார் பளாரென்று அறைந்து, கதறக் கதற அவன் வாய்க்குள் விரலை விட்டுக் குடைந்து மண்ணையெல்லாம் வெளியே எடுத்துப் போட்டு...
குழந்தையின் அலறல் அவனுடைய மனைவியை உள்ளேயிருந்து வாசலுக்கு இழுத்து வந்தது. "ஒரு நிமிஷம் காரியத்திலே கவனமா இருந்துட்டேன்... இதற்குள் வாசலுக்கு ஓடி வந்துட்டான்".
"வந்துட்டான்னு சொன்னால் போதுமா?" என்று அவன் சிடுசிடுத்தான். "இங்கே வாசல் கதவை மூடுகிற வழக்கமும் கிடையாது. எப்பவும் 'பே'ன்னு திறந்துதான் கிடக்கும்".
"யாரு திறந்து வைக்கிறாளோ, அவாகிட்டே சொல்றது".
இந்தக் கணை அம்மாவை நோக்கி. அவள்தான் எப்போதும் காற்று,காற்று என்று எல்லாக் கதவுகளையும் திறந்து திறந்து வைப்பவள்.
"அம்மா எங்கே?" என்று கேட்டான். அவள் கொல்லையை நோக்கிக் கைகாட்டினேன்.
மகாதேவன் கொல்லையில் எட்டிப் பார்த்தான். அம்மா மல்லிகைச் செடிக்கு எதிரில் அமர்ந்து கரண்டிக் காம்பினால் செடியின் தண்டைச் சுற்றிக் கிளறிக் கொண்டிருந்தாள். அறையில் இல்லாத சமயங்களில் அம்மாவைப் பெரும்பாலும் கொல்லையில் பார்க்கலாம். முருங்கை, மல்லிகை,கறி வேப்பிலை, துளசி ஆகியவற்றுடன் குலாவிக் கொண் டிருப்பாள். "செடிகளிடம் இருக்கிற ஒட்டுதல் பேரனிடம் கிடையாது", என்ற அவனுடைய மனைவியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது இல்லை.
அவளுடைய ஆதாரம் பொறுப்புகளைத் தவிர்க்க ஒரு சாக்குத்தானோ?
பேரன் உடைகளணிவதால் அவனைப் பூஜை முடியும் வரை தொடமுடியாது. ஆனால் செடிகள் உடைகளின்றிப் பிறந்த மேனியாக இருப்பதால் அவற்றை எப்போது வேணுமானாலும் தொடலாம். அதே போலத் தான் அவளுடைய சுவாமி படங்கள்...
அவனுடைய மனைவியின் மனத்தாங்கல் தொடர்ந்து வார்த்தைகளாகக் குமுறித் தள்ளிக் கொண்டிருந்தது:
"இப்படி நான் ஒரு இடத்திலேயும் பார்த்தது கிடையாது... பூஜை பூஜைன்னு நாள் முழுவதும் நேரத்தை வீணடிச்சுண்டு, சுற்றி என்ன நடக்கிறது, குடும்பத்திலே என்னென்ன பிரச்சினைகள் என்பதிலெல்லாம் துளியும் சிரத்தை காட்டாமல் சதா தன்னுடைய சுவாமி படங்களைப் பார்த்து ஏதோ புலம்பிண்டு. சே! இங்கே நான் ஒண்டி ஆளாகச் சமையலைக் கவனிச்சுக்கணும், தண்ணீர் பிடிச்சு வைக்கணும், கறிகாய் வாங்கி வரணும், குழந்தையைப் பார்த்துக்கணும், வேலைக்காரியை மேல்பார்வை செய்யணும், இத்தனைக்கும் நடுவிலே வாசல் கதவை யாராவது திறந்து போட்டுவிட்டுக் கொல்லையிலே போய் உட்கார்ந்திருந்தால் அதற்கும் நான்தான் பொறுப்பாளி".
"என்ன செய்யறது சொல்லு - அப்பா போனதிலிருந்தே அம்மா ஒரு மாதிரியாக ஆகிவிட்டாள்".
"உங்கப்பா போய் எட்டு மாசந்தானே ஆச்சு? அதற்கு முன்னாடியும் உங்க அம்மா இப்படித்தான்".
"பாவம் அந்தக் காலத்து மனுஷி... நம்முடைய எதிர்பார்ப்புகள்ங்கிற தராசிலே அவளை சதா நிறுத்திக் கொண்டிராமல், அவளை அப்படியே அவளுடைய குறைகளோடு ஏத்துக்க நாம முயற்சி பண்ணனும்... வேறே வழியே இல்லை".
"அவளுடைய குறைகளோடு அவளை ஏத்துக்கணும்... உங்களுடைய குறைகளோடு உங்களை ஏத்துக்கணும்... என்னிடம் மாத்திரம் குறைகளே இருக்கக் கூடாது. மருமகளாச்சே! நான் மட்டும் குறைகளே இல்லாத குணவதியாய், பொறுமையிலே பூமாதேவியாய்..."
மகாதேவன் மேலே பேசவில்லை. சலிப்பாக இருந்தது. அந்த இருவர் (மனைவி, தாய்) பால் கொஞ்சம் அனுதாபமாகவும் இருந்தது. வீட்டின் நான்கு சுவர்களுக் கிடையில் இவர்கள் எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கலாம். பிரச்சினையே இல்லாததையெல்லாம் பிரச்சினையாக்கிக் கொண்டு - சே!
அவன் உடை மாற்றிக் கொண்டு வந்தபோது அம்மாவும் கொல்லையிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தாள். "என்ன, காயா, பழமா?" என்று அவனைப் பார்த்துக் கேட்டாள். அவளுடைய கேள்வி, அந்த வார்த்தைகள், அந்தப் பாணி, எல்லாமே அவனுடைய கோபத்தைத்தான் கிளறின. சில நிமிடங்களுக்கு முன் அவன் தன்னுடைய மனைவியிடம் உபதேசித்ததற்கும் இந்த உணர்வுகளுக்கும் சம்மந்தமேயில்லாமல் இருந்தது. (நம்மைப் பற்றியே நமக்கு எவ்வளவு குறைவாகத் தெரிகிறது!) காயாம், பழமாம் - அந்த வார்த்தைகளிலும், இளஞ்சிரிப்பிலும் முகத்தின் எதிர்பார்ப்பிலும் தொனித்த பேதையையே அவனைக் காயப்படுத்தி விட்டது, உசுப்பி விட்டது. "எங்கேயாவது குடிசைதான் போட்டுக்கணும்" என்றான் வெறுப்புடன். "நம்முடைய எல்லா நிபந்தனைகளுக்கும் ஒத்து வரும்படியா ஒரு வீடு எங்கேயாவது கிடைக்குங்கிற நம்பிக்கையே போயாச்சு..."
"இப்ப போனாயே, அந்த வீடு"...
"அதுவும் மாடி வீடுதான். மாடி வீடுதான் உனக்குப் படாதே!...உலகமே மாடி வீடுகளிலேதானே இருந்துண்டிருக்கு. தண்ணீர் வரபோது குளிப்பார்கள், சமைப்பார்கள், பால்கனியிலே துளி இடத்திலே எல்லாத் துணியையும் உலர்த்திக் கொள்வார்கள். இருக்கிற இடத்திலே அவர்களும் அவர்களுடைய சுவாமியும் சந்தோஷமாக இருப்பார்கள்... வாழ்க்கைங்கறதே வெறும் அட்ஜஸ்மெண்ட்தான்... நூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த வாழ்க்கை இப்ப இல்லைன்னு புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல நம்மை மாற்றிக் கொள்ளணும்".
அவனுடைய அம்மா பதிலேதும் சொல்லவில்லை. எப்போதுமே இப்படித்தான். இவ்வாறு அவன் பொறுமையிழந்து கத்தும் போதெல்லாம் அவள் பிடிவாதமாக மௌனம் சாதித்து விடுவாள். பிறகு இரண்டு நாள், மூன்று நாள், அல்லது ஒரு வாரம் கழித்து அவனுடைய மனைவி மூலமாக அம்மாவின் மறுமொழி அவனுக்கு வந்து சேரும். ஆனால் இப்போது, இந்தச் சந்தர்ப்பத்தில் கூடவா இப்படி? அவன் வேண்டுமென்று அலை அலையென்று அலைந்து கொண்டிருப்பது அவளுக்காகத்தானே.
அவளுடைய மடி, ஆசாரத்தைக் காப்பதற்கு நிறையத் தண்ணீர் வேண்டும். அவள் யாரையும் தொடாமலிருக்க வேண்டும். அவளுடைய துணிகளுக்காகத் தனியான கொடி வேண்டும். பூஜைக்காகப் பூவும் துளசியும் வேண்டும். ருசிக்காகக் கருவேப்பிலையும், முருங்கையும் வேண்டும். சில நாட்களில் வாழையிலை வேண்டும். கூப்பிட்டவுடன் காக்காயும் மாடும் ஓடிவர வேண்டும். இதெல்லாம் கீழ்வீட்டில்தான் சாத்தியம். மேலும் பஜனை, கோயில் என்று அடிக்கடி அவளுக்கு வெளியே போக வேண்டும். மாடி வீடாக இருந்தால் படியேறி இறங்குவது கஷ்டம். அவளைத் தேடி வருகிற ஸ்திரீகள் பலரும் அவளுடைய வயதுக்காரர்கள். அவர்களுக்கும் படியேறுவது சிரமமாக இருக்கும். இந்தப் பஜனைகள் நடக்கும் ஏரியாக்கள், இந்தக் கோவில்கள், இவற்றுக்கெல்லாம் எளிதில் அவளுக்கு பஸ் கிடைக்கக்கூடிய இடமாக அவன் வீடு பார்க்க வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனை.
ஆம்! கீழ்வீடாக வேண்டும்; அதுவும் அம்மாவுக்குச் சௌகரியமான ஏரியாவில் வேண்டும் என்று பார்ப்பதால்தான் இப்போதைய வீட்டிலிருந்து இதுவரை காலி செய்ய முடியவில்லை. வீட்டுக்காரனோ என்றால் அடிக்கடி ஆபிசுக்கு டெலிபோன் செய்து, வீடு எப்போது காலியாகும் என்று விசாரித்துக் கொண்டே இருக்கிறான். அவனுடைய மாப்பிள்ளைக்கு இங்கே மாற்றலாகப் போகிறதாம். அவனுக்காகத் தேவைப்படுகிறதாம். பொய்யாகத்தான் இருக்கும். யார் இப்போதெல்லாம் உண்மை பேசுகிறார்கள். பிறர் நலனை நினைக்கிறார்கள்? எங்கும் பொய்யும் புரட்டும்தான், சுயநலந்தான், சதியும் துரோகமும்தான். ஆபிசிலும் அப்படித்தான். வீட்டில் தனது மடி ஆசாரத்தைக் காப்பாற்றிக் கொண்டு தனது சாமியை வெகுளியாகக் கும்பிட்டுக் கொண்டு, தனது நம்பிக்கைகளின் சிறிய கோட்டையினுள் ஒளிந்து வாழும் இவளுக்கு வெளியுலகின் குரூரமான வழிமுறைகள், அங்கு உயிர் வாழப் பயில வேண்டிய தந்திரங்கள், விழுங்க வேண்டிய அவமானங்கள் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. இவளுடைய தண்டிக்கும் மௌனங்கள், செல்லமாக மனத்தாங்கலை வெளிப்படுத்தும் பாணிகள், இவையெல்லாம் இன்று வெறும் புராதனச் சின்னங்களென்று தெரியாத பேதை - சே!
சாப்பிட்டான். காலையில் படிக்காத தினசரியை இப்போது படிக்க எண்ணி எடுத்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தான். ஆனால் அப்போது அவனுடைய பையனும் தினசரியுடன் போட்டி போட்டுக்கொண்டு அவனோடு வந்து ஒட்டிக்கொண்டான். மகாதேவனும் தினசரியை, வெளியுலகை ஓரமாக எறிந்து விட்டு குழந்தையின் உலகில் ஒண்டிக்கொண்டான். தனக்கும் - அம்மாவைப் போல - மாயை தேவையாகத்தான் இருக்கிறது என்று நினைத்தான். குழந்தைக்காக யானையாகவும், குதிரையாகவும், கோழியாகவும், காக்காயாகவும் மாறினான். வீட்டுப் பிரச்சினைகளில்லாத காட்டுக்குள் ஒளிந்தான். ("ஒரே ஒரு காட்டிலே...) பிறகு ஏதோ ஒரு கட்டத்தில் குழந்தை தூங்குவதற்கு முன்பே அவன் தூங்கிப் போனான்.
மீண்டும் அவனுக்கு விழிப்பு வந்தபோது அறையில் இருள் சூழ்ந்திருந்தது. மணி ஏழரையாவது இருக்கும். அல்லது எட்டா?
மேடை மீதிருந்த கைக்கடிகாரம் எட்டேகால் என்றது. ஒரு விடுமுறை நாள் முழுவதுமாக வீணாகிவிட்ட வருத்தத்துடன் அறைக்கு வெளியே வந்தான்.
"வாங்கோ" என்று மனைவி வரவேற்றாள்.
"அப்பவே எழுப்புவதற்கென்ன?"
"இரண்டு மூன்று தடவை எழுப்பினேன். நீங்க எழுந்திருந்தால்தானே? மேலும் உங்கம்மாவும், தூங்கட்டுமடி, பாவம்னு என்னைத் தடுத்துட்டாள்... மாமியார் சொல்லைத் தட்ட முடியுமா?"
"முடியாதுதான்"
அவனுடைய அம்மா தன் பேரனுடன் ஞாயிறு மாலை திருப்புகழ் வகுப்புக்குச் சென்றிருப்பதாக அறிந்து, சட்டென்று மனைவியை இறுக அணைத்துக் கொண்டு...
"சீ! என் மேலெல்லாம் ஒரே வியர்வை..." என்று அவள் திமிறினாள்.
"எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு".
"ம்ம்ம்ம் ... அப்பா! இந்த தொந்தி வேறே - நாளுக்கு நாள் தொந்தி பெரிதாகிக் கொண்டு வரது உங்களுக்கு"
"வயதாகிறதில்லையா".
"உங்கம்மாவும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தாள் இன்றைக்கு".
"அப்படியா?"
"ஆமாம். நீங்க அசந்து தூங்கறதைப் பார்க்கப் பார்க்க உங்கம்மாவுக்குத் தாளலே. பாவம் வரவர அவனுக்கு அலைச்சலே தாங்கறதில்லை ... வயயசாயிடுத்து இல்லையா ... என்று சொல்லிக் கொண்டிருந்தாள்".
"அதற்கு நீ என்ன சொன்னாய்?"
"ஒரு வயசுமில்லை. அவருக்குச் சோம்பேறித்தனம் அதிகமாயிடுத்துன்னு சொன்னேன்".
"உம்?"
"வெளியே போகாத தினங்களிலே கூட அவுர் தூங்காமல்தான் இருக்காராக்கும்னு சொன்னேன்".
"உம்?"
"ஆனால் உங்கம்மா ஒன்றையும் காதில் போட்டுக்கத் தயாராயில்லை. பாவம், பாவம்னு, சொல்லிண்டேயிருந்தா. பல நாட்களிலே ஆபிசிலிருந்து வந்தவுடனே நீங்க படுக்கையிலே விழுந்துவிடுவதைச் சொல்லிக் கொண்டிருந்தா. பாவம், அவனுக்கு உடம்பே சரியில்லைன்னு வருத்தப்பட்டுக் கொண்டாள்".
மனைவியின் நைச்சியத்தைப் புரிந்து கொண்டு மகாதேவன் பெரிதாகச் சிரித்து விட்டான். அம்மாவின் மீதிருந்த கோபம் இப்போது மறைந்து போயிற்று. பாவம் அம்மா. தாய்ப்பாசத்துக்கு பழசு, புதிசு, ஆசாரம், நவீனம் என்று எதுவும் கிடையாது.
அம்மாவின் அன்பு தனியானது தான்.
நாலுநாள் கழித்து அம்மாவின் பதில் வந்துவிட்டது. மனைவியின் வாயிலாக.
"அந்த பிரசாதநகர் வீட்டையே முடிவு பண்ணிடலாம்கிறா அம்மா".
"அது இரண்டாவது மாடியாச்சே!"
"உங்களுக்குப் பரவாயில்லைன்னா அவளுக்கும் பரவாயில்லைங்கிறா".
மகாதேவனுக்கு அம்மாவின் மீத அனுதாபம் அதிகமாகியது. "இரண்டாவது மாடின்னா உனக்குக் கஷ்டமாச்சே!" என்று அம்மாவிடம் வந்தான்.
"என்னைப் பற்றிக் கவலைப்படாதேடா" என்றாள் அம்மா. "என் சௌரியங்கள் அவ்வளவு முக்கியமில்லை. ஆனா நீ தினம் ஆபீஸ் போக வேண்டியவன். எங்கெங்கோ அவசியமாக வெளியே போக வேண்டியவன். அடிக்கடி மாடி ஏறி இறங்கிறது உனக்குக் கஷ்டமாக இருக்காதே, அதைப் பார்த்துக்கோ"
"எனக்கென்ன கஷ்டம்" என்று அவன் சிரித்தான். அவன் அம்மா பேசவில்லை. அவனும் அவளுடைய சௌகரியத்தைப் பற்றி அதற்கு மேல் கவலை தெரிவிக்கவில்லை. அவனுக்கு வெட்கமாக இருந்தது. தன் மேலேயே வெறுப்பாக இருந்தது. "குழந்தைக்காக" என்று சமாதானம் செய்து கொண்டான். கீழ்வீடுகளில் இருக்கும் வரை குழந்தையின் மண் தின்னும் வழக்கம் போகாது.
அடுத்த ஞாயிறும் அவனுக்கு வீணாயிற்று. புதிய வீட்டுக்கு சாமான்களையும் குடும்பத்தினரையும் கொண்டு சேர்த்து, முக்கியமான சில பொருள்கள், உடையக் கூடிய பொருள்கள் போன்றவற்றை மேலே கொண்டு சேர்க்கப் பலமுறை படியேறி இறங்கி ….
திடீரென ஒரு கட்டத்தில் அவனுக்கு மூச்சடைப்பது போலிருந்தது. கை, கால்கள் படபடத்தன. அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டான். புதிய வீட்டின் தரை. சற்றுத் தூரத்தில் அவனுடைய அம்மா, அவனை அனுதாபத்துடன் பார்த்த வண்ணம். 'உனக்கும் வயதாகிவிட்டது' என்று அந்தப் பார்வை சொல்லுகிறதோ?
அவனுக்கு ஓடிச் சென்று அவள் மடியில் தலையைச் சாய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. இப்படிச் செய்ய முடியாத தாபந்தான் அவ்வப்போது கோபமாக மாறியதோ? இந்தச் சோர்வு, இந்த மூச்சு வாங்கல் - கைகால்களில் கனக்கும் வருடங்கள்...
திறந்திருந்த ஜன்னல் வழியே தூரத்தில் தெரிந்த மரங்கள், கட்டிடங்களின் உச்சிகள், அருகில் வந்துவிட்டது போன்ற வானத்தின் நீலம் ஏற்படுத்திய வெறுமை உணர்ச்சி ...
அவன் திடீரென அநாதையாக, அகதியாக உணர்ந்தான்.
------------------
4. நிழல்கள்
பிரிய வேண்டிய வேளை வந்துவிட்டது; பிரிய வேண்டிய இடம் வந்து விட்டது.
அவளுடைய ஹாஸ்டல் கேட் உயரமான இரும்புக் கிராதிகளாலான கேட். அந்தக் கேட்டருகே நிற்கும்போது அவர்கள் இருவருமே எவ்வளவு சிறியவர்களாகவும் முக்கியத்துவம் இல்லாதவர்களாகவும் தோற்றமளித்தார்கள்! ஹாஸ்டல் கட்டிடத்தின் வெளிப்புறச் சுவுரில் பொருத்தப்பட்டிருந்த விளக்கின் மங்கலான வெளிச்சம், கேட்டின் நிழலை வெளிப்புறச் சாலை மேல் நீளமாகப் படரவிட்டிருந்தது. எதிரெதிராக நின்றிருந்த அவர்கள் இருவருடைய நிழல்களும், அந்தக் கேட்டின் நிழலின் மேலேயே, ஒன்றின் மீது ஒன்றாகச் சாலையின் மீது படிந்திருந்தன.
"நம் நிழல்கள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருக்கின்றன" என்றான் அவன்.
அவள் அவன் பார்வையின் திசையைக் கவனித்தாள். நிழல்களைக் கவனித்தாள். புன்னகை செய்தாள். அவனுடைய அர்த்தத்தைக் கண்டு கொள்ளாதது போன்ற புன்னகை. எதையுமே தெரிவிக்காத, விட்டுக் கொடுக்காத புன்னகை. நிழல் தழுவுகிறது. புன்னகை செய்வதில்லை. அவள் புன்னகை செய்கிறாள்; ஆனால் -
"இன்று என்னவோ ஒரே புழுக்கமாக இருக்கிறது இல்லை?" என்றான் அவன்.
"உக்கூம்".
"இந்தப் புழுதி வேறே, சனியன் இப்போதெல்லாம் சாயங்காலமும் ஒரு தடவை நான் குளிக்கிறேன் - நீ?"
"நான்கூட".
"உனக்குக் குளிக்க எவ்வளவு நேரம் ஆகும்?"
"பதினைந்தே முக்கால் நிமிஷம்".
"ரொம்ப அதிகம் - எனக்கு ஐந்து *நிமிஷங்கூட ஆகாது".
"நான் பாத்ரூமுக்குப் போனால் உடனே குளிக்கத் தொடங்க மாட்டேன். கொஞ்ச நேரம் வாளியிலிருக்கும் ஜலத்தைக் கையினால் அளைந்து கொண்டு, யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். கால் விரல் நகங்கள் ஒவ்வொன்றின் மேலும் சொட்டுச் சொட்டாக ஜலத்தை எடுத்து விட்டுக் கொள்வேன். தலைமயிரை ஒரு கொத்தாகப் பிரஷ் போல நீரில் தோய்த்தெடுத்து, அதனால் கை கால்களில் வருடிக் கொள்வேன். செம்பைக் கவிழ்த்தவாறே ஜலத்தினுள் அமிழ்த்தி, பிறகு ஜலத்தினடியில் அதை மெல்ல நிமிர்த்தி 'பம்பும், பம்பும்' என்று அது பேசுவதைக் கேட்பேன்" -
"நான் அந்தச் செம்பாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!..."
"நான் உங்களுடன் பேசுவதில்லையென்றா சொல் கிறீர்கள்?"
"உன்னுடன் தனியா...!"
"டோன்ட் பீ வல்கர்".
அவள் குரலில் ஒரு இலேசான கண்டிப்பு இருந்தது. அந்தக் கண்டிப்பு அவனுக்கு ஒரு திருப்தியையும் குதூகலத்தையும் அளித்தது. அவளுடைய கவசத்தைப் பிளந்த குதூகலம். அவளை உணரச் செய்த, உணர்ந்து கண்டிக்கச் செய்த குதூகலம்.
"நான் ஒரு வல்கர் டைப் - இல்லை" என்றான்.
"ஊஹூம்; ரொம்ப நைஸ் டைப்" அவள் சமாளித்துக் கொண்டு விட்டாள்.
"அதனால்தான், நீங்கள் நைஸாகவே இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்".
"நான் அதை விரும்பவில்லை. அவ்வப்போது சற்றே வல்கராக இருப்பதுதான் எனக்குப்பிடிக்கும்"
"நானும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா?"
"சில சமயங்களில் - கொஞ்சம் கொஞ்சம்".
"எதற்காக?"
"மை காட்! அடுத்தபடியாக, உன்னை நான் எதற்காகக் காதலிக்கிறேன் என்று கேட்பாய் போலிருக்கிறது".
"அதற்காகத்தான் காதலிக்கிறீர்களா? அந்த லட்சியத்துடன் தானா?"
"எந்த லட்சியம்?"
அவள் பேசவில்லை. நிழல்களைப் பார்த்தாள். ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு, ஒன்றில் ஒன்று ஆழ்ந்திருந்த நிழல்கள்.
"எல்லோரும் எதற்காகக் காதலிக்கிறார்கள்?" என்று அவன் கேட்டான். "நாம் இப்போது மற்றவர்களைப் பற்றிப் பேசவில்லை".
"சரி; நீ எதற்காகக் காதலிக்கிறாய்?"
"அழுகையும் சிரிப்பையும் போல, எனக்குள்ளிருந்து பீறிடும் ஒரு இயற்கையான உணர்ச்சி வெளியீடு இது-என்னையுமறியாமல், எனக்கே புரியாமல்..."
"ஐ ஸீ!"
"ஆனால் அழுகையையும் சிரிப்பையும் போல அல்லாமல் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், குறிப்பிட்ட ஒரு நபரை முன்னிட்டுத்தான் இந்த வெளியீடு நடைபெறுகிறது".
"நான் எவ்வள்வு அதிர்ஷ்டசாலி!"
"ஆனால் பொறுமைசாலியல்ல".
"அப்படியா?"
"ஆமாம்".
"என அம்மாகூட அப்படித்தான் சொல்லுவாள். அவள் எது சமைத்தாலும் பாத்திரத்திலிருந்தே எடுத்துச் சாப்பிட்டு விடுவேன் நான்-அகப்பை, தட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பரிமாறுதல், காத்திருத்தல்-இதெல்லாம் என் பொறுமையைச் சோதிக்கும் விஷயங்கள்".
அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. "அம்மா நினைவு வருகிறதாக்கும். என்னைப் பார்த்தால்?"
"பெண்கள், பெண்கள்தான்".
"ஆண்களின் பொறுமையைச் சோதிப்பவர்கள்-இல்லை".
"ரொம்ப".
"ஆனாலும் சகித்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள்".
"எங்கள் தலைவிதி".
"த்சு,த்சு, பா......வம்!" என்று அவள் அவன் தோளின் மேல் செல்லமாக ஒரு முறை தட்டினாள். மெல்லத் தடவிக் கொடுத்தாள். மென்மையான, மிருதுவான அந்தத் தடவலில் அவனுடைய இறுக்கம் தளர்ந்தது; அவனுள் கெட்டியாக உறைந்து கிடந்த எதுவோ திடீரென்று இளகத் தொடங்கியது; பொங்கியெழும்பத் தொடங்கியது- அவன் சட்டென்று அவள் கையைப் பற்றிக் கொண்டான். அவளை இறுக அணைத்துக் கொண்டுவிடப் போகிறவனைபோல முகத்தில் ஒரு தீவிரம், உன்மத்தம்.
"உம்ம்....ப்ளீஸ், வேண்டாம்!" என்று கோபமில்லாமல் இதமாகவும் கனிவுடனும் கூறியவாறு அவள் மெல்லத் தன் கையை விடுவித்துக் கொண்டாள். அந்தக் கணத்தில் அவனுக்கு அவளைக் கொலை செய்ய வேண்டும் போலிருந்தது. நெருப்பு மூட்டுவதும், பிறகு ஊதி அணைப்பதும்-நல்ல ஜாலம் இது!
அவள் அவனுடைய முகத்தைப் பார்த்தாள். அவனுடைய உஷ்ணத்தை உணர்ந்தாள். சுமூகமாக ஒரு மனநிலையில் அவனிடம் விடைபெற நினைத்து, அவன் தோளில் தட்டிக் கொடுக்கப் போக, பலன் இப்படியாகி விட்டது.
"கோபமா?" என்றாள் அவள் மெதுவாக.
"சேச்சே, இல்லை; ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறேன்- இதோ பார்த்தாயா, புன்னகை செய்கிறேன்".
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். "ப்ளீஸ்! புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்".
"அது சுலபமாக இல்லை. இருந்தாலும் நான் என்னால் இயன்றவரை முயன்று கொண்டுதான் இருக்கிறேன். என்னை நம்பு".
"எதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்-எல்லாவற்றையும் அல்ல, பூரணமாக அல்ல".
"பூரணமாக உன்னை நீ சமர்ப்பித்திருக்கிறாயா, பூரணமாக உன்னைப் புரிந்து கொள்வதற்கு?"
அவள் பேசவில்லை. வெடுக்வெடுக்கென்று இரக்கமில்லாமல் எப்படிக் குதறியெடுக்கிறான் அவளை! கருணையையும் கடுமையையும் பிரிக்கும் கோடு இவ்வளவு மெலிதானதா?
குப்பென்று குளிர் காற்று வீசியது. அவர்களிடையே நிலவிய சூழ்நிலைகுச் சிறிதும் பொறுத்தமில்லாததாக. மெயின் ரோடிலிருந்து பஸ்கள், கார்கள் செல்லும் ஓசைகள், ஹார்ன் ஒலிகள் மிதந்து வந்தன. தலைக்கு மேலே ஒரு ஒற்றைக் காக்கை 'கக்கா பிக்கா' என்று தன் அகால இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வது போலச் சப்தமெழுப்பிக் கொண்டு பறந்து சென்றது-எங்கும் எந்தப் பஸ்ஸுக்கும் (அல்லது மிஸ்ஸுக்கும்) காத்திருக்க வேண்டிய நிர்பந்தமில்லாமலிருந்தும், அதற்கு ஏனோ இன்று வீடு திரும்ப இவ்வளவு நேரமாகியிருக்கிறது.
ஆனால் அவன் பஸ்ஸுக்காகக் காத்து நிற்க வேண்டும். 'குட் நைட்' என்று சொல்லிவிட்டு, 'கான்ஸலேஷன் ப்ரைஸ்' போல ஒரு புன்னகையை வீசிவிட்டு அவள் ஹாஸ்டலுக்குள் நுழைந்து விடுவாள். அவன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க வேண்டும். தன் நினைவுகளுடன் போராடியவாறு, அவற்றின் முற்றுகைக்குள் புழுங்கித் தவித்தவாறு, பஸ் வருவதை எதிர் பார்த்து பஸ் ஸ்டாண்டில் நிற்க வேண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டும். பஸ்ஸின் மேல் அவனுக்கு தனியாக பாத்தியதையோ, அதிகாரமோ இல்லை. மற்றவர்களைக் காக்க வைப்பது போல, அவை அவனையும் காக்க வைக்கட்டும், பாதகமில்லை. ஆனால் இவள்-இவள் ஏன் அவனைக் காக்க வைக்க வேண்டும்? எவ்வளவு சிறிய விஷயம்! அதை எவ்வளவு பெரிதுபடுத்துகிறாள்! எப்போதும் எதற்கும் காத்திருப்பதும் ஏங்கித் தவிப்பதும் அவன் தலைவிதி போலும். சிலருக்கு ஒவ்வொன்றும் எவ்வளவு சுலபத்தில் கிட்டிவிடுகிறது......
சாலையின் குறுக்கே ஒரு வெள்ளை நாய் ஓடி வருகிறது. பின்னாலேயே ஒரு கருப்பு நாய். வெள்ளை நாய் நிற்கிறது; கருப்பு நாய் அதன் பின்னால் முகர்ந்து பார்க்கிறது... "நாய்கள் யோசிப்பதில்லை" என்றான் அவன்.
அவனுடைய மௌனத்தையும் பார்வையின் திசையையும் சிரத்தையாகக் கவனித்துக் கொண்டிருந்த அவள், குபீரென்று சிரித்தாள். தன் வார்த்தைகள் அவளை அதிரச் செய்யுமென்றும் புண்படுத்துமென்றும் எதிர்பார்த்திருந்த அவன் அவள் சிரித்ததும் தடுமாறிப் போனான். ஒரு முட்டாளைப் போல உணர்ந்தான்.
திடீரென்று தொடங்கியதை போலவே, திடீரென்று நின்றது அவள் சிரிப்பு. அவள் முகத்தில் ஒரு ஆயாசமும் வாட்டமும் தேங்கியிருந்தன. எல்லாச் சிரிப்புகளுமே குதூகலத்தையும் உல்லாசத்தையும் மட்டுமே வித்தாகக் கொண்டைவையாக இருப்பதில்லை. "சில சமயங்களில் என்னை இதயமற்ற ஒரு கொடிய ராட்சஸியைப் போல உணரச் செய்து விடுகிறீர்கள்" என்றாள் அவள்.
"நீ மட்டும்? இங்கிதமோ நாசூக்கோ அற்ற காட்டுமிராண்டியைப் போல என்ன உணரச் செய்கிறாய்".
'ஒரு காட்டுமிராண்டிக்கும் ராட்சஸிக்குமிடையே மலர்ந்த காதல்' என்று அவள் மறுபடி சிரித்தாள். அடேயப்பா, இவர்களுக்கு தெரியாத தந்திரமில்லை சிரித்து ஏமாற்றுவார்கள்; சிரிக்காமல் ஏமாற்றுவார்கள்; பேசி ஏமாற்றுவார்கள்; பேசாமல் ஏமாற்றுவார்கள்.
இப்படியே பேசி, இப்படியே மழுப்பி, இரவு முழுவதையும் இவள் கழித்து விடுவாள். பிறகு காலையில் மறுபடி அவன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க வேண்டும்-ஹெல்-அதற்கு இப்போதே போய்விடலாம். மன்றாடுவதும், போராடுவதும், குதறுவதுமாக-சே! அவனுக்கு படுக்கையில் போய் விழ வேண்டும் போலிருந்தது. இறுக்கமான உடைகளைக் களைந்து, கைகால்களை இடைஞ்சலில்லாமல் நீட்டிக் கொண்டும் பரப்பிக் கொண்டும் இளைப்பாற வேண்டும் போலிருந்தது. இதெல்லாம் எப்படியாவது தொலையட்டும். இவள் இஷ்டப்படுகிற விதத்தில் இஷ்டப்படுகிற கட்டத்தில் நடந்துவிட்டுப் போகட்டும். உண்மையில் எனக்கும் அவ்வளவு விருப்பமில்லையோ என்னவோ, இவள் அதை ஒரு கௌரவப் பிரச்சினையாக ஆக்குவதால், நானும் அதை ஒரு கௌரவப் பிரச்சினையாக ஆக்குகிறேன் போலும்.
"சரி; அப்போது நான் கிளம்ப வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்" என்று அவன் தன் முகத்தில் ஒரு 'பிரிவுத்தருண'ப் புன்னகையைத் தரித்துக் கொண்டான். "குட் நைட் - விஷ் யூ ஹாப்பி ட்ரீம்ஸ்-கனவுகளிலாவது பிகு செய்து கொள்ள மாட்டாயே?"
"கனவில் வரப் போகிறீர்களா?"
"கனவில்தான் வரவேண்டும் போலிருக்கிறது!"
அவள் சிரித்தாள். அவன் கையை உயர்த்தி,"கிளிக்!" என்று அவளைப் புகைப்படம் எடுப்பது போல அபிநயம் காட்டினான். "தாங்க் யூ மேடம்! ப்ரிண்ட்ஸ் நாளைக்குக் கிடைக்கும்" என்றான்.
"சாயங்காலம்?"
"ஆமாம். சாயங்காலம்".
"எங்கே?"
"நானே பர்ஸனலாக உங்களிடம் வந்து டெலிவர் பண்ணுகிறேன், மேடம்".
"ஓ, தாங்க்ஸ்".
"இட்ஸ் எ பிள ஷர்" என்று அவன் இடுப்பை வளைத்து, சலாம் செய்தான். "வேறு ஏதாவது என்னாலாகக் கூடிய உபகாரம்...?"
"உங்களை நினைவு வைத்துக்கொள்ள எனக்கு ஒன்றும் கொடுக்கப் போவதில்லையா?"
"ஓ!" என்று தன் பைகளில் தேடுவது போலப் பாசாங்கு செய்தான். "த்சு, த்சு, விஸிட்டிங் கார்டு எடுத்து வர மறந்து விட்டேன்" என்றான்.
"வேறு ஏதாவது கொடுங்கள்".
"எது வேண்டுமானாலும்?"
"ஆமாம்" என்று அவள் அவனருகில் வந்து, முகத்தை அவனை நோக்கி நிமிர்த்தினாள்.
"ஐ மீன் இட்" என்றாள். அவன் அவளுடைய பளபளக்கும் விழிகளைப் பார்த்தான். குறும்புத்தனமாக வளைந்திருந்த மூக்கைப் பார்த்தான். சிறிய உதடுகளைப் பார்த்தான் - எவ்வளவு சிறிய உதடுகள்! அவனுடைய அம்மாவின் உதடுகளும் சிறியவைதான். "அம்மாவுக்கு முத்தா கொடு கண்ணா" என்று அவனருகில் வந்து முகத்தை நீட்டுவாள் அம்மா, அவன் சின்னவனாக இருக்கும்போது.
இதோ, அவனருகில் நிற்பவளும் ஒரு நாள் அம்மாவாகப் போகிறவள்தான்; அம்மாவாகக் கூடியவள்தான். ஒரு குட்டி அம்மா! முரட்டுத் தனத்தை மறந்து, ஒரு திடீர் வாஞ்சையுடன் அவன் அவளுடைய வலது கையைப் பிடித்துத் தன் முகத்தை நோக்கி உயர்த்தி, அந்தக் கை விரல்களில் வெகு மென்மையாக முத்தமிட்டான்.
"அங்கே இல்லை!" என்றாள் அவள்.
"பின்னே எங்கே?"
த்சு, த்சு. குழந்தை - ஒன்றுமே தெரியாது" என்று அவள் பரிகாசமாகத் தலையை ஆட்டினாள். விழிகளில் ஒரு குறும்பு; ஒரு விஷமத்தனம். தான் போடும் விதிகளின்படி ஆட்டம் நடைபெறுகிற வரையில் அவளுக்குச் சந்தோஷந்தான்; திருப்திதான். அவன் யாசிப்பதை அவள் தரவே மாட்டாள். ஆனால் அவள் தருவதையெல்லாம் அவன் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். நல்ல நியாயம்!
அவனுக்குத் திடீரென்று கோபம் திரும்பியது. வேடிக்கையும் விளையாட்டும் மறந்து போயிற்று. விளையாட்டுத்தனமாக அணிந்த 'போட்டோகிராஃபர்' போர்வை பறந்து போயிற்று. இளகியிருந்து முகபாவம் மீண்டும் இறுகிப் போயிற்று. "இதென்ன பிச்சையா?" என்றான் அமைதியான குரலில்.
"உம்?" அவள் குரலில் வியப்பும், ஒரு இலேசான பயமும் தெரிந்தன.
"என்மேல் இரக்கப்பட்டுச் சில்லறை தருகிறாயா?"
அவள் முகத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்த குதூகலம் திடுமென வற்றிப் போயிற்று. இதை இப்படி இவ்வளவு கடுமையாகச் சொல்லியிருக்க வேண்டாமோ, என்று அவனுக்கு ஒரு பச்சாதாப உணர்வு ஏற்பட்டது. ஆனால் வாயிலிருந்து வார்த்தை விழுந்தது விழுந்ததுதான். நிமிடங்களும் நிலைகளும் கலைந்தது கலைந்ததுதான். ஒரு நிமிடம் முன்பு அவன் விடைபெற்றுச் சென்றிருந்தால் எல்லாமே சுமுகமாகவும் இதமாகவும் இருந்திருக்கும்! ஆனால் இப்போது -
அவள் கண்கள் கலங்குவது போலிருந்தது; உதடுகள் துடிக்க யத்தனிப்பது போலிருந்தது - அழப் போகிறாளா என்ன? 'எவ்வளவு அஸ்திரங்களை இவர்கள் பதுக்கி வைத்திருக் கிறார்கள்!' என்று இரக்கத்துடன் கூடவே ஒரு பிரமிப்பும் அவனுக்கு ஏற்பட்டது. அவள் நன்றாக மூச்சை உள்ளுக் கிழுத்து வெளியே விட்டாள். மார்பகங்கள் ஓரிருமுறை எழும்பித் தணிந்தன. எழத் துடித்த விசும்பல்களை எழாமலேயே அழுத்திவிடும் முயற்சியிலோ என்னவோ, அவள் உடல் முழுவதும் இலேசாகக் குலுங்கியது. "சில்லறை வேண்டாமாக்கும் உங்களுக்கு!" என்றாள். குரலில் ஒரு குத்தல்; ஒரு சவால், ஒரு மிடுக்கு. "நோட்டுத்தான் வேண்டு மாக்கும் - சரி, எடுத்துக் கொள்ளுங்கள்".
அவன் கூசிப் போனான்; பேசாமல் நின்றான் - அவள் வேண்டுவதும் இதுதானே! அவனை வெட்கப்படச் செய்ய வேண்டும். ஏதோ குற்றம் செய்துவிட்டவனைப் போலப் பச்சாதாபப்படச் செய்ய வேண்டும். "ஐ ஆம் ஸாரி" என்று மன்னிப்புக் கேட்கச் செய்யவேண்டும்... என்ன ஜோடனை, என்ன சாதுரியம்? இதமான சமர்ப்பணத்துக்குப் பதிலாக, எகத்தாளமான ஒரு சவாலை அளித்து, அவனைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறாள்.
இருந்தாலும் அவன் பணிந்திருக்கலாம். தவறு தன்னுடையதுதானென்று அவளைத் தேற்றியிருக்கலாம்ஃ அவளை மன்னித்ததன் மூலம், அவளுடைய சாகசத்தைக் கண்டும் காணாததுபோல இருந்ததன் மூலம், அவன் உயர்ந்திருக்கலாம். ஆனால், பணிவு இயல்பாக வருவதில்லை. சவாலுக்கு எதிர்ச் சவால், குத்தலுக்கு எதிர்க் குத்தல் இவைதான் இயல்பாக வருகின்றன.
"உம், எடுத்துக் கொள்ளுங்கள்!" என்றாள் மறுபடி. "வேண்டுமென்பதை எடுத்துக் கொள்ளுங்கள்".
"இப்படியல்ல: வேண்டா வெறுப்பாக அல்ல".
"இது வெறுப்பு இல்லை".
"ரியலி?"
அவன் பேசவில்லை.
"உனக்குப் புரியவேயில்லை" என்று அவன் தலையைப் பலமாக ஆட்டினான். "இவ்வளவு நாட்களாகியும், நீ இன்னும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை, என்மேல் நம்பிக்கை வைக்கவில்லை".
"பல மனிதுர்களுக்கிடையிலிருந்து உங்களை நான் ஏன் பொறுக்க வேண்டும் - ஒரு நம்பிக்கை தோன்றாவிட்டால்? உண்மையில், நம்பிக்கை இல்லாதது எனக்கல்ல, உங்களுக்குத் தான்".
"ஓகோ! பேஷ், பேஷ்",
"என் நம்பிக்கையை உங்களுக்குத் திருப்தியேற்படும் வண்ணம் நான் நிரூபித்துக் காட்ட வேண்டுமென்று விரும்புகிறீர்கள் - இல்லையா?"
"அதெல்லாம் ஒன்றுமில்லை. ப்ளீஸ்! அப்படி நீ நினைக்கக் கூடாது" என்று அவள் கையை மறுபடி மென்மையாகப் பற்றிக் கொண்டான். "பரஸ்பர நிரூபணங்கள் தேவைப்படும் கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம் என்று நினைக்கிறேன்".
"ஒத்துக் கொள்கிறேன்".
இது நிரூபணத்தைப் பற்றிய பிரச்சினையல்ல. நமக்கென்று ஒரு பொதுவான உலகம் உருவாகிவிட்ட பின், அந்த உலகின் நியமனங்களைப் பற்றிய பிரச்னை. தனி அறைகளையும் திரைகளையும் பற்றிய பிரச்னை".
"அந்தத் திரை எப்போது விலக வேண்டும் என்பதைப் பற்றிய பிரச்னை, இல்லையா?"
"ஆமாம்; ஆனால் இந்தத் திரைகள் அவசியந்தானென்று நீ நினைக்கிறாயா?"
"இது கற்காலமல்ல".
"இதோ பார். உன்னிடமிருந்து நான் வேண்டுவது அதுவல்ல - ஏதோ ஒன்றை நான் கவர முயற்சிப்பதாகவும் நீ காப்பாற்றுவதாகவும் நினைக்கிறாயே, அதுவல்ல; எனக்கு வேண்டியது நீ - பூரணமான திரைகளற்ற நீ; முழுமையாக நீ - புரிகிறதா உனக்கு? எனக்கு வேண்டியது அதுமட்டுந்தான் என்றால், எங்கேயாவது ஒரு நாற்றமடிக்கும் சந்தில் யாரையாவது ..."
அவள் அவன் வாயைப் பொத்தினாள். "ப்ளீஸ்" என்றாள்.
"அந்த ஒன்றுக்காக நான் உன்னை அணுகவில்லையென்று சொல்ல வந்தேன்" என்று அவன் தொடர்ந்தான். "அந்தத் தேவையின் பூர்த்திக்காக மட்டுமல்ல, நாட் அட் ஆல். எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. பல பெண்களுக்கிடையில் நீ மட்டும் என்னைக் கவர்ந்தாய். சலனப்படுத்தினாய். இது முதலில் வருகிறது. மிச்சமெல்லாம் அப்புறந்தான் வருகிறது. பூரணமாக ஏற்றுக் கொள்ளவும், ஈடுபடுத்திக் கொள்ளவும் ஒன்றைத் தேடிப் பெற்ற பின், அளிக்க வேண்டியவற்றையெல்லாம் அளித்து, பெற வேண்டியவற்றை-யெல்லாம் பெற்று, அதன் மூலம் முழுமை யும் நிறைவும் பெறும் தாகத்தினால் வருகிறது. இதை நீ புரிந்து கொள்வது ரொம்ப அவசியம்".
"எனக்கு இது புரிகிறது; ஆனால்,"
"போதும்" என்று அவன் அவளைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்தான். "இது புரிந்தால் போதும். மற்ற எதுவும் முக்கியமில்லை. நம் தனியான உலகத்தின் நியமங்கள் சமூக நியமங்களுக்கு விரோதமாக இருக்கக் கூடாதென்று நீ விரும்புகிறாய் - உன்னை* எனக்குப்* புரிவது போல, எனக்கும் உன்னைப் புரிகிறது. உன் நம்பிக்கைகள் புரிகின்றன. அவற்றைக் கௌரவிக்கும் வரையில்தான் நான் உன் மதிப்புக்குப் பாத்திரமானவனாக இருப்பேன், இல்லையா?"
அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது; நிர்மலமானதொரு புன்னகை தவழ்ந்தது. "தாங்க்ஸ்" என்றாள்.
"நான் உன் நம்பிக்கைகளை மதிக்கிறேன்; ஆனால்" அவன் தன் தலையைப் பலமாக ஆட்டினான். "ஒப்புக் கொள்ளவில்லை" என்றான்.
அவள் அவனருகில் இன்னும் நெருங்கி, சுட்டுவிரலை அவன் மார்பில் பதித்து, கோலங்கள் வரைந்தாள். "என்மேல் கோபமில்லையே?" என்றாள். அவன் அவள் தோள்களை ஆதரவாகப் பற்றினான். அவளை அணைத்துக் கொள்ளும் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உடனே கையை எடுத்தான். "உன்மீது நான் எப்படிக் கோபப்பட முடியும்?" என்றான். என்றைக்கும் போல அன்றைக்கும் தான் தோற்றுப் போனதை அவன் உணர்ந்தான். அதிகமாகப் பேசியதன் மூலமாகவே தான் கட்டுண்டுவிட்டதை உணர்ந்தான். தன்னை அவள் கண்களில் ஒரு ஜெண்டில்மேனாக நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சலிப்புடன் உணர்ந்தான்.
மெல்லத் தன்னை உணர்ச்சிகளின் அணைப்பிலிருந்து விடுபடுத்திக் கொண்டு, அவள் கிளம்பினாள். "சரி, குட் நைட். இந்தத் தடவை இறுதியாக" என்றான்.
"கிளம்பிவிட்டீர்களா?"
"மணி எவ்வளவு தெரியுமல்லவா? பத்தரை".
"நானும் உங்களுடன் வருகிறேன்".
"பஸ் ஸ்டாண்டுக்கா?"
"உங்கள் அறைக்கு".
அவன் திடுக்கிட்டுப் போனான். "சேச்சே! டோன்ட் பீ ஸில்லி!" என்றான். "அதெல்லாம் நாம் ஏற்கனவே பேசி முடிவெடுத்தாகி விட்டது. உனக்கு விருப்பமில்லாததை நீ செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை".
இப்போது எனக்கு விருப்பம் வந்திருக்கிறது".
"நோ. நோ. இனி உன்னை என்னுடன் கூட்டிப் போனால் ஒரு குற்றம் செய்ததைப் போலச் சங்கடப்படுவேன் நான்".
"உங்களை இப்படி விட்டுவிட்டு என் அறைக்குத் திரும்பிப் போனால், நான் குற்ற உணர்வினால் சங்கடப்படுவேன்".
அவன் ஒரு கணம் தடுமாறினான். மறுபடி சமாளித்துக் கொண்டான். "இன்று எனக்கு மூட் கலைந்துவிட்டது; வேறு என்றைக்காவது பார்ப்போம்" என்றான்.
"இன்னொரு நாள் எனக்கு மூட் இருக்குமோ என்னவோ!"
"பரவாயில்லை" வெகு முக்கியமாகத் தோன்றிய ஒன்று, அவனுக்கு திடீரென்று அற்பமாகத் தோன்றியது.
அவனுடைய திடீரென்ற விலகிய போக்கினால் சந்தேகமடைந்தவள் போல, அவனுக்குத் தன்னிடம் சிரத்தை குறைந்துவிட்டதோ என்ற பயப்படுகிறவள் போல, அவள் திடீரென்று அவனை ஒரு ஆவேசத்துடன் இறுக அணைத்துக் கொண்டாள். "நான் பொய் சொல்லவில்லல் நிஜமாக, உங்களுடன் இப்போதே வரத் தயாராயிருக்கிறேன் நான்" என்று சொல்லி அவன் கையுடன் தன கையை இறுகக் கோத்துக் கொண்டாள். அவளுடைய இறைஞ்சும் பார்வையும், சரணாகதியும் அவனுக்கு உற்சாகமளிப்பதற்குப் பதிலாக, அதிர்ச்சியைத்தான் அளித்தது. அவளைப் பற்றி அவன் மனதில் உருவாகியிருந்த ஒரு அழகிய பிம்பம் சேதமடைவது போலிருந்தது. ப்ளீஸ், ப்ளீஸ்! வேண்டாம்! என்று அவன் மிகச் சிரமப்பட்டு, அவளைப் புண்படுத்தக் கூடாதென்ற ஜாக்கிரதையுடன், அவள் அணைப்பிலிருந்து வெகு மெதுவாகத் தன்னை மீட்டுக் கொண்டான். "நீ சொல்வதை முழுமையாக நம்புகிறேன்; எனக்கு உன்மேல் கொஞ்சம் கூடக் கோபமில்லல் ஆனால் இன்றைக்கு வேண்டாம், என்ன!"
உங்கள் விருப்பம் போல்".
"ஓ.கே - பை! எங்கே, ஒரு ஸ்மைல் கொடு, பார்க்கலாம்.
"அவள் புன்னகை செய்தாள். அந்தப் புன்னகையை நினைத்துக் கொண்டு, வேறெதைப் பற்றியும் நினைக்க விரும்பாமல், அவன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். 'உண்மையில், மற்றவர்களிடமிருந்து அவளைப் பிரித்துக் காட்டியது எது, என்னைக் கவர்ந்தது எது?" என்று அவன் யோசித்தான். 'என்னிடம் அவளுக்கிருக்கும் நம்பிக்கையையும், மதிப்பையும் கலையாமல் வைத்திருப்பது எது?' சாலை விளக்குகளின் வெளிச்சங்களினூடே, வெளிச்சங்களுக்கிடையிலிருந்த நிழல்களினூடே, அவன் விரைவாக நடந்து சென்றான். 'வெளிச்சம் வரும்போது, கூடவே நிழல்களும் வந்து விடுகின்றன' என்று அவன் நினைத்தான்.
-------------
5. ஞாயிற்றுக் கிழமைகளும் பெரிய நகரமும் அறையில் ஓர் இளைஞனும்
சாப்பிட்டு விட்டு நாகராஜ் அறைக்குத் திரும்பியபோது மணி பதினொன்று ஆகியிருந்தது. ஞாயிற்றுக் கிழமையாயிருந்தும் காலை பதினொரு மணிக்கே சாப்பாடு முடிந்து விட்டதேயென்று அவனுக்கு ஆச்சரியமாகவும், சற்றே ஏமாற்றமாகவும் இருந்தது. காலையில் ஒரு மார்னிங் ஷோவுக்குப் போயிருந்தாலோ, அல்லது முடிவெட்டிக் கொள்ளப் போயிருந்தாலோ சற்றே நேரமாகியிருந்திருக்கும். சாப்பிட்டுச் சற்றே கண்ணயர்ந்து விழித்துக் கொண்டால் மாலை ஆகியிருக்கும்; காப்பி குடித்துவிட்டு உலாவப் போகும்போது இருட்டத் தொடங்கியிருக்கும்.
ஆனால் காலையில் முடிவெட்டிக் கொள்ளவும், சினிமாவுக்காகக் கிளம்பவும் சோம்பலாக இருந்தது. அதன் விளைவாகப் பதினோரு மணிக்கே சாப்பாடு முடிந்து, ஒரு முழுநாள் இப்போது பயங்கரமாக அவன் முன்னால் நீண்டு கிடந்தது. நாகராஜ் பெருமூச்சுடன் அன்றைய தினசரியைக் கையிலெடுத்துக் கொண்டு, கட்டிலில் சாய்ந்தாற்போல் உட்கார்ந்தான். சிகரெட் பாக்கெட்டைத் திறந்து ஒரு சிகரெட்டைக் கையிலெடுத்தான். பாண்ட் பாக்கெட்டில் தீப்பெட்டியைத் தேடினான். கிடைக்கவில்லை. சமையலறைக்குச் சென்றுதான் எடுத்துவர வேண்டியிருக்கும் போலிருந்தது. இதற்காகப் படுக்கையில் ஒரு முறை சாய்ந்த பிறகு மறுபடி எழுந்து செல்லவும் பிடிக்கவில்லை. வெறும் சிகரெட்டையே உதடுகளுக்கிடையில் பொருத்திக் கொண்டு, அவன் தினசரியைப் பிரித்தான் - கடைசிப் பக்கத்துக்கு முந்தைய பக்கம்; ரேஸ் செய்திகள் வெளியாகியிருந்த பக்கம்.
'லக்கி ஸ்டார் ஜெயிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது' என்ற கொட்டைத் தலைப்பின் அடியில், அன்றைய ரேஸ் விவரங்கள் நாலு பத்திகளில் தரப்பட்டிருந்தன. இந்தப் பத்திகளின் மேல் அவன் விழிகள் சாவகாசமாக மேயத் தொடங்கின. இரண்டாவது பத்தியில் மேய்ந்து கொண்டிருந்தபோது, உண்ட மயக்கத்தில் அவனுடைய விழிகள் சற்றே கிறங்கின; தலை துவண்டது. வாயிலிருந்த சிகரெட் நழுவித் தினசரியின் மேல் விழுந்தது ...
படபடவென்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நாகராஜ் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். நழுவிக் கிடந்த சிகரெட்டை ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு, கட்டிலை விட்டு இறங்கினான். கதவைத் திறந்தான். சாரங்கனும், அவனுடன் நாகராஜுக்குத் தெரியாத இன்னொரு இளைஞனும் நின்றிருந்தார்கள். "இவன் ரமணி - என் ஃபிரண்டு டில்லியிலிருந்து வந்திருக்கிறான்" என்று சாரங்கன் தன்னுடன் இருந்தவனை அறிமுகப்படுத்தினான். நாகராஜ் ரமணியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் ளள அவனுடன் கை குலுக்கினான். அவனுடைய கவனமெல்லாம் சாரங்கனின் கையிலிருந்து புகைந்து கொண்டிருக்கும் சிக ரெட் துணுக்கின் மேல் இருந்தது. அந்தச் சிகரெட் துணுக் கைச் சுவாதீனமாக உருவித் தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான் அவன். சமயசஞ்சீவினியாக வந்த சாரங்கன் பால் அவன் மனத்தில் நன்றியும் பரிவும் பொங்கி வழிந்தன.
மூவரும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள். "இன்னிக்கு என்ன நம்பர் வருது தெரியுமா?"
"ஸெவன்" என்றான் சாரங்கன்.
"எந்த ரேஸிலே?"
"எந்த ரேஸிலே?
"ரேஸ் இல்லைடா மடையா. மட்கா"
"மட்காவா"என்றான் நாகராஜன். பிறகு "ஸெவன் புதன் கிழமை வந்தாச்சு" என்றான். மட்கா என்பது பம்பாயில் இலக்கங்களை வைத்து நடத்தப்படும் ஒரு சூதாட்டம். 'நியூயார்க் பருத்தி' மாதிரி தினசுரி ஒரு ஆரம்ப இலக்கம்; ஒரு இறுதி இலக்கம். குறைந்த பட்ச 'பெட்' நாலணா.
"இன்னிக்கும் ஸெவன்தான்" என்றான் சாரங்கன்.
"இதுவரை ஒருநாளாவது நீ சொன்ன நம்பர் வந்ததில்லை".
"டேய்! போனமாசம் எவ்வளவு நாள் வந்தது!"
"எவ்வளவு நாளாம்?"
சாரங்கனுடைய 'மட்கா' ஊகங்கள் நூற்றுக்குத் தொண்ணூறு பலிப்பதில்லையென்று நாகராஜ் நிரூபிக்க முயன்றான். ஆனால் சாரங்கன் ஒப்புக் கொள்ளவில்லை. தன் தோல்விகளை அவன் எப்போதுதான் ஒப்புக் கொண்டிருக்கிறான்? சர்ச்சையை வளர்த்த விரும்பாமல் நாகராஜ் தன் வாதங்களை நிறுத்திக் கொண்டான்.
"சரி; இன்றைக்கு என்ன ப்ரோகிராம்?" என்று சாரங்கன் கேட்டான்.
"அம்பி வீட்டுக்குப் போகலாமென்றிருந்தேன்" என்றான் நாகராஜ்.
"போகாதே. அங்கே நிற்க இடமில்லை. மேலும் இரவு முழுவதும் அம்பிக்கு ஹெவி லாஸாம். நீ இப்போ போனால் கடன் கேட்பான்."
"உன்னைக் கேட்டானா?"
"எனக்கு அவன் ஏற்கனவே பாக்கி".
நாகராஜ் பேசாமலிருந்தான். அம்பி வீட்டில் சனிக்கிழமை சாயங்காலம் தொடங்கி திங்கட்கிழமை காலைவரை தொடர்ந்து நடக்கும் சீட்டாட்ட சபைகளை நினைத்துக் கொண்டபோது அவனுடைய உடலெல்லாம் ஒருமுறை குலுங்கியது. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அவன் இந்தச் சபையில் வாரந்தவறாமல் போய்க் கலந்து கொண்டிருந்தான். அது சாரங்கனுடன் நெருங்கிப் பழகுவதற்கு முன்பு, சாரங்கனுக்குச் சீட்டாட்டத்தில் சிரத்தை இல்லை. ஒரு இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்திருக்கும் பொறுமையில்லை. இதே காரணத்தால் கிரிக்கெட் மாட்சுக்குப் போய் உட்காருவதிலும் அவனுக்குச் சிரத்தை கிடையாது. இன்றுகூட ஒரு ராஞ்சி ட்ராஃபி மாட்ச் இருந்தது.
"நாங்கள் ரேஸுக்குப் போகிறோம்; நீயும் வருகிறாயா?" என்றான் சாரங்கன் சிறிது நேரங் கழித்து.
"ஒன்றரை மணிக்குத்தானே ரேஸ்? இப்போதே என்ன அவசரம்?"
"ரேஸ் போவதற்கு முன் இவனுக்கு மகாலட்சுமி கோவிலையும் காட்டி விடலாமென்று நினைத்தேன்".
நாகராஜ் மறுபடி பேசாமலிருந்தான். பொழுதைப் போக்கு வதற்கு சாரங்கன் சொல்லும் யோசனைகளைத்தான் அவன் எப்போதும் ஏற்க வேண்டியிருக்கிறதே தவிர, அவன் சொல்லும் யோசனைகளை சாரங்கன் ஒருபோதும் ஏற்ப தில்லை. சாரங்கனுடன் போகத்தான் வேண்டுமா என்று அவன் யோசித்தான். இங்கே அறையில் மனது நிச்சலன மாகவும், அமைதியாகவும் இருக்கிறது. வெளியே போனால் எல்லாமே மாறிவிடும். தன் அறையில் அவன்தான் அரசன். ஆனால் வெளியே அவன் பல்வேறு இடங்கள், சூழ்நிலைகள், மனிதர்கள் ஆகியவற்றின் அடிமை. சாரங்கனுக்கும் அவனுக்குமிடையே இருந்த நேச உடன்பாடுகளின் அடிமை.
"என்ன யோசிக்கிறாய்?" என்றான் சாரங்கன்.
"ஒண்ணுமில்லை" என்று நாகராஜ் எழுந்தான். "கிளம்ப வேண்டியதுதானா அப்போ?"
"சீக்கிரம்".
நாகராஜ் டிரஸ் பண்ணிக் கொள்ளத் தொடங்கினான். அவன் பாண்ட் அணிந்து முடியும்வரை காத்திருந்துவிட்டு, "குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறாயா?" என்றான் சாரங்கன்.
நாகராஜ் உடனே பக்கத்து அறைக்குச் சென்றான். இந்த அறைதான் சமையலறையாக உபயோகமாகிறதென்பதை அங்கிருந்த பாத்திரங்கள், ஷெல்புகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டப்பாக்கள் முதலியவை பறைசாற்றின.
"வீட்டுக்காரன் லீவில் ஊருக்குப் போயிருக்கிறான். நான்தான் முழு வீட்டுக்கும் காவல்" என்று நாகராஜ் மூலையிலிருந்த பானையிலிருந்து ஒரு தம்ளரில் நீர் மொண்டு நீட்டினான். சாரங்கன் தம்ளரை வாங்கிக் கொண்டே,"இந்த ரூமை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன்" என்று அறையைச் சுற்றி நோட்டம் விட்டான்.
அவனுக்குச் சமீபத்தில் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. ஆகவே வீடு, சமையலறை ஆகியவற்றில் அவனுக்கு ஒரு புதிய சிரத்தையும் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது.
தண்ணீரைக் குடித்து முடித்த பிறகு,"ஸோ, எல்லோருமே ஊருக்குப் போய் விட்டார்களாக்கும்"என்று 'எல்லோருமே'யில் ஒரு அழுத்தத்துடன் சாரங்கன் கூறினான்.
"அதுதான் இப்படி வருத்தமாயிருக்கிறாய்".
நாகராஜுக்குத் தலைக்குப்புற மண்ணில் விழுந்தது போலிருந்தது. பளிச்சென்று சாரங்கன் கன்னத்தில் ஒரு அறை விடலாம் போலிருந்தது; அவன் மிக அதிகமான உரிமை எடுத்துக் கொள்வதாகத் தோன்றியது. ஆனால் நாகராஜ் ஒரு அசட்டுச் சிரிப்பு மட்டும் சிரித்துவிட்டுப் பேசாமலிருந்தான். வீட்டுக்காரனுக்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அவள்பால் தன் உள்ளத்தில் மலரத் தொடங்கியிருந்த உணர்வுகளைப் பற்றி ஒரு பலவீனமான தருணத்தில் அவன் சாரங்கனிடம் சொல்லியிருந்தான். பிறகு அவனிடம் சொல்லியிருக்க வேண்டாமென்று தோன்றியது. தனக்கு மிகவும் அந்தரங்கமான ஒரு விஷயத்தைச் சாரங்கன் பொறுப்பும் மரியாதையும் இன்றி எகத்தாளமாகச் சுட்டிக் காட்டுவதையோ, கேலி செய்வதையோ அவன் வெறுத்தான். அதே சமயத்தில் இந்த வெறுப்பைத் தைரியமாகச் சாரங்கனின் கவனத்துக்குக் கொண்டு வந்து அதன் மூலம் அவனுக்கம் தனக்குமிடையேயிருந்த உறவின் மெல்லிய கயிறுகள்முறுக்கேறி, நைந்து போகக் கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கவும் அவன் பயந்தான். சாரங்கனுடைய தோழமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தன்னுடைய சுய கௌரவத்தின் எல்லைகளையும், பல அந்தரங்கமான விருப்பு வெறுப்புகளையும், தீர்மானங்களையும் அவன் அடிக்கடி தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது. எந்தப் பிரத்தியேகமான ருசி வேறுபாடுகளும், முரண்பாடுகளும் அவனை ஒரு தனி மனிதனாகப் பிரித்துக் காட்டினவோ, அவற்றையெல்லாம் தற்காலிகமாக அடகு வைக்க வேண்டியிருந்தது. தனிமையைப் போக்கிக் கொள்வதற்காகத் தன்னுடைய தனித் தன்மையையே அழித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
பதினொன்றரை மணிக்கு அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பினார்கள். மாதுங்காவிலிருந்து முதலில் ஸயானுக்குச் சென்று, அங்கேயிருந்த இன்னொரு பஸ்ஸைப் பிடித்தார்கள். ஸயான் பஸ் ஸ்டாண்டில் சாரங்கன் 'ரேஸ் டிப்ஸ்' புத்தகம் ஒன்று வாங்கினான். பஸ்ஸில் செல்லும் வழியெல்லாம் அன்றைய ரேஸ்களில் எந்தெந்தக் குதிரைகள் ஜெயிக்கப் போகின்றனவென்பதை அவன் தக்க காரணங்களுடன் நாகராஜுக்கு நிரூபிக்கத் தொடங்கினான்.
மகாலட்சுமி கோவில் படிக்கட்டுகளில் ஏறும்போதும், கோவில் வாசலில் செருப்பைக் கழட்டி வைக்கும் போதும் கூட அவர்கள் ரேஸைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந் தார்கள். கோவிலுக்குள் சென்றதும் சாரங்கன் ரேஸைப் பற்றிச் சற்றே மறந்து, அந்தக் கோவிலைப் பற்றி ரமணியிடம் கூறத் தொடங்கினான்.
கோவிலுக்குப் பின்னால் பெரும் கடலலைகள் பேரிரைச்சலுடன் பாறைகள் மேல் மோதிச் சின்னஞ்சிறு நீர்த் திவலைகளாகச் சிதறிக் கொண்டிருந்தன. கடலரசி கடவுளுக்கு முன்னால் அலைத் தேங்காய்களைப் போட்டு உடைக்கிறாளோ? பாபாத்மாக்களான இநதப் பம்பாய் வாசிகளைவிட்டு என்னிடமே வந்து விடும் என்று அழைக்கிறாளோ? நாகராஜுக்கு அந்த அலைகளையே பார்த்துக் கொண்டு நிற்கலாம் போலிருந்தது.
கோவிலிலிருந்து கீழே இறங்கும் வழியிலிருந்த கரும்புச்சாறுக் கடையில் ஆளுக்கு ஒரு தம்ளர் கரும்புச்சாறு பருகிவிட்டு, அவர்கள் ரேஸ்கோர்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
ரேஸ் கோர்ஸ் நெருங்க நெருங்க, சாலையில் கார்களின் எண்ணிக்கையும், நடைபாதையில் மக்களின் எண்ணிக்கை யும் தலை சுற்ற வைத்தது. சாலையில் இருந்ததைப்போல இரண்டு மடங்கு கார்கள் ரேஸ் கோர்ஸ் காம்பவுண்டுக்குள் நின்றன. தலைக்கு எட்டு ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டு அவர்கள் 'என்க்ளோஷருக்குள்' நுழைந்தார்கள். மணி ஒன்று நாற்பது. முதல் ரேஸ் தொடங்க இருபது நிமிடம் இருந்தது.
எதிரே உயரமான போர்டு எந்தெந்தக் குதிரைக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன என்ற விவரத்தைப் பளிச்சென்று காட்டிக் கொண்டிருந்தது. ஆறாம் நம்பர் குதிரைக்குத்தான் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தன. "ஆறாம் நம்பர்தான் ஃபேவரைட்" என்றான் சாரங்கன்.
"நாமும் அதற்கு ஒரு டிக்கெட் வாங்குவோமே" என்றான் ரமணி.
சாரங்கன் சிரித்தான். "எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று பார்த்தால் மட்டும் போதாது; எந்தக் குதிரை நிறையப் பணம் தருகின்றது என்றும் பார்கக வேண்டும். ஆறாம் நம்பர்க் குதிரைக்கு இரண்டாயிரத்துச் சொச்சம் டிக்கெட்டுகள் விற்பனையாயிருக்கின்றன. ஆகவே அது ஜெயித்தால் பரிசுத் தொகை இரண்டாயிரம் பேருக்கிடையில் அல்லவா பங்கிடப் படும்? ஐந்து ரூபாய் போட்டாயானால் ஆறு ரூபாயோ அல்லது ஏழு ரூபாயோ கிடைக்கும்."
"மூன்றாம் நம்பர் குதிரைக்குத்தான் குறைவான டிக்கெட்டுகள் விற்றிருக்கின்றன."
ரமணி விழித்தான். சாரங்கன் Forecast Pool என்று எழுதப்பட்டிருந்த இன்னொரு போர்டைச் சுட்டிக் காட்டினான். "முதல் குதிரையை ஊகிப்பதுடன் நில்லாமல் இரண்டாவதாக எது வரும் என்பதையும் ஊகிப்பது ஃபோர்காஸ்ட்.முதல் குதிரையை ஃப்ளூக்கில் கூட பல பேர் ஊகித்து விடலாம். ஆனால் முதலாவது, இரண்டாவது இரண்டையுமே ஒழுங்கான வரிசையில் சரியாக ஊகிப்பவர்கள் குறைவாகத் தானே இருப்பார்கள்? ஆகவே Forecast-இல் அதிகப் பணம் பண்ணும் வாய்ப்பு இருக்கிறது. வெவ்வேறு முதல் இரண்டு ஸ்தானச் சேர்க்கைகளுக்குக் கிடைக்கக் கூடிய பங்கீட்டுத் தொகையை இந்தப் போர்டு காட்டுகிறது. இந்த ரேஸில் ஆறு, நாலு, ஒன்று இந்த மூன்றும் தான் முக்கியமான குதிரைகள். இவற்றுள் ஏதாவது ஒன்றை முதலாவதாகவும், இன்னொன்றை இரண்டாவதாகவும் வைத்துப் பெட் கட்டலாம். ஆறு நாலுக்குக் கிடைக்கும் தொகையை விட ஆறு-ஒன்றுக்குக் கிடைக்கும் தொகை அதிகமாக இருப்பதால், அதற்கு ஒரு டிக்கெட் வாங்கலாம்."
சாரங்கன் ஆறு-ஒன்று, ஒன்று-ஆறு என்று இரண்டு விதமாகவும் டிக்கெட் வாங்கிக் கொண்டான்.
"நாலுதான் இரண்டாவதாக வருமென்று நிச்சயமாகத் தெரிந்தால் ஆறு-நாலு என்றே வாங்கியிருக்கலாம்!" என்றான் ரமணி.
"இது சூதாட்டம். சரியான விடையைக் கண்டு பிடிப்பதைவிட லாபகரமான விடையைக் கண்டு பிடிப்பதில்தான் இருக்கிறது சாமர்த்தியம்" என்றான் சாரங்கன்.
மூவரும் காலரியில் போய் உட்கார்ந்தார்கள். ரேஸ் தொடங்குவதற்கு முன்பாகக் குதிரைகள் காலரிகளுக்கு எதிர்த்தாற்போல் மெல்ல ஓட்டிச் செல்லப்பட்டன. நாகராஜ் அருகிலிருந்த ஒருவரிடம் பைனாகுலரைக் கடன் வாங்கிக் கொண்டு, குதிரைகளைப் பார்க்காமல் புடவைகளைப் பார்க்கத் தொடங்கினான். ரேஸ்கோர்ஸுக்கு வரும் அழகிகளைப் பார்ப்பதற்கே எட்டு ரூபாய் கொடுக்கலாமென்பது அவன் அபிப்பிராயம்.
"எது நல்ல குதிரை என்று எப்படிக் கண்டுபிடிப்பது?" என்றான் ரமணி.
"எவ்வளவோ இருக்கிறது. குதிரையின் பரம்பரை என்ன. சொந்தக்காரர் யார். ட்ரெயினர் யார், ஜாக்கி யார், சமீப ரேஸ்களில் இந்தக் குதிரை எப்படி ஓடியிருக்கிறது. என்றெல்லாம் பார்க்க வேண்டும்" என்றான் சாரங்கன். "இந்த நம்பரில் ஆறாம் நம்பராக ஓடும் குதிரை லக்கி ஸ்டார் ஜிப்ரால்டர் எனும் குதிரையின் குட்டி. ஜிப்ரால்டரின் குட்டி எதுவுமே இதுவரை சோடை போனதில்லை. இந்த சீஸனில் கல்கத்தா, சென்னை, பெங்களூர், பூனா எல்லா இடங்களிலும் லக்கி ஸ்டார் பிரமாதமாக ஓடியிருக்கிறது. லக்கிஸ்டாரை சந்துலால் டிரெயின் பண்ணியிருக்கிறான். ஜான்ஸன் ஓட்டப்போகிறான். இரண்டு பேருமே திறமைசாலிகள். லக்கிஸ்டாரின் சொந்தக்காரர் எஸ்.கே. மெஹ்தா. ஆகவே எஸ்.கே. மெஹ்தாவுடன் போட்டியிடக் கூடிய குதிரைச் சொந்தக்காரர்கள் யார் யாரென்று நாம் பார்க்க வேண்டும். இரண்டு மூன்று ஐந்து ஆகிய குதிரைகளின் சொந்தக்காரர்களெல்லாம் எஸ்.கே. மெஹ்தாவின் கட்சி. இவர்களுக்குள் யாராவது ஒர்வருடைய குதிரை முதலில் வருகிறதென்றால் மற்றவர் அதைத் தோற்கடிக்க முயலமாட்டார். ஆகவே ஒன்றும் நாலும் தான் ஆறுடன் போட்டியிடப் போகின்றன.
ஆரம்பக் கோட்டின் மேல் கிளம்பத் தயாராக நின்ற குதிரைகள் ஸிக்னல் கிடைத்ததும் குபுக்கென்று ஓடத் தொடங்கின. "தே ஆர் ஆஃப்" என்று ஒலிபெருக்கியில் காமெண்ட்ரி தொடங்கியது. "நம்பர் ஸிக்ஸ் லீடிங்!" என்றது ஒலிபெருக்கி. சிறிது நேரங்கழித்து சாரங்கன், பெருமையுடன் ரமணியைப் பார்த்தான்.
முக்கால்வாசி தூரம் வரையில் நம்பர் ஸிக்ஸ்தான் முன்னால் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ஃபினிஷுக்கு இருநூறு கஜதூரம் இருக்கும்போது ஒன்றாம் நம்பர் திடீரென்று எமவேகத்தில் ஒரு பாய்ச்சல் பாய்ந்து நம்பர் ஸிக்ஸை முந்திக் கொண்டது. கடைசி வரையில் அந்த வேகத்தையும் பாய்ச்சலையும் சிறிதும் தளர்த்தாமல் ரேஸையும் ஜெயித்துவிட்டது. "நம்பர் ஒன், நம்பர் ஒன்" என்று கரகோஷம் எழுந்தது. ஒரு வினாடி கழித்து நம்பர் நாலும் நம்பர் ஆறும் போட்டி போட்டுக்கொண்டு ஃபினிஷிங்கு லைனைக் கடந்தன. மற்றக் குதிரைகளும் பின் தொடர்ந்தன. "நம்பர் ஒன்றுதான் முதலாவது ஸ்தானம் பெற்றிருக்கிறது" என்று ஒலிபெருக்கி அறிவித்தது.
"இரண்டாவது ஸ்தானம் பற்றிய விவரம் போட்டோ ஃபினிஷில் பார்த்து விரைவில் தெரிவிக்கப்படும். போட்டோ ஃபினிஷில் உள்ள குதிரைகள் நம்பர் நாலும், நம்பர் ஆறும்".
"ஆறு இரண்டாவதாக வந்தால் நல்லது. ஒன்று ஆறுக்கும் நான் டிக்கெட் வாங்கியிருக்கிறேனல்லவா?" என்றான் சாரங்கன்.
ஒரு நிமிடத்தில் முடிவு அறிவிக்கப்பட்டது. "போட்டோ ஃபினிஷின் முடிவு வருமாறு. நம்பர் நாலு இரண்டாவது ஸ்தானம், நம்பர் ஆறு மூன்றாவது ஸ்தானம்".
சாரங்கன் தன் கையிலிருந்த டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்தான். ஐந்தும் ஐந்தும் பத்து ரூபாய் தண்டம்.
அவர்கள் காலரியிலிருந்து கீழேயிறங்கிக் காப்பி குடிக்கச் சென்றார்கள். அங்கே சாரங்கன் தனக்குத் தெரிந்த நண்பனொருவனைப் பார்த்து "ஹலோ!" என்று அவனுடன் கை குலுக்கினான். "லக்கிஸ்டார் இப்படிப் பண்ணிவிட்டதேடா!" என்றான்.
"ஜான்ஸன் இப்படிப் பண்ணிவிட்டானே என்று சொல்லு" என்றான் நண்பன். "ஆறாம் நம்பர் மேல் எக்கச்சக்கமான பெட்டிங் இருந்ததால், குதிரையை முதலில் கொண்டு வராமலிருப்பதற்காக புக்கிகள் ஜான்ஸனுக்குப் பணம் ஞாயிற்றுக் கிழமைகளும்...
கொடுத்திருக்கிறார்களாம்".
"சே, சே, ஜான்ஸன் இப்படியெல்லாம் செய்யமாட்டான்". "இப்போது செய்திருக்கிறானே, இதற்கு என்ன சொல்லுகிறாய்?"
சாரங்கன் மெளனமாக இருந்தான். பிறகு "உனக்கும் போச்சா?" என்றான்.
"நான் ஒன்றாம் நம்பர்மேல் கட்டியிருந்தேன்".
"ரியலி? கங்க்ராஜூலேஷன்ஸ்!".
"அவசரப்படாதே, என்னுடையது ஜாக்பாட் டிக்கெட் ஒன்றாவது ரேஸும் இரண்டாவதும் சரியாக வந்திருக்கின்றன. மீதி ரேஸ்கள் எப்படியோ பார்க்கலாம்".
மூன்றாவது ரேஸ்க்கு டிக்கெட் எதுவும் வாங்காமல் வெறுமனே பார்க்க நிச்சயித்தவர்களாக அவர்கள் காலரியில் போய் அமர்ந்தார்கள். பின்வரிசையில் அமர்ந்திருந்த கறுப்புக் கண்ணாடி யுவதி ஒருத்தி கைவளையல்கள் சப்திக்க, சேலைத் தலைப்பையும் தலைமயிரையும் அனாவசியமாகச் சரி செய்து கொண்டாள். நாகராஜ் திரும்பி அவளை ஒருமுறை பார்த்தான்.
ரேஸ் தொடங்கி விட்டது. அதே நம்பர்கள். ஆனால் வேறு குதிரைகள், வேறு ஜாக்கிகள். "மூன்றாம் நம்பர் தான் ஜெயிக்கப் போகிறது!" என்றான் சாரங்கன். 'அது ஜெயிக்காமல் இருக்கக் கடவதாக!' என்று நாகராஜ் நினைத்துக் கொண்டான். சாரங்கன் ரேஸ்களையும் குதிரைகளையும் பற்றித் தனக்கு மட்டுமே எல்லாம் தெரிந்தது போலக் காட்டிக் கொண்டது அவனுக்கு தெரியும்; என்னைக் கேட்டு விளையாடியிருந்தால் இதற்குள் ஒரு ரேஸிலாவது பணம் பண்ணியிருக்கலாம் என்று அவன் நினைத்தான். சாரங்கன் யோசனை கேட்குமளவிற்குத் தன்னைப் பெரியவனாக அங்கிகரிக்காதது அவனுக்கு மனத்தாங்கலாக இருந்தது. அதே சமயத்தில் தானாக வலிய மாறுபட்ட கருத்துக்களைக் கூறிச் சர்ச்சையைக் கிளப்பவும் தயக்கமாக இருந்தது.
ரேஸ் சூடு பிடிக்கத் தொடங்கியவுடன் உட்கார்ந்திருந்த வர்கள் எல்லாரும் பரபரப்புடன் எழுந்து நின்றார்கள். "கம் ஆன், கம் ஆன்!" என்ற கூச்சல்கள் எழுந்தன. "கம் ஆன் மும்தாஜ்!" என்ற கூச்சலுடன் நாகராஜின் தோளின் மேல் ஒரு கை விழுந்தது. திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தான். "ஓ ஐஆம் ஸாரி" என்று கறுப்புக் கண்ணாடிக்காரி சடக்கென்று தன கையை இழுத்துக் கொண்டாள். பரபரப்பில் தன்னையறியாமல் அவன் மேல் கை போட்டிருப்பாள்; அல்லது வேண்டுமென்றேயா? அதன் பிறகு நாகராஜின் மனம் ரேஸில் செல்லவில்லை. 'ஒருவேளை கிராண்ட் ரோடுவாசியாக இருப்பாளோ?' என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.
மூன்றாம் நம்பர்தான் ஜெயித்தது. "த்சு, த்சு, கட்டியிருக்கலாம்" என்று சாரங்கன் கையை உதறிக் கொண்டான். நாகராஜ் கறுப்புக் கண்ணாடியின் ரியாக்க்ஷனைப் பார்ப்பதற்காகப் பின்புறம் பார்த்தான். இதற்கென்றே காத்திருந்தவள் போல அவள் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். "எக்ஸ்க்யூஸ் மீ!" என்று பேசத் தொடங்கினான். நாகராஜுக்கு மூர்ச்சை போட்டுவிடும் போலிருந்தது.
"எக்ஸ்க்யூஸ் மீ! அடுத்த ரேஸுக்கு ஏதாவது டிப் தர முடியுமா?"
நாகராஜ் பேச வாய் திறக்கும் முன்பே, "நம்பர் டூ அல்லது நம்பர் ஃ பைவ்!" என்றான் சாரங்கன், அவனைப் பார்த்து. "தாங்க்யூ!" என்று அவள் புன்னகை செய்தாள். நாகராஜுக்கு எரிச்சலாக இருந்தது. என்னிடம் தான் கேள்வி கேட்டாள்? இவனை யார் பதில் சொல்லச் சொன்னது?
"டிக்கெட் வாங்கிக் கொண்டு வரலாம்டா" என்று சாரங்கன் கிளம்பினான். "இரு, இரு" என்று நாகராஜ் கறுப்புக் கண்ணாடியைப் பார்த்து "உங்களுக்கு ஏதாவது டிக்கெட் வாங்க வேண்டுமா?" என்று கேட்டான். "யெஸ் வெரி கைன்ட் ஆஃப் யூ" என்று தன கைப் பையைத் திறந்து ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தாள். "டூ-ஃபைவுக்கு ஒரு டிக்கெட்".
டிக்கெட் கௌண்டரில் கறுப்புக் கண்ணாடிக்கு "டூ-ஃபைவுக்கு ஒரு டிக்கெட்டும், தங்களுக்கு ஃபை - டூவுக்கு இரண்டு டிக்கெட்டுகளும் வாங்கிக் கொண்டான் சாரங்கன். காலரிக்குச் சென்றதும் நாகராஜ் கறுப்புக் கண்ணாடியிடம் டூ-ஃபைவ் டிக்கெட்டைக் கொடுத்து அவளிடமிருந்து ஒரு போனஸ் புன்னகையைப் பெற்றுக் கொண்டான். அந்தப் புன்னகையின் மீது எவ்வளவு வேண்டுமானாலும் பெட் கட்ட அவன் தயாராக இருந்தான்.
ரேஸ் தொடங்கியது. ஐந்தாம் நம்பரும் இரண்டாம் நம்பரும் ஆரம்பத்திலிருந்தே மற்றக் குதிரைகளைப் பின் தங்க வைத்து விட்டு முன்னால் தாவின. கிட்டத்தட்ட சமவேகத்துடன் ஓடிக் கொண்டிருந்த அந்தக் குதிரைகளில் எது முதலில் வருமென்றே சொல்ல முடியவில்லை. ஆனால், ஃபினிஷை நெருங்கும்போது திடீரென்று இரண்டாம் நம்பரின் வேகம் அதிகரித்தது; தரையில் கால் பாவாமல் அது காற்றில் நீந்திச் செல்வது போலத தோன்றியது. கறுப்புக் கண்ணாடி யுவதி உற்சாகத்துடன் கைக்குட்டையை ஆட்டியவாறே குதிகுதியென்று குதித்தாள்; கூச்சலிட்டாள். அதோ இரண்டாம் நம்பர் ஃபினிஷிங்க் லைனைக் கடந்தே விட்டது கறுப்புக் கண்ணாடி யுவதியைக் கட்டிப் பிடிக்க முடியாது போலிருந்தது. "தாங்க் யூ!" என்று அவள் எதிர்பாராதவிதமாக நாகராஜனின் கையைப் பிடித்துக் குலுக்கினாள். எலெக்ட்ரிக் ஷாக் அடிப்பது போலிருந்தது அவனுக்கு. இவள் கிராண்ட் ரோடுதான், சந்தேகமேயில்லை. "பணம் கலெக்ட் பண்ணிக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிக் கொள்ளக் கடமைப் பட்டவள் போல அவள் நாகராஜனிடம் கூறிவிட்டுச் சென்றாள். சாரங்கன் இதைக் கவனிக்காமல், "இன்றைக்கு இவ்வளவுதான்; இனிமேல் விளையாடப் போவதில்லை" என்று முணுமுணுத்தவாறு டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்தான்.
அடுத்த ரேஸ்களில் பணம் எதுவும் கட்டாமல் அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்தார்கள்-சாரங்கனும் ரமணியும் குதிரைகளை; நாகராஜ் கறுப்புக் கண்ணாடி யுவதியை. நாலு மணி ரேஸ் முடிந்ததும், "போகலாம்டா. இவன் வேறே இடமெல்லாம் பார்க்கணுமென்கிறான்" என்று சாரங்கன் கிளம்பினான். நாகராஜுக்கு ஏமாற்றமாக இருந்தது. கறுப்புக் கண்ணாடியை விட்டுவிட்டுப் போக அவனுக்கு மனமில்லை. அதே சமயத்தில் நான் வரவில்லை என்று சாரங்கனிடம் சொல்லவும் தைரியமில்லை. கறுப்புக் கண்ணாடியைப் பார்த்து மதிப்பாகத் தலையை ஆட்டி ஒரு புன்னகை செய்துவிட்டு, அவன் சாரங்கனையும், ரமணியையும் பின் தொடர்ந்தான். சரியான கோழை என்று அவள் நினைத்திருப்பாள்.
மூவரும் ரேஸ்கோர்ஸுக்கு வெளியே வந்தார்கள். சினிமா பார்ப்பதற்கு முடிவு செய்து, வித்யா விஹார் ஸ்டேஷன் வரை நடந்து அங்கிருந்து வி.டி.க்கு மின்சார ரயில் பிடித்தார்கள். வி.டி.-யில் ஒவ்வொரு சினிமாத் தியேட்டராக நுழைந்து பார்த்தார்கள். ஆனால், எங்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.
"நான் ஒன்று சொல்லட்டுமா?" என்றான் சாரங்கன். பேசாமல் எங்கேயாவது போய் பீர் குடிக்கலாம்"
"எங்கே?"
"எனக்கு ஒரு இடம் தெரியும்".
"நான் ரெடி" என்றான் ரமணி. சாரங்கன் நாகராஜைப் பார்த்தான். "ஓகே" என்றான் நாகராஜ்.
கொலாபா வரையில் நடந்து, அங்கிருந்த ஒரு சந்துக்குள் அவர்களை அழைத்துச் சென்றான் சாரங்கன். கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்த அடுக்கு மாடிக் கட்டிடங்களிடையே, குறிப்பிட்டட ஒரு கட்டிடத்ததை எப்படியோ அடையாளம் கண்டு கொண்டு உள்ளே நுழைந்தான். எதிரேயிருந்த ஒரு கதவைத் தட்டினான். சிறிது நேரம் தட்டிய பிறகு. குள்ளமான ஒரு இளைஞன் கதவை ஒருக்களித்தாற்போலத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டினான்.
"திறந்திருக்கிறதா?" என்று சாரங்கன் கேட்டான்.
"உம்" என்று அவன் கதவை நன்றாகத் திறந்தான். அவர்கள் உள்ளே வந்ததும், மறுபடி கதவை முடித் தாழிட்டான். சுவரில் சாய்த்தப்பட்டிருந்து மூன்று ஸ்டீல் நாற்காலிகளை அவர்கள் உட்காருவதற்காக அங்கிருந்த மேஜையொன்றை ஒட்டினாற்போல எடுத்துப் போட்டான்..
"மூன்று பாட்டில் பீர்"
"பீர் பாட்டில்களையும் ஊற்றிக் குடிக்கக் கண்ணாடித் தம்ளர்களையும் பையன் மேஜை மேல் கொண்டு வந்து வைத்தான். அவனே பாட்டில்களைத் திறந்தும் கொடுத்தான்.
"வெறும் பீர் குடித்துப் பிரயோசமில்லையடா" என்றான் ரமணி.
"வேறென்ன வேண்டும்?"
"விஸ்கி ஆர் ஸம்திங்". சாரங்கன் பையனைக் கூப்பிட்டு விஸ்கி விலையை விசாரித்தான். பிறகு ரம் விலையை விசாரித்தான். ரம்தான் மலிவாக இருந்ததால் அதையே குடிப்பதென்று முடிவு செய்தார்கள்.
மூன்று பைன்ட் ரம் வாங்கிக் கொண்டு, பீரும் ரம்முமாகக் கலந்து காக்டெயில் அருந்தத் தொடங்கினார்கள். காக்டெயிலின் செந்நிறத்தில் ஒரு கவர்ச்சி: அதன் நெடியில் ஒரு மயக்கும் குளுமம் அதன் ருசியில் புரிந்து கொள்ள முடியாத - ஆனால் புரிந்து கொள்ளத் தூண்டும் ஒரு கசப்பு. அதிகம் பழக்கமில்லாததால் மளக் மளக்கென்று அவசரமாக அவர்களால் குடிக்க முடியவில்லை. ஏதேதோ பேசிக் கொண்டு மெதுவாகக் குடித்தார்கள். ஆரம்பத்தில் அச்சிடத் தகுந்ததாக இருந்த அவர்கள் பேச்சு மெல்ல மெல்ல அச்சிடத் தகாததாக மாறிக் கொண்டு போயிற்று. நாகராஜ் கறுப்புக் கண்ணாடி மங்கையை நினைத்துக் கொண்டான். அவனுடைய கண்கள் கிறங்கின. இரு கன்னங்களிலும் யாரோ சரக் சரக்கென்று தேய்ப்பது போலவும், விலுக் விலுக்கென்று சதையைப் பிடித்து இழுப்பது போலவும் இருந்தது. குடித்தது போதுமென்று தோன்றியது. ஆனால் பாதியில் நிறுத்த வெட்கப்பட்டுக் கொண்டு, கௌரவத்துக்காகவும், வீறாப்புக்காகவும் அவன் குடித்துக் கொண்டேயிருந்தான். பையனிடம் எட்டணாவுக்கு கார பிஸ்கட் வாங்கி வரச் சொல்லி ஆளுக்கு இன்னும் சிறிது ரம் ஊற்றச் சொன்னார்கள். பிஸ்கெட் தின்று கொண்டே குடித்தார்கள். பிறகு, சிகரெட் புகைத்துக் கொண்டே குடித்தார்கள்.
அரைமைணி நேரம் கழித்து வெளியே வந்தபோது மூவரின் மனதிலும் உற்சாகம் நிரம்பியிருந்தது. ஒரு குருட்டுத்தனமான, அசட்டுத் துணிச்சல் கலந்த உற்சாகம். கொலாபாவில் நடந்து கொண்டிருந்த விடுமுறைக் கூட்டத்தை, நடைபாதைக் கடைகளை - வேடிக்கை பார்த்துக் கொண்டே அவர்கள் நடந்தார்கள். சாலையில் எதிரே வந்த பெண்கள் மேலெல்லாம் நாகராஜ் வேண்டுமென்றே இடித்துக் கொண்டு நடந்தான். "டேய், டேய்!" என்று சாரங்கன் அவனைத் தடுத்தான். நாகராஜன் உடனே சாரங்கனை இறுக்கக் கட்டிக் கொண்டான். "கோச்சுக்காதேடா!" என்றான்.
கொலாபாவில் மேலும் கீழுமாகச் சிறிது நேரம் உலாவிய பிறகு, கேட் வே ஆஃப் இந்தியா வரை அவர்கள் நடந்து சென்றார்கள். அங்கே ஒரு பெஞ்சில் போய் உட்கார்ந்தார்கள். எலிஃபென்டாவிலிருந்து ஒரு டூரிஸ்டு படகு அப்போதுதான் திரும்பி வந்து படித்துறையருகில் நின்றிருந்தது. பிரயாணிகள் படகிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்கள் "பத்து பைசாவில் கப்பல் பாருங்கள் ஸாப்!" என்று கழுத்திலும் தோளிலும் நிறையப் பைனாகுலர்களை மாட்டிக் கொண்டிருந்த ஒருவன் அவர்களருகே வந்து நின்றான். "பைனாகுலர் இல்லாமலே கப்பல்தான் தெரிகிறதே!" என்றான் சாரங்கள்.
"கப்பலின் மேலுள்ள எழுத்துக்களைப் பார்க்கலாம் ஸாப்!"
"அதைப் பார்ப்பதால்தான் என்ன உபயோகம்!"
திடீரென்று நாகராஜுக்கு குமட்டிக் கொண்டு வந்தது; கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றான்; முடியவில்லை. 'களக்' என்று வாந்தி எடுத்தான். "களக், களக்' என்று தொடர்ந்து வாந்தியெடுத்துக் கொண்டிருந்தான். சாராய நெடி குப்பென்று வீசியது. தலைக்கு மேல் வட்டமிட்டுக் கொண்டிருந்த கடற்பறவையொன்று இந்தக் காட்சியைக் காணச் சகியாதது போலக் கடலை நோக்கிப் பறந்து சென்றது.
"இவன் இப்படித்தான், அளவு தெரியாமல் குடிப்பான்" என்றான் சாரங்கன், ரமணியிடம். தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த நாகராஜை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் படிகளில் இறங்கி நீரருகில் சென்றார்கள். அரேபியக் கடல் முழுச் சூரியனை அனாயசமாக விழுங்குவதைப் பார்த்தார்கள்.
அவர்கள் திரும்பி வந்தபோது நாகராஜ் பெஞ்சில் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். "டேய், எழுந்திருடா, எழுந்திருடா!" என்று சாரங்கன் அவனை எழுப்பினான். அங்கிருந்து ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு அவர்கள் சௌபாத்திக்குச் சென்றார்கள். டாக்ஸியில் செல்லும் வழியெல்லாம் நாகராஜ் தூங்கிக் கொண்டே
இருந்தான்.
செளபாத்தி கடற்கரையில் பேல்பூரி, பானிபூரி, ஆலுபூரி வகையறாக்களை சாரங்கனும், ரமணியும் ஒரு கை பார்த்தார்கள். நாகராஜுக்கு எதுவும் வேண்டியிருக்கவில்லை. சாப்பிட்டால் மறுபடி வாந்தியெடுக்குமோ என்று பயமாக இருந்தது. மூவரும் மணலில் உட்கார்ந்து கடற்கரைக் கூட்டத்தையும், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள் மேல் சிறியவர்களும், பெரியவர்களும் சவாரி செய்வதையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருட்டிய பிறகு, மலபார் ஹில்ஸ் ஏறி, அங்கிருந்த ஒரு ரெஸ்டாரன்டுக்குச் சென்றார்கள்.
ரெஸ்டாரன்டின் கூரையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அங்கிருந்து பார்த்தால் பம்பாய் நகரம் ஜகஜ்ஜோதியாகத் தெரிந்தது. பேல்பூரி ஸ்டால்களின் காஸ்லைட்டுகள் முதல் மாரீன் டிரைவின் பிரகாசமான மெர்க்குரி வரிசை வரையில் எல்லாமே தெரிந்தது. ஆனால், நாகராஜுக்கு இவை ஒன்றுமே தெரியவில்லை. அருகேயிருந்த ஒரு மேஜையில் உலகததையே மறந்தவர்களாக ஒருவரில் ஒருவர் ஆழ்ந்து அமர்ந்திருந்த இளம் காதலர்கள் இருவர்கள்தான் அவன் கண்களுக்குப் பூதாகாரமாகத் தெரிந்தார்கள். இன்னும் சில நாட்களில் சாரங்கன் தன் மனைவியுடன் இந்த ரெஸ்டாரன்டில் வந்து உட்காரக் கூடும். நாகராஜ் கறுப்புக் கண்ணாடி யுவதியை நினைத்துக் கொண்டான். எளிதில் பெற்றிருக்கக் கூடிய ஏதோ ஒன்றை இழந்து விட்ட ஏக்கமும் தவிப்பும் அவன் உள்ளத்தில் நிரம்பியிருந்தன.
ரெஸ்டாரன்டிலிருந்து அவர்கள் வெளியே வந்தபோது மலபார் ஹில்ஸ் பஸ் ஸ்டாண்டுகளில் விடுமுறைக் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி, மின்சார ரயில் பிடிப்பதற்காக கிராண்ட் ரோடு ஸ்டே ஷனை நோக்கி அவர்கள் நடந்தார்கள். நாகராஜை இப்போதுதான் போதை முழு வேகத்துடன் தாக்கத் தொடங்கியிருந்தது. ஏதேதோ சம்பந்தமில்லாமல் பிதற்றியவாறு அவன் நடந்தான். நோவல்டி தியேட்டரருகே செல்லும்போது சட்டென்று அவன் நின்றான். என்ன ஆச்சரியம்! தியேட்டர் வாசலில் எங்கோ பார்த்தவாறு கறுப்புக் கண்ணாடி யுவதி நின்றிருந்தாள். "மிஸ்!", என்று நாகராஜ் அவளை நோக்கிப் பாய்ந்தான். ரமணியும் சாரங்கனுமாக மிகவும் பாடுபட்டு அவனை ஸ்டே ஷன்வரை இழுத்துக் கொண்டு போனார்கள்; ரயிலில் உட்கார்த்தினார்கள். ரயிலில் செல்லும் வழியெல்லாம் நாகராஜ் தன்மீது பிரயோகிக்கப்பட்ட பலாத்காரத்தை எதிர்த்து, மனத்தாங்கலுடன் ஒரு பலகீனமான எரிச்சலுடனும் சாரங்கன் மீது முறைப்பான பார்வையை வீசியவாறு, அவனுக்கு ஒரு பரிகாசப் பொருளாகவும் பெட்டியில் இருந்த மற்றவர்களுக்கு ஒரு சுவையான காட்சிப் பொருளாகவும் இருந்தான்.
பத்தரை மணிக்கு அவர்கள் மாதுங்காவை அடைந்தார்கள். சாரங்கனும் ரமணியும் நாகராஜை அவனுடைய பில்டிங் வாசல் வரையில் கொண்டு சேர்த்தார்கள். "அறைவரையில் வரட்டுமா, அல்லது நீ போய்க் கொள்கிறாய?" என்றான் சாரங்கன். அவனுடைய குரலில் ஒரு ஏளனமும் அலட்சியமும் இருந்ததாக நாகராஜுக்குத் தோன்றியது. தோழமைக்கும் பொழுதை ஓட்டுவதற்கும் நாகராஜ் பெருமளவுக்குத் தன்னையே நம்பியிருந்தானென்ற உணர்வால் ஏற்பட்ட அலட்சியம். சுயமாகத் தன் தனிமைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் சக்தியும் திறமையும் இல்லாதவன் அவனென்ற நினைப்பில் விளைந்த ஏளனம். "நீங்கள் போய்க் கொள்ளுங்கள்; ஐவில் மானேஜ்" என்றான் நாகராஜ். அவர்கள் சென்று விட்டார்கள்.
நாகராஜ் மாடிப்படிகளில் ஏறித் தன் அறையை அடைந்தான். ஆயாசத்துடன் கட்டிலில் சாய்ந்தான். சாரங்கன் உதவியால் ஒரு ஞாயிற்றுக் கிழமையை எப்படியோ கழித்து விட்டோமென்று அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அதே சமயத்தில் சாரங்கன் உதவியில்லாமல் அது கழிந்திருக்க முடியாதா என்ன என்றும் தோன்றியது. சாரங்கனும் அவனும் ஒரு பரஸ்பரத் தேவையைப் பூர்த்தி செய்தார்கள். நாகராஜுக்குத் தேவையாக இருந்தது பின்னப்படாமல் தன்னை முழுமையாக ஆட்கொண்டு தன் தனிமையை நீக்கக் கூடிய ஒரு பெருஞ்சக்தி. சாரங்கனுக்குத் தேவையாயிருந்தது தன் சாகஸங்களையும் திறமைகளையும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் ஒரு பரம பக்தன். அவர்கள் இருவரும் இந்தத் தேவைகளை ஒருவருக்கொருவர் எப்போதுமே இல்லாவிட்டா லும், சில சமயங்களில், முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்குப் பூர்த்தி செய்து கொள்ள முடிந்தது.
ஆனால் கல்யாணமான பிறகு சாரங்கனுடைய தேவை தன் மனைவியிடம் பூர்த்தி யடைந்துவிடக்கூடும். இனி சாரங்க னின் தயவில்லாமல் விடுமுறை நாட்களைக் கழிக்க அவன் பழகிக்கொள்ள வேண்டும். 'அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலையில் முடி வெட்டிக் கொள்ள வேண்டும்' என அவன் நினைத்தான். 'சாப்பிட்டுவிட்டு ஒரு மாட்டினி ஷோ பார்த்து விட்டு வந்தால் ஒரு நாள் தீர்ந்து போகும். அல்லது பேசாமல் அம்பி வீட்டுக்குப் போகலாம். அல்லது ரேஸுக்குப் போய் ஒரு ஜாக்பாட் டிக்கட் வாங்கிக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து விடலாம். அந்தக் கறுப்புக் கண்ணாடி மங்கையை ஒரு வேளை அவன் மீண்டும் அங்கேயே சந்திக்கக்கூடும். அல்லது அவளைப் போல வேறு யாராவது, யாரென்பது முக்கியமில்லை. எங்கே யென்பது முக்கியமில்லை. தனித் தன்மையை இழந்துதான் தனிமையைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு நிரந்தரமான ஏற்பாடுகள் எதற்காக? சிநேக உடன்பாடுகள் தான் எதற்காக? அவ்வப்போது உருவாகும் சந்தர்ப்பங்கள், தற்காலிகமான ஷரத்துகளற்ற உறவுகள் இவையே போதுமானவை. இவையே சிறந்தவை.
சீட்டாட்டத்தின் ஜன்னி, ரேஸ்கோர்ஸ் அல்லது விளையாட்டு மைதானத்தில் குழுமியுள்ள ஜனத்திரளின் இரைச்சல், சினிமாத் தியேட்டரின் இருள், ஒரு அழகிய பெண்ணின் கணநேரப் புன்னகை, இவை நிரந்தர மான உருவமும் இயக்கமும் இல்லாதவை. இவற்றிலெல்லாம் அவன் தன் தனித் தன்மையை அடகு வைத்தால் உடனுக்குடன் மீட்டுக் கொள்ளலாம். வீடு வரை கூடவே வந்து, "அறை வரையில் வரட்டுமா?" என்று அவை கேட்காது. திங்கட்கிழமை காலையில் ஆபிஸுக்குப் போன் பண்ணி "ராத்திரி தூங்கினாயா?" என்று விசாரித்து அவனுடைய தனித் தன்மையின் இழப்பை மீண்டும் மீண்டும் நினைவூட்டி, அதை ஒரு நிரந்தரமான இழப்பாகச் செய்யாது.
---------------
6. சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்
'சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்' தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனத்தில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது.
வயது இருபத்திரண்டு; பெண் குழந்தை. வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஜாதகம், பூர்வீகம், குலம் கோத்திரம், பதவி, சம்பளம் இத்யாதி இந்த முயற்சிகளும் அதன் பின்னிருந்த பரிவும் கவலையும் அவளுக்கு ஒருவிதத்தில் பிடித்துத்தான் இருந்தது. என்றாலும், இது சம்பந்தமாக அவள் இளம் மனத்திலும் சில அபிப்பிராயங்களும் கொள்கைகளும் இருக்கக் கூடுமென்றோ, அவற்றுக்கு ஒரு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றோ தன் பெற்றோர் சிறிதும் நினைக்காதது அவளுக்குச் சற்று எரிச்சலையும் அளித்தது. அதே சமயத்தில் இது சம்பந்தமாகத் தன்னை அவர்கள் விசாரித்தால் தன்னால் தீர்மானமான, துல்லியமானதொரு பதிலைச் சொல்ல முடியுமாவென்று சந்தேகமாகவும் இருந்தது.பெரியோர் களுடைய கருத்துக்கள் எவ்வளவுக்கெவ்வளவு திடமான கனபரிமாணங்களும் உண்மையின் தீவிரமும் உடையதாக இருந்தனவோ, அவ்வளவுக்கவ்வளவு அவளுடைய கருத்துக்கள் அவளுக்கே புரியாததொரு புதிராகவும், பிறர் கேட்டால் சிரிப்பார்களோவென்ற பயத்தை மூட்டுபவை யாகவும் இருந்தன.
அவன் சிவப்பாக இருந்தான். அவளுடைய கனவுகளில் இடம் பெற்றிருந்த இளைஞன், சிவப்பென்றால் ஆங்காரச் சிவப்பு இல்லை; மட்டான, பதவிசான சிவப்பு. அவன் உயரமாக இருந்தான் - நீலாவைவிட ஓரிரு அங்குலங்கள் உயர மாக, அவள் செளகரியமாக தன் முகத்தை அவன் மார்பில் பதித்துக் கொள்ளக் கூடிய உயரம். வெட்கத்தில் தாழ்ந்திருக்கும் அவள் பார்வை சற்றே நிமிரும் சமயங்களில் அவளை உவகையிலும், சிலிர்ப்பிலும் ஆழ்த்தும் உயரம். கடைசியாக, ஆனால் முக்கியமாக, அவனுக்கு மீசையோ, தாடியோ இருக்கவில்லல் மழுமழுவென்று ஒட்ட க்ஷவரம் செய்யப்பட்ட சுத்தமான 'மாசு மறுவற்ற' முகம் அவனுடையது. அந்த இளைஞனுடன் அவள் தன் கனவுகளில் தனக்கு மிகவும் பரிச்சயமான இடங்களிலும், தான் பார்த்தேயிராத பல புதிய இடங்களிலும், மீண்டும் மீண்டும் அலைந்து திரிவாள். ஜோடியாக அவர்கள் பார்த்து மகிழ்ந்த பேச்சுக்கள்தான் எத்தனை! ஆனால் அந்தக் கனவு இளைஞன் எவ்வளவுக் கெவ்வளவு அருகில் இருப்பதாகத் தோன்றினானோ, அவ்வளவுக்கவ்வளவு எட்டாத் தொலைவில் இருப்பதாகவும் தோன்றினான். எவ்வளவுக்கெவ்வளவு அவனைப் பற்றித் தெரியுமென்று தோன்றியதோ, அவ்வளவுக்கவ்வளவு அவனைப் பற்றித் தெரியாதென்றும் தோன்றியது. ஓயாமல் அலைபாயும் நீர்ப்பரப்பில் கோணல் மாணலாக நெளியும் ஒரு பிம்பம் அவன்; வேகமாகச் சென்று மறைந்துவிட்ட பஸ் ஜன்னலில் பார்த்த முகம் - அவள் அவனைப் பார்க்கவும் செய்தாள்; பார்க்கவுமில்லை.
நீலா ஒரு சர்க்கார் ஆபீசில் வேலை பார்த்து வந்தாள் - குமாஸ்தாவாக. அவளுடைய ஆபீசில் நிறைய இளைஞர்கள் இருந்தார்கள். ஏன், அவளுடைய செக்ஷனிலேயே ஒருவன் இருந்தான். எல்லாம் - அவள் பார்வையில் படு சாதாரணமாக 'சீப்' ஃபெல்லோஸ். அவளைப் போன்ற ஓர் அரிய ரத்தினத்தைப் புரிந்து கொள்ளவோ, அதன் அருமை அறிந்து போற்றிப் பாதுகாக்கவோ லாயக்கில்லாதவர்கள். இந்த மட்டரகமான கும்பலிலிருந்து அவளுக்கு விடுதலை அளிப்பதற்கென்று அவதாரம் எடுத்திருப்பவன்தான் அவளுடைய கனவு இளைஞன்.
"ஓ, என் அன்புக்குரியவனே, எங்கிருக்கிறாய் நீ? நான் கேட்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டு, படிக்கும் பத்திரிக்கைகளைப் படித்துக் கொண்டு, பார்க்கும் திரைப் படங்களைப் பார்த்துக் கொண்டு, நடக்கும் சாலைகளில் நடந்து கொண்டு, கவனிக்கும் போஸ்டர்களைக் கவனித்துக் கொண்டு, பயணம் செய்யும் டாக்ஸிகளிலும், ஆட்டோ ரிக்க்ஷக்களிலும் பயணம் செய்து கொண்டு, ஏறியிறங்கும் படிக்கட்டுகளில் ஏறியிறங்கி, உபயோகிக்கும் ஹேர் ஆயிலையும், டூத் பேஸ்டையும் உபயோகித்துக் கொண்டு, அருந்தும் பானங்களை அருந்திக் கொண்டு, என்னைத் தாக்கும் ஓசைகள், மணங்களினால் தாக்கப்பட்டு, சிலிர்க்க வைக்கும் காட்சிகளைக்கண்டு சிலிர்ப்பில் ஆழ்ந்து, வியர்க்க வைக்கும் வெயிலில் வியர்த்துக் கொண்டு, விசிறும் தென்றலினால் விசிறப்பட்டு, நனைக்கும் மழையிலும் நிலவொளியிலும் நனைந்து கொண்டு, பீடித்திருக்கும் இதே கனவுகளினால் பீடிக்கப்பட்டவனாய்- எங்கிருக்கிறாய் நீ? வா, வந்துவிடு-ப்ளீஸ்! என்னை ஆட்கொள், என்னைக் காப்பாற்று-என்னைச் சுற்றியிருக்கும் இந்த மனிதர் களிடமிருந்து, இந்த இடங்களிலிருந்து, இந்தப் பொருள்களிலிருந்து, என்னிடமிருந்தே...'
ஆர்ப்பரிக்கும் எண்ண அலைகள்; திமிறித் துள்ளும் உள்ளம்.
தினசரி காலையில் பஸ் ஸ்டாண்டில், ஒரு நீண்ட க்யூவின் மிகச் சிறிய பகுதியாய்த் தன்னை ஆக்கிக் கொள்ளும் கணத்தில், அவளுடைய இதயத்தை ஒரு விவரிக்க முடியாத சோகமும், தவிப்பும், கவ்விக் கொள்ளும்- 'இதோ மீண்டும் இன்னொரு நாள் நான் பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்கிறேன்; பஸ்ஸில் ஏறி ஆபீஸ் போகிறேன்-சலித்துப் போன இதே பழைய முகங்களுடன்' என்று அவள் நினைத்துக் கொள்வாள். சாலையில் படபடவென விரையும் கார்கள், ஸ்கூட்டர்கள், இவற்றை அவளுடைய பார்வை ஆற்றாமையுடன் துரத்தும்; துழாவும். பஸ்ஸில் செல்லும்போது பஸ்ஸை ஓவர் டேக் செய்து கொண்டு செல்லும் வாகனங்களையும் இந்த வாகனங்களுக்குள் அமர்ந்திருக்கும் மனிதர்களையும் அவளுடைய பார்வை நீவும்; அணைக்கும். இந்தக் கார்கள் ஸ்கூட்டர்கள், அதோ அந்த போர்ட்டிகோக்கள், பார்கிங் லாட்கள், அடுக்கு மாடிக் கட்டிடங்கள், ஜன்னல்கள்-இவை உள்ள உலகம் தான் கனவு இளைஞன் வசித்த உலகம்-பஸ் கியூக்களுக்கும், டிபன் பாக்ஸுகளுக்கும் அப்பாற்பட்ட உலகம். நீண்ட கியூக்களில், கூட்டமான பஸ்களில், நிரந்தரமாகச் சிறையாகிப் போன அவளை, அவன் எப்படித்தான் கண்டு கொள்ளப் போகிறானோவென்று அவள் பெருமூச் செறிவாள். அவள் கையிலிருந்த நேற்று ஆபீஸ் கிளப்பிலிருந்து எடுத்து வந்திருந்த-பத்திரிகையின் பின்னட்டையில், சிகரெட் விளம்பரத்தில், தன்னைப் போன்ற பெண்ணொருத்தியை ஒரு கையால் அணைத்தவாறு, இன்னொரு கையில் சிகரெட்டை ஓயிலாகப் பிடித்திருக்கும் இளைஞன் கூட ஓரளவு கனவு இளைஞனின் சாயலுள்ளவன்தான். சிகரெட், ஷேவிங் லோஷன், ஹேர் ஆயில் விளம்பரங்களில் இடம் பெரும் இந்த இளைஞர்கள் கூடவெல்லாம் அவள் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! இவர்கள் கனவு இளைஞனின் நண்பர்களாகத்தான் இருப்பார்கள். அவனுடைய விலாசம் இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
பிறகு ஆபீஸ், கையிலிருந்த பத்திரிகையைக் குப்புசாமியின் மேஜைமீது வைத்து விட்டு, அட்டென்டன்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்திட்டுவிட்டு, அவள் தன் இடத்தில் உட்காருவாள். செக் ஷனில் வேலை செய்யும் சிலர் ஏற்கனவே வந்திருப்பார்கள். மற்றவர்களும் ஒவ்வொருவராக வந்து உட்காருவார்கள். வேலை தொடங்கும். இரவெல்லாம் நிசப்தமாக, நிச்சலனமாக இருந்த அந்த அறை, திரை தூக்கப்பட்ட நாடக மேடை போலக் குபுக்கென்று உயிர் பெற்று விழித்துக் கொள்ளும்-குரல்கள், ஓசைகள், அசைவுகள்-நிற்கும், நடக்கும், உட்காரும் மனிதர்கள். இவர்களை இணைக்கும் சில பொதுவான அசேதனப் பொருள்கள். படபடவெனப் பொரிந்து தள்ளும் டைப்ரைட்டர்கள்; சரசரக்கும், மொடமொடக்கும் காகிதங்கள்; இக்காகிதங்களின் மேல் தம் நீல உதிரத்தை எழுத்து வடிவங்களாக உகுத்தவாறு தாவும், ஊரும், தள்ளாடும் பேனாக்கள்; 'க்ர்ரிங்க்...க்ர்ரிங்க்' எனத் தன் இருத்தலையும் ஹோதாவையும் அடிக்கடி கர்வத்துடன் பறைசாற்றும் தொலைபேசி; 'பொத் பொத்' தென்று வைக்கப்படும், திறக்கப் படும் ரிஜிஸ்தர்கள்; டபால் டபாலென்று திறக்கப்படும், மூடப்படும் இழுப்பறைகள், அலமாரிகள்; தரையுடன் உராயும் நாற்காலிக் கால்கள், காற்றில் சுவரில் உராயும் ஒரு காலண்டர், ஒரு தேசப்படம், ஒன்றோடொன்று உராயும், மோதும் இணையும், இணையாத ஒலிகள்....
ஒரே விதமான ஓசைகளின் மத்தியில், ஒரே விதமான மனிதர்களின் மத்தியில், ஒரே விதமான வேலையைச் செய்து கொண்டு சே! இதில் பிரமாதமான, கெடுபிடியும் அவசரமும் வேறே. "மிஸ் நீலா! டெபுடேஷன் ஃபைல் கடைசியாக யார் பெயருக்கு மார்க் செய்யப்பட்டிருக்கிறது?" "மிஸ் நீலா! ஆர்.வி. கோபாலன் டிரான்ஸ்பர் ஆர்டர் டிஸ்பாச்சுக்குப் போய் விட்டதா? "மிஸ் நீலா! பி.என். (பென்ஷன்) தலைப்பில் புதிய ஃபைல் திறக்க அடுத்த நம்பர் என்ன?" கேள்விகள், கேள்விகள், கேள்விகள். அவர்கள் தன்னைக் கேட்காதபோது, அவள் தன்னையே கேட்டுக் கொள்வாள்- மிஸ் நீலா! உனக்கு ஏன் பைத்தியம் பிடிக்கவில்லை?- மிஸ் நீலா! நீ எதற்காக இந்த அறையில், இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாய்?- மிஸ் நீலா! உனக்கும் இந்த மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம்?
விதம் விதமான மனிதர்கள். வெவ்வேறு ருசிகளும் போக்குகளும், சாயல்களும், பாவனைகளும் உள்ள மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட மட்டத்தில், குறிப்பிட்ட வட்டத்தில் சுழலும் மனிதர்கள். சலிப்பூட்டும் மனிதர்கள்!
அந்த செக்க்ஷனில் இருந்தவர்களிலேயே வயதானவர் தண்டபாணி. நெற்றியில் விபூதி, வாயில் புகையிலை. முகத்தில் எப்போதும் ஒரு கடுகடுப்பு. பெண்கள் வேலைக்கு வருவதைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாத காரணத்தால், நீலா என்ற பெண்ணொருத்தி அந்த செக்க்ஷனில் வேலை செய்வதை உணர்ந்ததாகவே அவர் காட்டிக் கொள்வதில்லை. செக்க்ஷனில் உள்ள மற்றவர்கள் ஒரு பெண் இருக்கிறாளேயென்று கூறத் தயங்கும் சொற்களை, அலசத் தயங்கும் 'டாபிக்'குகளை அவர் வெகு அலட்சியமாக கூறுவார். அலசுவார்; வேண்டுமென்று தன்னை அதிர வைக்கும் நோக்கத்துடனேயே அவர் அப்படிப் பேசுவதாக நீலாவுக்குத் தோன்றும்.
குப்புசாமி இன்னொரு ரகம். செக் ஷனில் 'பத்திரிகை கிளப்' அவர்தான் நடத்தி வந்தார். அவரே கிட்டத்தட்ட ஒரு பத்திரிகை மாதிரிதான்; சதா 'மாட்டர்' தேடி அலையும் பத்திரிகை பியூன் பராங்குசத்தின் சம்சாரத்துக்குக் கால் நோவென்றால் அதற்குப் பரிகாரமென்னவென்று... ஹைஸ்கூல் படிப்பை முடித்துவிட்ட கணபதிராமனின் மகன் மேற்கொண்டு என்ன செய்யக் கூடுமென்று - அமெச்சூர் நடிகரான சீனிவாசன் எந்த மேநாட்டு நடிகர்களைப் பின்பற்றலாமென்று- அடிக்கடி லேட்டாக வரும் கேசவன் தன் தினசரி அட்டவணையை எப்படியெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாமென்று-அவர் ஒவ்வொருவருக்கும் வலிய ஆலோசனை வழங்குவார். நீலாவிடமும் அவர் பேசுவார். "இன்றைக்கு என்ன சீக்கிரமா வந்துட்டே போலிருக்கே!" என்கிற ரீதியில் அவர் அவளிடம் வெகு சௌஜன்யத்துடன் பேச முற்படும்போது அவளுக்கு எரிச்சல்தான் வரும். தண்டபாணி ஓர் அமுக்கு என்றால், குப்புசாமி ஓர் அதிகப் பிரசங்கி.
கணபதிராமன், சீனிவாசன், கேசவன், பராங்குசம்- இவர்களையும் கூட ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்துக்காக அவள் வெறுத்தாள். கணபதிராமன், சதா அவளுடைய வேலையில் ஏதாவது தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும், சின்னப்பாப்பாவின் கையை பிடித்து 'அ' எழுதச் சொல்லித் தருவதைப் போல ஒவ்வொரு விஷயத்தையும் ஆதியோடந்தம் சொல்லித் தர முற்படுவதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. சீனிவாசன், "மிஸ் நீலா!" என்று உத்திரவிடும்போதெல்லாம், "இஃப் யூ டோண்ட் மைண்ட்", "கைண்ட்லி" என்ற சொற்களைப் பயன்படுத்துவது மரியாதையாகத் தோன்றாமல், ஒரு நாசூக்கான ஏளனமாகவே தோன்றியது. கேசவனுடைய பெரிய மனுஷத் தோரணையும், யாரையும் லட்சியம் செய்யாத (அவள் உட்பட) அலட்சியப் போக்கும் அவளுக்கு அவன்பால் வெறுப்பை ஏற்படுத்தின. பியூன் பராங்குசத்தைப் பொறுத்தவரையில் ரிஜிஸ்தர் களையும் ஃபைல்களையும் பல சமயங்களில் அவன் அனாவசியமான் வேகத்துடன், ஓசையுடன் தன் மேஜை மீது எறிவதாக அவளுக்குப்பட்டது. சில சமயங்களில் அவள் வராந்தாவில் நடந்து செல்லும் போது, வேறு பியூன்களிடம் தன்னைப் பற்றி மட்டமாக ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருப்பதாகப் பட்டது.
செக்க்ஷனில் இருந்த யாரையுமே அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவளுக்கு மிக அதிகமாகப் பிடிக்காத ஆசாமி கேசவன்தான். செக்க்ஷனில் உள்ள மற்றவர்கள் அவனை ஒரு செல்லப் பிள்ளைபோல நடத்துவதும், அவளுக்கு மீறி அவனைத் தூக்கிவைத்துப் பேசுவதும் அவளுக்குப் பொறுப்பதில்லை. இவர்கள் கொடுக்கும் இடத்தினால்தான் 'இதற்கு' திமிர் அதிகமாகிறது என்று அவள் நினைப்பாள்.
-- லக்கி ஃபெல்லோ சார், நோ கமிட்மெண்ட்ஸ், நோ வொர்ரீஸ்.
-- ஒரு மாசத்திற்கு எவ்வளவு படம் பார்ப்பாய் நீ, கேசவன் ?
-- தனியாகப் பார்ப்பாயா, அல்லது ஸ்வீட் கம்பெனி ஏதாவது ?
-- இந்த காலத்துப் பசங்களெல்லாம் பரவாயில்லை சார். இவங்க வயசிலே நாம் இருந்தபோது என்ன என்ஜாய் பண்ணியிருப்போம், சொல்லுங்கோ ?
அவனுடைய இளமைக்கும் சுயேட்சைத் தன்மைக்கும் அவர்கள் அளிக்கும் அஞ்சலி. தம் இறந்த கால உருவத்தை அவன் வடிவத்தில் மீண்டும் உருவகப்படுத்தி பார்த்து மகிழும் முயற்சி. அவளுக்குச் சில சமயங்களில் பொறாமையாகக் கூட இருக்கும். தனக்குக் கிடைக்காத ஒரு விசே ஷக் கவனிப்பும் ஸ்தானமும் அவனுக்குக் கிடைத்திருப்பது அவள் நெஞ்சை உறுத்தும். இது போன்ற சமயங்களில் இந்தப் பொறாமையும் உறுத்தலும் வெளியே தெரிந்து விடாமல் அவள் மிகச் சிரமப்பட்டுத் தன் முகத்தையும் பாவனைகளையும் அலட்சியமாக வைத்துக் கொள்வாள்-எனக்கொன்றும் இதொன்றும் லட்சியமில்லை என்பது போல.
ஒரு நாள் மாலை குப்புசாமி கேசவனிடம் பேசிக் கொண்டிருந்தப்போது அவள் இப்படிதான் மூஞ்சியை அலட்சியமாக வைத்துக் கொண்டிருந்தாள்.
"உனக்கு எந்த மாதிரி வைஃப் வரணுமென்று ஆசைப்படுகிறாய்? " என்று குப்புசாமி கேட்டார்.
"எந்த மாதிரியென்றால்? "
"அழகானவளாகவா? "
"அழகானவளாக வரணுமென்று யாருக்குத்தான் ஆசை யிருக்காது "
"ரொம்ப அழகாயிருந்தாலும் அப்புறம் மானேஜ் பண்றது கஷ்டம்."
கேசவன் கடகடவென்று சிரித்தான். "எனக்கு இதிலே உங்களளவு அனுபவம் இல்லே சார்" என்றான். இப்படி அவன் சொன்னபோது தன் பக்கம் அவன் பார்வை திரும்பியது போல நீலாவுக்குத் தோன்றியது. இதை ருசுப்படுத்திக் கொள்ள அவன் பக்கம் திரும்பவும் தயக்கமாக இருந்தது.
அன்று வீட்டுக்குச் சென்றதும், அவள் முதல் வேலையாகத் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். கேசவன் பார்வை விழுந்த தன் மாலை நேரத்து முகம் எப்படியிருந்ததென்று தெரிந்து கொள்வதற்காக. அது களைத்திருந்தது. வியர்த்திருந்தது. சற்றே புழுதி படிந்திருந்தது. துடிப்பும் பிரகாசமும் இன்றி மந்தமாக இருந்தது.
இதுதான் அவளுடைய முகம், அவளுடைய அழகென்று கேசவன் தீர்மானித்து விட்டானோ? இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே, சேச்சே, இவன் பார்க்கும்போது என் முகம் எப்படியிருந்தாலென்ன, இவன் என்னைப் பற்றி என்ன நினைத்தாலென்ன, என்றும் நினைத்தாள். அவனைப் பற்றி மறக்க முயன்றாள்.
ஆனால், மறுநாள் காலை ஆபிசுக்குக் கிளம்பும்போது வழக்கத்தைவிட அதிகச்சிரத்தையுடனும் பிரயாசையுடனும் அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். 'அவனுக்காக அல்ல, அவன் மூலம் தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக' என்று அவள் சொல்லிக்கொண்டாள். 'அவனுடைய அலட்சியத்தைப் பிளந்து அவனைச் சலனப்படுத்துவதற்காக, அவனுடைய கவனத்தைக் கவர்ந்து அதன் மூலம் என் வெற்றியை ஸ்தாபிப்பதற்காக'- இந்தப் போக்கிரித்தனமான எண்ணம் அவள் முகத்தில் ஒரு புன்னகையை எழுப்பியது. அன்று பஸ்ஸில் செல்லும் வழியெல்லாம் அவள் முகத்தில் ‘பளிச் பளிச்’சென்று புன்னகை ரேகைகள் தோன்றி மறைந்த வண்ணம் இருந்தன.
அவள் செக்ஷனுக்குள் நுழையும்போது கேசவனின் நாற்காலி காலியாக இருந்தது. அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணி விட்டுத் தன் இடத்தில் வந்து உட்காரும்போது, ‘இன்று ஒருவேளை மட்டம் போட்டு விட்டானோ?’ என்று நினைத்தாள்.
ஆனால், அவன் மட்டம் போடவில்லை. பத்தே முக்கால் மணிக்கு வந்தான். தாமதமாக வந்த குற்ற உணர்வினால் பீடிக்கப்பட்டவனாய், அவசர அவசரமாக ஃபைல் கட்டுகளைப் பிரித்து, வேலையைத் துவக்கினான்.
நீலா கைகளை உயர்த்தித் தலையில் வைத்திருந்த பூச்சரத்தைச் சரிபாத்துக் கொண்டாள். ‘கிளிங்க்...கிளிங்க்’ என்று வளையல்கள் குலுங்கின. அவன் நிமிரவில்லை. கையிலிருந்த பென்சிலைத் தரையில் நழுவ விட்டுவிட்டு மேஜைக்கு முன்புறம் போய் உருண்டு விழுந்துள்ள அதை எடுக்கும் சாக்கில் அவள் இடத்தை விட்டு எழுந்தாள்--சரக், சரக்-குனிந்து பென்சிலைப் பொறுக்கினாள்--கிளிங்க்- கிளிங்க்--ஊஹும், அவன் நிமிரவேயில்லை. அவளுக்கு எரிச்சலாக வந்தது. இன்று திடீரென அவன் கவனத்தைக் கவருவது அவளுக்கு ஒரு முக்கியமான விஷயமாக-கௌரவப் பிரச்னையாக ஆகிவிட்டிருந்தது. அடுத்தபடியாக ஒரு ரிஜிச்தரை வேண்டுமானால் கீழே போடலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், சீனிவாசன் அவளைக் கூப்பிட்டார்.
"மிஸ் நீலா! இஃப் யூ டோண்ட் மைண்ட்-ஒரு லெட்டர் கம்பேர் செய்யணும்".
அவள் இடத்திலிருந்து எழுந்தாள். கேசவனின் மேஜைக்கு மிக அருகில் உரசினாற்போல புடவை சலசலக்க, வளையல் சப்திக்க, பவுடர் மணக்க, (இன்று கொஞ்சம் பவுடர் அதிகமாகவே பூசிக் கொண்டிருந்தாள்) நடந்து சென்று அவள், சீனிவாசனின் மேஜையை அடைந்தாள். கேசவனின் பேனா சற்று நின்றது. அவன் நிமிர்ந்து தன்னைப் பார்ப்பதை அவள் உணர்ந்தாள். ‘பாரு, நன்றாய்ப் பாரு’ என்று நினைத்தவாறு, அவள், சீனிவாசனருகில் இருந்த காலி நாற்காலியில் அமர்ந்து அவரிடமிருந்து கடித நகலை வாங்கிப் படிக்கத் தொடங்கினாள். அவர் டைப் செய்யப்பட்ட ஒரிஜினிலை வைத்துக் கொண்டு சரி பார்க்கத் தொடங்கினார். தான் படிக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்தவளாய் அவள் படித்தாள். அவளுடைய அழகிய குரலும் உச்சரிப்பும் இந்த வறட்டு ஆபீஸ் கடிதத்தைப் படிப்பதில் செலவாகிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம்தான். ஆனால் கேசவன் கேட்டுக் கொண்டிருக்கின்றான்-இந்த நினைவு அவளுக்கு ஒரு போதையையும் உந்துதலையும் அளித்தது. கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் தன் இடத்தில் வந்து உட்கார்ந்ததும், கேசவன் திசையில் அவள் பார்வையைச் செலுத்தினாள்; குபுக்கென்று அவன் பார்வை அவளை விட்டு அகலுவதைக் கண்டுபிடித்தாள். அப்படியானால் இவ்வளவு நேரமாக அவன் அவளைத்தான் கவனித்துக் கொண்டிருந்தானா? அவளுக்குக் கர்வம் தாங்கவில்லை. அன்று அவள் தேவைக்கதிகமாகவே செக்ஷனில் அங்குமிங்கும் நடமாடினாள்; கேசவனின் பார்வை அடிக்கடி தன் திசையில் இழுபடுவதைத் திருப்தியுடன் கவனித்தாள்-கப்பம் கட்டாமல் ஏய்த்து வந்த அண்டை நாட்டுச் சிற்றரசன் ஒருவனுக்குத் தன் பலத்தை நிரூபித்த திருப்தி. இன்னும் பெரிய அரசர்களின் மேல் போர் தொடுக்க முஸ்தீப்பாக அவள் ஈடுபட்ட ஒரு சிறு பலப் பரீட்சையில் வெற்றி.
அன்று மாலை ஒரு கனாட் பிளேஸ் கஃபேயில் நண்பர்களுடன் அமர்ந்து காபி அருந்தும்போதும், பிறகு ஒரு 70 மி.மீ. சினிமாத் தியேட்டரில் பானாவிஷன் பிம்பங்களை ஸ்டீரியோஃபோனிக் ஒலிப்பின்னணியில் காணும்போதும், கேசவனின் மனத்தில் திடீர் திடீரென்று நீலாவின் உருவம் தோன்றிக் கொண்டிருந்தது. "இன்று இவள் ரொம்பவும் அலட்டிக் கொல்வது போலிருந்ததே-என்னிடம் ஏதேதோ தெரிவிக்க முயலுவது போலிருந்ததே-என் பிரமைதானோ?" என்று அவன் நினைத்தான். ஒரு வேளை இவளுக்கு என்மேல் காதல்...கீதல்...?
இந்த எண்னம் அவன் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது. ஒரு பெருந்தன்மையான, கருணை நிரம்பிய புன்னகை-’பாவம், பேதை!’ என்பதைப் போல. "இவள் குற்றமில்லை. நான் ரொம்ப ‘அட்ராக்டிவ்’வாக இருக்கிறேன். தட் இஸ் தி டிரபிள்...’ என்று அவன் நினைத்தான். திடீரென்று அவளுடைய இங்கிலீஷ் உச்சரிப்பு நினைவு வரவே, அவனுடைய புன்னகை அதிகமாகியது. ‘ஸில்லி ப்ரனஸ்ஸியேஷன்!’ என்று நினைத்தான். திரையில் ஆட்ரி ஹெப்பர்ன் அழகாக குழந்தைத் தனமாகச் சிரித்தாள். கேசவனுக்கு அப்படியே அவளைக் ‘கிஸ்’ பண்ண வேண்டும்போல் இருந்தது. சினிமாவிலிருந்து வெளியே வந்து சிகரெட்டை உறிஞ்சிப் புகையை ஊதித் தள்ளியபோது அவன் கேசவனாக இல்லை. இந்த நாட்டில் இல்லை. பீடர் ஒடுலாக மாறி, நியூயார்க் வீதியில் நடந்து கொண்டிருந்தான். ஆட்ரி ஹெப்பர்னின் சாயலை எதிரே வந்த பெண்களின் முகங்களில் தேடிக் கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் பிரியமான நடிகை ஆட்ரி ஹெப்பர்ன்தான். அதற்கு அடுத்தபடி சோபியா லாரென்; பிறகு, ஷெர்லி மக்லெயின்...
அவனுடைய வாழ்க்கைத் துணைவியின் இலட்சிய உருவகம் இந்தப் பிரியமான நடிகைகளின் சாயல்களில் இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று சிதறிக் கிடந்தது. புடவை, டூத் பேஸ்ட் விளம்பரங்களில் சிரிக்கும் வனிதைகளில் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. கனாட் பிளேஸ் வராந்தாக்களில் காணும் சில முகங்கள், சில நடைகள், சில சிரிப்புகள், சில அபிநயங்கள் இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. இந்த வெவ்வேறு துணுக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், அவன் விரும்பியவள் எப்படிப்பட்டவளாக இருப்பாளென்று ஒருவேளை புலப்படக்கூடும். ஆனால், அவன் இதுவரை இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. தன்னுடைய நிச்சயமின்மையே அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தந்தக் கணத்தில் ஆங்காங்கே எதிர்ப்படும் அழகுகளில் சுவாதீனமாக லயித்து ஈடுபட அனுமதித்த அவ்னுடைய சுயேச்சைத் தன்மை அவனுக்குப் பிடித்திருந்தது. ஒரு குறிப்பிட்ட பிம்பத்துக்கு அடிமையாகித் தன் பார்வைக்கும் இலக்குகளுக்கும் எல்லைகள் வகுத்துவிட அவனுக்கு விருப்பமில்லை.
‘காதலென்பது வாழ்நாள் சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்...
முழுவதும் ஒருவன் ஈடுபடும் இடையறாத தேடல்’ என்னும் ரொமாண்டிக் ஐடியா அவனுக்குப் பிடித்திருந்தத். அவனுடைய பெற்றோருக்கு வேண்டுமானால் பாட்டுப்பாடத் தெரிந்த, தோசையரைக்கத் தெரிந்த, எவளாவது ஒருத்தி வந்தால் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை வெறும் மோர்க் குழம்பும் தோசையும் அல்ல; சீமந்தமும் தாலாட்டும் அல்ல... இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. மேம்பட்டது. இந்த மேம்பட்ட சிகரங்களை அவன் எட்ட முடியாமலே போகலாம்-அது வேறு விஷயம். ஆனால் இவற்றை எட்டக்கூடிய சுதந்திரத்தை அவன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்; இது மிகவும் அவசியம்.
‘மிஸ் நீலா! என்னை நீங்கள் காதலிக்கும் பட்சத்தில், பாவம், உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீகள்!’ என்று அவன் நினைத்தான்.
மறு நாளிலிருந்து மறைத்துக் கொள்ளப்பட்ட ஆர்வத்துடனும் பரபரப்புடனும் அவர்கள் ஒருவரையொருவர் கவனிக்கத் தொடங்கினார்கள். கண்காணிக்கத் தொடங்கினார்கள். ‘கேசவன் தன் அழகை ரசிக்கிறானோ?’ என்று நீலா கவனித்தாள். ‘இந்தப் பெண் என்னை பக்தியுடன் பார்க்கிறதோ?’ என்று கேசவன் கவனித்தான். இருவருமே தாம் கவனிப்பது எதிராளிக்குத் தெரியாதென்றும் தாம் மட்டும் எதிராளியைப் பாதித்து விட்டதாகவும் நம்பினார்கள். இந்த நம்பிக்கையில் குதூகலமும் பெருமையும் அடைந்தார்கள். வெற்றியின் பெருமை; வெற்றியின் கர்வம். நீலாவிடம் எத்தனை விதமான நிறங்களில், எத்தனை விதமான டிஸைஙளில் புடவைகள் இருந்தனவென்பதைக் கேசவன் முதன் முதலாகக் கண்டுபிடித்தான். அவள் காதுகளைத் தலை மயிருக்குள் ஒளித்துக் கொள்ளும் விதம், வயிற்றுப் பாகம் மறையும் படியாகப் புடவைத் தலைப்பை இடுப்பில் நட்டுக் கொண்டு பிறகு தோளில் படர விட்டிருந்த நாசுக்கு, அவள் பேச்சிலிருந்த ஒரு இலேசான மழலை, அவள் விழிகளிலும் பாவனைகளிலும் கரைந்து விடாமல் தேங்கிக் கிடந்த ஒரு குழந்தைத் தனமும் பேதைமையும் இவற்றையெல்லாம் அவன் நுணுக்கமாகக் கவனிக்கத் தொடங்கினான்.
தன் கவனத்தைக் கவர நீலா ரொம்பவும் பிரயாசைப்படுகிறாளென்று கேசவன் நினைத்தான். ஆனால் ’நானா கவனிப்பவன்’ என்று அவளைக் கவனித்துக் கொண்டே அவன் நினைத்தான்.
‘ஒரு நாளில் கிட்டத்தட்ட ஐம்பது அல்லது அறுபது தடவையாவது கேசவன் என் பக்கம் பார்க்கிறான்’ என்று நீலா நினைத்தாள். தன் அழகுக்கும், கவர்ச்சிக்கும் ஓர் எளிய பக்தன் அளித்த சிறு காணிக்கையாக இதை அவள் திரஸ்கரிக்காமல் ஏற்றுக் கொண்டாள்; தன்னுடைய கனவு இளைஞனை அவள் சந்திக்கும்போது, இந்தக் குட்டி பக்தனைப் பற்றி அவனிடம் சொல்லிச் சிரிப்பாள் அவள். கேசவன் அவளைப் பார்க்கப் பார்க்க, கனவு இளைஞனைப் பற்றிய அவளுடைய நம்பிக்கைகளும் ஆசைகளும் மேன்மேலும் உறுதிப்பட்டன. அவளுடைய அழகின் வல்லமையும், சாத்தியக் கூறுகளும் தெளிவாயின. மறுமுறை பார்க்கத் தூண்டும், பிரமிக்க வைக்கும், உருவம் அவளுடையது; வடிவம் அவளுடையது. கனவு இளைஞன் அவளை நிச்சயம் தவற விடப் போவதில்லை. எத்தகைய அதிர்ஷ்டசாலி அவன்!
செக்ஷனில் இருந்த மற்றவர்கள் மீது அவளுக்கிருந்த கோபம்கூட இப்போது குறையத் தொடங்கியது. ஏனென்றால் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போதெல்லாம்-ஏதாவது ஒரு காரியமாக அவர்களை நோக்கி நடக்கும் போதெல்லாம்-அவள் உண்மையில் கேசவனுக் காகத்தான் பேசினாள்; கேசவனுக்காகவே நடந்தாள். அவளைச் சுற்றியிருந்த உலகத்தின் உண்மைகள் திடீரென்று மறைந்து விட்டிருந்தன. கனவு இளைஞனுக்காகப் போற்றி வந்த அவளுடைய உலகமாகிவிட்டிருந்தன.
கேசவனுடைய கண்களிலும் உலகம் மாறித்தான் போயிருந்தது. திடீரென்று
தன்னுடைய முக்கியத்துவத்தை பிரத்தியேகத் தன்மையை-அவன் உணர்ந்தான். காலரியில் உட்கார்ந்து கைதட்டும் பெயரற்ற பலருள் ஒருவனாக-ஒரு நடிகையின் பல உபாசகர்களுள் ஒருவனாக-நடைபாதைகளில் மிகுந்து செல்லும் அழகிகளின் பார்வைத் தெளிப்புகளையும் வர்ணச் சிதறல்களையும் பொறுக்கிச் சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்...
சேர்க்கும் பலவீனர்களுள் ஒருவனாக இருந்தவன், திடீரென்று இந்தக் கும்பல்களிலிருந்து தான் விலகி விட்டதை உணர்ந்தான். தன் ஒருவனுடைய ரசனைக்காகவும் பாராட்டுக்காகவும் மட்டுமே ஒரு அழகு தினந்தோறும் மலருவதை உணர்ந்தான். அவனுக்காகவே எழுப்பப்படும் கவிதை; வரையப்படும் ஓவியம்; இசைக்கப்படும் இசை; அவனுக்காக மட்டுமே ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு, டைரெக்ட் செய்யப்பட்டு, திரையிடப்படும் ஒரு படம் எவ்வளவு அபூர்வமான, கர்வப்பட வேண்டிய விஷயம்! சில சமயங்களில் அவனுக்கு உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியாதென்று தோன்றியது. சாலையில் எதிர்ப்படும் முன்பின் அறியாதவர்களையெல்லாம் நிறுத்தி, விஷயத்தைச் சொல்ல வேண்டும் போல இருந்தது. அடுக்குமாடிக் கட்டிடத்தின் உச்சியில் பொய் நின்று கொண்டு, மேகங்களிடம் தன் ரகசியத்தைப் பீற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அவன் தனியானவன்; வேறுபட்டவன்; வேறு யாருக்குமே கிடைக்காத ஒரு வாய்ப்பையும் , கௌரவத்தையும் அதன் மதிப்பு எப்படியிருந்தாலும் பெற்றவன்.
கேசவன் கவலைப்படத் தொடங்கினான்.
கவலைகளற்ற சுதந்திரப் பட்சி என்று செக்க்ஷனில் உள்ள மற்றவர்களால் கருதப்பட்டவன், திடீரென்று தன் விருப்பமின்றியே ஓர் அதிசயமான சிறையில் அடைபட்டு விட்டதை உணர்ந்தான்; கரைகளற்ற நீர்ப் பரப்பில், அலைகளின் போக்குக்கேற்ப அலைந்து திரிந்த படமாக இருந்தவன், திடீரென்று ஒரு கரையருகில் ஒரு முனையில் தான் கட்டப்பட்டுவிட்டதை உணர்ந்தான். இந்த மாறுதலை அவனால் முழுமனதாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் இதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் முடியவில்லை! ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, இது மகத்தான தோல்வியாகவும், வீழ்ச்சியாகவும் தோன்றியது. ஆனால்
ஆனால், இந்த தோல்வியில் ஒரு கவர்ச்சியும் இருந்தது. ஒரு மர்மமான ஆழமும் அழகும் இருந்தன. அந்தத் தோல்வியை நேருக்கு நேர் சந்திக்கவும் பயந்து கொண்டு, வந்த வழியே திரும்பிச் செல்லவும் மனம் வராமல், அவன் குழம்பினான்; தவித்தான்.
ஒரு நாள் சினிமாத் தியேட்டரில் சிநேகிதிகளுடன் வந்திருந்த நீலவைப் பார்த்து அவன் சிரித்தான்; அவளும் சிரித்தாள். அவனுக்குத் தைரியம் வந்தது. செக்ஷனில் சிரிப்புக்கான சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம், வேடிக்கைப் பேச்சுக்களும் கலகலப்பும் ஏற்படும் போதெல்லாம், அவர்களுடைய பார்வைகள் ஒன்றை யொன்று நாடின. அவர்களுடைய புன்னகைகள் மோதிக் கொண்டன. மின்சார அலைபோல ஒன்று அவர்களிடையே எப்போதும் ஓடிக் கொண்டேயிருந்தது.
அவள் பார்வைக்கு ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும். அவள் புன்னகைக்கு ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும். ஆனாலும் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பிறகு, அவன் நினைத்தான்-இவள் ஏற்கனவே முடிவு செய்து விட்டபிறகு, நான் ஏன் வீணாக யோசிக்க வேண்டும்? எனக்கும் சேர்த்து இவள் முடிவு செய்ததாக இருக்கட்டும். இவளுக்கு நான் ஏன் ஏமாற்ற்த்தை அளிக்க வேண்டும்? ஒரு பெண்ணின் மனத் திருப்தியைவிட என் அழகின் தேடல்தானா பெரிது? ஓர் உடைந்த இதயத்தின் பாவத்தை மனச் சாட்சியில் சுமந்து கொண்டு குற்றஞ்சாட்டும் இரு விழிகளை நினைவில் சுமந்து கொண்டு, எந்த அழகை என்னால் ரசிக்க முடியும்? எதில்தான் முழுமனதாக லயித்து ஈடுபட முடியும்? நான் நன்றாக மாட்டிக் கொண்டு விட்டேன். காலியாக, நிர்மலமாக இருந்த என் மனத்தை ஒரு குறிப்பிட்ட பிம்பம் பூதாகரமாக அடைத்துக் கொண்டுவிட்டது-இனி செய்வதற்கு ஒன்றுதான் இருக்கிறது-
ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது; கேசவன் முடிவுக்கு வந்துவிட்டான்.
ஒருநாள் மாலை நீலா ஆபீசை விட்டுக் குளம்பும்போது கேசவனும் கூடவே கிளம்பினான். அவள் முகம் சுளிக்காதது அவனுக்குத் தெம்பை அளித்தது.
"வீட்டுக்கா?" என்றான். அசட்டுக் கேள்விதான்.
"ஆமாம்".
"எங்கேயாவது போய்க் காபி சாப்பிடுவோமே?"
அவள் இதை எதிர்பார்க்கவில்லையென்று தெரிந்தது. முகத்தில் குப்பென்று நிறம் ஏறியது. சமாளித்துக் கொண்டு, "இல்லை; நான் வருவதற்கில்லை" என்றாள்.
"ஏன்?"
"ஒரு வேலை இருக்கிறது".
"நான் நம்பவில்லை".
அவள் பதில் பேசாமல் நடந்தாள். கேசவனுக்குத் தாளவில்லை. இவ்வளவு நாள் யோசித்து யோசித்து சே! இதற்குத்தானா?
"ப்ளீஸ்!" என்று அவன் உணர்ச்சி வசப்பட்டவனாய் அவள் கையைப் பிடித்தான். அவ்வளவுதான்; வெடுக்கென்ற உதறலுடன் தன் கையி விடுவித்துக் கொண்டு, அவனை நோக்கி, ஒரு முறை முறைத்துவிட்டு, அவள் சரசரவென்று வேகமாக நடந்தாள்.
கேசவன் அவள் நடந்து செல்வதைப் பார்த்தவாறு நின்றான்.
"சீ! என்ன துணிச்சல்!" பஸ் ஸ்டாண்டில் நிற்கும்போது, உடை மாற்றிக் கொண்டு கையில் பத்திரிகையுடன் அமரும்போது, அவளுக்குக் கேசவன் மேல் கோபம் கோபமாக வந்தது. இடியட்! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன்! எப்படிப்பட்டவளென்று நினைக்கிறான் இவன் அவளை? காப்பி சாப்பிட வேண்டுமாம், அதுவும் இவனுடன். என்ன ஆசை? என்ன... கொழுப்பு! கையை வேறு பிடித்து-
சே! நல்லதுக்கு காலமில்லை. அவளைச் சுற்றிலும் இறுக்கமும் வறட்சியும் இல்லாமல் சற்றே சந்தோஷத் தென்றல் வீசட்டுமென்று- அழகின் ஒளிக் கற்றைகள் இருண்ட இடங்களிலெல்லாம் பாயட்டுமென்று அவள் சுயநலமின்றிச் சிரித்துப் பேசினால், இப்படியா ஒருவன் தப்பர்த்தம் செய்து கொள்வான்? முட்டாள்தனமாக நடந்து கொள்வான்!
தன் குட்டி பக்தனை அவள் சிறிதும் மன்னிக்கத் தயாராயில்லை;
அவனுக்காகவென்று அவள் வகுத்திருந்த சில எல்லைகளை அவன் மீறிவிட்டதாக அவள் நினைத்தாள். நடைவாசலில் நின்று கொண்டிருக்க வேண்டியவன், கர்ப்பக் கிருகத்துக்குள் திபுதிபுவென்று நுழைந்திருக்கக் கூடாதென்று நினைத்தாள். பரிசுத்தமான மனத்துடன் அவள் தன் ஜன்னல்களைத்த் திறந்து வைத்தாள் என்பதற்காக, அவன் உரிமையுடன் ஜன்னலைத் தாண்டி உட்புறம் குதிக்க முயற்சித்திருக்கக் கூடாதென்று நினைத்தாள். எல்லாமே கேசவனின் குற்றத்தையும் அவளுடைய குற்றமின்மையையும் ருசுப்படுத்தும் ஸ்தாபிக்கும், எண்ணங்கள்.
அவன்தான் குற்றவாளி; அவளுடைய நல்ல எண்ணங்களைத் தவறாகப் புரிந்து கொண்ட குற்றவாளி.
‘இனி இவனிடம் பேசவே கூடாது’ என்று மறுநாள் அபீசுக்குக் கிளம்பும்போது அவள் முடிவு செய்தாள்.
அன்று கேசவன் ஆபீசுக்கு வரவில்லை.
‘ஹும்! பச்சாதாபப்படுகிறானாக்கும்; அல்லது தன்காலி நாற்காலியின் மூலம் அதிருப்தியைத் தெரிவிக்கிறானாக்கும்- என் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறானாக்கும்!’ என்று அவள் அலட்சியமாக நினைத்தாள். அவனைப் பற்றி எதுவும் நினைக்காமல் அவனால் பாதிக்கப்படாமல், இயல்பாக இருக்க முயன்றாள். ஆனால் நினைவுகளை யாரால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்; வேண்டும் வேண்டாம் என்று பாகுபாடு செய்து பொறுக்க முடியும்? அவன் திசையில் எண்ணங்கள் பாய்வதை அவன் உருவம் மனதில் தோன்றித் தோன்றி மறைவதை, அவளால் தவிர்க்க முடியவில்லை.
மாலையில் வீட்டில் உட்கார்ந்து, கேசவனைத் தள்ளுபடி செய்யக் கூடிய காரணங்களை அவள் தேடிப் பார்த்தாள். செக்ஷனில் வேலை செய்யும் பலருள் ஒருவனாக அவனை அசட்டையாகக் கருதி வந்த தன் பழைய மனநிலையை மீண்டும் உருவாக்கிக் கொள்ள முயன்றாள். ஆனால், அதில் அவளால் வெற்றி பெற முடியவில்லை. கேசவனை ஒரு தனி மனிதனாக, குறிப்பிட்ட சில இயல்புகளும் ருசிகளும் போக்குகளும் உள்ளவனாக, எல்லாவற்றுக்கும் மேலாக, அவளிடம் சிரத்தை கொண்ட ஒருவனாக, பேச்சுக்கள், பார்வைகள் மூலமாக அவளுடைய மனம் ஒரு விதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தது. இந்த உருவத்தை அவளால் சிதைக்கவோ அழிக்கவோ முடியவில்லை. முகமற்ற, பெயரற்ற, உருவற்ற, ஜனத்திரளில் ஒருவனாக-அவளை எந்த விதத்திலும் பாதிக்காதவனாக-அவனை மீண்டும் தூக்கியெறிய முடியவில்லை.
‘அவனும் இப்போது என்னைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பானோ?’ இருக்கலாம்; யார் கண்டது? என்ன விசித்திரமான தப்ப முடியாத விஷயம் இது! அவள் அனுமதியின்றி, அவளுக்குத் தெரியாமல், இந்த கணத்தில் அவளை அறிந்த பலர் அவளைப் பற்றிப் பலவிதமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நினைவுகளைப் பற்றி அவளால் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. அவற்றை ஒடுக்கவோ மாற்றவோ முடியாது; அவற்றிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள முடியாது.
என்ன நினைத்துக் கொண்டிருப்பான் கேசவன்? அவள் கர்வம் பிடித்தவள் என்றா? இரக்கமற்றவள் என்றா? எப்படியாவது நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் ஆனால்-ஆனால் ஒரு வேளை அவன் ரொம்ப வருத்தப்படுகிறானோ? தன் தவறுக்காகத் தன்னையே கடிந்து கொண்டு கழிவிரக்கத்தில் உழலுகிறானோ? இந்தக் கற்பனை அவளுக்கு ஒரு பயத்தையும் சங்கடத்தையும் அளித்தது. ‘யாரோ என்னைப் பற்றி ஏதோ நினைத்துக் கொண்டு அவஸ்தைப்பட்டால் அதற்கு நானா பொறுப்பாளி? என்று சமாதானம் செய்து கொள்ள முயன்றாள். ரேடியோவில் கேட்ட காதல் பாடலிலும், பத்திரிகை விளம்பரத்திலிருந்த இளைஞன் முகத்திலும், தன் மனத்தை ஈடுபடுத்தி, கற்பனைகளைத் திசை திருப்பிவிட முயற்சித்தாள். ஆனால், திடீரென்று இவையெல்லாம் உயிரற்றதாக, அர்த்தமற்றதாக, வெறும் போலியாக, அவளுக்குத் தோன்றின. உயிரும் இயக்கமும் உள்ள ஓர் உண்மையாக அவள் பார்த்திருந்த-அவளுடன் பேசியிருந்த-கேசவனைச் சுற்றியே மீண்டும் மீண்டும் இந்த மனம்.
மறுநாள் கேசவன் ஆபீசுக்கு வந்தான். ஆனால் அவன் கேசவனாக இல்லை. கலகலப்பாக இல்லை. சுற்றுமுற்றும் பார்க்காமல், சிரிக்காமல், காரியமே கண்ணாக இருந்தான்.
நீல அவனுடைய மாறுதல்களைக் கவனித்தவளாய், ஆனால், அதைக் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளாதவளாய், அமர்ந்திருந்தாள். கேசவன் வாய்ப்புக் கிடைக்கும்போது, அவளிடம், ‘ஐ ஆம் ஸாரி’ என்று மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப் போகிறானென்று அவள் எதிர்பார்த்தாள்.... ஆனால், கேசவன் ஒரு நாள் லீவில் தன்னைக் கடுமையாக ஆத்ம சோதனை செய்து கொண்டு, பெண்கள், அவர்களுடைய பார்வைகள், சிரிப்புக்கள், இவற்றின் அர்த்தங்கள் ஆகியவற்றிலெல்லாம் முற்றும் நம்பிக்கையிழந்த ஒரு விரக்தி நிலை அடைந்திருந்தான் என்பது அவளுக்குத் தெரியவில்லை.
அன்று லஞ்ச் டயத்துக்குப் பிறகு சில நிமிடங்களுக்குச் செக்ஷனில் அவளும் அவனும் மட்டும்தான் தனியாக இருந்தார்கள். அப்போது கேசவன் தன்னிடம் பேசப் போகிறானென்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவன் பேசவில்லை. அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் கூட இப்படிப் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஆனால், கேசவன் எந்தச் சந்தர்ப்பத்தையுமே உபயோகித்துக் கொள்ளவில்லை.
‘ரொம்பக் கோபம் போலிருக்கு!’ என்று அவள் நினைத்தாள். அவனுடைய விலகிய போக்கும் உஷ்ணமும்-ஆபீஸ் வேலை விஷயமாக அவளிடம் பேச வேண்டி வரும்போது வெகு மரியாதையுடன் முகத்தைப் பார்க்காமல் பேசிவிட்டு நகருதலும்-அவளுக்கு ரசமாகவும் வேடிக்கையாகவும் இருந்தன. அதே சமயத்தில் இந்தக் கோபத்தின் பின்னிருந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் ஊகித்துணரும்போது அவளுக்கு அவன் மேல் இரக்கமாகவும் இருந்தது. 'சுத்தப் பைத்தியம்’ என்று அவள் நினைத்தாள். அவள் நிலை அவனுக்கு ஏன் புரிய மாட்டேனென்கிறது? அவள் ஒரு பெண்-விளைவுகளைப் பற்றி, சுற்றியுள்ள சமூகத்தின் பார்வையையும் பேச்சுக்களையும் பற்றி யோசிக்க வேண்டியவள். எவனோ கூப்பிட்டானென்று உடனே காபி சாப்பிடப் போக, இதென்ன சினிமாவா, டிராமாவா?
இப்படியாக, அவன் காப்பி சாப்பிடக் கூப்பிட்டதே தப்பு என்கிற ரீதியில் யோசித்துக் கொண்டிருந்தவள், அவன் அப்படிச் செய்தது சரியாக இருந்தாலும் கூடதான் ஏன் அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியாது என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டு, தன் செய்கை சரிதானென்று ஸ்தாபித்துக் கொள்ள முயன்றாள். இருந்தாலும் மனதின் அரிப்பையும் குடைவையும் அவளால் தடுக்க இயலவில்லை. ஒரு வேளை அந்தச் சந்தர்ப்பத்தில் அவள் வேறு வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கலாமோ? இன்னும் சிறிது பிரியமாக நடந்து கொண்டிருக்கலாமோ? அவனைப் புண்படுத்தாமலும், அதே சமயத்தில் தன்னைப் பந்தப்படுத்திக் கொள்ளாமலும், சாதுரியமாக நிலைமையைச் சமாளித் திருக்கலாமோ?
அவள்தான் இப்படியெல்லாம் ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தாளே தவிர, அவன் அவளைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை... அவள் பக்கம் பார்ப்பதையே அவன் நிறுத்திவிட்டான். ஏன், சீட்டில் உட்காரும் நேரத்தையே அவன் கூடியவரை குறைத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான். அவனுடைய அலட்சியம் அவளுடைய இராத்தூக்கத்தைக் கெடுத்துவிடவில்லை. ஆனாலும் ஒரு சூன்ய உணர்வு அவளை அவ்வப்போது பிடித்து உலுக்கத்தான் செய்தது. அவளுக்குள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒரு பல்ப் ஃப்யூஸ் ஆனதைப் போல இருந்தது. அந்த பல்ப் இல்லாமலும் அவள் இயங்கக்கூடும். இருந்தாலும் வித்தியாசம் இருக்கத்தான் செய்தது, குறை தெரியத்தான் செய்தது.
அழகுபடுத்திக் கொள்வதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும், முன் போல ஆர்வமும் உற்சாகமும் காட்ட அவளால் முடியவில்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியாக அவை தோன்றின. கனவு இளைஞனை மண்டியிடச் செய்யும் தேஜஸ் வாய்ந்ததாகத் தோன்றிய தன் அழகின் மேல் முன்போல் அவளால் நம்பிக்கை வைக்க முடியவில்லை. அதன் கவர்ச்சியையும் வல்லமையையும் பற்றித் தீர்மானமாகவும் இறுமாப்பாகவும் இருக்க முடியவில்லை. எதை அஸ்திவாரமாகத் கொண்டு அவள் தடபுடலாக மாளிகை கட்டினாளோ, அந்த அஸ்திவாரமே இப்போது சந்தேகத்துக்குரியதாக மாறி விட்டிருந்தது. இவ்வளவு சீக்கிரம் புறக்கணிக்கக் கூடிய சக்தியா அவள் சக்தி? பைத்தியம் பிடிக்கச் செய்யும், நிரந்தரமான, விடுபட முடியாத, போதையிலாழ்த்தும் அழகு இல்லையா அவளுடைய அழகு? கேசவன் அவளைப் பார்த்து மயங்கியது கூடத் தற்செயலாக நிகழ்ந்ததுதானா? அல்லது அவன் மயங்கியதாக நினைத்தது கூட அவள் பிரமைதானா? தன்னை மறந்து ஒரு நிலையில் - ஒரு திடீர் உந்துதலில் - அவன் அவளை நெருங்கி வர, இவள் பைத்தியம் போல அந்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டாளா? இனி இது போன்ற வாய்ப்புகள் அவள் வாழ்வில் நேருமோ, நேராதோ? அப்பாவும் அம்மாவும் ஜோஸ்யர்களும் தேர்ந்தெடுக்கும் யாரோ ஒரு - என்ன பயங்கரம்.
'நான் முட்டாள், படு முட்டாள்' என்று அவள் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். கேசவன் மீசை வைத்திருந்தான். அதனாலென்ன? சுமாரான நிறம்தான். அதனாலென்ன? அவன் கேசவன் - அவளுக்கும் பரிச்சயமானவன் - மோசமான டைப் என்று சொல்ல முடியாதவன்.
'ஹும்! இந்தப் பெண்கள்!' - காலையில் பஸ்ஸில் ஆபீஸை நெருங்கிக் கொண்டிருந்த கேசவன் அனுபவப்பூர்வமாகவும் கரை கண்டவனாகவும் புன்னகை செய்து கொண்டான். இவர்களுக்குக் கவனிக்கப்படவும் வேண்டும்; கவனிக்கப்படவும் கூடாது. சலுகைகள் எடுத்துக் கொள்ளப்படவும் வேண்டும்; எடுத்துக் கொள்ளப்படவும் கூடாது. காற்றடிக்கவும் வேண்டும், புடவை பறக்கவும் கூடாது.
இந்தப் பெண்களே ஸ்திரபுத்தியற்றவர்கள்; மோசக் காரிகள் - பிச்சஸ் - இவர்களை நம்பவே கூடாது' என்று நினைத்தவனாய், அவன் செக் ஷனுக்குள் நுழைந்தான். தண்டபாணி உரத்த குரலில் சீனிவாசனிடம் ஏதோ உரக்க வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். கணபதிராமன் தம் குறை எதையோ குப்புசாமியிடம் சொல்லி அழுது கொண்டிருந்தார். நீலா-
கேசவன் அசட்டையாக அவள் பக்கம் பார்த்தான். திடுக்கிட்டான். அதே புடவை அணிந்திருந்தாள் அவள். அன்று அவன் காபி சாப்பிடக் கூப்பிட்டபோது அனிந்திருந்த அதே புடவை. அவன் அவள் முகத்தைப் பார்த்தான். அவள் பார்வையில் கூத்தாடிய விஷமத்தையும் உல்லாசத்தையும் கவனித்தான். பிறகு உதட்டைக் கடித்துக் கொண்டே பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். இல்லை, மறுபடியும் ஏமாறத் தயாராயில்லை அவன்.
அட்டென்டன்ஸ் மார்க் பண்ணிவிட்டு அவன் தன் இடத்தில் போய் உட்கார்ந்தான். ஃபைல் ஒன்றைப் பிரித்தான். 'கிளிங்க்...கிளிங்க்' என்ற வளையலோசை - அவன் நிமிரவில்லை. 'பெரிய மகாராணி' என்று நினைத்தான். இவள் இஷ்டப்படி, போடும் விதிகளின்படி நான் விளையாட வேண்டும் போலிருக்கிறது. அவள் அவன் கவனத்தைக் கவர முயற்சிப்பதும், அவன் இதை மௌனமாக எதிர்பதுமாகச் சில நிமிடங்கள் ஊர்ந்தன. திடீரென்று பியூன் பராங்குசம் கையில் இரு காபி தம்ளர்களுடன் செக் ஷனுக்குள் நுழைந்தான். ஒரு தம்ளரை நீலாவின் மேஜை மேல் வைத்தான். இன்னொன்றைக் கேசவன் மேஜை மீது வைக்குமாறு அவள் ஜாடை காட்டவும், பராங்குசம் அப்படியே செய்தான்.
கேசவன் நிமிர்ந்தான் - "என்னப்பா இது?"
"நான்தான் வாங்கி வரச் சொன்னேன்" என்றாள் நீலா, புன்னகையுடன், "யூ லைக் காபி, நோ?"
கேசவன் திணறிப் போனான். இப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டுமென்று கணக்குப் போட்டிருக்கவில்லை. உஷ்ணமாக ஏதாவது சொல்ல வேண்டும் போல் இருந்தது.
"காப்பி சாப்பிடுங்க சார். ஆறிப் போயிடும்" என்றான் பராங்குசம்.
அவன் குடிக்கப் போவதை எதிர் பார்த்து நீலா தம்ளரைக் கையில் எடுத்து அவனுடன் சேர்ந்து குடிப்பதற்காகக் காத்திருந்தாள். அவள் விழிகளிலிருந்த நிச்சயமும் நம்பிக்கையும்! கேசவன் தான் தோற்றுவிட்டதை உணர்ந்தான். காபியை அருந்தத் தொடங்கினான். அவளிடம் ஏதேதோ கோபப்பட வேண்டும். விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும் என்று அவன் விஸ்தாரமாக யோசித்து வைத்திருந்தான். ஆனால் இப்போது எல்லாமே அனாவசியமானதாக, அர்த்தமற்றதாகத் தோன்றின. அவள் அருகில், சுமுகமான நிலையில் இருப்பதே போதுமென்று தோன்றியது.
"காபிக்காகத் தாங்க்ஸ்" என்றான் அவன்.
"குடித்ததற்காகத் தாங்ஸ்" என்றாள் அவள். அதற்கு மேலும் ஏதாவது சொல்ல வேண்டுமென்று துடித்தவளாய், ஆனால், தவறாக எதையும் சொல்லிட கூடாதேயென்று தயங்கியவளாய் அவள் ஒரு புன்னகை மட்டும் செய்தாள். அவனும் பதிலுக்குப் புன்னகை செய்தான்.
ஒருவரையொருவர் ஜெயிக்க நினைத்தார்கள்,ஒருவரிடம் ஒருவர் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.
------------------
7. கால்வலி
மணி ஆறேகால். சித்ராவை இன்னும் காணோம். கணேஷ் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவனுக்குக் காலை வேறு வலித்தது. உட்கார வேண்டும் போலிருந்தது.
வேறு ஏதாவது சினிமாத் தியேட்டருக்கு அவர்கள் - சித்ராவும் அவள் தம்பியும் - போய் நின்றிருக்க மாட்டார்களே? ரிவோலி தியேட்டர் என்று நேற்று நான் தெளிவாகச் சொன்னேனா என்று அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். ஆம்; சொன்னான். நினைவிருக்கிறது. சித்ரா பார்க்க விரும்பியதும் இந்தப் படத்தைத்தான். ஒரு வாரத்திற்கு முன்பு இதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டபோது, பிளாஸாவில் ஓடிக்கொண்டிருந்த - ஆப்பிரிக்கக் காடுகளி லுள்ள வெவ்வேறு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களைத் தத்ரூபமாகச் சித்தரிக்கிற - ஒரு படத்தைப் பார்க்கலாமென்று அவன் முதலில் யோசனை கூறியது உண்மைதான். ஆனால் சித்ரா அந்தப் படத்தை விட ரிவோலி படத்தைத்தான் பார்க்க விரும்புவதாகக் கூறி விட்டாள். இதுவும் நல்ல படம்தான். வெளிநாட்டுப் படம்தான். இது மனிதரைப் பற்றியது. மணமான ஆண் மனைவியைத் தவிர இன்னொரு பெண்னை நேசிக்கத் தொடங்கும்போது எழும் பிரச்னைகளைப் பற்றியது.-
ஆண், பெண், நேசம்!
கணேஷ் தன்னையுமறியாமல், ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டான். மறுபடி கண்களைத் திறந்தான். எடைகாட்டும் யந்திரத்தின் அருகில் அந்தச் சிவப்புப் புடவைக்காரி இன்னமும் நின்றிருந்தாள். அவனைப் போல அவளும் யாருக்காகவோ காத்திருக்கிறாள் போலும். அவ்வப்போது அவன் பார்வை அவள் பக்கம் இழுபட்டது. போல, அவள் பார்வையும் அவன் திசையில் பளிச் பளிச்சென்று ஒரு கணம், அரைக்கணம் நிலைத்து நகர்ந்தது. பரிச்சயமில்லாததால், நாங்களிருவரும் இந்தப் பார்வையின் மூலம் ஓராயிரம் இனிய கற்பனைகளை உருவாக்கிக் கொள்ள முடிகிறது என்று அவன் நினைத்தான். என்னைப் பற்றிய அவள் கற்பனை; அவளைப் பற்றிய என் கற்பனை - மாலை வெய்யிலில் நடைபாதையிலிருந்து தியேட்டர் வாசல் வரை விரித்திருந்த ஒரு ஒளிப்பாய் மீது அவள் நின்றிருந்தாள். வெய்யிலின் ஒளியில் மினுமினுத்த அவளுடைய புடவையும் கைப்பையும், சிலும்பி நின்ற அவளுடைய தலை மயிர்; எடை யந்திரத்தின் மேல் விழுந்திருந்த அவளுடைய நிழல்; அவ்வப்போது அவள் தன் கைக்கடிகாரத்தைக் கவனித்த விதம், மேலும் கீழுமாகப் பார்வையை அலைய விட்ட விதம் - எல்லாமே ஒரு விசே ஷ அழகு பொருந்தியதாக அவனுக்குத் தோன்றின. அரூபமாக அவனுள் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்மையின் அம்சங்கள் - இனி தன்னால் எடுக்கவோ கோர்க்கவோ முடியாதென அவன் கைவிட்டு விட்டிருந்தவை - திடீரென ரூபம் கொண்டது போலிருந்தது, முழுமை பெற்றது போலிருந்தது. இவள்தான், ஆம் இவள்தான். இவளைத்தான் அவன் தேடிக் கொண்டிருந்தான். அப்பாடா! கடைசியில், ஆனால்-
அவனுக்கு திடீரென சோர்வும் துக்கமும் உண்டாயிற்று. இப்போது இவளைப் பார்த்து என்ன பிரயோஜனம்! இரண்டு வருடங்கள் முன்பு, ஒரு வருடம் முன்பு, அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதம் முன்பு, அப்போது சித்ராவை மணப்பது நிச்சயமாகியிருக்கவில்லை. அப்போது அவன் சுதந்திர மானவனாயிருந்தான். ஆனால் இனிமேல் இல்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு நிச்சயமாக இல்லை. அவனுக்கும் சித்ராவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது, அடுத்த வாரம்.
எல்லா நிலைகளையுமே ஒருவன் சேர்ந்தாற்போல அனுபவிப்பதும்தான் எப்படி சாத்தியமாகும்? இவ்வளவு நாட்கள் அவன் கல்யாணம் செய்து கொள்வதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான். எந்தவிதமான முடிவுக்கும் வராமலிருந்தான். பிறகு திடீரென்று ஒரு மாதம் முன்பு முடிவு செய்தான் சித்ராவை மணப்பதாக. இது அவசரமான முடிவாயிருக்கலாம். சூழ்நிலைகள் அவன் மேல் திணித்ததா யிருக்கலாம். எப்படியோ, இது ஒரு முடிவு. ஒரு ஆரம்பம். நிச்சயமற்ற நிலையிலிருந்து விடுபடுவதற்காக (அதற்கு மாற்றாக) அவன் வலிந்து ஏற்றுக் கொள்ளும் ஒரு நிச்சயம், ஒரு ஸ்திரமான ஏற்பாடு. எல்லா ஏற்பாடுகளையும் போல இந்த ஏற்பாட்டிலும் சில சௌகரியங்கள் இருக்கின்றன. சில சங்கடங்களும் இருக்கின்றன. ஏற்பாடுகளை-தன்னுடன் தானே செய்து கொள்ளும் சமரச உடன்படிக்கைகளை- தீவிரமாக எதிர்த்து வந்திருப்பவனான அவன், இதோ, இன்னொரு ஏற்பாட்டில் சிக்கிக்கொள்ளப் போகிறான். பத்தோடு பதினொன்று.....
பத்தோடு பதினொன்றா? ஆமாமுந்தான். இல்லையும்தான். தன் வாழ்க்கையின் பல ஏற்பாடுகளுடன் இதையும் ஒன்றாக ஏற்றுக்கொண்டால் இது பத்தாவதாகவோ பதினொன்றாவ தாகவோ இருக்கலாம். ஆனால் உண்மையில் இது மற்ற எந்த ஏற்பாட்டையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா? அவனை மிக அதிகமாக பாதிக்கப் போகும் ஒன்றல்லவா? மேலும் இந்த ஏற்பாட்டின் விசேஷமே (அல்லது துர்ப்பாக்கியமே) இதில் பத்து அல்லது பதினொன்றுக்கு வழியில்லை என்பதுதான். அவன் வாழும் சமூகத்தில், இவ்வகை ஏற்பாட்டில் ஒன்றே ஒன்றுதான் ஒருவனுக்கு ஒரு சமயத்தில் அனுமதிக்கப்படுகிறது. இதே ஏற்பாடு வெற்றிகரமாக அமையலாம். அமையாமலும் போகலாம்- அறிவு வளர்ச்சிக்காகப் பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிக்கும் செல்லுதல், வயிற்றுப்பாட்டுக்காக ஏதாவது ஒரு ஸ்தாபனத்தில் குறிப்பிட்ட ஒரு வேலையை தினசரி செய்து கொண்டிருத்தல், சிற்றுண்டிக்கும், சாப்பாட்டுக்கும் ஹோட்டல் காரரையும், ரஞ்சகத்திற்கு ரேடியோவையும் சினிமா தியேட்டரையும் வாரப் பத்திரிகைகளையும், போக்குவரத்துத் தேவைகளுக்காக அரசாங்கப் போக்குவரத்தையும் நம்பி யிருத்தல் முதலிய ஏற்பாடுகளில், அந்த ஏற்பாட்டில் நமக்கு அசிரத்தையோ அவநம்பிக்கையோ ஏற்படும் போது அதனுடன் நமக்கு உள்ள சம்பந்தத்தைத் துண்டித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. திருமணம் என்ற ஏற்பாட்டில் இத்தகைய வாய்ப்பு இல்லை. சட்டப்பூர்வமாக இருக்கலாம். சமூகப்பூர்வமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவன் ரத்தத்தில் ஊறியிருந்த சம்பிரதாய பூர்வமாக இல்லை. சம்பிரதாயங்கள் மீறப்படக் கூடாதவை என்பதல்ல. ஆனால் இந்த மீறல் எந்த அளவு அவனைக் காயப்படுத்தும் அல்லது காயப் படுத்தாமலிருக்கும் என்பதே பிரச்னை. அவன் வளர்ந்த சம்பிரதாயம், சூழ்நிலை ஆகியவற்றின் பல அம்சங்களை அறிவு பூர்வமாக அவன் வெறுத்து வந்தாலும், உணர்ச்சி பூர்வமாக அவன் அவற்றுடன்-அவனையுமறியாமல்- சம்பந்தப்பட்டிருக்கலாம். வளரும் குழந்தைகள் தம் தாய்க்கெதிராக வெளிப்படுத்தும் அதிருப்தியும் வெறுப்பும் பல சமயங்களில் தாயின் அரவணைப்புக்கான அவர்களுடைய ஏக்கம், பாதுகாப்பற்ற உணர்ச்சி முதலியவற்றை வித்தாகக் கொண்டிருப்பதைப் போல், அவனுடைய வெறுப்பு உண்மையில் அவனுடைய பிரியத்திலிருந்து எழுந்ததாக இல்லாமலிராதென்பது என்ன நிச்சயம்?
ஆம். உணர்ச்சி வேர்கள் அறிவு வேர்களை விடத் தொன்மையானவை, ஆழமானவை. உணர்ச்சிதான் உரைகல். உணர்ச்சிதான் வழிகாட்டி.
ஆனால் உணர்ச்சிகள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை. வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு திசைகளில் பாயும் தன்னுடைய பிரியத்தையும் சரி, வெறுப்பையும் சரி, அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரியத்தை வெறுப்பாகவும் வெறுப்பைப் பிரியமாகவும் தப்பர்த்தம் செய்து கொள்கிறோமோ என்று கூடச் சில சமயங்களில் தோன்றிற்று. தன்னுடைய உணர்ச்சிகளை இப்படியென்றால் பிறருடைய உணர்ச்சிகளைப் பற்றி என்ன சொல்வது? அவன் மீது பிரியமும் அக்கறையும் உள்ளவர்கள் என் அவன் நினைத்திருந்தவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவனை வஞ்சித்தார்கள். அவர்களுடன் அவன் வீணடித்த பல தருணங்களுக்காக அவனைப் பச்சாதாபப்பட வைத்தார்கள். பிற்பாடு பரிசுத்தமான அன்பைக் கூடப் பரிசீலனைக் குள்ளாக்கும் கோழையாக அவன் மாறினதற்கு அஸ்திவார மிட்டார்கள். இந்தப் பிந்தைய கட்டத்துக்கு முந்தின கட்டங்களும் தைரியமுள்ளவையாக இருக்கவில்லைதான். கூச்சம், தயக்கம், தன்னம்பிக்கையின்மை. கல்லூரியில் அவனுக்காகச் சிரித்தவளின், நடந்தவளின், சமிக்ஞைகளைச் சாத்தியக் கூறுகளாகவும், சாத்தியக் கூறுகளை நிச்சயங்களாகவும் மாற்ற இயலாத தன்னம்பிக்கையின்மை. அவன் வேலை பார்த்த தினசரியில் அவன் மனதை மிகவும் கவர்ந்த ஒருத்தியிடம் தன் நேசத்தை வெளிப்படுத்த இயலாமல் தடுத்த கூச்சம், வீறாப்பு. ஒரு நாள் மாலை இந்தக் கூச்சத்தை அவள் தணிக்க முயன்றபோது, அவனுடைய ஆசையின் வேகமும் புரிந்து கொள்ள முடியாமல், தணிந்து போயிற்று. ஒரே மாலை! தன்னிடம் அவனுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது போலிருந்தது. ஒவ்வொரு பளிச்சிடும் பார்வையின் ஓரத்திலும் ஒரு பெரும் சூழ்ச்சியின் வித்து; ஒவ்வொரு வெடிக்கும் சிரிப்பின் விளிம்பிலும் ஓராயிரம் வெடிக்காமல் (சாதுரியமாக) அமுக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சி கள், குரோதங்கள், துவேஷங்கள்.
இனி எந்தப் பெண்ணையுமே அவன் ஆழ்ந்து நேசிக்க முடியாது போலிருந்தது. இனி எவளும் இதமான நிரந்தரமான பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தூண்டும் கற்பனைகளை அவனில் உருவாக்க முடியாது போலிருந்தது. கற்பனைகளற்ற சூன்யத்தின் தகிப்பு அவனுடைய மாலை நேரங்களையும் இரவுகளையும் பயங்கரமானதாகச் செய்தது. பகல் நேரங்களில் ஒரு மௌடிகமான - வரவழைத்துக் கொள்ளப் பட்ட -- வெறியுடனும் ஆர்வத்துடனும் அவனைத் தன் வேலையில் ஈடுபடச் செய்த. அந்தத் தினசரியில் வேலை பார்த்த ஸப் எடிட்டர்கள் எல்லாரிலும் அவன்தான் மிகவும் கெட்டிக்காரனாகக் கருதப்பட்டான். சீஃப் ஸப் அதிகமான 'காபி'களை அவனுக்குத்தான் "மார்க்" செய்தார். செய்திகளைப் பிரசுரத்துக்கேற்ற முறையில் வெட்டுவதிலும் திருத்துவதிலும் பொரத்தமான தலைப்புகள் அளிப்பதிலும் ஒரு யந்திரத்தின் ஒழுங்கையும் லாவகத்தையும் அவன் பெற்றிருந்தான். அந்த யந்திரம் போன்ற இயக்கத்தில் அவன் தன்னைத்தானே இழக்க விரும்பியது போலிருந்தது, மறக்க விரும்பியது போலிருந்தது. இது சீஃப் ஸப்புக்கும் சரி, நியூஸ் ரூமிலிருந்த மற்றவர்களுக்கும் சரி, சௌகரியமாகவே இருந்தது. எந்த இடத்திலும் வேலை செய்வதைத் தவிர்க்க விரும்புபவர்களே பெரும்பாலும் அதிகம் இருப்பதால், வேலையை வரவேற்கும் ஒரு பிரகிருதி இந்தப் பெரும்பான்மையோரின் மீட்சிக்கு உதவுகிறான். அவர் களுடைய நன்றிக்குப் பாத்திரமாகிறான். கிரைம் ஸ்டோரியா? கணேஷ். விமான விபத்தா? கணேஷ். கோதுமை உற்பத்தி, எஃகு ஏற்றுமதி போன்ற புள்ளி விவரங்கள் நிறைந்த-கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு பார்க்க வேண்டிய சமாசாரம்?
கணேஷ், கணேஷ், கணேஷ்.
அவர்கள் பார்த்த கணேஷ் பிசிரில்லா, மனித தாகங்கள், பலவீனங்கள் யாவும் இற்றுப்போன, ஒரு யந்திரம். தன்னைப் பற்றிய அவர்களுடைய இந்த உருவத்தில் தன்னை ஒளித்துக் கொள்வது அவனுக்கும் இதமாகவும் பாதுகாப்பாகவும் தான் இருந்தது. உள்நாட்டு விவகாரங்கள், உலகெங்கிலுமுள்ள மிகமிகப் பெரிய புள்ளிகளைப் பற்றிய செய்திகள், எல்லாவற்றையும் "எடிட்" செய்யும் உரிமை பெற்றிருந்தவனான தான், பெரும் வல்லரச்சுத் தலைவர்களை விடவும் பலம் பொருந்தியவனென்ற மயக்கமும் அவனுக்கு அவ்வப்போது ஏற்படுவதுண்டு. ஆனால் தன்னிடமிருந்தே ஒருவன் ஒளிந்து கொள்வது எந்த அளவுக்குச் சாத்தியமானது? அவனைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த கிட்டத்தட்ட அவனுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் போல் தோன்றிய இளம் ஸப் எடிட்டர்கள், அந்தக் குழுவிலிருந்த பெண்பாலருடன், அரட்டைகளிலும், சீண்டல்களிலும் சல்லாபங்களிலும் அவ்வப்போது ஈடுபடு வார்கள்.அவன் மட்டும் முப்பது வயதிலேயே ஐம்பது வயசுக்குரிய அசிரத்தையுடனும் விலகிய போக்குடனும் அமர்ந்திருப்பான். அந்த இளைஞர்கள், வெகுளித்தன மாகவோ விஷமமாகவோ அவனைக் கணிக்க முற்பட்டார்கள். சாமியார், வேதாந்தின், பெண் வெறுப்பன். அவன் தனக்குள் அமுக்கி அமுக்கி வைத்துக் கொண்டிருந்த எது எதுவோ இத்தகைய தருணங்களில் உசுப்பப்படும். இந்த உசுப்புக்கு வடிகால் இல்லாமல் அவன் திணறுவான். முன்பு அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயன்றபோதும் பிறர் இந்த வெளிப்பாடுகளை அவமதித்து அவனைக் காயப்படுத்தினார்கள்; இப்போது, அவன் தன்னை ஒடுக்கிக் கொள்ள முயலும் போதும் ஏனோ இவர்கள் காயப்படுத்துகிறார்கள் என்று குமுறுவான்.
பிறகுதான் அவன் மாலை நேர டியூட்டிக்கு தன்னை மாற்றிக் கொண்டான். இளைஞர்கள்-குறிப்பாகப் பெண்கள்- இந்த டியூட்டிக்கு வர விரும்புவதில்லை. திருமண வாழ்க்கையில் சலிப்புற்ற சம்சாரிகள், அவனைப் போன்ற இறுகிப் போன பிரம்மச்சாரிகள் ஆகியோர்தான் மாலை நேர டியூட்டிக்குப் பெரும்பாலும் வருவார்கள். இவர்களிடையே அவன் சற்று ஆசுவாசமாக உணர முடிந்தது. சம்சாரிகள், "கல்யாணம் செய்து கொள்ளாதேயப்பா!" என்று அவனுக்கு உபதேசிப்பார்கள். பிரம்மச்சாரிகள், சில சமயங்களில் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்திய பிறகு மறந்து விட வேண்டிய லாகிரிவஸ்துவாகப் பெண்களை மதித்து, கொச்சையான பாஷையில், கொச்சையான ஹாஸ்யங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். பெண்களின், கல்யாணம் என்ற ஏற்பாட்டின் மீது இந்த தூஷணை மூலம் கணேஷுக்கு ஒரு வக்கிரமான இன்பமும் திருப்தியும் ஏற்பட்டது. அவனைக் கழிவிரக்கத்திலிருந்தும் சுய வெறுப்பிலிருந்தும் இந்தச் சூழ்நிலை காப்பாற்றியது. இப்படியே வாழ்நாள் முழுவதையும் கடத்திவிடலாமென்ற மன உறுதியும் நம்பிக்கையும் கூட அவனுக்கு ஏற்பட்டது. நள்ளிரவுக்கு மேல் டியூட்டி முடியும். அவன் தன் அறைக்குப் போவான். ஹோட்டல்காரர் காரியரில் கொண்டு வைத்திருக்கும் சாப்பாட்டைச் சாப்பிடுவான். தூங்குவான். சில இரவுகளில் நண்பர்களுடன் பிரஸ் கிளப்புக்கோ வேறு எங்காவதோ சென்று நன்றாகக் குடித்து விட்டுப் பிதற்றித் தள்ளுவான், பாடித் தள்ளுவான். தன்னுடைய மனதின் உட்புறத்தில் தன்னையுமறியாமல் சேர்ந்திருக்கக் கூடிய மென்மையான தாகங்களை மதுவினால் கழுவித் துப்புரவாக்கி வெளியே கொட்ட முயலுவது போலிருக்கும் அது.
மனதைக் கூட இப்படியெல்லாம் ஏமாற்றிவிடலாம், உடலை ஏமாற்ற முடிவதில்லை. அதன் நமைச்சலைப் பொறுக்க முடிவதில்லை. இந்த நமைச்சலைத் தீர்ப்பதற்காக, அதற்கென உள்ள இடங்களுக்கு, இந்த இடங்களுக்குச் செல்லும் வழக்கமுடையவர்களுடன் அவன் ஓரிரு தடவைகள் சென்று வந்தான். ஆனால் இந்த அனுபவங்கள் அவனுக்கு நிறைவளிப்பதாயில்லை. வெறுப்பும் கோபமும்தான் ஏற்பட்டது-தன் மேல், தன்னை அழைத்துச் சென்றவர்களின் மேல், அந்த இடங்களில் இருந்த பெண்கள்மேல். தான் ஒரு யந்திரமாக இல்லையென்பதே அவனுடைய கோபத்துக்குக் காரணமாயிருக்கலாம்; பெண்ணை ஸ்பானர், ஸ்க்ரூ டிரைவர் போன்ற ஜடக் கருவியாகத் தேவையுள்ள சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொண்டு பின் அவளுடன் சம்பந்தமில்லாமல் இயங்கக் கூடிய யந்திரம்.
யந்திரமில்லையென்றால் பின் என்ன அவன்? அவன் வேண்டுவதென்ன? அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. விளங்க வேண்டும் போலிருந்தது, அதே சமயத்தில் விளங்காமலிருந்தால் தேவலை போலவும் இருந்தது. புதிய பரிசோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அதே சமயத்தில் முந்தைய அனுபவங்களின் பின்னணியில் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ளத் தயக்கமாகவும் இருந்தது. "நானும் உங்கள் வழிக்கு வரவில்லை. நீங்களும் தயவு செய்து என் வழிக்கு வராதீர்கள்" என்று மானசீகமாகப் பிற மனிதர்களுடன்-குறிப்பாகப் பெண்களுடன்- ஒப்பந்தம் செய்து கொண்டு, அவன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வந்தான்.
இத்தகையதொரு கட்டத்தில்தான் அவன் முதன் முதலாக சித்ராவைச் சந்திதான்; ஒரு நாடக விழாவில். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவினரால் நடிக்கப்பட்ட சில தமிழ் நாடகங்கள்; மாலை நேர டியூட்டி காரணமாக ஒரே ஒரு நாள்தான் அவனால் போக முடிந்தது. அதுவும் ஒரு நண்பன் மட்டுக் அன்று அங்கே அழைத்துச் சென்றிராவிட்டால், அவன் சித்ராவைப் பார்த்திருக்க மாட்டான். அவளுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள முயன்றிருக்க மாட்டான். அவளுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக ஆகியிருக்க மாட்டான்-சித்ராவின் எதிர் காலத்தை அவனுடையதுடன் பிணைக்கத் தயாராகுமளவுக்கு எதிர் காலம்.....
கணேஷ் மீண்டும் பெருமூச்சு விட்டான். அந்தச் சிவப்புப் புடவைக்காரியின் முகத்தில் திடீரென்று ஒரு புன்னகை தோன்றியது. தன்னைப் பார்த்துத்தானோ, என்ற நினைப்பில் ஒரு கணம் அவன் இதயம் படபடத்தது. இல்லை; அவள் அவனுக்கும் அப்பால் யாரையோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் திரும்பினான். சாலையில் அப்போதுதான் வந்து நின்றிருந்த ஆட்டோவிலிருந்து ஒரு இளைஞன் இறங்கிக் கொண்டிருந்தான்! ஆட்டோ டிரைவரிடம் இரண்டு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தான். டிரைவர் சில்லறையில்லை என்று கூறியிருக்க வேண்டும். அவன் சிவப்புப் புடவையைப் பார்த்து ஏதோ சைகையால் தெரிவித்தான். அவள் அவன் பக்கம் நடந்து சென்று, எவ்வளவு வேண்டுமென்று விசாரித்து. தன் கைப்பையைத் திறந்து சில்லறை எடுத்து டிரைவரிடம் கொடுத்தாள். பிறகு அவன் அவள் இடுப்பைச் சுற்றிக் கையை வளைத்து அணைத்துக் கொள்ள இருவரும் கணேஷைக் கடந்து தியேட்டருக்குள் மெல்ல நடந்து சென்றார்கள்; அவனுக்குப் பொறாமையாயிருந்தது....
அன்றும் இப்படித்தான். அவனும் நண்பனும் நாடகத்துக்கு துவக்க நேரத்திற்கு மிகவும் முன்பாகவே கொட்டகையை அடைந்துவிட்டதால் வெளியே நின்றவாறு சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார்கள்; வருகிற பெண்களின் மேல் பார்வையை வீசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராமதுரை தன் குடும்பத்துடன் டாக்ஸியில் வந்து இறங்கினார். டாக்ஸிக்காரன் அவர் நீட்டிய பத்து ரூபாய் நோட்டைப் பார்த்து (சில்லறை இல்லையென்று?) கையை விரித்தான். அவர் பார்வை கொட்டகை வாசலில் நின்ற கூட்டத்தில் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடியது. கணேஷ்தான் முதலில் அவர் கண்ணில் தட்டுப்பட்டான்.
அவர் அவனருகில் வந்தார். "ஹலோ!" என்று இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். அவனுடைய தினசரியின் அலுவலகத்திற்கு அவர் ஒரு முறை வந்தபோது அவன் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தான். அதன் பிறகு சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் ஒரு வார்த்தை. இருவார்த்தை பேசிக் கொள்ளாமல் இருந்ததில்லை. அவர் அவனிடம் விஷயத்தை விளக்கி, எட்டணா வாங்கிக் கொண்டார்.
"அப்புறம் தருகிறேன்" என்றார்.
"பரவாயில்லை,ஸார்!"
அவர் டாக்ஸிக்காரனிடம் திரும்பிச் சென்றபோது அவன் பார்வை அவரைப் பின் தொடர்ந்தது. அதே சமயத்தில் டாக்ஸியருகிலிருந்து ஒரு பார்வை அவன் பக்கம் மிதந்து வந்தது; சித்ராவினுடையது.
இடைவேளையின்போது அவன் காப்பி ஸ்டாலில் தன் நண்பனுடன் நின்றிருந்தபோது, சித்ராவும் தன் தம்பியுடன் அங்கே வந்தாள். அவள் தம்பி கணேஷ் அருகில் வந்து அவனிடம் எட்டணாவை நீட்டினான். கணேஷ் "ஓ இட்ஸ் ஆல்ரைட்" என்று அதை வாங்காமலிருக்க முயன்றான். "இல்லையில்லை; ப்ளீஸ், யூ மஸ்ட் ஹாவ் இட்!' என்று அவள் வற்புறுத்தி அவனை அந்த எட்டணாவை வாங்கிக் கொள்ளச் செய்தாள்.
முதன் முதலாக அவள் அவனுடன் பேசியது அப்போதுதான்.
அவள் குரலில், தோரணையில் இருந்த ஒரு நிச்சயமும் பிடிவாதமும் அவனை அந்தக் கணத்தில் கவர்ந்திருக்க வேண்டும். அந்தப் பதினேழு வயதுப் பெண்ணின் சந்தேகமோ சோர்வோ அற்ற நிச்சயம் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் இதமாக இருந்திருக்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் அவன் அவள் நினைவாகவே இருந்தான். ஞாயிற்றுக்கிழமை வந்தது. அவர்களுடைய தினசரியின் ஞாயிறு மலரில் நடந்து முடிந்திருந்த அந்த நாடக விழாவை விமர்சித்து புரொபசர் ராமதுரை ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்ததும் தன்மனதில் ஏற்பட்ட அழகிய சலனங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலினால் உந்தப்பட்டுச் சென்றவன் போன்ற பாசாங்குடன், அவன் அன்று மாலை அவரைத் தேடிச் சென்றான்-
ப்ரொபசர்,நான் உங்கள் வீட்டுக்கு வந்த அந்த முதல் நாள் உண்மையில் சித்ராவுக்காகத்தான் வந்தேன் என்பதை அன்று நீங்கள் ஊகித்திருப்பீர்களோ என்னவோ? ஆனால் பிற்பாடு உங்களுக்குத் தெரிந்துவிட்டது.உங்கள் மனைவிக்குத் தெரிந்துவிட்டது. பாபுவுக்குத் தெரிந்துவிட்டது.ஏன் உங்கள் வீட்டு நாய்க்குக்கூட தெரிந்துவிட்டது.நான் மிக உயர்ந்த இண்ட்லெக்சுவல் மட்டங்களில் உங்களுடன் பேசும்போது, அது ஒரு மூலையில் என்னைப் பார்தவாறு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டு, பரிகசிப்பதுபோல இலேசாக தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும்-இதெல்லாம் என்ன வீண் பேச்சு, நீ எதற்காக இங்கே வருகிறாயென்று எனக்குத் தெரியாதா என்று கேட்பது போல. பல சமயங்களில் அந்த நாயுடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டு பார்க்கும்போது எனக்கு என்மேலேயே சிரிப்பும் இரக்கமும் ஏற்படுவதுண்டு. அதற்கு அனாவசிய நடிப்புகள் கிடையாது. பேச்சுக்கள் கிடையாது. ஒரு பெண்ணின் மேல் ஆசை ஏற்பட்டால் அவளுடைய அப்பாவைப்போய் வசீகரிக்க அது முயல வேண்டியதில்லை.அவள் ஆயுள் காலம் முழுவதும் என்னிடம் பிரியமாக இருப்பாளா, என் போக்குகளை அனுசரித்து நடப்பாளா, சம்பிரதாயப் பிச்சுவாக இல்லாமலும் அதே சமயத்தில் சம்பிரதாயங்கள் மேல் காறி உமிழ்பவளாக இல்லாமலும் இருப்பாளா, என்றெல்லம் அது கவலைப்படத் தொடங்காது.பெரும்பாலான பிராணிகளைவிட அதிக ஆயுளைப் பெற்றிருந்தாலும், இந்த ஆயுளின்பெரும்பகுதியை அனாவசியமாக நடிப்புகளிலும் பேச்சுகளிலும் நினைவு களிலும் தானே மணிதர்களாகிய நாம் செலவிடுகிறோம்? நீங்கள் ஒரு முறை சொன்னதுபோல, கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதன் தன் வாழ்நாளில்செய்யும் உருப்படியான காரியங்கள் பல பிராணிகள் தம்முடைய குறைந்த ஆயுளில் செய்துமுடிக்கும் உருப்படியான காரியங்களைவிடக் குறைவனதாகக்கூடவே இருக்கலாம்...
ஆம். அந்த நாயைக் கண்டு அவனுக்குப் பொறாமையாக இருந்தது. அதைப் பார்த்ததுமே அவனுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்த தினங்கள் உண்டு. அதே சமயத்தில், அது அவன் நன்றிக்குப் பாத்திரமான தருணங்களும் இருக்கத்தான் செய்தன. உதாரணமாக, அந்த முதல் நாளன்று. அவன் சென்ற போது ராமதுரை வீட்டிலிருக்கவில்லை. அவருடைய மனைவியும் மகள் சித்ராவும்தான் இருந்தார்கள். "உட்காருங்கள்; வந்துவிடுவார்!" என்று அவர்கள் அவனை வரவேற்று உட்கார வைத்தார்கள். அவன் கதவைத் தட்டியவுடனேயே குலைக்கத் தொடங்கியிருந்த நாய், அவன் உள்ளே வந்து நாற்காலியில் உட்கார்ந்ததும் அவன் கை, கால், எல்லாவற்றையையும் மோந்து பார்க்கத் தொடங்கியது. "உஷ்! டாமி, சும்மாயிரு" என்று சித்ராவும் அவள் அம்மாவும் நாயை அவனுக்கு உபத்திரவம் கொடுப்பதிலிருந்து தடுக்க முயன்றார்கள். "பரவாயில்லை" என்று அவன் தன் சலிப்பையும், அருவருப்பையும் அடக்கிக் கொண்டு டாமியின் முகம், கழுத்து, முதுகு யாவற்றையும் வக்கணையாகத் தடவிக் கொடுத்தான். அது இதமாகக் காட்டிக் கொண்டு நின்றது. அவன் தொடர்ந்து தடவிக் கொண்டேயிருந்தான். நாய்களை நேசிக்கும் அன்புமயமான, தோரணையற்ற இளைஞனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அவர்களுடைய நன்மைதிப்புக்குப் பாத்திரமானான். வார்த்தைகள் கூட இதைச் சாதித்திருக்க முடியாது. அன்னியோன்னியமான சூழ் நிலையை உருவாக்கியிருக்க முடியாது.
டாமிதான் சம்பாஷணைக்கும் வித்திட்டது. "எங்க வீட்டிலேயும் இப்படி ஒரு நாய் இருந்தது" என்றான் அவன்.
"இப்ப இல்லையா?" என்றாள் சித்ரா. "திடீர்னு ஒரு நாள் அது ஓடிப்போயிடுத்து".
"ஐயையோ; ஏன் அப்படி?"
அது உண்மையில் அவர்களுடைய நாயே இல்லை என்று அவன் விளக்கினான். அவனுடைய அப்பாவின் நண்பர் ஒருவருக்கு சொந்தமான நாய் அது. அந்த நபருக்கு டில்லியிலிருந்து மாற்றலானபோது நாயை அவர்கள் வீட்டில் விட்டுச் சென்றார். முதலில் அது சரியாகத்தான் இருந்தது. பிறகு திடீர் திடீரென்று மூன்று நாள், நாலுநாள் டெல்லியில் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு வரத் தொடங்கியது. எங்கே போய்விட்டு வருகிறதென்று தெரியாது. கடைசியில் ஒருநாள் என்றென்றைக்குமாக ஓடிப் போய்விட்டது.
"பாவம், பழைய எஜமானர்களை நினைச்சிண்டிருக்கும் போலிருக்கு" என்றாள் சித்ராவின் அம்மா.
"உங்கள் வீட்டிலே அதை யாராவது அலட்சியப்படுத்தினாங்களோ, என்னவோ-அதாவது நீங்க இல்லை. வேறே யாராவது" என்றாள் சித்ரா. தன் வீட்டு மனிதர்களின் இயல்பைப் பற்றிச் சாதுரியமாக அறிந்து கொள்ள முயலுகிறாள் என்று அவன் நினைத்தான்.
"அதெல்லாம் எவ்வளவோ பிரியமாகத்தான் வச்சிண்டிருந் தோம்; ஒருவேளை பிரியம் தாங்காமல் ஓடிப் போயிருக்கலாம். என் தங்கை, அதனுடைய கழுத்தைக் கட்டிக் கொஞ்சிண்டேயிருப்பா. எங்கம்மா பிரஸாதம் முதலாக அதுக்கு இட்டு விடுவா"
அவன் சிரித்தாள். அவளைச் சிரிக்க வைத்ததில் அவனுக்குப் பெருமையாக இருந்தது. டாமி அவன் நேசிப்பது தன்னையல்லவென்று திடீரென்று உணர்ந்து கொண்டது போல அவன் தடவலை திரஸ்கரித்துவிட்டுத் தரையில் போய்ப் படுத்துக் கொண்டது. "டாமியை வேறு யார் வீட்டிலேயாவது விட்டால் அது என்ன செய்யும்னு யோசிச்சுப் பார்க்கிறேன்" என்றாள் மாமி.
"எங்கேயும் விட மாட்டோம் அதை. நாம் எங்கே போனாலும் அது கூடவே வரும். இல்லையா டாமி?"என்று சித்ரா டாமியருகில் தரையில் உட்கார்ந்து அதைக் கொஞ்சினாள்.
"இங்கிலீஷ்காரா ஊரைவிட்டுட்டுப் போறபோது நாயைச் சுட்டுக் கொன்றுடுவாளாமே எப்படித்தான் முடிகிறதோ?" என்று மாமி உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள்.
"கொடூரமான வழக்கம்" என்று அவன் ஒத்துக் கொண்டான். தன்னைப் போன்ற ஒரு ஸென்டிமென்டல் டைப்பாக அவனையும் அடையாளம் கண்டு கொண்டவள்போல, மாமி அவனைத் திருப்தியுடன் பார்த்தாள். சித்ரா இங்கிலீஷ்காரர்களின் அந்த வழக்கத்தை ஆதரித்துப் பேசினாள். அவனைத் திண்டாட்டத்தில் சிக்க வைக்க விரும்பியவள் போல. அவன் உடனே அவன் பக்கம் பேசத் தொடங்குகிறானா என்று பார்க்க விரும்பியவள்போல.
ஆனால் அவன் தன் முந்தின கருத்தையே மீண்டும் எதிரொலித்தான். தான் ஒரு இளிச்சவாயன் அல்லவென்று நிரூபித்து அவளுக்கு அவன் மேல் மதிப்பு ஏற்படச் செய்தான்.
இப்போது யோசித்துப் பார்க்கும்போது அவ்வளவும் தவறாகத் தோன்றியது. அந்த முதல் நாளன்று அவன் நடந்து கொண்ட விதம் எல்லாமே. அவன் அவர்களுக்காக தன் இயல்புக்கு மாறான ஒரு வே ஷமணிந்திருக்க வேண்டாம். ஆனால் எது வே ஷம், எது வே ஷமில்லை? எது அவனுக்கு இயல்பற்றது? ஏதேதோ உந்துதல்களின் அடிப்படையில் எப்படிக்கெப்படியோ நம்மை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொள்கிறோம். இந்த உந்துதல்கள் உண்மையாயிருக்கிற வரையில் இந்த வெளிப்பாடுகளும் உண்மையானவைதாம். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொன்று உண்மையாகத் தோன்றுகிறது. முக்கியமானதாகத் தோன்றுகிறது. நம்மை இயக்க வைக்கிறது. அப்படி நம்மை இயக்க வைக்கும் ஒவ்வொரு உண்மையையும் இறுதியில் ஒருநாள் பொய்யென உணர்ந்து நிராசையடைகிறோம். வேறு உண்மைகளில்--அப்படி அந்தக் கணம் தோன்றுபவற்றில்--தஞ்சமடைகிறோம். மனித இயக்கத்தின், யத்னங்களின், அடிப்படையே இவ்வகைத் தோற்றங்கள் தாமே? பொய்கள் தாமே?
கணேஷ் தலையை பலமாக ஒருமுறை குலுக்கிக் கொண்டான். தன் சிந்தனைகளின் தாக்குதலிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள விரும்பியவனைப் போல் இந்த சிந்தனைகள்தாம் நாளுக்குநாள் எவ்வளவு கூர்மையாகிக் கொண்டு வருகின்றன. அவனையும் அவன் வாழ்வில் சம்பந்தப்படுபவர்களையும் குத்திக் கிளறிப் பரிசீலனை செய்தவாறு இருக்கின்றன. இவ்வகைக் கூர்மையை நோக்கி என் சிந்தனைகள் மேற்கொண்ட படிப்படியான பயணத்தில், ப்ரொபசர், உங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
ஆனால் இந்தப் பயணத்தை மேற்கொள்ளாமலேயே இருந்திருக்கலாமென்று இப்போது சில சமயங்களில் தோன்றுகிறது.
மணி ஆறரை. சித்ராவை இன்னும் காணோம். அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. தியேட்டர் வாசலிலிருந்த தர்வான் தன்னை விநோதமாகப் பார்க்கத் தொடங்கி யிருப்பது போலத் தோன்றியது. அவ்வப்போது "ஸ்பேர் டிக்கெட் இருக்கிறதா?" என்று வேறு சிலர் கேட்டு அவன் எரிச்சலைக் கிளப்பினார்கள். அலுப்புத் தாங்காமல், ஒரு மாறுதலுக்காக, அவன் அங்கு உட்கார்ந்திருந்த ஒரு பாலிஷ்காரச் சிறுவனிடம் சென்று ஷூவைப் பாலிஷ் போட்டுக் கொள்ளத் தொடங்கினான். "டிக்கெட் கிடைக்கவில்லையா ஸாப்?" அவன் விளக்கினான்.
"ரொம்ப நல்ல படம் ஸாப்".
"நீ பார்த்தாகி விட்டதா"
"மூன்று தடவைகள் ஸாப்"
"அவ்வளவு நல்ல படமா?"
"எனக்கு அந்த ஹீரோயினை ரொம்பப் பிடித்திருக்கிறது ஸாப்"
கணேஷுக்கு அந்தச் சிறுவன் மீது பொறாமை ஏற்பட்டது. அந்த ஹாலிவுட் நடிகை மூலம் அவனால் பெற முடிகிற கிளர்ச்சி குறித்து, நிறைவு குறித்து. பரிசுத்தமான இந்தக் கிளர்ச்சியையும் நிறைவையும் இனி தன்னால் என்றும் பெற முடியப் போவதில்லை. இந்த நடிகை மூலமாகவோ, அவனுடைய மயக்கங்கள் சிதைந்து விட்டிருந்தன. அந்த நடிகையைப் பற்றிய மயக்கம். அவள் அவனுக்கு (ஒரு காலத்தில்) எந்தப் பெண்மையின், வாழ்க்கை முறையின், பிரதிநிதித்துவமாக விளங்கினாளோ அந்தப் பெண்மை யைப் பற்றிய வாழ்க்கை முறையைப் பற்றிய மயக்கம், மன விடுதலை பெற்ற ஆண்கள், பெண்கள், சுதந்திரமான காதல், சுதந்திரமான வாழ்க்கை இளமையில் சினிமா தியேட்டரில் அமர்ந்திருக்கையில் அவன் வாழ்க்கையிலும் இவையெல்லாம் சாத்தியமானவையாகத் தோன்றின. அவனுடைய பெற்றோர், சகோதர சகோதரியர் ஆகியோரிடமிருந்து வேறுபட்டவனாக அவனை உணரச் செய்து அவர்கள் மீது தினசரி அவனுள் வெறுப்புணர்ச்சியைப் பொங்கிப் பொங்கியெழ வைத்தன. அவர்களுடைய கேள்விகளற்ற அசட்டுத் திருப்தி காரணமாய், போலியான ஊன்றுகோல்கள் காரணமாய். ஏன் இந்தப் பொய்யான உறவுகள், என்று அலற வேண்டும் போலிருந்தது. இந்த அமைப்பை அடியோடு இடித்துத் தரை மட்டமாக்கி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் போலிருந்தது. அவனைத் தம்மைப் போன்ற சாமானியமானவனாக நினைத்த ஒவ்வொருவரையும், பின் ஏன் அவனால் அப்படியெல்லாம் செய்ய முடியாமல் போயிற்று? எங்கே அல்லது யாரால் அவனுடைய முயற்சிகள் பங்கப்படுத்தப் பட்டன? அல்லது அவனுள் ஒரு பகுதியே ஒவ்வொரு கணமும் அவனுக்கு எதிராக வேலை செய்து வந்ததா? பாலிஷ் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவனைப் பார்க்கப் பார்க்க, இதுவரை அவன் ஈடுபட்ட பயணங்கள, தடங்கள், வெற்றி தோல்விகள் எல்லாமே முக்கியத்துவ மற்றவையாகத் தோன்றின. பையா, நீ என்னைவிட எவ்வளவோ பரிசுத்தமானவன். இந்தக் கணத்தில் நீ ஷூவுக்குப் பாலிஷ் போடுகிறவனாகவும் நான் அந்த ஷூவை அணிந்திருப்பவனாகவும் இருப்பதை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை. விதி? சமூக அமைப்பு? எப்படியோ, இந்த ஏற்பாடு எனக்குச் சௌகரியமாக இருக்கிறது. இதை எதிர்த்து நான் புரட்சி செய்யவில்லை. வேறு சில ஏற்பாடுகளுக்கெதிராக எப்படி நான் புரட்சி செய்ய வில்லையோ, அதே போல.
டக்! என்று சிறுவன் தன் மரப் பெட்டியில் தட்டினான். காலை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்கு அடையாளமாக. கணேஷ் தன் இன்னொரு காலைப் பெட்டியின் மீது வைத்தான்.
ப்ரொபசர், அன்று உங்கள் வீட்டில் நாயைப் பற்றிய சர்ச்சைக்குப் பிறகு நாங்கள் நாடகங்களைப் பற்றிய சர்ச்சையைத் தொடங்கினோம். எனக்கு அந்த நாடகங்கள் பிடித்திருந்தனவா என்று சித்ரா கேட்டாள். ஒரு நாள்தான் வந்தேன். அன்றைக்கு அசட்டுப் பிசட்டென்று இருந்தது என்றேன் நான். ஸ்டுபிட் மெலோட்ராமா, என்றாள் அவள். அது போன்ற வார்த்தைகளை அவள் உபயோகிக்கத் தொடங்கி ஓரிரண்டு வருடங்கள்துர்ன ஆகியிருக்க வேண்டும்; குழந்தை தான் புதிதாக அடைந்த ஒரு பொம்மையைத் தன் பழைய பொம்மைகளைவிட அதிகமாகச் சீராட்டி மகிழ்வதையும் அது குறித்துப் பெருமை கொள்வதையும் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சி அவள் சில ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியபோது எனக்கு ஏற்பட்டது. எனக்கோ வார்த்தைகள் சலித்துப் போயிருந்தன.திகட்டிப் போயிருந்தன. வார்த்தைகளில் நீச்சலடிப்பதுதானே என் வேலை? சித்ராவின் அம்மாவுக்கு சித்ராவுக்குத் தெரிந்திருந்த அளவு வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உணர்ச்சிப்பூர்வமாக எங்களிருவரையும் விட அதிகமாக அந்நாடகங்கள் அவளைப் பாதித்திருந்தனவென்பதை எங்களுக்கு அவளால் உணர்த்திவிட முடிந்தது. அந்நாடகங்களில் சிலவற்றின்போது தன் அம்மா பிழியப் பிழிய அழுததைச் சித்ரா எடுத்துச் சொன்னாள். தமாஷாக. ஆனால் எனக்கு அந்த அழுகை மிகவும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியதாகத் தோன்றியது. என் அம்மாவும் இப்படித்தான் சினிமாவுக்கோ டிராமாவுக்கோ போனால் அழுதுவிடுவாள். கதாபாத்திரங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து என்றேன் நான். அப்படி தான் இல்லை என்று சித்ராவுக்குப் பெருமையாக இருந்தது. அது பெருமைக்குரியதுதானா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.
பிறகு நீங்கள் வந்தீர்கள். சம்பாஷணையில் கலந்து கொண்டீர்கள். நீங்கள் இல்லாத சமயத்தில் நான் வந்ததும், உங்கள் மனைவியுடனும் மகளுடனும் பேசிக் கொண்டிருந்ததும்., உங்களுக்கு முழுதும் திருப்தியளிக்கிற ஒரு சூழ்நிலையாக இல்லையென்பதை நான் நுட்பமாக உணர முடிந்தது.
அவர்களை நீங்கள் முட்டாளாக்கியிருக்கலாம். என்னை ஆக்க முடியாது என்பது போல நீங்கள் நான் தெரிவித்த ஒவ்வொரு கருத்தையும் (வேண்டுமென்றே) எதிர்த்துப் பேசினீர்கள். என் வாதங்களில் ஓட்டைகள் கண்டுபிடித்து என்னை வாயடைத்துப் போகச் செய்ய முயன்றீர்கள். ஓ! அந்த முதல் தடவையும், அதையடுத்து சில தடவைகளும் நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக என்னைச் சற்றுத் தொலைவிலேயே வைத்திருந்தீர்கள்! ஆனால் உங்களை நான் குற்றம் சொல்லவில்லை. என்னை உங்களிடம் அழைத்து வந்தது அறிவுப் பசிதானா என்று நீங்கள் சோதித்துப் பார்க்க விரும்பியது நியாயமே. உங்களுடன் பேசிய பிறகு, எனக்கும் சந்தேகம் உண்டாகத்தான் செய்தது - அதற்கடுத்த தடவைகளில், அறிவுப் பசிதானோ?
அன்று நான் உங்களிடம் அந்நாடகங்களை ஆதரித்துப் பேசினேன். அவற்றை அறிவுப்பூர்வமாக மட்டும் அணுகுவது தவறாகுமென்றேன். அவற்றால் உணர்ச்சி பூர்வமாக நம் மக்கள் ஆறுதலும் நிறைவும் பெறுவதைச் சுட்டிக்காட்டி அந்த நிறைவைத்தான் நான் மதிக்கிறேனென்றும், வெறும் அறிவுத் தீனியை அல்லவென்றும் கூறினேன்.
"அந்த நிறைவு ஒரு மயக்கமாக இருந்தாலுமா?" என்று கேட்டீர்கள்.
"இருக்கட்டும்: வாழ்க்கையே ஒரு மயக்கம்தான்" என்றேன்.
"நான் சொல்வது கொச்சையான மயக்கங்களைப் பற்றி என்றீர்கள். இரு பொருள்படப் பேசினீர்களோ என்னவோ!
"எது கொச்சை, எது கொச்சையில்லை? இது பற்றிய ஒவ்வொருவர் கணிப்பும் வேறுபடலாமல்லவா?" என்றேன்.
"நம்முடன் நாமே தொடர்பு கொள்ள உதவாதவை எல்லாமே கொச்சையான மயக்கங்கள்தான்" என்று நீங்கள் கூறினீர்கள். "அதாவது நம்மை நாமே உணர்ந்து கொள்ளத் தடையாக இருப்பவை".
"இந்தத் தடைப்படுதல் உறைக்க வேண்டாமா, எல்லோருக்கும்?"
"நிச்சயம் உறைக்கும். நம் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சூட்சுமமான உரைகல் இருக்கிறது; உணவுக்கென இருக்கும் நாக்கைப் போல உணர்வுக்கு ஒரு நாக்கு இருக்கிறது. இந்த நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் அபிப்பிராயங்களைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியவேண்டும். புஷ்டியாக இல்லாத சிலது பழக்கப்பட்டு விடுகின்றன. காபி, டீ, சிகரெட் மாதிரி; பரவாயில்லை; ஆனால் இதையே ஆகாரமாக வைத்துக் கொள்ள முடியாது. புஷ்டியையே அளவு கோலாக கொண்டாலும் சப்பென்று போய்விடும். ருசிக்காககவும்தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. மொத்தத்தில், சாப்பிடுவதை இனம் கண்டு கொள்ளத் தெரியவேண்டும். அதற்கு ஒரு பயிற்சியும் அனுபவமும்தான் தேவை. குழந்தைக்குக் கொடுக்கப்படுவதைப் போல இந்தப் பயிற்சி நமக்கு அளிக்கப்படவில்லை. வீட்டிலும் சரி, பள்ளிக்கூடத்திலும் சரி....
நீங்கள் பேசிக்கொண்டே போனீர்கள். நான் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகு ஒவ்வொரு முறையும் நான் கலைந்த சுருதியுடன்தான் உங்களிடம் வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இந்த சுருதியை நீங்கள் பொறுமையாகச் சீர்படுத்தியிருக்கிறீர்கள். உச்ச கட்டத்துக்கு நம் சம்பாஷணையை அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.
எதைப் பற்றியெல்லாம் நாம் பேசினோமென்று யோசித்துப் பார்க்கும்போது எதைப் பற்றித்தான் நாம் பேசவில்லை என்று தோன்றுகிறது. நாடகங்களைப் பற்றி, நாயகனைப் பற்றி, தேசம், குடும்பம், திருமணம் என்ற உருவங்களைப் பற்றி, அமைப்புகள் பற்றி....
தோல்வி அடைந்த என் உறவுகள், என் நேசங்கள் இவற்றை நான் புதிய கோணத்தில் பரிசீலனை செய்து பார்க்கத் தொடங்கினேன். எதிராளியின் கோணத்திலிருந்து தனிமையைப் பாதிக்காத துணை; நான் பயன் படுத்தப்படாமல் என்னால் பயன் படுத்தக்கூடிய அமைப்பு- இதைத்தானே நான் தேடி வந்திருக்கிறேன்.
முரட்டுக் குதிரையாகத் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த என்னை நீங்கள் வசமாக தாவிப் பிடித்து லாடமும் லகானும் பூட்டிவிட்டது போல எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது. வேறு சில சமயங்களில், என்ன பைத்தியக்காரத்தனம், குதிரையாவது, பிடிப்பதாவது என்று தோன்றுகிறது. ஒரு வேளை என் ஓட்டத்தில் நான் அடைந்த சோர்வும், உங்கள் வருகையும் ஒரு சேர நிகழ்ந்திருக்கலாம்.
அதுவும் சாத்தியந்தான்.
மனிதர்களிடம் நம்பிக்கையற்றுப் போயிருந்த எனக்கு மீண்டும் அவர்களிடம் நம்பிக்கை ஏற்படச் செய்தீர்கள். யாருக்கும் யாரிடமும் அக்கறையில்லையென்று விரக்தியடைந்திருந்த என்னை, அக்கறையுள்ளவர்களும் இல்லாமல் போகவில்லை என்ற ஆசுவாசம் பெறச் செய்தீர்கள். பத்து வருடங்கள் முன்பு உங்களைச் சந்தித்திருந்தால் என் வாழ்வின் திசையே மாறியிருக்கு மென்று நினைப்பேன், நான்.
ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு சித்ராவுக்குப் பத்து வயதுகூட நிரம்பியிராது.
வாழ்க்கை எவ்வளவு விசித்திரமான நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது. ஒன்றைத் தேடிச் செல்லும்போது இன்னொன்றைப் பெற வைக்கிறது! சித்ராவினால் ஈர்க்கப்பட்டு, நான் முதலில் உங்களிடம் வந்தேன். பிறகு உங்களுக்காகவும் வந்தேன்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு, உங்களுக்காக மட்டுமே வந்திருப்பேனா?
அதுதான் இப்போது என் சந்தேகம்.
சித்ராவின் காரணமாகப் பல சமயங்களில் நமக்குள் சுருதி சேராமல் போயிருக்கிறது. சம்பாஷனை முயற்சிகள் தோல்வியடைந்து, இறுக்கமான மௌனங்களில் நாம் சிக்கிக் கொள்ள அவசரமாக நான் விடைபெற்றுச் செல்ல நேர்ந்திருக்கிறது. என் நோக்கங்களைப் பற்றிய உங்கள் சந்தேகம், எனக்கே என்மேல் சந்தேகம். "சித்ரா, பாக்கு இருக்கா? சித்ரா, இன்றைய பேப்பர் எங்கே?" என்று ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நான் வந்து உட்கார்ந்தவுடன் நீங்கள் சித்ராவைக் கூப்பிடுவீர்கள். அவளைக் குசலம் விசாரிக்க எனக்குச் சந்தர்ப்பம் அளிப்பீர்கள். சில சமயங்களில் எங்களிருவரையும் தனியே விட்டு எழுந்து போயும் இருக்கிறீர்கள்.
ஏன் இந்த அவஸ்தை, அவளுக்காகத்தான் வருகிறாயென்றால் அதை அவளிடமோ என்னிடமோ சொல்லித் தொலையேன் என்று நீங்கள் எனக்கு உணர்த்த விரும்புவது போலிருக்கும் அது.
நம்மிருவரிடையே சுருதி பேதம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்பதாலேயே நான் அந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முயன்றிருக்கலாம். என் கருத்தை வார்த்தைப் படுத்தியிருக்கலாம்; உங்கள் சந்தேகத்தை அது ஏற்பட்ட ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஊர்ஜிதப் படுத்தியிருக்கலாம். என் பெற்றோரை நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம். எல்லாம் எவ்வளவு சுருக்கமாக நடந்து விட்டது!
அடுத்த வாரம் எங்களுக்குக் கல்யாணம்.
ஆனால் ?
எனக்கு ஒரு ஊன்றுகோலாக விளங்கியது சந்தேகங்களற்ற அவளுடைய நிச்சயம்தான், பரிசுத்தம்தான். ஆனால், நாங்கள் நுழையவிருக்கும் அமைப்பில் நிரந்தரத் தன்மையைப் பற்றிய பயம் காரணமாக அவளுடைய நிச்சயம் ஆட்டம் கண்டு வருவதை நான் பார்க்கிறேன். அவளுடைய நிச்சயம் அனுபவமின்மையினால் எழுந்ததென்ற ஞானோதயம் எனக்கு இப்போதுதான் உண்டாகியிருக்கிறது. என் குடும்பத்தினரைப் பற்றி ஊடுருவும் கேள்விகளை முன்பே அவள் கேட்டிருக்கிறாள். என் தாயைப் பற்றி, தங்கையைப் பற்றி... இப்போதும் அவர்களைச் சந்தித்த பிறகும் அவள் கேட்கிறாள். ஆனால், இப்போது அவள் விசாரணைகளில் ஒரு புதிய கவலையும் பயமும் தோன்றியிருகிறது! இந்தப் பயம் எனக்கு வருத்தத்தையளிக்கிறது. பாடிப் பறந்த குயிலொன்றைக் கூண்டில் அடைக்கப் பார்க்கும் குறவனைப் போல உணரச் செய்கிறது. இந்தப் பயம், இந்தக் குற்ற உணர்ச்சி-இதன் அடிப்படையிலா நாங்கள் வாழத் தொடங்கப் போகிறோம்?
மேலும், என் குடும்பத்தினரைப் பற்றி ஒரு சில வார்த்தைகளில் நான் அவளுக்கு என்ன சொல்ல முடியும், என்ன புரிய வைக்க முடியும்? உங்களைப் பற்றியோ சித்ராவைப் பற்றியோதான் ஆகட்டும், நான் என் குடும்பத்தினரிடமோ, மற்றவர்களிடமோ என்ன சொல்ல முடியும் ? நாலு வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருக்கும் என் அண்ணாவுடன் போய் வசிக்கத் தொடங்குகிற வரையில் நாங்களெல்லோரும் டில்லியில் சேர்ந்தாற் போலத்தான் இருந்து வந்தோம். ஆனால் ஒரே வீட்டில் இருந்தோமென்று பெயரே தவிர எனக்கு அவர்க்ளைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. எல்லாம் நோக்கத்தைப் பொறுத்த விஷயம் தானே? மேலும், ப்ரொபசர், என்னைப் பற்றியே எனக்கு எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. பிறரைப் பற்றி யாரிடம் என்ன சொல்ல?
சித்ராவுக்கே இந்த அமைப்புப் பற்றி-இதில் அவள் அணிய வேண்டிய வேடம் பற்றி (மனைவி, மருமகள்) இவ்வளவு பயமாக இருக்கிறதே, என் மன்னிக்கு இன்னும் எவ்வளவு பயமாக இருந்திருக்கும் என்று தான் நினைதுப் பார்க்கிறேன். மூத்த மருமகளாகிய அவள்தானே மாமனாரோடும் மாமியாரோடும் என்றென்றும் இருக்க வேண்டியவள்? ஆனால், பாவம் அவளுக்குக் கேள்விகள் கேட்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. ஏதோ ஜாதகம் சேர்ந்தது. என் அண்ணா, அப்பா அம்மா தங்கை நால்வருமாக ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் டிபன் சாப்பிட்டு விட்டு அவளுடைய நடையுடை பாவனைகளை "டெஸ்ட்" பண்ணிவிட்டு வந்து சேர்ந்தார்கள். பத்தே நிமிடம்! நல்ல பதவிசான பொண்ணு என்றாள் அம்மா. அவ அப்பாவுக்குக் கொஞ்சம் காது கேக்காதோன்னு எனக்குச் சந்தேகம் என்றார் அப்பா. (அது பரம்பரையாக வருவதாக இருக்காதே) சினேகிதமாயிருக்கிற் டைப்பாத்தான் தோணறது என்றாள் என் தங்கை. எனக்கு அவ ஸ்மைல் பிடிச்சிருக்கு என்றான் அண்ணா (மன்னி! மன்னி இத்தனைக்கும் நடுவில் உன்னால் ஸ்மைல் வேறு எப்படிப் பண்ண முடிந்தது?) பெரும் நடிகைகளாக நினைக்கபடுகிறவர்கள் தம் வாழ் நாள் முழுவதும் நடித்திராத ஒரு கடினமான பாகத்தை அந்தப் பத்து நிமிடங்களில் நீ ஏற்று நடித்தாக எனக்குப் பிற்பாடு தோன்றியது. நானாக இருந்தால் நீங்களுமாச்சு உங்கள் கல்யாணமுமாச்சு என்று அவர்கள் அதிர்ச்சி கொள்ளும் படியாக ஏதாவது சொல்லியிருப்பேன். செய்திருப்பேன் என்று நான் ஒரு முறை கூறினேன். அதற்கு நீ சிரித்துக் "நீ பெண்ணல்லவே" என்றாய்.
இப்போதுதான் அவனுக்கு அவள் பிரச்னை புரிகிறது. சித்ராவிடம் ஏற்பட்டு வரும் மாறுதல்களைப் பார்க்கும்போது தான் அவனுடைய குடும்பத்தினருக்காகத் தான் அணிய வேண்டிய பல்வேறு வேடங்களில் குறித்து சித்ரா கவலைப்படத் தொடங்கியிருக்கிறாள். தான் என்னென்ன செய்ய வேண்டி வருமோ என்று பயப்படுகிறாள். அவளுடைய மயக்கங்கள் தெளியத் தொடங்கியிருக்கின்றன. வாழ்க்கை என்பது ஒரு மாலை நேரச் சம்பாஷணை மட்டுமல்ல; சினிமாவுக்கும் டிராமாவுக்கும் போவது மட்டுமல்ல; உல்லாசப் பயணம் போவதும் ரெஸ்டாரெண்டில் காப்பியருந்துவதுமல்ல! வாழ்க்கை தினசரி காலை எழுந்திருப்பது, பல் தேய்ப்பது, குளிப்பது, ஆடையணிவது, பஸ் பிடிப்பது, ஆபிஸ் போவது, மாலையில் மீண்டும் பஸ் பிடிப்பது, வீட்டுக்கு வருவது. வாழ்க்கை என்பது காப்பி போடுவது, கறிகாய் நறுக்குவது, சமைப்பது, தோசை அரைப்பது, துணி துவைப்பது பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் தேய்ப்பது, கடைக்குப் போவது, ரேஷன் வாங்குவது ஜூரம் வந்து டாக்டரிடம் போவது, குழந்தை பெறுவது, குழந்தையை வளர்ப்பது, அதை டக்டரிடம் கூட்டிப் போவது, எங்கெங்கோ நின்று, எங்கெங்கோ நடந்து, எப்படியெப்படியோ உட்கார்ந்து அலுத்துப்போய் இரவில் படுக்கையில் அப்பாடாவென்று காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொள்வது, மறுநாள் காலை வரையில் தூங்குவது, இதுதான் வாழ்க்கை. சலிப்பும் சோர்வும் மிக்கது. பசிக்காகச் சாப்பிட வேண்டியிருக்கிறது. சாப்பிடுவதற்காகச் சமைக்க வேண்டியிருக்கிறது. சாமான்கள் வாங்குவதற்கு பணம் தேவைப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மறுபடி மறுபடி பசிக்கிறது; மறுபடி மறுபடி வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பசிக்காக கல்யாணமும் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இது இன்னொரு பசி. வேலைக்குப் போகவுந்தான் அவனுக்கு முதலில் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வது? அதைத்தான் எல்லோரும் செய்கிறார்கள்.
எல்லோரும் வேலைக்குப் போகிறார்கள்; எல்லாரும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அவனும் எல்லாரையும் போலத்தான். சித்ராவும் வேலைக்குப் போக ஆசைப்படுகிறாள். அதைப்பற்றி அவன் அபிப்பிராயம் என்னவென்று கேட்கிறாள். அவனுக்கென்ன வந்தது? அவளும் வேலைக்குப் போகட்டும். அவளும் பஸ் கியூக்களில் நிற்கட்டும், பெண்கள் விடுதலை என்று சொல்லிக்கொண்டு பத்திலிருந்து ஐந்து வரையில் எங்கேயாவது ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்துவிட்டு அல்லது நின்று விட்டு வரட்டும். விடுதலையாவது மண்ணாங்கட்டியாவது? அன்பே, உலகில் விடுதலையென்று எதுவுமில்லை, உன் அம்மா செய்த தவற்றிலிருந்து நீ தப்பிக்க விரும்புகிறாய். என் அப்பா செய்த தவற்றிலிருந்து நான் தப்பிக்க விரும்புகிறேன். ஆனால் ஒரு சலிப்பிலிருந்து மீண்டும் இன்னொரு சலிப்பில்தான் நாம் சிக்கிக்கொள்ள வேண்டும். தப்புதல் என்று எதுவுமில்லை. எது எதிலிருந்தோ தப்ப முயன்று, ஓடி ஓடி, கடைசியில் கால்வலிதான் மிச்சம்.
டக்!
பாலிஷ் முடிந்துவிட்டது.
அந்தச் சிறுவனுக்கு பத்து பைசா சேர்த்துக் கொடுத்துவிட்டு, அவன் தியேட்டர் வாசலை நோக்கி நடந்தான். இன்னும் சித்ரா வரவில்லை. கால் இப்போது ஒரேயடியாக வலித்தது. இனி நிற்கமுடியாது போலிருந்தது. அவன் அங்கேயே தியேட்டர் வாசலில், படிக்கட்டுகளின் ஓரத்திலிருந்த ஒரு மேடை மீது அமர்ந்தான். கால்களை நன்றாக நீட்டிக் கொண்டான். அப்பாடா! தியேட்டருக்குள் இப்படி இளைப்பாற முடியாது. இவள் இன்னும் சற்றுத் தாமதமாகவே வரட்டும். இந்தப் படத்தைப் பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சிரத்தையும் இல்லைதான். அவன் அந்த மிருகங்களைப் பற்றிய படத்துக்குக் கூட்டிப்போகிறேன் என்றால், அவளை அவன் ஒரு சிறு குழந்தையாகப் பாவித்து நடத்த முயல்வதாக, அவள் நினைக்கிறாள்.
நீ வேலைக்குப் போவானேன் என்று அவன் சொன்னால், அவன் ஒரு பிற்போக்கானவன் என்று அவள் நினைத்தாலும் நினைப்பாள்.
அவனை இவ்வளவு நேரம் காக்கவைத்ததற்காக அவன் கோபித்துக்கொண்டால், சிறிய விஷயத்தைப் பெரிது படுத்துவதாக நினைப்பாள்.
அவளுடைய பழக்கங்கள், அபிப்பிராயங்கள், ருசிகள் ஆகிய பலவற்றுடன் அவனுக்கு உடன்பாடு இல்லாமலிருந்த போதும் அவன் அவற்றுக்கு உடந்தையாக இருக்க வேண்டியிருக்கிறது; விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.
அவனுக்குப் பிடிக்காத இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக அவனைவிடப் பத்து வயது சிறியவளான இவளுக்காக அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்கும் தன்மீது அவனுக்குச் சிரிப்பும் இரக்கமும் எற்பட்டது. இப்படி அவனை எப்போதும் காக்க வைத்ததாலேயே ஒருத்தியை அவன் முன்பு நிராகரித்தான்.
தன்னைப் பற்றிய மிகையான நினைவுள்ளவளாகவும் உணர்ச்சியறிவை விட வார்த்தையறிவு அதிகமுள்ள வளாகவும் தோன்றியதால் முன்பு ஒரு பெண்ணிடமிருந்து அவன் மனம் கசந்து விலகிப்போக நேர்ந்திருக்கிறது. சந்திக்கச் சென்ற தருணங்களிலெல்லாம் அவனைக் காக்க வைத்துக் கொண்டிருந்தாள் என்பதால் அந்த இன்னொரு பெண்ணைப் பார்க்கப் போவதை அவன் நிறுத்தியிருக்கிறான். இப்போது இவள் தன்னைப் பற்றிய மிகையான நினைவிள்ளாதவளா என்ன? உணர்ச்சியறிவு அதிகமுள்ளவளா என்ன? இல்லை. இல்லவேயில்லை. ஆனால் இதை எல்லாமும், வேறு எதை எதையே கூட, இவளிடம் சகித்துக்கொள்ள அவன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு வருகிறான்.
இந்தச் சமரசத்தை முன்பே செய்துகொண் டிருக்கலாமென்று தோன்றியது. ஐந்து வருடங்கள் முன்பு. மூன்று வருடங்கள் முன்பு. இப்போதும் கூடச் செய்து கொள்வானேன்? செய்து கொள்ளாமலே இருக்கமுடியாதா?
அவனுக்கு அங்கிருந்து எழுந்து ஓட வேண்டும் போலிருந்தது. புரொபசரிடம், தன் பெற்றோரிடம், இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொல்ல வேண்டும் போலிருந்தது. புரொபசர், ஐ ஆம் ஸாரி. நான் அமைப்புகளின் எதிரி. பின் ஏன் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போவது போலக் காட்டிகொண்டேனென்றா சொல்கிறீர்கள்? எனக்குத் தெரியாது. புரொபசர் நிஜமாகத் தெரியாது. ஒருவேளை...
அது சரி; நீங்கள் என்னிடம் அமைப்புக்களை ஆதரித்துப் பேசியது எதனால்?உங்களுக்கு அவற்றில் நம்பிக்கை இருந்ததாலா? அல்லது...
அல்லது, என்னை மாட்டி வைக்கலாமென்றா? நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். இல்லையில்லை, நானேதான் என்னை ஏமாற்றிக்கொண்டேன்...
இந்தக் கால் இன்று ஏன் இப்படி வலிக்கிறது? இதுவரை அவன் நடந்த நடையெல்லாம் சேர்ந்து வலிப்பது போலிருந்தது. ஓடின ஓட்டமெல்லாம் சேர்ந்து வலிப்பது போலிருந்தது. பெண்கள் பின்னால் நடந்த நடை, ஓடிய ஓட்டம், பெண்களை விட்டு விலகி ஓடிய ஓட்டம் இனி புதிதாக யார் பின்னாலும் ஓட முடியாது போலிருந்தது. இனி யாரையும் விட்டு விலகியும் கூட ஓட முடியாது போலிருந்தது.
தூரத்தில் சித்ராவும் அவள் தம்பியும் வருவது தெரிந்தது.
அவனுக்கு ஏற்பட்டது மகிழ்ச்சியா வருத்தமா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
-----------------------------------------------------------
8. ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்
டர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது.
ஒரே கணம்தான்; அதோ, அவனும் அவனுடைய வாகனமும் தூரத்தில் சென்று மறைந்துவிட்டன.
அவருக்குப் படபடப்பு அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தன. அவர் மனதில் அந்த இளைஞன்பால் மீண்டும் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. அவன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்கிறானென்பதை இந்தக் கணம் மறுபடி ருசுப் படுத்தியிருந்தது. அவர் வீட்டை விட்டு வெளியே இறங்க வேண்டியதுதான் தாமதம், உடனே அவனுடைய மோட்டார் சைக்கிள் எங்கிருந்தோ அவரைத் துரத்திக் கொண்டு வந்து விடுகிறது. அவரைப் பதட்டமடையச் செய்வதில் அவனுக்கு ஒரு குரூரமான மகிழ்ச்சி கிடைப்பதாகப் தோண்றியது. உருப்படியான எதிலும் தீவிரப் பிடிவில்லாமல், ஆழமான எதனுடனும் தம்மை முழுமையாகச் சம்பந்தப்படுத்திக் கொண்டு அதன் விளைவுகளைச் சந்திக்கத் துணிவில்லாமல், தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும் இக்கால இளைஞர்களுக்கு இதுபோன்ற பொறுக்கித்தனமான முறைகளில்தான் மனக் கிளர்ச்சியையும் பரவசத்தையும் உருவாக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. தம்மை நிரூபித்துக்கொள்ளத்தெரிகிறது. அவருடைய பதட்டம் அவனுக்கு ஒரு எல்.எஸ்.டி. அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவர் ஒரு ஊறுகாய்.
இல்லை, இது அவ்வளவு சரியான உருவகமில்லை. அவன் ஒரு பஞ்சாபி இளைஞன். உப்புமா அவருக்கு இருப்பதைப் போல அவனுக்குச் சலிப்பின் சின்னமில்லை; வேறெந்த விதமான சின்னமும் கூட இல்லை. ரொட்டி என்று வேண்டுமானால் சொல்லலாம். அல்லது பூரி அல்லது ஸமோஸா.
அவர் ஸலூனை அடைந்தபோது வாசலிலிருந்து நாற்காலியின் ஒய்யாரமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஒரு பையன் முள்ளங்கியைப் பேனாக் கத்தியால் சிறுசிறு துண்டங்களாக நறுக்கி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தான். அவர் உள்ளே நுழையும்போது அவரை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தான். வம்புக்கிழுக்கும் பார்வை. 'அல்லது முள்ளங்கி' என்று தன் முந்தைய நினைவின் தொடர்ச்சியாக அவனைப் பார்த்து அவர் சேர்த்துக் கொண்டார். முள்ளங்கியை நேரடியாகப் பல்லால் கடித்துத் தின்று அவனுக்கு அலுத்திருக்க வேண்டும். எனவே கத்தியால நறுக்கித் தின்னுகிறான். சலூனில் அந்த முள்ளங்கிப் பையனைத் தவிர இன்னும் நாலைந்து பேர் காத்திருந்தார்கள். இருவர் நடுத்தரப் பிராயத்தினர். வேறு இருவர் அவரைப் போல அறுபதின் வாசலில் இருப்பவர்கள். இவர்களை அங்கே பார்த்ததில் அவருக்கு ஆச்சரியமுண்டாக வில்லை. ஆனால் முள்ளங்கிப் பையனையும், புகை பிடித்தவாறு ஃபிலிம்ஃபேரைப் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த இன்னொருவரையும் (இவனுக்கு முள்ளங்கியை விட இரண்டு மூன்று வயது அதிகமிருக்கும்) பார்த்துத்தான் ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் ஸலூனுக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்ததைத் தலை மயிரின் அடர்த்தி மூலம் பறைசாற்றிக் கொண்டு, அந்தப் பிராயத்து இளைஞர்களிடமிருந்து வேறெந்த விதத்திலும் கூட மாறுபட்டவர்களாக இல்லாமலிருந்தார்கள். இன்று திடீரென்று அவர்கள் ஏன் சலூனுக்கு வரவேண்டுமென்று அவர் யோசித்தார். ஒரு வேளை யாருடனாவது தலைமயிரைப் பணயமாக வைத்துப் பந்தயம் கட்டி அவர்கள் தோற்றிருக்கலாம். அல்லது இந்தப் பேட்டையில் விருதாவாகச் சுற்றிக் கொண்டிருக்கும் ரவுடிப் பையன்கள் கும்பலைச் சேர்ந்தவர்களாக இவர்களும் இருக்கலாம்-அந்த மோட்டார் சைக்கிள் இளைஞனைப் போல. காலையிலிருந்து இரவு வரையில் இவர்கள் பஸ் ஸ்டாண்ட் வெற்றிலை பாக்குக் கடை, டீக்கடை, ஸலூன் என்று ஒவ்வொரு இடமாகப் போய் உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரை வம்புக்கிழுத்துக் கொண்டிருப்பார்கள். சம்பந்தப்பட்ட கடைக்காரர்களும் இவர்களை எதுவும் சொல்வதில்லை. இதெல்லாம் தினசரி வாழ்க்கையின் ஒரு சாதாரணப் பகுதியாகிவிட்டது. ரோஷமிருந்தவர்களுக்கும் ரோஷம் மரத்துப் போய் விட்டது. எந்த வீட்டுப் பிள்ளையோ, யாருடைய பிள்ளையோ? அவனுடைய அப்பா செல்வாக்குள்ள இடங்களில் தொடர்புடையவராக இருக்கமாம். எதற்கு வீண் பொல்லாப்பு?
ஆம். ரவுடித்தனமே ஒரு பண்பாக வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியதாக ஆகிவிட்டது.
ஃபிலிம்ஃபேர் பையனுக்கருகில், பெஞ்சில், அன்றையத் தினசரி கிடந்தது. அது அவர்கள் வீட்டில் வாங்குகிற தினசரி இல்லை. ஆனால் உண்மையில், அதுதான் அவருக்குப் பிரியமான தினசரி. அவர் அதைக் கையிலெடுத்துக் கொண்டு, பெஞ்சில் அமர்ந்தவாறே அதைப் பார்வையிடத் தொடங்கினார்.
டில்லிக்கு வந்து இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக தினசரி காலையில் அவர் படித்து வந்தது அந்த தினசரியைத்தான். அதாவது அவர் உத்தியோகத்திலிருந்த வரை. ஆனால் இப்போது ரிட்டையராகி மகனுடன் அவனுடைய வீட்டில் தங்கியிருக்கும்போது, அவன் விரும்பித் தருவிக்கும் தினசரியைத்தான் அவரும் படிக்க வேண்டியிருக்கிறது. அவருக்கு விருப்பமான தினசரியையும் வேண்டுமானால் தருவிக்க அவன் தயாராகவே இருந்தான். ஆனால் 'எதற்கு இரண்டு பேப்பர்!' என்று அவர் தடுத்துவிட்டார். பலனாக, இப்போதெல்லாம் அவருக்கு தினசரி படித்த மாதிரியே இருப்பதில்லை.
இப்போது அவர் தன் பழைய தினசரியை வெகு நாட்களுக்குப் பிறகு ஆசை தீரப் படித்துத் தீர்த்தார். மனதில் ஒரு அலாதியான நிறைவு ஏற்பட்டது. இந்தத் தினசரியில் தலைப்புகளின் தன்மை, செய்திகளை வெளியிடும் முறை எல்லவற்றிலும் அவர்கள் இப்போது வாங்கி வந்த திணசரியில் இல்லாத ஒரு அடக்கமும் அமைதியும் இருந்தது. அவருடைய மகனுக்கோ அந்த இன்னொரு தினசரியில் வரும் பளீரென்ற தலைப்புகள், காரசாரமான தலையங்கங்கள் இவைதான் பிடிக்கின்றன. எப்படி அவனுடைய மனைவியின் காரமான சமையல் பிடிக்கிறதோ, அப்படி எல்லாம் சுவையைப் பொறுத்த விஷயம்தான்.
அவருக்குத் தன் மாட்டுப் பெண்ணின் சமையல் பிடிப்பதேயில்லை. ஆனால் என்ன செய்ய முடியும்? பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இனி அவர் அதைத்தான் சாப்பிட்டாக வேண்டும். கல்யாணி இப்படி அவரை விட்டுவிட்டுப் போய் விட்டாளே! அவள் குணம் மாதிரியேதான் அவள் சமையலும். சாத்வீகமாக இருக்கும். ஆனால் சப்பென்று இருக்காது. அவள் இருந்த வரையில் அவர் முடி வெட்டிக் கொள்ளப் போகும் தினங்களை ஒரு வைபவமாகவே கொண்டாடுவாள்; ஸ்பெஷலாக ஏதாவது பலகாரம் செய்து விடுவாள். அவர் ஸலூனுக்குப் போய்த் திரும்பி வந்த பிறகு இரண்டாவது டோஸ் காப்பி, எண்ணெய், வெந்நீர் எல்லாம் தயாராக இருக்கும். பாவம், அந்தக் காலத்து மனுஷி. 'பெண்கள் விடுதலை இயக்கத்தினால் பாதிக்கப்படாதவள். கணவனுக்கு பணி விடை செய்வதிலேயே நிறைவு பெறுபவள்.' அவருக்குத் திடீரென்று அவள் மீது கோபம் கூட ஏற்பட்டது. அவள் இருந்த வரையில் அவரை அளவு மீறிச் சீராட்டியதன் காரணமாகத்தானே, இன்று அவர் மிக அதிகமாகத் துன்பப்பட வேண்டியிருக்கிறது! 'பாவ்லாவ்'வின் நாய் போல, முடி வெட்டிக் கொள்ளும் தினம் வந்தவுடனேயே அவருடைய நாக்கு ருசியான சிற்றுண்டிக்கு ஏங்கத் தொடங்குகிறது.
காலையிலிருந்தே அவருக்கு நல்ல பசி. ஆனால் வீட்டில் 'பிரெட்' கூட இல்லை. பிரெட் தொழிற்சாலைகளில் ஒரு வாரமாக ஏதோ ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கிறது. அவருடைய மாட்டுப் பெண் அவளுடைய ’ஸ்பெஷாலிடி’யான உப்புமா கிண்டினாள். அவருக்கென்று இல்லை. எல்லோருக்குமாகத்தான். மாணவர் ரகளையொன்றைத் தொடர்ந்து யுனிவர்ஸிடி சென்ற இரண்டு வாரங்களாக மூடப் பட்டுக் கிடக்கிறது. அவருடைய மகன், மாட்டுப்பெண் இருவரும் யுனிவர்ஸிடியில் லெக்சரர்கள். இப்போது போனஸ் விடுமுறை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இப்போது சில நாட்களாகவே தினசரி காலையில் பலகாரம், பிறகு தாமதமாகச் சாப்பாடு. பலகாரம் என்பது பெரும்பாலும் பிரெட், அல்லது உப்புமா.
உப்புமாவைக் கூட ஒருவர் மோசமாகப் பண்ண முடியுமென்பது அவள் மூலமாக அதைப் பண்ணிச் சாப்பிடுவது வரையில் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. வழக்கம் போல எப்படியோ அதை விழுங்கிவிட்டு, ஹார்லிக்ஸ் கரைத்துக் கொடுத்தாள்.அதைக் குடித்துவிட்டு, ஸலூனுக்கு வந்து சேர்ந்திருந்தார்.
முள்ளங்கிப் பையன் முள்ளங்கியை முடித்துவிட்டு கொய்யாப் பழம் தின்னத் தொடங்கியிருந்தான். அவர் ஒரு கணம் பொறாமையுடன் அவனைப் பார்த்தார். கொய்யாப் பழத்தையும் அவன் அந்தக் கத்தியால்,நறுக்கித்தான் தின்றான். தின்னுவதை விடவும் அதிகமாக அந்தக் கத்தியைப் பயன்படுத்துவதில்தான் அவனுக்கு இன்பம் கிடைத்தது போலிருந்தது.
ஆரம்பத்தில் முடி வெட்டிக் கொள்ள உட்கார்ந்தவர்களில் இருவர் எழுந்து போனார்கள். காத்திருந்தவர்களில் இருவர் எழுந்து அந்த இடங்களில் போய் உட்கார்ந்தார்கள். அவருடைய முறை வருவதற்கு இன்னமும் நேரமாகும். அவர் நாவிதர்களின் கைவரிசையைச் சற்று நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஃபிலிம்ஃபேர் பையன் இன்னமும் அந்தப் பத்திரிகையைக் கீழே வைக்கவில்லை. அங்கே வேறு பத்திரிகைகளும் இல்லை. அவருக்கு அந்தப் பையன் மீது அனுதாபமேற்பட்டது. அவ்வளவு ஒரு இடத்தில் அமர்ந்து எதயோ படித்துக் கொண்டிருப்பது அதுஃபிலிம்ஃபேராகவே இருந்தால் கூட-அவனுக்கு மிகவும் இயல்பற்ற ஒரு செயலாக அவருக்குப் பட்டது. என்ன துரதிர்ஷ்டம்! இந்த ஃபிலிம்ஃபேரை மட்டுமாவது அவன் படித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் நாளை யாராவது ராஜேஷ் கன்னா சம்பந்தப்பட்ட புதிய வம்பை அவனிடம் பேச வரும்போது அவன் பேந்தப் பேந்த விழிக்க வேண்டி வரும். பாவம்! இந்தப் படிப்பைக் கூட அவன் தவிர்க்க முடிந்தால்!
எல்லோருக்குமே ஆசையாகத்தான் இருக்கிறது, படிப்பைத் தவிர்ப்பதற்கு. படிக்காமலேயே புத்திசாலியாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். அதாவது புத்தகப் படிப்புமட்டுமல்ல, வாழ்க்கைப் படிப்பும் கூடத்தான்.எம்.ஏ. படித்த தன் மாட்டுப் பெண்ணுக்கு கல்யாணியின் புத்திசாலித் தனத்தில் கால் பங்கு கூட கிடையாதென்று அவருக்குத் தோன்றுகிறது. இதை அவர் வாய் விட்டுச் சொல்ல முடியுமா? ரிடையராகிற சமயத்தில் அவருக்குத் துணையாக இருந்த ஒரு மகானுபாவன்,ஃபைல்களை ஆதியோடந்தம் படிப்பதையே கௌரவக் குறைச்சலா நினைத்துக்கொண்டு ஏதோ நுனிப்புல் மேய்ந்து தப்பும் தவறுமாக எதையோ எழுதி ஒப்பேற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு சமீபத்தில் பிரமோஷன் கிடைத்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய மகன் பளீரென்ற தலப்புகளும், சாதாரணமான தலையங்கங்களும் உள்ள தினசரியைக் காலையில் கரைத்துக் குடித்துவிட்டு, நாளின் எஞ்சிய பகுதியில் வருகிறவர் போகிறவர்களிடம் அந்தக் கருத்துக்களைத் தன் கருத்துக்களைப் போலச் சொல்லிக் கொள்ளுகிறான். ஆனால், உண்மையில் அவனுக்கென்று எந்த விஷயத்திலும் எந்தவிதமான திடமான அபிப்பிராயமும் கிடையாது என்பதை அவர் வெகு நாள் முன்பே அறிந்திருந்தார். இல்லாவிட்டால் இவளுடைய சமையலை மறு பேச்சில்லாமல் இவ்வளவு நாள் சாப்பிட்டுக் கொண்டிருப்பானா, அறிவில்லாதவன். இப்படிப்பட்டவர்கள் மாணவர்களுக்கு என்ன போதிக்க முடியும், என்ன திடமான வழியை அவர்களுக்குக் காட்ட முடியும்?
கடைசியில் அவருடைய முறையும் வந்தது. அவர் நாற்காலியில் போய் உட்கார்ந்தார். நாவிதன் அவரைக் கழுத்துக்குக் கீழே வெள்ளைத் துணியால் போர்த்தினான். அவருக்குத் திடீரென்று அமைதியும் ஆசுவாசமும் ஏற்பட்டது. மீண்டும் சிறு பையனாகிவிட்டது போல; பொறுப்புகள் இல்லாதவராய், சீராட்டலுக்குரியவராய். இப்போது அவர் எதுவும் செய்ய வேண்டியதில்லை, எல்லாம் நாவிதன் பார்த்துக் கொள்வான். ஒரு நல்ல தந்தையைப் போல, தாயைப் போல மனைவியைப் போல. எல்லா நாவிதர்களிடமும் அவர் இப்படி ஆசுவாசமாக உணர முடிந்ததில்லை. ஒரு வருடம் முன்பு இவனைக் கண்டுபிடிக்கும் வரையில் அவர் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது!
பல வருடங்களாக கனாட் பிளேஸில் ஒரு குறிப்பிட்ட ஸலூனிலிருந்து ஒரு குறிப்பிட்ட கிழவனிடம்தான் அவர் முடி வெட்டிக் கொண்டார்; ஆனால் திடீரென்று ஒரு நாள் அந்தக் கிழவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அன்று இன்னொருவன் அவருக்கு முடிவெட்டி விட்டான். அவன் அவர் தலையைத் தொட்டுத் திருப்பிய விதம், தலைமயிரை வாரிய விதம், சிரைத்த விதம், காதுகளின் மேல் புறத்தில் மழித்த விதம், எல்லாமே அவருக்கு அருவருப்பூட்டின. அவர் அதன் பிறகு அந்த ஸ்லூன் பக்கமே போகவில்லை. நாவிதனுடன் நாம் கொள்ளும் உறவு வெறும் வார்த்தை உறவல்ல. ஸ்பரிச உறவு- மனைவியுடன் கொள்ளும் உறவைப் போல -சிலரால்தான் நாம் கவரப்படுகிறோம். சிலர் தீண்டுவதுதான் நமக்கு இதமளிக்கிறது. நம்மைக் கவராதவர்கள் பேச்சைப் பொறுத்துக் கொள்ளலாம். ஸ்பரிசத்தைப் பொறுக்க முடியாது. அவனை அவருக்குப் பிடிக்காமல் போனது அவனுடைய குறையென்றுகூடச் சொல்ல முடியாது. அவருடைய துரதிர்ஷ்டமென்றுதான் சொல்ல வேண்டும். இந்த துரதிர்ஷ்டம் பல நாட்கள் நீடித்தது. எத்தனை சலூன்களுக்குச் சென்றிருப்பார், எத்தனை நாவிதர்களிடம் பண்ணிக் கொண்டிருப்பார்! யாருமே அவருக்குத் திருப்தியளிக்க முடியவில்லை. கடைசியில் ஒரு வருடத்துக்கு முன்பு அவர் வீட்டருகிலேயே இந்த சலூன் திறந்தது. அதனுடைய முதலாளியாகிய இந்த நடுத்தர வயது நாவிதனிடம் தான் ஸலூன் நாற்காலிகளில் பெற விரும்பிய ஆசுவாசத்தை அவர் மீண்டும்-வெகு நாட்களுக்குப் பிறகு -பெற முடிந்தது. அவனுக்கு வயதென்னவோ முப்பத்தைந்துக்குள்தான் இருக்கும். ஆனாலும் அவருடைய பழைய கிழட்டு நாவிதரிடம் இருந்த அதே பக்குவமும் இங்கிதமும் மென்மையானதொரு கர்வமும் அவனுடைய ஒவ்வொரு அடைவிலும் ஸ்பரிசத்திலும் இருந்தது. அவன் ஒரு கலைஞன். தான் செய்கிற தொழில் குறித்து அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை கிடையாது. இந்தத் தாழ்வு மனப்பான்மை விளைவிக்கும் முரட்டுத்தனமோ அல்லது போலியான பணிவோ அவனிடம் இல்லை.
கல்யாணியிடம் அவரைக் கவர்ந்ததும் இவ்வகைக் குணங்கள்தாம். அவளுக்கு அவர்பால் போலியான மரியாதை கிடையாது. தன்னம்பிக்கையின்மையும் பலவீனமும் ஏற்படுத்தும் காழ்ப்புணர்ச்சிகளும் போர்க் கோலங்களும் கிடையாது. தன் சூழ்நிலை, தன் வேலை,தன் உறவுகள் ஆகியவைபால் அவளுக்கு ஒரு நிச்சயமும் நம்பிக்கையும் இருந்தது. அன்பும் ஈடுபாடும் இருந்தது. ஷரத்துகளில்லாத ஈடுபாடு. அவளுடைய இந்த நிச்சயம் அவருக்கு அவர் வேண்டிய திண்மையையும் பாதுகாப்பையும் அளித்தது. அவளுடைய உலகம் குழப்பமில்லாத உலகம்; மிக எளிமையான உலகம். அந்த எளிமை வெகுளித்தனமானதல்ல, விவேகம் நிரம்பியது. முதிர்ச்சியை உள்ளடக்கியிருப்பது. இந்த நாவிதனின் எளிமையைப்போல. அவனுடைய மௌனத்தைப் போல.
இவனுடைய தொழிலின் தன்மை காரணமாகவே இவனுக்கு ஒரு முதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த நாவிதனுக்கு முடி திருத்திக் கொள்வதற்காக வருகிற பலர் இப்படி வெட்ட வேண்டும் அப்படி வெட்ட வேண்டும்' என்று உத்தரவிடும்போதெல்லாம், மனிதர்களின் சுய முக்கியத் துவத்தையும் அகந்தையையும் அவன் நெருக்கத்தில் தருசித்து இந்தத் தரிசனங்களின் பின்னணியில் தன்னுடைய சுய அபிமானம், சுய வெளிப்பாடு ஆகியவற்றையும் தவிர்க்க முடியாமல் பரிசீலனைக்கு உள்ளாக்க நேர்ந்தது. மற்றவர்களை உறுத்தாத விதத்தில் இவற்றை மொண்ணையாக்கிக் கொள்வதற்குப் பயின்றிருக்க வேண்டும். சில புடவை அல்லது நகை வியாபாரிகளிடமும், தையல்காரர்களிடமும் இதே விதமான முதிர்ச்சியை அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் கல்யாணியின் முதிர்ச்சியை உருவாக்கிய உலைக்களம் எது என்றுதான் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னுடைய ஆதி நாட்களின் முன்கோபமா? குடித்துக் குடித்துக் குட்டிச்சுவராய்ப் போன அவளுடைய அப்பாவின் பொறுப்பின்மையா? அவளுடைய நாத்தனாரின் தன் தமக்கையின் மௌடிகத்தை வித்தாகக் கொண்ட குரோதமும் பொறாமையுமா?
'ஹேர் கட்' முடிந்துவிட்டது. அவரைச் சுற்றியிருந்த வெள்ளைப் போர்வையை அவன் அவிழ்த்து உதறினான். டவலால் அவர் முகம், கழுத்து யாவற்றையும் அழுத்தித் துடைத்து, அவர் சட்டை மேலெல்லாம் தட்டினான். இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதேயென்று அவருக்கு ஏக்கமாக இருந்தது. அவர் நாற்காலியிலிருந்து இறங்கி, ஐந்து ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கொடுத்தார். அவன் காத்திருந்த அடுத்த ஆசாமியை 'வந்து உட்காரலாம்' என்று சைகை செய்துவிட்டு, அங்கே அறை மூலையிலிருந்த மேஜையின் இழுப்பறையைத் திறந்து- அதுதான் அவனுடைய பணப்பெட்டி -அவருக்குச் சில்லறை எடுத்துக் கொடுத்தான். அவர் அதை எண்ணிக்கூடப் பார்க்காமல் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, வந்தனம் தெரிவிக்கும் முறையில் அவனைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டுக் கிளம்பினார். அந்தப் பணப் பரிவர்த்தனை அவர்களிருவரையும் எப்போதுமே சங்கடத்திலாழ்த்துவதாகத் தோன்றியது. அது அவர்களுடைய சம்பந்தம் பிரயோஜன ரீதியானது என்பதை உணர்த்தியது. அதுதான் உண்மையுமா? அப்படியல்லவென்று அவர் நினைப்பது - தன் சொந்த மகன் கூடத் தன்னிடம் காட்டாத ஒரு அக்கறையை
இந்த நாவிதன் காட்டுவதாக நினைப்பது ஒரு பிரமைதானா?
அவர் சலூன் வாசலையடைந்த அதே சமயம் அந்த முள்ளங்கிப் பையன் பக்கத்து டீக்கடை ரேடியோவிலிருந்து ஒலித்த சினிமாப் பாடலினால் கவரப்பட்டு சற்று முன்னர் அங்கிருந்து எழுந்து சென்றிருந்தவன் - மீண்டும் சலூனுக்குள் பிரவேசித்தான். "நீ என்னப்பா, எனக்கு அப்புறமாக வந்தவர்களுக்கெல்லாம் பண்ணிவிட்டாய்; நான் இரண்டு மணி நேரமாகக் காத்திருக்கிறேன்! நீ என்ன, கிழடுகளுக்காக மட்டும்தான் கடை திறந்திருக்கிறாயா?" என்று திடீரென்று உரத்த குரலில் சத்தமிட்டான். நாகராஜனுக்குச் சுருக்கென்றது. அவர் சலூன் வாசலில் நின்றார். நாவிதன் சாந்தமாக ஏதோ பதில் கூற முயன்றான். அதற்குள் ஃபிலிம்ஃபேர் இளைஞன், "இந்த நாவிதனும் கிழடுமாதிரி தாண்டா -ஸாலா!" என்றான். இருவருமாக உரக்கச் சிரித்தார்கள். தொடர்ந்து அவனுடைய ஆண்மையைப் பற்றிச் சந்தேகம் தெரிவித்து இரு பொருள்பட அவர்கள் பேசிக் கொண்டு போனார்கள். அவனைச் சீண்டுகிற முறையில், ஃபிலிம்ஃபேர் பையன் ஒரு ஆபாச மான சினிமாப் பாட்டைப் பாடியவாறு அந்த நாவிதனைத் தழுவிக்கொள்ள முயன்றான். முதலாளி நாவிதனைத் தவிர அந்தக் கடையிலிருந்து வேறு இரண்டு நாவிதர்கள் எதுவுமே நடக்காதது போலத் தங்கள் வேலையில் ஆழ்ந்திருந்தார்கள். அவனும் பதட்டமில்லாமல், "தயவு செய்து இங்கே சத்தம் போடாதீர்கள்" என்று மட்டும் சொன்னான். கடைசியில் காத்திருந்த மற்றவர்கள் அந்தப் பையன்களின் நடத்தையில் அதிருப்தியுற்றவர்களாக, ஆனால் அந்த அதிருப்தியை வெளிப்படுத்தவும் தயங்கியவர்களாக அமர்ந்திருந்தார்கள்.
நாகராஜனுக்குப் பொறுக்கவில்லை. அந்த நாவிதனுக்கு ஆதரவாக ஏதாவது சொல்ல வேண்டும்போல இருந்தது. ஆனால் அவருடைய உதவி உண்மையிலேயே அவனுக்குச் சாதகமானதாக இருக்குமாவென்றும் அவருக்குச் சந்தேக மாயிருந்தது. என்ன இருந்தாலும் அவர் இந்த ஊர்க்கார ரில்லை. அவருடைய இந்தி உச்சரிப்பு அந்தப் பையன்களுடைய கொண்டாட்டத்தை அதிகப்படுத்தி, அவரை அவர்களுடைய கிண்டலிலிருந்து காப்பாற்றும் அதிகப் படியான பொறுப்பை வேறு அந்த நாவிதன் மேல் சுமத்தக்கூடும். அவருக்கு புஜபலமில்லை; வேறு பலங்களுமில்லை. அவர் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். இதற்காகத் தன்னையே வெறுத்துக் கொண்டார். தான் செய்யத் தவறியவற்றுக்குச் சுலபமாகச் சமாதானங்கள் கற்பித்துக் கொள்ள அவரால் முடிகிறது. ஆனால் இந்தத் தர்க்கம் ஒரு இறுதியான விடையாகாது. அவருடைய கோழைத் தனத்துக்கு மன்னிப்பாகாது. ஆம், இதுவும் ஒரு கோழைத்தனம். அவன் முடிதிருத்தும் அழகை மனதாரப் பாராட்ட வேண்டும், அவனுக்கு ஏதாவது 'டிப்' கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைத்து, பிறகு அதை செயலாக்காமல் விடுகிறாரே, அதுவும் கோழைத்தனம்தான். கல்யாணியின் வேலைத் திறனை ஒரு முறைகூட வாய் நிறையப் புகழாமலிருந்ததும், அவளுடைய நாத்தனாரின் குரோத ஜ்வாலையில் அவள் வெந்த நாட்களில் வெளிப்படையாகத் தன்னை மனைவியின் பக்கம்தானென்று காண்பித்துக் கொள்ளாமலிருந்ததும் கூடக் கோழைத்தனம் தான். 'என் மனசு அவளுக்குத் தெரியும்' என்று அப்போதெல்லாம் அவர் தருணங்களை மீண்டும் அசைபோட நேருகையில், அந்தச் சமாதானம் அவருக்குத் திருப்தியளிப்பதாக இல்லை...
அவர் சாலையைக் கடப்பதற்காகக் காலையெடுத்து வைத்த சமயத்தில், சொல்லி வைத்தாற்போல அந்த மோட்டார் சைக்கிள் இளைஞன் பேய் வேகத்தில் நடைபாதைக்கு வெகு சமீபமாகச் சாலையில் தன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு வந்தான். அவர் அவசரமாக முன் வைத்த காலைப் பின்னுக்கிழுத்துக் கொண்டார். மீண்டும் அவருக்குக் கோபம் வெடித்துக் கொண்டு கிளம்பியது. அந்த மோட்டார் சைக்கிள் இளைஞன் மேலெழுந்த கோபம் ஸலூனில் சற்று முன் பார்த்த பக்கம் திசை மாறியது. மறுபடி ஸலூனுக்குத் திரும்பலாமாவென்று நினைத்தார். சென்றிருப்பார்; ஆனால் அப்போது திடீரென்று "தாத்தா! தாத்தா!" என்று அவருடைய பேத்தியின் குரல் கேட்டது. அவர் எதிர்ச்சாரியைப் பார்த்தார். அங்கே அனு தன் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் - அவருடைய பிள்ளை - வாயில் பீடாவைக் குதப்பிக் கொண்டிருந்தான். பீடா போட்டுக் கொள்வதற்காக அவன் வெளியே வந்திருக்க வேண்டும். அவர் ஸ்லூனுக்குத் திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டு, சாலையைக் கடந்து அவர்களருகில் வந்தார். "என்ன காட்டுமிராண்டித்தனமா விட்டுண்டு போறான்கள்!" என்று மோட்டார் சைக்கிள் இளைஞன் பற்றிய தன் மனத்தாங்கலை மகனுடன் பகிர்ந்து கொண்டார்.
மகன் ஒரு கணம் பேசவில்லை. பிறகு வெற்றிலைச் சாறை 'புளிச்'சென்று துப்பிவிட்டு (அனு வியப்புடன் அப்பாவின் வெற்றிலைச் சாறு தரையில் விழுந்த இடத்தை ஒரு கணம் நின்று பார்த்தாள்) "பொழுது போகலை இவாளுக்கெல்லாம்!" என்றான். அவன் அந்த இளைஞனுக்கு அனுதாபம் தெரிவிக்கிறானா அல்லது அவனைக் கண்டிக்கிறானா என்று தெரியாமலிருந்தது. அவர் மேலும் கடுமையாக ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள் அனு அவரருகில் ஓடிவந்து அவர் சட்டையைப் பிடித்து இழுத்து, "தாத்தா, நீயும் ஸ்பிட் பண்ணு தாத்தா!" என்றாள்.
அவள் என்ன சொல்கிறாளென்று புரிந்து கொள்ள அவருக்குச் சில விநாடிகள் பிடித்தன. "நான் வெற்றிலை போட்டுக்கலையே!" என்றார்.
"நீயும் போட்டுக்கோயேன்".
"இப்ப இல்லை; சாப்பிட்டப்புறம்".
"அப்பா சாப்பிடறதுக்கு முந்தியே போட்டுண்டிருக்கா, பாரு!"
"நீ கொஞ்சம் தொணப்பாமல் வரமாட்டியா?" என்று மாதவன் - அவருடைய மகன் அவளைக் கடிந்து கொண்டான். அவள் அப்பாவைச் சற்றே முன்னே போக விட்டு விட்டு, பின்னாலிருந்து அவனுக்கு வலிப்புக் காட்டினாள்; தாத்தா மட்டும் பார்க்கும் படியாக, 'உஷ்!' என்று நாகராஜன் அவளுக்குச் சைகை காட்டினார். அப்பா எங்கேயாவது பார்த்துவிடப் போகிறார் என்பதைப் போல. தாத்தாவும் பேத்தியும் இப்படி நிறைய ரகசியமான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு. அவள் அப்பாவின் கையை விட்டு தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். "தாத்தா!"
"உம்?"
அவள் அவரைக் கீழே குனியுமாறு சைகை செய்தாள். அவள் ஏதோ ரகசியம் சொல்ல வேண்டுமாம்; அவர் குனிந்தார். அவள் அவர் காதில் கிசுகிசுத்தாள். "நீ சாப்பிட்டப்புறம் வெத்தலை போட்டுண்டு ஸ்பீட் பண்றயா?"
அவர் பதிலுக்கு அவள் காதில் கிசுகிசுத்தார். "சரி".
அனு மட்டும் அந்த வீட்டில் இல்லாமலிருந்தால், இறுக்கமான மௌனங்களிலும் அபிப்பிராய மோதல்களிலும் அவர்கள் எப்போதும் உழன்று கொண்டிருப்பார்கள்; அவள் இருப்பதால் ஒருவருக்கு மற்றவர் சலித்துவிடும்போது, அல்லது பரஸ்பரம் உடன்பாடு ஏற்படாமல் போகும்போது, சட்டென்று அவளுடன் பேசத் தொடங்கிவிட முடிகிறது. பாவம், பெரியவர்கள் தன்னை எப்படிச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களென்று அந்தக் குழந்தைக்குத் தெரியவில்லை. வீடு நெருங்கியதுமே முன்பாக ஓடிச் சென்று காலிங் பெல் விசையை அழுத்தினாள். அவளுடைய அம்மா வந்து கதவைத் திறந்தாள்.
அவர் வீட்டினுள் வந்ததும் உடைகளைக் களைந்துவிட்டு உடனடியாக குளிக்கப் போகாமல் சற்று நேரம் மின் விசிறிக்கடியில் வியர்வை உலர்வதற்காக உட்கார்ந்திருந்தார். ரேடியோ ஒலி சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தது; அவளுடைய மாட்டுப்பெண் தயா ரேடியோவுடன் சேர்ந்து, அதில் கேட்ட டியூனை முனகிக் கொண்டிருந்தாள். மாதவன் வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருக்க அனு அவனுக்குப் பழிப்புக் காட்டுவது போல ஒரு பென்ஸிலை சிகரெட் போல வாயில் வைத்துக் கொண்டு ஃபூஃபூ என்று ஊதிக் கொண்டிருந்தாள். சாப்பாட்டு மேஜை மேல் சாப்பிடுவதற்கான சாமக்கிரியைகள் தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. அமைதியான குடும்பச் சூழ்நிலை; நாகராஜனின் உடல் இலேசாக நடுங்கியது. வியர்வையின் ஈரம் படிந்திருந்த சருமத்தில் காற்றுப் பட்டதனால் இருக்கலாம். ஸலூனில் நடந்த நிகழ்ச்சியை அவர் நினைத்துக் கொண்டார். அந்த அறையின் அமைதியும் இதமும் திடீரென்று அவரை உறுத்தத் தொடங்கின. அது ஒரு மாயையாகத் தோன்றியது. வெளியே போக்கிரிகள் உலகைச் சின்னபின்னமாக்கிக் கொண்டிருக்கிறாரகள்.
குளித்துச் சாப்பிட்டு விட்டு அவர் தன் பேத்தியுடன் சற்று நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்படியே கண்ணயர்ந்து விட்டார். காலையில் வெளியே சென்ற அசதி மீண்டும் விழித்துக் கொண்ட போது மணி நாலாகிவிட்டிருந்தது. காப்பி வாசனை அடித்தது. குழாயிலிருந்து ஜலம் விழும் ஓசை கேட்டது. இரை கொண்ட மலைப் பாம்பு போல நடுப்பகல் நேரத்தில் ஸ்தம்பித்துக் கிடந்த உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது. அவர் முகத்தை அலம்பிக் கொண்டு வந்தபோது மேஜை மீது காப்பி தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஒரு வாய் அருந்தினார்; இன்று அவ்வளவு மோசமாக இல்லை. காலைக் காப்பியைப் பொறுத்த வரையில், அவர்தான் எல்லாரையும் விடச் சீக்கிரமாக எழுந்திருப்பாராகையால், அவரே கலந்து விடுவார். ஆனால் மாலையில், மாட்டுப் பெண் தயாரிப்பதைத்தான் குடிக்கவேண்டியிருந்தது.
முன் அறையிலிருந்து உரத்த பேச்சுக் குரல்கள் கேட்டன. பிற்பகல் நேரம்தான் பெரும்பாலும் அந்த வீட்டில் பேச்சு நேரம். அவர்கள் 'சமூக மிருகங்களாக' ஆகும் நேரம். மனிதன் தான் வெறும் மிருகமில்லை என்று தனக்கும் மற்றவர்களுக்கும் நிரூபித்துக் கொள்ள ஏன் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொள்கிறான்? வெளியிலிருந்து யாரும் வராவிட்டால்கூட, அவர்கள் மூவரும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று யாரோ வந்திருந்தார்கள் போலிருக்கிறது. அவருடைய பிள்ளையின் குரலையும் மாட்டுப் பெண்ணின் குரலையும் தவிர, இன்னொரு ஆண் குரலும் ஒரு பெண் குரலும் கேட்டன. அவையும் அவருக்குப் பரிச்சயமானவையாகவே தோன்றின. அந்தச் சிரிப்பு! ருஷ்யாவுக்குப் போய்விட்டு வந்திருந்த புரொபசர் மோட்வானி மாதிரியல்லவா இருக்கிறது! ஆமாம், அவர்தான் மனைவியுடன் வந்திருக்கிறார்... மோட்வானி அதே பேட்டையில் இன்னொரு ப்ளாக்கில் இருந்தார். தற்போதுள்ள துணை வேந்தருக்கு அடுத்த படியாக இவர் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சர்வகலாசாலை வட்டங்களில் பேசிக் கொள்ளப்பட்டது. சரியான இடங்களில் சரியான நபர்களை அவருக்குத் தெரிந்திருந்தது. சந்தர்ப்ப வசத்தால் ஏற்பட்ட அவருடைய இந்த அண்மையை மகனும் மாட்டுப் பெண்ணும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதில் முனைந்திருந்தார்கள். மாட்டுப் பெண்ணின் பங்குதான் இதில் அதிகமிருக்கும். அவள் அவளுடைய அப்பாவின் பெண்தானே?
அவளுடைய குரல்தான் எல்லாருடையதும் விட அதிகமாகக் கேட்டுக் கொண்டிருந்தது; சிரிப்பும் கூட. இரண்டாவது ஸ்தானம் பெறும் குரல் யாருடையதென்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காப்பியிலிருந்து அவருடைய கவனத்தைத் திருப்ப இது பயன்பட்டது. அவருடைய பிள்ளையின் குரல் அபூர்வமாகத்தான் எப்போதாவது ஒலித்தது. அவனை முதலிலேயே அவர் தள்ளுபடி செய்ய வேண்டியதாயிற்று.
அவள் மாட்டுப்பெண் அவர்கள் எல்லாரையும் விட அதிகமாக டிராயிங் ரூம் கலாச்சாரத்தில் ஊறியவளா யிருந்தாள். எல்லாம் பயிற்சியைப் பொறுத்த விஷயம்தான். அவளுடைய அப்பா அளித்த பயிற்சி. தீவிரச் சார்புகள் உள்ளவர்கள்போல் காட்டிக் கொள்ள வேண்டும். ஆவேசமாக எதையும் ஆமோதித்தோ அல்லது மறுத்தோ பேச வேண்டும். தன்னிடமோ பிறரிடமோ எதையும் புனிதமாகக் கருதாமல் ஒவ்வொன்றையும் ரஞ்சகப்படுத்த வேண்டும். நாடகமாக்க வேண்டும். டிராயிங் ரூம் ஆடியன்ஸுக்காக. அவளுடைய அப்பாவுக்கு நாகராஜுக்கு இருந்த அளவுகூடத் தீவிரச் சார்புகள் கிடையாது. ஆனால் அவர் அப்படியிருப்பது போல நடிக்கத் தெரிந்தவர். பேசிப் பேசியே முன்னுக்கு வந்துவிட்டார். அவருடைய மகளும் இந்தத் திறமைகளுக்கு வாரிசாகியிருக்கிறாள்.
அவருக்கு இது போன்ற தருணங்களில் தன் மகன் மீது ஏற்படும் அனுதாபம் இப்போதும் ஏற்பட்டது. மகனே, இவர்கள் உன்னை ஏமாற்றிவிட்டார்கள். தாயின் தாத்தா காலத்திலிருந்து இவர்கள் டில்லியில் இருந்து வருகிறார்கள். நீயும் நானும் நேற்றைக்குத்தான் இங்கு வந்தோம். அவர்கள் வீட்டு டிராயிங் ரூம் சூழ்நிலை தேர்ச்சியான அந்த நடிப்பு உன்னை மயக்கிவிட்டது. உன் அப்பவைப் போல அன்றி அவர் உன்னுடன் அமர்ந்து சிகரெட் குடித்தார். அவருடைய பெண்ணும் மனைவியும் உனக்கு மது ஊற்றிக் கொடுத்து இனிய வார்த்தைகள் பேசி புதிய உலகங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். அது உண்மையிலேயே புதிதுதானென்று நீ நினைத்தாய். அவருடைய மகளுடன் நீ சுதந்திரமாகப் பேசவும் பழகவும் அனுமதித்து, தன் மதிப்பீடுகள் எவ்வளவு நவீனமானவையென அதன் மூலம் காட்டி உன்னைக் கவர்ந்தார். அதே சமயம், தன் மகளுடன் அந்த அளவு பழகிய பிறகு அவளைத் திரஸ்கரிக்க உன் மதிப்பீடுகள் இடந்தராதென்பதை உணர்ந்து அதன் மூலமே உன்னைச் சிறைப்படுத்தி விட்டார். மதிப்பீடுகளின் குழப்பம் உன் சுதந்திரத்தைப் பறித்து விட்டது. உனக்குப் பயிற்சியேயில்லாத ஆயுதங்களை உன் மேல் பிரயோகித்து உன்னை இவர் கட்டிப் போட்டுவிட்டார். எவ்வளவு நேர்மையற்ற, விதிகளை மீறிய விளையாட்டு!
ஆனால் இவருடைய விளையாட்டுகள் எல்லாமே விதிகளை மீறியவைதாம். அவருடைய வீட்டில் டெலிவிஷன் இருந்தது. பல விலையுயர்நத விளையாட்டுப் பொருள்கள் இருந்தன. அவற்றை வைத்து ஆசை காட்டி அவர் அனுவைத் தன்னுடன் இரண்டு நாள், மூன்று நாள் இருப்பதற்காக அழைத்துப் போவார். இதில் என்ன சாமர்த்தியமிருக்கிறது? நேர்மையுள்ளவனாக இருந்தால் அவனும் என்னைப் போல அனுவுக்குக் கதை சொல்லட்டும். அவளுடைய பாஷையில், அவளுடைய மட்டத்தில், அவளுடன் பேசட்டும். கொனஷ்டைகள் காட்டிச் சிரிக்க வைக்கட்டும். பிறகு பார்க்கலாம், அனு யாரிடம் வருகிறாளென்று. ஜப்பானிலும், ஜெர்மனியிலும் செய்த ரஞ்சகப் பொருள்களைச் சாட்சிக்குக் கூப்பிடுவானேன்!
நேற்றுக் கூட அவர் வந்திருந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார். தவிர்க்க முடியாமல் சர்வகலாசாலை மூடப்பட்டிருந்தது பற்றியும், மாணவர் ரகளையைப் பற்றியும் - மாணவர்களுடைய போக்கைக் கண்டித்துப் பேசினார். இளைஞர்களிடையே ரவுடித்தனமே வாழ்க்கை முறையாகி வருகிறது, என்றார். இவன் பெரிய யோக்கியன் மாதிரி!
நாகராஜன், அவருடைய கட்சிக்கு எதிர்க்கட்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே நேற்று அவரிடம் மாணவர்களை ஆதரித்துப் பேசினார். பெரியவர்கள் இளைஞர்களிடம் அக்கறை எடுத்துக் கொண்டு அவர்களைப் புரிந்துகொள்ள முயலுவதில்லை, என்றார். இளைஞர்கள் பாவம், தாரதம்மியங்களை ஆராயாமல் உணர்ச்சி வேகத்தில் அலைக்கழிக்கப் படுபவர்கள். பெரியவர்கள்தான் அவர்களைப் பக்குவமாக சரியான திசையில் திருப்பிவிட வேண்டும்...
இப்போது, தன்னுடைய நேற்றைய பேச்சை நினைத்து அவருக்குச் சிரிப்பாக இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. சே! நம்முடைய வெளிப்பாடுகள் பல சமயங்களில் எத்தகைய தவறான உந்துதல்களின் அடிப்படையில், தவறான நோக்கங்களுடன் உருவாகின்றன! சம்பந்திக்குப் பதிலாக வேறு யாராவது இருந்திருந்தால் நாகராஜனின் பேச்சும் வேறு விதமாக இருந்திருக்கும்.
அவர் காப்பியைக் குடித்து முடித்துவிட்டு அங்கேயே உட்கார்ந்திருந்தார். அடுத்த அறைக்குச் சென்று அங்கு நடந்த சம்பாஷணையில் கலந்து கொள்ள அவருக்குப் பயமாக இருந்தது. தம்முடைய வெளிப்பாடுகள் மறுபடி கட்டுக்கடங்காமல் தறிகெட்டுப் பாயத் தொடங்குமோவென்று கவலையாக இருந்தது...
அப்படியானால் அவருக்குத் தன் உந்துதல்களைப் பற்றிய நிச்சயமில்லையா?
கடைசியில், அங்கு உட்கார்ந்தும் அவருக்கு அலுத்துப் போயிற்று. அவர்களுடைய சம்பபாஷணையை வெறும் கிளர்ச்சியூட்டும் சாதனமாகப் பயன்படுத்தி, தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே இருந்து விடலாம் என்று நினைத்தவராய் அவர் முன் அறைக்குச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிள் இளைஞனைப் போல, அவருக்கும் கிளர்ச்சி வேண்டித்தான் இருக்கிறதோ?
இன்றும், யுனிவர்ஸிடி மூடியிருப்பதைப் பற்றித்தான் இவர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது, தவறு யார் பக்கம் என்பதையெல்லாம் அலசிக் கொண்டிருந்தார்கள். நாகராஜன் அங்கே சென்றதும் "நமஸ்தேஜி!" என்று மோட்வானியும் மிஸஸ் மோட்வானியும் அவருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். நாகராஜன் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தார்.
"தூங்கிக் கொண்டிருந்தீர்களாக்கும்!" என்றார் மோட்வானி.
"ஆமாம்".
"இந்த வெதரில் வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை".
"அதுதான் யுனிவர்ஸிடியும் தூங்குகிறது போலிருக்கிறது!" என்றார் நாகராஜன். எல்லோரும் சிரித்தார்கள். ஒரு மரியாதைக்காக அவர்கள் சிரித்தது போலிருந்தது. நாகராஜனின் பிரச்னையே, இப்போதெல்லாம், அவரை யாரும் ஸீரியஸ்ஸாக எடுத்துக் கொள்ளாததுதான். வயது காரணமாக அவர் பலமுறை தன் இயலபை மீறிய உரத்த குரலில் பேசவும், எதிராளியை உசுப்புகிற விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தவும் நேருகிறது.
"என்ன, யுனிவர்ஸிடியை எப்போது திறக்கப் போகிறீர்கள்?" என்று நாகராஜனே மறுபடி பேசினார், வேறு யாரும் பேசாததால்.
"என்னைக் கேட்டீர்களானால்? நான் வைசஸ்சான்ஸலர் அல்லவே!" என்றார் மோட்வானி.
"அட்லீஸ்ட், இதுவரையில் இல்லை" என்றாள் தயா, ஆண்களுடைய ஈகோவுக்குத் தீனி போடுவதில் பெண்களுக்கே உரிய சாமர்த்தியத்துடன். மோட்வானி அமுத்தலாகப் புன்னகை புரிந்தார். அவ்வளவுதான்; நாகராஜனுக்கு திடீரென்று அவருடைய ஈகோவைக் காயப்படுத்த வேண்டுமென்ற ஆசை பிறந்துவிட்டது.
"எனக்கு மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் பயங்கரமாக இருக்கிறது" என்றார் அவர். அது பொதுவாகச் சொல்லப்பட்டதா அல்லது குறிப்பாகச் சொல்லப்பட்டதா என்று தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. அவருடைய மகனின் முகத்தில் பதட்டம் ஏற்பட்டது. "அரசியல்வாதிகளின் விளையாட்டுக்குச் சர்வகலாசாலையும் ஒரு நிலைக்களனாகி விட்டதே!" என்றார் அவர் தொடர்ந்து. இதுவும் பொடி வைத்த வாக்கியம்தான். மோட்வானி ஒரு வலதுசாரி அரசியல் கட்சியுடன் சம்பந்தம் கொண்டிருந்தாரென்பது சிதம்பர ரகசியம்.
மோட்வானிக்கு ஏதாவது சொல்லாமல் இருக்க முடியவில்லை. கடவுளரின் ஓவியங்களில் தென்படுவது போன்ற ஒரு கருணை நிரம்பிய - தவறுகளை மன்னிக்கும் - புன்னகை அவர் முகத்தில் தோன்றியது. "இது ஒரு பரிச்சயமான ஆர்குமென்ட்" என்றார். "ஆனால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன் - சர்வகலாசாலையில் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்களா? வாலிபப் பருவத்தையடைந்துவிட்ட ஒரு ஜனநாயகத்தில், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் - சர்வகலாசாலை உட்பட அரசியல் பிரக்ஞையும், வெவ்வேறு அபிப்பிராயக் குழுக்களும் ஏற்படுவது இயல்புதானே? மாணவர்களை அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் காற்றே படாத வண்ணம் 'இன்சுலேட்' செய்யும் கல்விமுறை எமக்கு உடன்பாடு இல்லை. அத்தகையதொரு அமைப்பில் உருவாகும் மாணவர்கள், பிற்பாடு நடைமுறைச் சமூகத்துடன் தம்மைப் பொருத்திக் கொள்ள முடியாமல் திணறக்கூடும். மிருகக் காட்சிச் சாலையில் வெகுநாள் இருந்த பிறகு காட்டில் கொண்டு விடப்பட்ட மிருகங்களைப் போல"
"உயர்ந்த நோக்கம்தான்... இதை நேரடியாகவே அமுலாக்கலாமே!"
"எனக்குப் புரியவில்லை".
"ஸ்டிரைக், வன்முறை, லஞ்சம், குழுச் சண்டை ஆகியவற்றில் வகுப்புகள் நடத்தலாம்; கட்சித் தலைவர்களின் பேச்சுத் தொகுப்பைக் கட்டாயப் பாடமாக வைக்கலாம்".
"நான் சொன்னதை நீங்கள் மிக குறுகிய பிரமாணத்தில் புரிந்து கொள்கிறீர்கள்!"
"இருக்கலாம். நீங்கள்தான் எனக்கு தயவு செய்து தெளிவு ஏற்படுத்த வேண்டும்!"
மோட்வானி மறுபடி ஜாக்கிரதையாகப் பொறுக்கி யெடுத்துத் தொடுத்த சொற்றொடர்கள் மூலம், தான் நம்பிக்கை வைத்திருக்கும் அல்லது அவர் நம்பிக்கை வைத்திருப்பதாகப் பிறர் அவரைப் பற்றி நினைக்க விரும்பும் - கருத்துகளுக்கு உருவகம் கொடுத்தார். நாகராஜன் மறுபடி இவற்றையெல்லாம் மோட்வானி தம்முடைய சுயலாபத்துக்குச் சாதகமான முறையில் தான் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தர்க்கம் புரிந்தார்.
"நீங்கள் என்னைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை" என்றார் மோட்வானி, சோர்வுடன். (அவ்வளவும் நடிப்பு!)
"நம்மிடையேயுள்ள வயது வித்தியாசம் காரணமாயிருக்க லாம் - 'ஜெனரேஷன் கேப்' - இல்லையா?" என்று நாகராஜன் மிஸஸ் மோட்வானியைப் பார்த்தார். அவள் அவர் பார்வையைத் தவிர்த்தாள். பிரபல இடதுசாரிப் பத்திரிகையொன்றின் சமீபத்திய இதழில், சர்வகலா சாலைகளில் அமைதியின்மை ஏற்படுவதற்கு முதல் காரணமாக அவள் தலைமுறை இடைவெளியை அடையாளம் கண்டுகொண்டு விளாசித் தள்ளியிருந்தாள். நமக்குத் தேவை மேலும் மேலும், மாணவர்களுடைய அலைவரிசையில் சிந்திக்கத் தெரிந்த இளம் லெச்சசரர்கள், என்று அறைகூவியிருந்தாள். அவளுடைய கவர்ச்சியில் கால் பங்குகூட இல்லாத மிஸ்டர் மோட்வானியைப் பார்க்கும் போது இளம் லெச்சரர்கள் சர்வகலாசாலையில் வேண்டுமென்ற அவளுடைய தாகம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அந்த இடதுசாரிப் பத்திரிகையில் வழக்கமாக எழுதுவதோடு இல்லாமல், அதன் ஆசிரியர் குழுவிலும் மிஸஸ் மோட்வானி சம்மந்தப்பட்டிருந்தாள். இந்தச் சம்பவம் பல வி.ஐ.பி.- களுடைய அறிமுகத்தை அவளுக்குச் சம்பாதித்துக் கொடுத்திருந்தது. ருஷ்யா சென்று வந்த சர்வகலாசாலைப் பிரதிநிதிகள் குழுவில் மோட்வானி இடம் பெற்றதற்கு அவள்தான் முக்கியக் காரணமென்று பேசிக் கொண்டார்கள். அவளுடைய அரசியல் சார்பு மட்டுமல்ல, நாற்பதிலும் கட்டுக் குலையாத அவளுடைய உடலும் அவளுக்குச் சாதகமாக இருந்தது. மொத்தத்தில், வலது, இடது, நடுப்புறம் முதலிய எந்தத் திசையிலிருந்தும் பார்த்தாலும் மோட்வானியின் எதிர்காலம் பிரகாசம் நிறைந்த ஒன்றாக இருந்தது.
"ஸார், இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள முயல வேண்டும்" என்று மோட்வானி மறுபடி பேசத் தொடங்கினார். அவருடைய குரலின் சுருதியும் தோரணையும் இப்போது கணிசமான அளவு மட்டுப்பட்டிருப்பதை நாகராஜன் திருப்தியுடன் கவனித்தார். "நான் ஒரு லட்சியத்தை,அடிப்படைக் கொள்கையை, மனதில் கொண்டு பேசுகிறேன். நடைமுறையில் நம் அரசியலும் சரி, சர்வகலாசாலையும் சரி, இந்த ல்டசியத்துக்குப் பல மைல் தூரம் தங்கியிருப்பதை நான் உணராமலீல்லை."
"இதை நாம் உணர்ந்தால் போதும்" என்றார் நாகராஜன். (அயோக்கியன்! என்ன சப்பைக் கட்டு கட்டுகிறான்!"
"அதே சமயத்தில், நடைமுறையிலுள்ள சில குறைபாடுகள், ஆரோக்கியமான ஜனநாயகப் போக்குகளுக்கெதிராக நம்மை "ப்ரஜுடிஸ்" செய்துவிடக்கூடாது.
"உதாரணமாக, உங்கள் பேச்சுப் பிடிக்கவில்லை யென்பதற்காக எல்லாக் கிழவர்களிடமும் நாங்கள் பேசாமலிருந்தோமென்று வைத்துக் கொள்ளுங்கள்" என்று மிஸஸ் மோட்வானி மாதவனைப் பார்த்தாள். அவன் முகத்தில் பளிச்சென்று- அவளுக்காக வேண்டி- ஒரு அங்கீகாரப் புன்னகை மலர்ந்தது. அவன் இன்னும் சில நாட்களில் தன்னுடைய தீஸிஸைச் சமர்ப்பிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில், மோட்வானி வீட்டு நாயைக்கூட அவன் விரோதித்துக் கொள்ளத் தயாரில்லை. நாகராஜனை அந்தப் புன்னகை உசுப்பிவிட்டது. "கிழவர்களை உங்களுக்குப் பிடிக்காதுதான். மிஸஸ் மோட்வானி!" என்றாரோ, மிஸ்டர் மோட்வானியின் முகத்தில் சவக்களை ஏற்பட்டது. தயா அவசரமாக 'இதோ வருகிறேன்' என்று எழுந்து சென்றாள். மாதவன், சின்னா பின்னமாகத் தொடங்கியிருந்த அந்த மாலை நேரத்தை மிகத் தாமதமாகி விடுமுன் காப்பாற்றும் அவசரத்துடன், "இதென்ன, நாமெல்லாம் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமோ?" என்றான். மோட்வானி அந்தத் துரும்பை நன்றியுடன் பற்றிக்கொண்டு "உங்கள் அப்பாதான் தொடங்கினார்" என்றார். "அவர் எங்கள் மேல் மிகக் கோபமாயிருக்கிறார் போலிருக்கிறது" என்றாள் மிஸஸ் மோட்வானி.(பிச்!)
"நோ, நோ" என்றார் நாகராஜன். "நான் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினேன். அவ்வளவுதான். மிஸ்டர் மோட்வானி-நான் தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னியுங்கள்."
"சே, சே! தவறென்ன இதில்! இது ஒரு சிநேகமான சர்ச்சை" என்றார் மோட்வானி.
இப்படியாக, அவர்களுடைய விவாதம் டயர் 'பங்சர்', ஆன மோட்டாரைப் போலத் திடீரென்று பாதி வழியில் நின்று போயிற்று. அதற்கு 'செயற்கைச் சுவாசம்' அளிப்பது போல டிரிங்க்ஸ் ஊற்றிய கண்ணாடித் தம்ளர்களுடன் வந்தாள்.+ நாகராஜனைத் தவிர மற்றவர்கள் ஆளுக்கொரு தம்ளர் எடுத்துக் கொண்டார்கள். "சீர்ஸ்!"
இப்போது நாகராஜன் வெற்றிகரமாகத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். அந்த அறையில் பரவிய ஜின்னின் மணம் அவரைப் பார்த்துக் கொக்கரிப்பது போலிருந்தது. அவருடைய மாட்டுப்பெண் அவரை 'செக்மேட்' செய்து விட்டாள். குடிக்காத அவர் அவருடைய கருத்துக்களுடன் சேர்ந்து சட்டை செய்ய லாயக்கற்றவராகி விட்டார். புதிய உலகத்தின் துடிப்பையும் அசைவுகளையும் பற்றிஅவர் என்ன கண்டார்?
தயா தற்போது சர்வகலாசாலையின் துணை வேந்தராயிருந்த ஒரு வயதான மராத்திக்காரரின் பேசும் தோரணையைக் கேலியாக அபிநயம் பிடித்துக் காட்டினாள். அவர்கள் எல்லாரும் கண்களில் நீர் தளும்ப விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்தத் துணை வேந்தர் நாகராஜன் மிகவும் மதித்த ஒரு அறிஞர், பண்பாளர். நாகராஜனுக்கு இருந்த இந்த மதிப்பை அவருடைய* மாட்டுப்பெண்ணும் அறிவாள். அவரைச் சீற்றம் கொள்ளச் செய்வதற்காகவே இப்படிச் செய்தாள் போலும். அவர் சற்று நேரம் பொம்மை போல அசையாமல் உட்கார்ந்திருந்தார். பிறகு,"ஓகே, யூ காரி ஆன்!" என்று அவர்களிடம் சமத்காரமாகச் சொல்லிவிட்டு எழுந்து வந்து விட்டார். காலையில் ஸலூனிலிருந்து வெளியேறியபோது உணர்ந்ததைப் போலவே இப்போதும் அவர் உணர்ந்தார்.
அந்த வீட்டுக்கு, நல்ல வேளையாக, ஒரு மொட்டை மாடி இருந்தது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அதுதான் அவருக்கு ஆசிரமமளித்தது. அவர் மொட்டை மாடிக்குச் சென்று கைபிடிச் சுவர் மேல் சாய்ந்தாற்போல நின்று கொண்டு கீழே தென்பட்ட காட்சிகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார். முன் தோட்டத்தில், கீழ் வீட்டுச் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த அனு, நிமிர்ந்து அவரைப் பார்த்து கையை ஆட்டினாள். அவர் பதிலுக்கு அவரைப் பார்த்து கையை ஆட்டினார். கீழே வீட்டுச் சொந்தக்காரன் தன் குடும்பத்துடன் இருந்தான்; இவர்கள் இருப்பது முதல் மாடியில்.
அவர் மொட்டை மாடியில் இங்குமங்குமாக உலவத் தொடங்கினார். தன் வெளிப்பாடுகளை ஆராயத் தொடங்கினார். தான் உண்மையிலேயே மிக அதிகமாகப் பேசிவிட்டோமோ? ஸலூனில் தன்னைக் காலையில் வெளிப்படுத்திக் கொள்ளாதது அவரை உறுத்திக் கொண்டே இருந்திருக்க வேண்டும். அது இப்படி அவரை வெடிக்கச் செய்திருக்க வேண்டும். அல்லது அவருடைய மகன், மாட்டுப் பெண் ஆகியோருடைய வாழ்க்கை முறை, மதிப்பீடுகள் ஆகியவற்றுக்கெதிராக அவர் போற்றி வரும் வெறுப்புணர்ச்சிதான் இத்தகைய சம்பாஷணைகளின்போது தளும்பி விடுகிறதோ? அல்லது அவர் காலத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை தான் படித்திருந்தாரென்ற ஒரு தாழ்வு மனப்பான்மை காரணமாக, அவருடைய மகனைப் போல மேல் படிப்பு படித்தவர்கள் கூட்டம் எவ்வளவு மேலோட்டமானதென்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ள அவர் விரும்புகிறார் போலும்.
தனக்குள் பதுங்கியிருந்த துவேஷங்களும் குரோதங்களும் அவரை எப்போதும் போல அன்றும் வெட்கமடையச் செய்தன. 'நான் என்னைச் சற்று முன் வெளிப்படுத்திக் கொண்ட முறை மிக ஆபாசமானது' என்று அவர் நினைத்தார். இல்லை. வெளிப்படுத்திக் கொண்ட முறைகூட ஆபாசமானதில்லை; உள்நோக்கம் ஆபாசமானது. முந்தின நாள் மாலை சினிமாத் தியேட்டரில் நடந்த நிகழ்ச்சியை அவர் நினைத்துக் கொண்டார். சாதாரணமாக அவர் அவர்கள் சினிமாவுக்குப் போகும்போது தான் வரவில்லையென்று வீட்டிலிருந்து விடுவாரென்றாலும் நேற்று என்னவோ அபூர்வமாக அவரும் அவர்களுடன் சென்றிருந்தார். ஒரு அசட்டுப் பிசட்டென்ற இந்திப்படம். அவருக்குத் தலையை வலிக்கத் தொடங்கிவிட்து. இன்டர்வெல்லுக்குச் சற்று முன்பாக வெளியே வந்து காப்பி ஸ்டாலில் காப்பி ஆர்டர் செய்தார். ஒரு வாய் அருந்தினார். கண்றாவியாக இருந்தது. இந்தக் காப்பிக்கு எழுபத்தைந்து பைசாவா? என்ன கயவாளித்தனம்! வேறு சிலரும் அந்தக் காப்பியை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் எந்தவிதமான பாவமும் இல்லை. உலகமே ரோஷமற்றுப் போய்விட்டதாக அவருக்குத் தோன்றியது. இது போன்ற படங்களைப் பார்க்கிறார்கள்; இது போன்ற காப்பியைக் குடிக்கிறார்கள்.
அவர் 'டங்க்'கென்று ஓசையுடன் காப்பிக் கோப்பையைக் கௌண்டரில் வைத்தார்.
"இந்தாப்பா!" என்று காப்பி கொடுத்துக் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டார். அவன் அவரருகில் வந்தான். "இதென்ன காப்பியா?"
"ஆமாம், ஸாப்".
"இல்லை; இது காப்பியே இல்லை".
அவன் பேசாமல் நின்றான்.
"இது காப்பியில்லை" என்றார் அவர் மீண்டும். சுற்றியிருந்தவர்கள் அந்தப் பக்கம் பார்க்கத் தொடங்கினார்கள்.
"காப்ப்பிதான் ஸாப்"
"இல்லை".
"இவ்வளவு பேர் குடித்தார்கள்; யாரும் எதுவும் சொல்லவில்லை. நீங்கள்தான்"
"அவர்களுக்குச் சுரணையில்லை. உனக்கு வெட்கமில்லை. எதையே ஒன்றைக் காப்பியென்று ஏமாற்றி இவ்வளவு பணம் வேறு பறிக்கிறாயே அயோக்கிய ராஸ்கல்!"
"கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்கள்".
"உனக்கு மரியாதை வேறா திருட்டு ராஸ்கல்!"
அவ்வளவுதான்; அவன் அவர் சட்டையைப் பிடித்துவிட்டான். இதற்குள் இன்டர்வெல் விட்டு அங்கு நிறையக் கூட்டம் கூடிவிட்டது. பலர் அவர்களிடையில் குறுக்கிட்டு அடிதடி நேராமல் விலக்கி விட்டார்கள். அதே சமயம் அவருடைய மகனும் வெளியே சென்ற அப்பாவை இன்னும் காணோமே என்று அங்கே தேடிக் கொண்டு வந்து விட்டான்.
அந்த வெளிப்பாட்டை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவருக்குப் பெருமையாக இருந்தது. துக்கமாகவும் இருந்தது. சண்டையைப் பிரித்து விட்டார்களே தவிர காப்பியின் தரத்துக்கு எதிராக அவர் உயர்த்திய குரலுக்குப் பலம் சேர்க்க யாரும் முன்வரவில்லை. அவர்க்குத்தான் ருசி கெட்டுப் போய்விட்டதா? ருசியின் அடிப்படைகளே மாறிவிட்டனவா?
எப்படியிருந்தாலும், அந்த வெளிப்பாடு தூய்மையானது. இன்றைய வெளிப்பாடுகளைப் போல மோட்வானி போன்றவர்கள்பால் வெறுப்பு, மாட்டுப் பெண்ணின் பால் அதிருப்தி போன்ற உணர்வு கறை படியாதது. அவர் தன்னை இன்னமும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் தன் வெளிப்பாடுகளைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கும், இள வயதில் விதவையாக்கப்பட்டு அவருடனேயே தங்கி அவருடைய தாம்பத்திய வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை நரகமாக்கிய அவருடைய தமக்கைக்கும் என்ன வித்தியாசம்? அவளுக்குக் கல்யாணியிடம் தவறு கண்டுபிடிப்பதன் மூலமாகத்தான் தன் முக்கியத்துவத்தை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கும் அது போல ?
சே. சே.
இது அந்தக் காலமில்லை. அவருடைய மனைவி தன் நாத்தனாரைச் சகித்துக் கொண்டதைப் போல, அவருடைய மாட்டுப் பெண் அவரைச் சகித்துக் கொள்ள மாட்டாள். அவள் அப்படி இருக்க வேண்டுமென்று அவர் எதிர் பார்ப்பதும் நியாயமாகாது. இந்த அளவாவது அவள் அவரைச் சகித்துக் கொள்கிறாளேயென்று, வேளா வேளைக்குச் சோறு போடுகிறாளேயென்று - அவர் நன்றியுடன் இருக்க வேண்டும்.
அவர்களின்றி அவரால் இருக்க முடியாது. அனுவைப் பிரிந்து நிச்சயமாக இருக்க முடியாது. தனிமையைப் போக்கிக் கொள்ள அவர் அவர்களையே நம்பியிருப்பவர்.
தனிமை அவருக்குப் பிரியமானதில்லை. நேற்று சினிமாத் தியேட்டரில் ஒரு கணத்துக்கு அந்தப் பெருங்கூட்டத்திடையே தன் தனிமையை அவர் உணர்ந்தார். நேற்று அங்கே அவருடைய எதிர்ப்புக்குத் துணை கிடைக்காததுதான் இன்று சலூனில் அவரைத் தயங்கச் செய்திருக்க வேண்டும். தனிமையைப் பற்றிய பயம்தான், இறுதியில் மனிதனுடைய பாய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது, அவனைச் சமரசங்களில் சிக்க வைக்கிறது.
அவருடைய மகனும் மாட்டுப்பெண்ணும் மட்டும் தம் வர்க்கத்தினரிடமிருந்து வேறுபடுகிறவர்களாயிருக்க வேண்டுமென்றும், தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவர் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்?
ஒருவேளை, அதன் மூலம்தான் அவர்களுடன் சேர்ந்து வசிப்பதை அவர் நியாயப்படுத்திக் கொள்ள விரும்புகிறார் போலும்.
அட, சுயநலக்காரக் கிழவா!
அவர் மீண்டும் கைப்பிடிச்சுவரருகில் சென்று சாலையைப் பார்த்தார். அவருடைய மகன், மாட்டுப்பெண், மோட்வானி தம்பதியர் நால்வரும் அப்போதுதான் வீட்டிலிருந்து வெளிப்பட்டு சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள். மோட்வானி எதற்கோ உரக்கச் சிரித்தார். அவருடைய மாட்டுப்பெண் தான் மறுபடி நகைச்சுவை மிளிர எதையாவது சொல்லியிருக்க வேண்டும்.
அவள் அவருடைய மகனைக் கவர்ந்த, அவனுடைய எதிர்ப் பண்பினள். அப்படியானால், அவள் கல்யாணியின் மறுபுறமா?
கல்யாணியின் சுயநலமின்மை, நேர்மையான வெளிப்பாடுகள்; தீவிர நம்பிக்கைகளும் அவற்றுக்காகப் போராடும் துணிச்சலும்.
கீழே அனு இன்னமும் அந்தச் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரன் ஒரு ஈஸிசேரில் சாய்ந்தவாறு வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். நாகராஜன் நிற்பதைக் கவனித்து 'கீழே வாருங்களேன்' என்று சைகை செய்தான்.
நாகராஜன் படிகளில் இறங்கிக் கீழே சென்றார். அவனருகில் இருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தார். "உங்களுக்குத் தெரியுமா ஒரு விஷயம்- இந்த ஸலூனில் இருந்த நாவிதனை யாரோ இன்று கத்தியால் குத்தி விட்டார்களாம்" என்றான் வீட்டுக்காரன்.
நாகராஜனுக்கு படிகளில் இறங்கி வந்ததால் ஏற்பட்ட இதயப் படபடப்பு இப்போது மேலும் அதிகமாவது போலிருந்தது. "யார்"- என்று பதட்டத்துடன் தனக்கு வழக்கமாகப் பண்ணிவிடும் நாவிதனை விவரித்தார். அவன்தான், என்று வீட்டுக்காரன் ஊர்ஜிதப்படுத்தினவுடன், இதை நான் எதிர்பார்த்திருந்தேனா என்ன, என்று தன் விசாரணைக்காக அவர் வெட்கினார்.
பிறகு ஒரு இலேசான நம்பிக்கையுடன், ஒரு இலேசான பயத்துடன் கேட்டார். "உயிருக்கு ஆபத்தில்லையே?"
வீட்டுக்காரன் உதட்டைப் பிதுக்கினான். "ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாம்.குத்தினது யார் தெரியுமா? ஒரு பதினெட்டு வயதுப் பையன்".
ஆம். முள்ளங்கியும் கொய்யாப்பழமும் நறுக்கிக் கொண்டிருந்த அந்தப் பையனாகத்தான் இருக்கும். அவர் மேலே பேசவில்லை. ஒரு வேளை, தன்னால் இது நடக்காமல் தவிர்க்க முடிந்திருக்கலாம். தன் கைகளிலும் அந்த நாவிதனின் ரத்தக்கறை படிந்திருப்பது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது.
வெளியே திடீரென்று அவருக்குப் பரிச்சயமான அந்த மோட்டார் சைக்கிள் ஓசை தூரத்தில் மெல்லியதாகக் கிளம்பி, கிடுகிடுவென்று வேகமாக உயர்ந்தவாறே அருகில் நெருங்கி உச்ச கட்டத்தை அடைந்து அவர்கள் செவிகளை அதிரச் செய்துவிட்டு, மறுபடி தூரத்தில் தேய்ந்து மறைந்தது.
"தாத்தா! ஆத்துக்குப் போகலாமா?" என்றாள் அனு. அவரருகில் வந்து.
அவர் அந்தக் குழந்தையின் பரிசுத்தமான ஸ்பரிசத்தினால் தன்னைக் கழுவிக் கொள்ளவிரும்பியவரைப் போல, அவளை அவசரமாக தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டார்.
-----------------------------------------------------------
9. அப்பர் பெர்த்
கடைசியாக ஒரு உறிஞ்சு; கடைசி வாய்ப்புகை - ரயில் ஜன்னலுக்கு வெளியில் அவன் விட்டெறிந்த சிகரெட்டின் சிறு துணுக்கை வேகமான எதிர்க்காற்று கொத்திச் சென்றது.
இரவு மணி எட்டேகால். தொடர்ச்சியாக மூன்று சிகரெட்டுகளைக் குடித்தும் பதினைந்து நிமிடங்களைத்தான் தள்ள முடிந்திருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களை எப்படித் தள்ளுவது? - இந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியில், இந்த ஜனங்களுக்கு மத்தியில். சிதம்பரம் அருவருப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டான். டில்லியிலிருந்து அவசரமாகக் கிளம்பியதால் முதல் வகுப்பில் இடம் கிடைக்கவில்லை. அன்று எல்லோரும் அவனுக்கு அறிமுகமில்லாத டி.டி.ஆர்.கள் வேறு - இந்த டி.டி.ஆர்.களை ஏன் அடிக்கடி மாற்றுகிறார்கள்? ஒருவன் எத்தனை டி.டி.ஆர்.களைத்தான் வசப்படுத்த முடியும்?
டில்லியில் அவனை வழியனுப்ப வந்திருந்தவர்களை அவன் நினைவுபடுத்திக் கொண்டான் - சாந்தா, பேபி, ரத்னா, அபர்ணா - அவளைத்தான் முதலில் நினைக்க வேண்டும். மிஸ்டர் முகர்ஜியும் மிஸஸ் முகர்ஜியும் - மிஸஸ் முகர்ஜியின் கடைசிப் புன்னகை - அவனைப் போன்ற இளைஞர்களிடம் அவள் ஒரு பிரத்தியேக அலைவரிசையில் ஏதோ ஒலிபரப்புவதாகத் தோன்றுகிறது.
அந்தப் போலிக் கூட்டத்தில் உண்மையான பாசமென்பது அபர்ணாவுக்குத்தான் இருந்தது. ஸ்டேஷனில் அவளுடைய முகத்தில் தென்பட்ட தாபத்தைப் பார்த்தவுடன் அவனுக்குக்கூட நெஞ்சை ஏதோ செய்தது. அவளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டு,"உன் மனசு எனக்குத் தெரியும் அபர்ணா!" என்று மெல்லிய குரலில் அவளிடமும், "இவள்தான் என் உண்மைக் காதலி - தெரிந்து கொள்ளுங்கள்;!" என்று மற்றவர்களிடமும் உரக்கவும் சொல்லிவிட்டு, ரயிலைத் தவறவிட்டு அவளுடனேயே இருந்துவிடலாமா என்று தோன்றியது. ஆனால் நல்ல எண்ணங்கள் எங்கே நீடிக்கின்றன? கைக்குட்டையை ஆட்டி விடை கொடுத்த அவளுடைய தோற்றம் மட்டுந்தான் இப்போது மிஞ்சியிருந்தது - அதுவும், அவளுடன் முன்பு கழித் திருந்த பழைய தருணங்களின் மங்கலான நினைவும்; அமைதி யும் வாத்ஸல்யமும் அழகும் நிரம்பிய தருணங்கள் .. அபர்ணாவை மணந்து கொண்டால் வாழ்க்கைகயில் என்றைக்குமே அமைதியும் அழகும் மிளிரும். ஆனால், அவனுடைய ஆசைகள்? கனவுகள்? என்றும் சாதாரணமான வனாகவே இருந்துவிட அவன் விரும்பவில்லை. என்றாவது ஒருநாள் சமூகத்தில் பெரிய புள்ளியாக வரவேண்டும் - ஒரு புத்திசாலித்தனமன கல்யாணத்தின் மூலம் இதற்கு அவன் அடிகோலலாம். காதலா, வாழ்வில் மேன்மையா என்று யோசித்தபொழுது, பிந்தையதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.
திடீரென்று அவன் மடியில் ஒரு ரப்பர் பந்து வந்து விழுந்து சிந்தனையைக் கலைத்தது. நிமிர்ந்து பார்த்தபொழுது எதிர் ஸீட்டிலிருந்து வாயில் விரலைக் கடித்துக் கொண்டே பயமும் வெட்கமுமாகத் தன்னைப் பார்க்கும் சிறுவனைப் பார்த்தான் சிதம்பரம். பந்து அவனுடையதாகத்தான் இருக்கும். "இந்தா!" என்று புன்னகையுடன் அவனிடம் பந்தை நீட்டினான். சிறுவன் மிகவும் தயக்கத்துடன் அவனிடம் வந்து பந்தை வாங்கிக் கொண்டு, அவசரமாகத் தன் ஸீட்டுக்குத் திரும்பிச் சென்றான்.
எதிர் ஸீட்டிலிருந்த ஒல்லியான முப்பது வயது இளைஞர், சிறுவனின் தந்தை, சிதம்பரத்தைப் பார்த்துப் புன்னகையுடன், "ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டான்" என்றார்.
சிதம்பரம் அனுதாபம் செறிந்த ஒப்புதல் புன்னகையுடன், "சின்னவன்தானே! இந்தக் கம்பார்ட்மெண்டுக்குள் அவ னுக்கு அடைத்துப் போட்டது போலிருக்கும்" என்றான். இதைக் கேட்டு அவளும் புன்னகை செய்தாள் - பையனின் தாய், இளைஞனின் மனைவி. சிதம்பரத்துக்கு அந்தப் புன்னகை பிடித்திருந்தது. அவளுடைய கண்கள், எடுப்பான நாசி, கன்னங்கள், கழுத்து - ஏன், உடல் முழுதுமே சேர்ந்து புன்னகை செய்தது போல அவனுக்குத் தோன்றியது.
"நீங்களும் சென்னைக்குத்தானா?" என்று சிறுவனின் தந்தை கேட்டான்.
"ஆமாம்" என்றான் சிதம்பரம்.
"அங்கேதான் உத்தியோகமாக?"
"இல்லை - டில்லியில் ஒரு கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக இருக்கிறேன்"
"ஓகோ! டில்லிவாலாதானா நீங்களும்!"
"பக்கா டில்லிவாலா!" என்று சிதம்பரம் சிரித்தான்.
இவன் என்ன வேலை செய்து கொண்டிருப்பான் என்று சிதம்பரம் ஊகிக்க முயன்றான். ஏதாவது சர்க்கார் ஆபீஸில் மேஜை உத்தியோகமாக இருக்கும். முகத்திலும் பாவனைகளிலும் கொஞ்சமாவது சுறுசுறுப்போ ஊக்கமோ தென்படவில்லை. "மினிஸ்ட்ரியில் வேலையாயிருக்கிறேன்" என்று எதிர் ஸீட்டாளி சொன்னவுடன் சிதம்பரத்தின் ஊகம் ஊர்ஜிதமாயிற்று.
மனைவி அழகானவள்தான் நிஜமாகவே - அதுவும் இந்தக் கணவனுடன் ஒப்பு நோக்கும்போது! அவன் பார்த்திருந்த பல பொருத்தமற்ற ஜோடிகளில் இதுவும் ஒன்று. அந்தப் பெண்ணுக்கு இதைவிட நல்ல கணவனைப் பெறும் தகுதி நிச்சயமாக இருக்கிறது; செக்கச் செவேலென்று மூக்கும் முழியுமாக - அடேயப்பா, போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுவார்களே - இந்தப் பயலுக்கு அதிர்ஷ்டம்.
இவனுக்கு அதிர்ஷ்டம், அவளுக்குத் துரதிர்ஷ்டம். பாவம், மனதாழத்தில் ஒரு ஏக்கம் இருந்தாலும் இருக்கும் - ஒரு ஆற்றாமை, ஒரு தவிப்பு - தனக்கு ஏற்ற கணவன் கிடைக்கவில்லையேயென்று. சிதம்பரம் நாசூக்காக அவ ளையே பார்க்கத் தொடங்கினான் - அவள் உள்ளத்து உணர்வுகளை பார்க்கத் தொடங்கினான் - அவள் உள்ளத்து உணர்வுகளை அளந்தெடுக்க, உள்ளத்து ஆழத்தை உணர, முயலுபவனைப்போல. அவ்வப்போது அவள் பார்வை அவன் பார்வையைச் சந்தித்து விலகியது. அவன் பார்வை தன்மேல் லயித்திருப்பதை உணர்ந்தும் அதை அவள் பொருட்படுத்தவில்லை. ஒரு மெல்லிய புன்னகைதான் அவள் முகத்தில் தேங்கியிருந்தது.அவனுடைய பார்வையை அங்கீ கரிக்கும் புன்னகையா இது?
அந்தச் சிறு பையன் தன் அப்பாவிடம் மெல்லிய குரலில் ஏதோ சொன்னான். உடனே இளைஞன் சிரித்துக் கொண்டே சிதம்பரத்தைப் பார்த்து,"அப்பர் பெர்த்தில் ஏறணு மென்கிறான்" என்றான். கீழ்ப் பெர்த்துகள்தான் இளைஞன னுடையவை. மேலேயிருந்த பெர்த்துகளில் ஒன்று சிதம்பரததினுடையது, இன்னொன்று அருகிலிருந்த கிழவ ருடையது. "ஓ, ஷ்யூர்" என்று சிதம்பரம் புன்னகையுடன் அந்தச் சிறுவனை அலாக்காகத் தூக்கி மேல் பெர்த்தில் உட்கார்த்தி, செல்லமாக அவன் கன்னங்களில் தட்டினான்; பிறகு மறுபடி தன் இடத்தில் உட்கார்ந்தான்.
மேலேயிருந்த பையன் "அம்மா!" என்று அழைத்தான். ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்ததைப் போன்ற பெருமிதத்துடன். அவள் பையனைப் பார்த்துச் சிரித்தாள். "படுத்துத்தூங்கு" என்று சைகை காட்டினாள். எவ்வளவு அழகிய சிரிப்பு; எவ்வளவு அழகிய பாவங்கள், பாவனைகள். சிதம்பரம் கண்ணாடி ஜன்னலில் தெரிந்த அவளுடைய பிம்பத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். சிறிது நேரம் சென்றது. அவள் டிபன் காரியரை எடுத்துத் திறக்கத் தொடங்கினாள்.
"ஸார், இட்லி சாப்பிடுகிறீர்களா?"
சிதம்பரம் மறுக்கத்தான் நினைத்தான்; ஆனால் கைவளையல்கள் குலுங்க, அழகிய நீண்ட விரல்களால் அவள் இட்லியை எடுத்து,"இந்தாருங்கள்" என்று புன்னகையுடன் நீட்டியபொழுது, மறுக்க முடியவில்லை. இலையை வாங்கும்பொழுது வேண்டுமென்றே அவள் விரல்களைத் தீண்டினான். அவள் முகத்தில் சலனமே இல்லை. தற்செயலாகத் தீண்டியிருப்பதாக எண்ணியிருப்பாளோ? இருக்காது. இருக்காது. கணவன் இருக்கிறானேயென்றுதான் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை. இட்லிக்குப் பிறகு, வேண்டாம் வேண்டாமென்று சொல்லியும் கேளாமல் அவள் அவன் இலையில் தயிர் சாதத்தைப் பரிமாறினாள், புன்னகையுடன். அந்தப் புன்னகையையே தொட்டுக் கொண்டு தயிர் சாதத்தைச் சாப்பிட்டு முடித்தான். "சாப்பாடு நன்றாயிருந்தது" என்று அவன் சொன்னவுடன், அதே புன்னகை மறுபடி பரிசாகக் கிடைத்தது - கொசுறு.
மேல் பெர்த்திலிருந்த பையன் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிட்டிருந்தான். கீழே படுக்கைகளை விரித்து, மேலேயிருந்து பையனைத் தூக்கி கீழே படுக்க வைத்தாள் அவள். சிகரெட்டுகளைப் புகைத்தவாறு ஜன்னல் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரம், எழுந்து தன்னுடைய அப்பர் பெர்த்தில் ஏறிப் படுத்துக் கொண்டான்.
இப்போதுதான் தன்னுடைய இயல்பான இடத்துக்கு வந்துவிட்டது போன்ற ஒரு நிம்மதியும் திருப்தியும் அவனுக்கு ஏற்பட்டது. முதல் வகுப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்த அப்பர் பெர்த்தாவது கிடைத்தது, நல்ல வேளையாக. இல்லாவிட்டால் இந்தப் பாமர ஜனங்களோடு சரிசமமாக அவனும் உட்கார்ந்து கொண்டு - சே! நல்லவேளை, இப்போது இந்தப் பெண்மணி எதிரேயிருப்பதால் மூன்றாம் வகுப்புப் பயணமும் ஓரளவு சகிக்கும்படியாக இருக்கிறது. விளக்கு அணையும்வரைர, அவன் மேலேயிருந்து அந்தப் பெண்மேல் பார்வையை வீசியவாறு இருந்தான். விளக்குகள் அணைந்த பிறகு, அவனுக்குச் சென்னையில் தனக்ககாகக் காத்திருக்கும் இந்திராணியின் நினைவு வந்தது - இந்திராணி, அவனுடைய ஆகப் போகும் மனைவி.
இந்திராணி, இந்திராணி, இந்திராணி. எப்படியிருப்பாள் அவள் இப்போது? பருத்திருப்பாளா? அல்லது சற்று இளைத் திருப்பாளோ? இளைத்துத்தான் போயிருப்பாள். போன தடவை பார்த்தபொழுதே "டயட்டில் இருக்கிறேன். ஸ்லிம் ஆகப் போகிறேன்" என்று சொல்லவில்லையோ? இளைத்துத்தான் இருப்பாள். பறவை இறகுகளால் செய்யப் பட்டவள் போல எடையே இல்லாதவளாக அவள் என் மார்பில் வந்து சாய்வாள். காற்றில் அவள் பறந்து விடக்கூடாதே என்று என்னுடன் அவளைச் சேர்த்து நான் அணைத்துக் கொள்வேன். மிருதுவான, எடையில்லாத இந்திராணி.
ஆமாம். எடையேயில்லாத.
ஆனால்? திடீரென்று இவன் நெஞ்சில் ஒரு திகில் மூண்டது - அவளுடைய மனம்? அதுவும் எடையேயில்லாது இருக்காதே? அவன் இல்லாதபோது, அவனைவிடப் பலமான காற்றுகள் எதிலும் அடித்துச் செல்லப்பட்டிராதே? இப்போது நான் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது அவள் யாரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பாள்? என்னைப் பற்றித்தானா - அல்லது? இந்த நேரத்தில் வீட்டில்தான் இருப்பாளா அல்லது வெளியில் எங்கேயாவது போயிருப்பாளா? தனியாகப் போயிருப்பாளா, அல்லது .....
அல்லது?
'கூ'வென்று தூரத்தில் கேட்ட இஞ்சினின் ஓலம்; கொட கொடவென்று பாலத்தின் மேல் ரயில் போகும் பெருத்த ஓசை - வேதனையுடனும் ஆத்திரத்துடனும், 'ஓ, மை காட்!" என்று சிதம்பரம் காதைப் பொத்திக் கொண்டான். 'நான் ஒரு முட்டாள்' என்று தன்னைத்தானே வைது கொண்டான்.
ஆறு மாதங்களாக அவன் அவள் பக்கத்தில் இல்லாமல், அவளைப் பார்க்கப் போகாமல், ஆயிரம் மைல்களுக்கப்பால் அப்பாடாவென்று உட்கார்ந்திருந்ததது எவ்வளவு அசட்டுத் தனம்! காதலென்ன, பாங்கில் போடப்பட்ட பணமா தன் பாட்டில் வட்டியைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்து கொண்டே போக? எப்போதும் அருகிலேயே இருந்து நீர் பாய்ச்சி உரமிட்டு வேறு பிராணிகள் மேய்ந்து விடாமல் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்கப்பட வேண்டிய பயிர் அது. அதுவும் இந்திராணி ஒரு பொன்வயல், வைரச் சுரங்கம் - அவளுடைய உள்ளத்தில் காதல் வித்திட்டு உழுது உயரமாக வளர்த்துப் பிறகு ரூபாய் நோட்டுகளாகவும் சொகுசான செல்வச்சீமான் வாழ்க்கையாகவும் அறுவடை செய்து அனுபவிக்க யார்தான் போட்டியிட மாட்டார்கள்? அவளைச் சார்ந்த சமூக அந்தஸ்திலும் செல்வாக்கிலும் பங்கு பெற ஒவ்வொருவரும் என்னதான் முதல்போட, பணயம் வைக்க, தயாராக மாட்டார்கள்? கிடைத்தற்கரிய அவளுடைய காதல் சிதம்பரத்துக்குக் கிடைத்திருந்தது -
ஆனால் ஆறுமாத இடைவெளிக்குப் பிறகு இன்னமும் அவள் காதல் தன் பக்கமேதான் இருக்குமென்று அவன் நம்பலாமா, கூடாதா?
ஆறு மாதங்கள்!
'முட்டாள், முட்டாள்!" என்று முனகியவாறு சிதம்பரம் புரண்டு படுத்தான். திடீரென்று ரயில்வே ஸ்டேஷனின் சந்தடியும் இரைச்சலும் கேட்கத் தொடங்கின. கிரீச்சென்ற ஒலியுடன் ரயில் நின்றது. பூரிமசாலே - கரம்சாய் - பான், பீடி, சிகரெட் - யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் .....
எங்கோ கனவில் கேட்பது போல பிளாட்பாரத்து ஒலிகள் அவன் காதில் வந்து மோதின. அந்த ஒலிகளிலிருந்தே பிளாட்பாரத்துக் காட்சிகளை அவனால் கற்பனை செய்ய முடிந்தது. பல சமயங்களில் பல பிளாட்பாரங்களில் அவன் பார்த்திருந்த காட்சிகள் ... அவன் கண்களை இறுக மூடிக் கொண்டான். உலகத்திலிருந்த பிளாட்பாரங்களை யெல்லாம் சேர்த்து ஒரு நீளமான பிளாட்பாரம் அமைத்திருப்பது போலவும், அதில் அவன் நடந்து கொண்டேயிருப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது; ரயில்கள் வருவதும் ரயில்கள் போவதுமாய் இருந்தன. ரயில்களே இல்லாத ஒரு இடத்தை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான். ஆனால், பிளாட்பாரம் முடிவில்லாமல் நீண்டுகொண்டே சென்றது. நடந்து நடந்து அவன் இரண்டு வருடங்கள் பின்னே சென்றுவிட்டான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் டில்லி பிளாட்பாரத்தில் அவன் காத்திருந்தபோது ...
அப்போது குளிர்காலமாக இருந்தது. டிசம்பர் மாதக்குளிர் காற்று கம்பளி உடைகளையும் ஊடுருவிப் புகுந்து அவன் உடலை வெடவெடக்கச் செய்து கொண்டிருந்தது. பம்பாயிலிருந்து வருவதாயிருந்த அவனுடைய கம்பெனியின் டைரக்டர் ஒருவரை வரவேற்பதற்காக, டில்லிக் கிளையின் சார்பில் அவன் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போதெல்லாம், இதுபோன்ற வேலைகள் அவன் தலையில்தான் விழும். மொத்தமே மூன்று பேர்கள்தானே உண்டு அப்போது - மானேஜர் ராகவாச்சாரி, டிஸ்பாச் கிளார்க் ஜோசப், சிதம்பரம்.
அப்போது அவன் ஸ்டெனோகிராபராக இருந்தான். ஆனால் உண்மையில் பியூன், டெலிபோன் ஆப்பரேட்டர், ரிஸப்ஷனிஸ்ட், கார் டிரைவர் எல்லாமே அவன்தான். "இன்று கிளப்பில் பிரிட்ஜ் டூர்னமென்ட் சிதம்பரம் ... ஐ கான்ட் - மிஸ் இட். நீ ஸ்டேஷனுக்குப் போக முடியுமா, ப்ளீஸ்? டைரக்டரிடம் எனக்கு உடல் நலமில்லையென்று சொல்" என்றார் ராகவாச்சாரி. "யெஸ் சார்" என்று அவரிடம் சொல்லிவிட்டு அன்றைய குளிர் இரவில் பிளாட்பாரத்தில் காத்திருந்தான்.
ரயில் வந்ததும், பழக்கதோஷத்தினால் மூன்றாம் வகுப்புப் பெட்டியை நோக்கிச் சென்றதும், பிறகு சட்டென்று நினைவு வந்தவனாய் முதல் வகுப்புப் பெட்டியருகே ஓடியதும் இன்னமும் அவனுக்கு நினைவிருக்கிறது. டைரக்டருடைய புகைப்படம் ஒன்றை முன்பே அவன் கம்பெனியில் பார்த்திருந்தான், நல்லவேளையாக. கறுப்பு சூட்டணிந்து சுருட்டுப் புகைத்தவாறே நின்றிருந்தவரை அடையாளம் கண்டுகொண்டு,"எக்ஸ்க்யூஸ் மீ ஸார் - நீங்கள் தானே மிஸ்டர் பட்டாபி" என்று அவன் கேட்டதும், அவர் ஆமாம் என்றார். உடனே அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். 'வெரி கிளாட் டு மீட் யூ' என்று அவர் தம் கையை நீட்டினார்.
சிதம்பரம் திக்குமுக்காடிப் போனான். சங்கடத்துடன் அவர் கையைப் பற்றிக் குலுக்கினான். "இவள் என் பெண் இந்திராணி" என்று அவர் தம் அருகில் இருந்த பெண்ணைக் காட்டினார். சிதம்பரம் கைகூப்புவதா, கை குலுக்குவதா என்று முடிவு செய்யுமுன்பே, "ஹவ் டூ யூ டூ" என்று அவள் புன்னகையுடன் கை நீட்டினாள்.
ஸ்டேஷனை விட்டுக் கார் சிறிது தூரம் போன பிறகுதான் அவர் கேட்டார், ராகவாச்சாரி ஏன் வரவில்லையென்று. "ஜுரம்" என்றான் சிதம்பரம்.
"இன்று ஆபீஸ் வரவில்லையாக்கும்?"
சிதம்பரம் ஒரு கணம் தயங்கினான்.
"வந்திருந்தார்".
"உம்".
எதையாவது ஊகித்திருப்பாரோ? சிறிது நேரம் மௌனம் நிலவியது. பிறகு, "நீங்கள் டில்லியில் வெகு நாட்களாக இருக்கிறீர்களா?" என்று அவர் கேட்டார்.
"யெஸ் ஸார் - எட்டு வருடங்களாக".
"எனக்கு இதுதான் முதல் தடவை. டில்லி நல்ல நகரந்தானா? உங்கள் அபிப்பிராயமென்ன?"
"எனக்குப் பிடித்திருக்கிறது ஸார்".
"விசேஷ காரணம் ஏதாவது உண்டா?"
"ஏனென்று சொல்லத் தெரியவில்லை.. டில்லியின் திறந்த வெளிகள், மரங்களடர்ந்த சாலைகள், இடிந்த கோட்டைகள், அடிக்கடி மாறும் சீதோஷ்ண நிலை, பரபரப்பின்றி மந்த கதியில் செல்லும் வாழ்க்கை - எல்லாமே எனக்குப் பிடிக்கிறது"
"ரியலி? ஆனால் சிதம்பரம், எனக்கென்னவோ மந்தகதியே பிடிக்காது, நான் வேண்டுவதெல்லாம் வேகம், வேகம், வேகம்!"
சிதம்பரம், அக்ஸலரேட்டரை அழுத்தினான். கார் வேகமாகச் செல்லத் தொடங்கியது. பார்லிமெண்டு வீதி, செக்ரடேரியட் வட்டாரங்கள் வழியே செல்லும்போது இரு புறங்களிலும் வரிசையாக இருந்த உயரமான கட்டிடங்களை அவர் பார்த்தார். "டில்லி வேகமாக வளர்ந்து வருகிறது்" என்றான் சிதம்பரம். இந்தியா கேட் வழியே செல்லும்போதும், தீன்மூர்த்தியைத் தாண்டிச் சாணக்கியபுரியை நோக்கிச் செல்லும்போதும், சாலையின்இரு புறங்களிலும் விசாலமான திறந்த வெளிகளைப் பார்த்து மறுபடி அவர் பிரமித்தார். "ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு தோற்றம் காட்டும் நகரம் டில்லி" என்றான் சிதம்பரம்.
பட்டாபி சுருட்டுச் சாம்பலைத் தட்டினார். "இவ்வளவு வளர்ச்சிக்கும் மாறுதல்களுக்கும் நடுவே, டில்லியில் நம்முடைய கம்பெனி மட்டும் வளராமல் மாறாமல் இருப்பது ஒரு சாதனை இல்லை?" என்றார். சிதம்பரத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது. பிறகு அசோகா ஹோட்டலை அடையும் வரை அவன் பேசவில்லை. அசோகா ஹோட்டலில் அவருக்குத் தங்க ஏற்பாடுகள் செய்த பிறகு, ராகவாச்சாரியுடன் பேசினான் - அவசரமாக போனில்.
மறுநாள் காலை அசோகா ஹோட்டலுக்கு அவரைப் பார்க்க அவனும் ராகவாச்சாரியும் சென்றபோது அவர் குளித்துக் கொண்டிருந்தார். "வந்துவிடுவார், உட்காருங்கள்" என்றாள் இந்திராணி. பிறகு டில்லியைப் பற்றியெல்லாம் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டாள். "நீங்களெல்லாரும் கம்பெனியைப் பற்றியும் வியாபாரத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பீர்கள்; எனக்குத்தான் போர் அடிக்கும்" என்றாள். "நான் டில்லியைச் சுற்றிக் காட்டுகிறேன்,
உங்களுக்கு" என்றான் சிதம்பரம். அவள் மகிழ்ச்சியுடன் புன்னகை செய்தாள். இளமையின் புதுமையும் கவர்ச்சியும் அவர்களிடையே பாலமாக அமைந்தன. அந்தப் பாலத்தில் அவர்கள் ஒருவரை நோக்கி ஒருவர் நடக்கத் தொடங்கினார்கள்...
ராகவாச்சாரியின் குரல் இந்த மயக்கத்தைக் குலைத்தது. "டில்லியில் யாரும் பார்த்தேயிராத இடங்களெல்லாம் எனக் குத் தெரியும். இருபது வருடங்களாக அல்லவா இங்கே இருக் கிறேன்... எல்லோரையும் ஒரு நாள் கூட்டிப் போகிறேன்".
இதைக் கேட்டுக் கொண்டே பட்டாபி வந்தார் - பாத்ரூமிலிருந்து, இடுப்பில் ஒரு டவலுடன். "ஆனால் உங்களுக்குச் சௌகரியப்படுமா? உடம்பு சரியில்லையென்று கேள்விப்பட்டேன்?" என்றார்.
ராகவாச்சாரி திடுக்கிட்டு எழுந்து நின்றார்.
"இன்று உடம்பு தேவலையா?"
"யெஸ் ஸார்".
"ஆம்" என்று அவர் உள்ளே சென்று ஒரு லுங்கியும் டிரஸ்ஸிங் கௌனும் அணிந்து ஒரு சால்வையும் போர்த்திக் கொண்டு வந்தார். "இந்த வெதரே மோசம் போலிருக்கிறது இல்லை? நான்கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றார்.
"ஆமாம் ஸார். ரொம்ப ஏமாற்றுக்கார வெதர் இது"
"டில்லியின் பழைய பிரஜையான உங்களையே ஏமாற்றிவிட்டதே!" என்றாரோ பட்டாபி, எல்லாரும் சிரித் தார்கள்.
"பகலில் கூடக் குளிருமோ?" என்றார் பட்டாபி.
"நிழலில் குளிரும்; ஆனால் வெய்யிலில் சுகமாயிருக்கும் ஸார்" என்றார் ராகவாச்சாரி.
"அப்படியானால் எனக்குக் கொடுத்து வைக்கவில்லை" என்றார் பட்டாபி. "இன்றையப் பகல் பொழுதை ஆபீசுக்குள்ளே நிழலிலேதான் நாம் கழிக்க வேண்டியிருக்கும்; உங்களுக்கு ஆட்சேபணையில்லையே?"
"நோ, ஸார்".
"வெய்யிலில் நம்முடைய பங்கு வீணாகாமல் இருக்க நமது பிரதிநிதிகளை அனுப்பிவைக்கலாம்... மிஸ்டர் சிதம்பரம்!"
"ஸார்?"
"என் பெண்ணுக்கு டில்லியைப் பார்க்க வேண்டுமாம் - உங்கள் உதவி கிடைக்குமா?"
"யெஸ் ஸார்".
"தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும்".
"பரவாயில்லை, ஸார்".
"வெய்யில் எப்படி இருந்ததென்று எங்களிடம் வந்து சொல்லுங்கள் - ஹ ஹ ஹ..."
வெய்யில் மிக நன்றாக இருந்தது. ஒத்தடமிடுவது போன்ற இதமான கதகதப்பு! மந்தமான கண்கள் கூசாத வெளிச்சம் - டில்லியின் குளிர்கால வெய்யில் இதற்கு முன்பு இவ்வளவு மனோகரமாகவும் பரவசமூட்டுவதாகவும் அமைந்ததேயில்லை என்றுதான் சிதம்பரத்துக்குத் தோன்றி யது. வெய்யிலின் கிரணங்கள் மெல்லிய நூலிழைகள் போலவும், அந்த இழைகளெல்லாம் இணைந்து மிருதுவான போர்வையாகி அவனையும் இந்திராணியையும் போர்த்தி யணைப்பது போலவும் இருந்தது. பிர்லா மந்திரிலும் செங்கோட்டையிலும் காந்தி சமாதியிலும் செருப்பை அவிழ்த்து விட்டு அழகிய சிவந்த பாதங்கள் சலவைக் கற்கள் மீது பதிய நடந்தவாறே "ஸ்ஸ்... சுடுகிறது ரொம்ப" என்று இந்திராணி சொல்லும்போது எவ்வளவு அழகாக இருந்தது! அவளே ஒரு சலவைக்கல் பிம்பமாகத்தான் வெய்யிலில் பளபளத்தாள். சிதம்பரம் அவளைத் தொட்டுப் பார்த்தான். "நீங்களும் இந்த வெய்யில் நிறமாகவே இருக்கிறீர்கள்" என்றான். அவள் கலகலவென்று சிரித்தபோது அவளுடைய பற்களும் ஈர உதடுகளும் கண்களும் எப்படி வெய்யிலில் பளபளத்தன! மிருகக் காட்சிச் சாலையைச் சுற்றி வரும்போது, "நீங்கள் உயரமாக இருக்கிறீர்கள், உங்கள் பின்னாலேயே வந்தால் நிழலாக இருக்கிறது", என்று அவன் பின்னாலேயே அவள் நடந்து வரும்போது, இந்தியா கேட் ஏரியில் படகில் செல்லுகையில் அவள் ஜலத்தில் தெரிந்த தன் பிம்பத்தை நோக்கிக் குனிந்து தலைமயிரைச் சரிசெய்து கொள்ளும்போது துடுப்பு அவள் மீது நீரைத் தெறிக்க, படிய வாரப்படாமல் சிலும்பி நின்ற அவள் தலைமயிரில் நீர்த் துளிகள் முத்து முத்தாக வெய்யிலில் பிரகாசித்ததும், கனாட் பிளேஸ் கடைகளின் கண்ணாடி ஜன்னல்களில் பிரதிபலித்துத் தெரிநாத வெய்யிலும், சாலையும், சாலையில் பளபளவென்று ஓடிய கார்களும் - "அது என்ன விலை?" என்று அவளுடைய பிமபத்தைக் காட்டி அவன் கேட்டதும், 'உக்கூம்' என்று அவள் நொடிப்புடன் முறுவலித்ததும்- எல்லாமே எவ்வளவு நன்றாக இருந்தது!
ஆமாம். வெய்யில் நன்றாக இருந்தது டில்லி நன்றாக இருந்தது. இந்திராணி நன்றாக இருந்தாள்.
அடுத்த நாள் அதே இடங்களை இந்திராணியின் அப்பாவுடன் பார்த்தபொழுது?
குதுப் மினாரின் உச்சியிலிருந்து டில்லியைப் பார்த்து அவர் பெருமூச்செறிந்தார். "எவ்வளவு திறந்த வெளிகள், எவ்வளவு வாய்ப்புகள்!" என்றார். "பம்பாயையோ சென்னையையோ பார்க்கும்போது, எனக்கு என் முகத்தையே கண்ணாடியில் பார்ப்பது போலிருக்கிறது - வாய்ப்புகளைப் பெரும்பாலும் உபயோகித்துத் தீர்த்து விட்ட சந்துஷ்டியும் நிறைவுமான தோற்றம் - ஆனால் புது டில்லியைப் பார்க்கும் போது உன்னைப்போல ஒரு இளைஞனைப் பார்ப்பது போலிருக்கிறது - தடுமாற்றத்துடனும் சந்தேகத்துடனும் தன் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கும் இளம் கீற்று - இந்த இளைஞனை நாம் நினைத்தால் நம் இஷ்டப்படி வளர்க்கலாம் சிதம்பரம் - நம்மையும் வளர்த்துக் கொள்ளலாம்."
அவர் பேசிக் கொண்டே போனார். மாலையில் ஹோட்டலில் அமர்ந்திருந்த போதும் அவர் இதைப் பற்றித்தான் பேசினார். - கையில் மதுக் கிண்ணத்தைப் பிடித்தபடி. "டில்லியில் நான் வேண்டுவது உன்னைப் போன்ற ஒரு இளைஞனை!" என்றார் அவர்.
"ராகவாச்சாரியைப் போன்றவர்கள் அல்ல>"
"சென்ற ஐந்து வருடங்களாக, வழக்கமான சில வாடிக்கைக்காரர்களிடமிருந்து ஆர்டர்கள் வாங்கிக் கொண்டு, தலைமைக் காரியாலயத்திலிருந் அவர்களுக்கு வேண்டிய வற்றை வரவழைத்துக் கொடுப்பதைத்தான் டில்லிக் கிளை செய்து வருகிறது" என்றார் அவர். புதிய வாடிக்கைக்காரர்கள்? வியாபாரப் பெருக்கம்? - ஊஹூம். "கார்கள் பெருகி வரும் டில்லியில், கார் உறுப்புகளுக்கு விநியோகஸ்தர்களான நமக்கு விற்பனை பெருகவில்லை. முயற்சி செய்தால்தானே?"
"இனி முயற்சி செய்வது, உன் பொறுப்பு. டில்லியில் இனி நீ விற்பனைப் பிரதிநிதி. மற்றவர்களுடைய தயாரிப்புகளை விநியோகம் செய்வதுடன், நாமே பல பொருள்களைத் தயாரிப்போம் - வளரும் நகரத்தக்குத் தேவையான பொருள்கள்.."
பேசிவிட்டுப் போனதையெல்லாம் அவர் செயலிலும் காட்டினார். டில்லிக்கு அருகே கட்டிட சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். சிதம்பரம் விற்பனைப் பிரதிநிதியானான். அவன் வாழ்வின் போக்கே துரிதமாக மாறிக் கொண்டு சென்றது. டில்லிக் கிளையின் வியாபாரம் பெருகியது. சிதம்பரத்துக்குப் பட்டாபியிடம் சலுகையும் செல் வாக்கும் வளர்ந்தது. இந்திராணிக்கும் அவனுக்குமிடையே காதலும் வளர்ந்தது - ஆறு மாதங்களுக்கு முன்பு அவன் சென்னையிலிருந்தபோது அவர்களுடைய கல்யாணத்துக் கான பேச்சுக்கள் பிரஸ்தாபமாகுமளவுக்கு.
ஆறு மாதங்களுக்கு முன்பு! சிதம்பரத்துக்கு வெகுநேரம் தூக்கம் வரவில்லை.
காலையில் கண்விழித்ததும் கீழ்ப் பெர்த்திலிருந்த பெண்மணியின் முகத்தில்தான் விழித்தான். பல் துலக்கிவிட்டு வந்தான். அவளை மீண்டும் பார்த்தான். அப்போதுதான் சட்டென்று அவள் முகத்தில் துக்கம் கவிந்திருப்பதை அவன் உணர்ந்தான். "அப்பா, அப்பா" என்று சின்னப் பையன் சிணுங்குவதையும் கவனித்தான். அவளிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தபோது, அவளே பேசத் தொடங்கினாள்: 'இவர் ராத்திரி ஏதோ ஸ்டேஷனில் இறங்கினவர் திரும்பி வரவில்லை; ரயிலைத் தவறவிட்டு விட்டார் போலிருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று சொல்லிவிட் அவள் அழத் தொடங்கினாள்.
சிதம்பரம் திடுக்கிட்டான். "அழாதீர்கள், ஏன் அழுகிறீர்கள்" என்று அவளைத் தேற்றினான். "ஒரு வேளை வேறு ஏதாவது பெட்டியில் ஏறியிருப்பார்."
"அப்படியெல்லாம் இருந்தால் இதற்குள் வந்திருக்க மாட்டாரா?''
"இன்னொரு பெட்டியில் ஏறியவுடன் தூங்கியிருப்பார். இப்பொழுது பொழுது விடிந்து விட்டதல்லவா, இனிமேல் வந்தாலும் வருவார்"
"துக்கப்படும்போது கூட அவள் எவ்வளவு அழகாக இருக்கறாள்" என்று சிதம்பரம் நினைத்தான். அவளுடைய தவிப்பு அவனுக்குப் பரிதாபமாகவும் இருந்தது. சுவாரஸ்ய மாகவும் இருந்தது. ஒவ்வொரு ஸ்டேஷன் நெருங்கும்போதும் அவள் முகத்தில் பளீரென்று நம்பிக்கை சுடர்விடும். பிளாட்பாரத்தை அவள் கண்கள் பரபரப்புடன் துழாவும். பெட்டிக்குள் ஏறி வருபவர்கள் ஒவ்வொருவரையும் ஆர்வத்துடன் தலை நிமிர்ந்து பார்ப்பாள். பரபரப்பு, ஆர்வம், பரபரப்பு பிறகு வண்டி கிளம்பும், கணவன் வராமலேயே. அவள் முகத்தில் ஏமாற்றம் சூழும். ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். "அப்பா எங்கேம்மா?" என்பான் சிறுவன். கண்களில் நீர் தளும்ப அவள் அணைத்துக் கொள்வாள்.
நாலைந்து ஸ்டேஷன்களுக்குப் பிறகு அவளுடைய நம்பிக்கையும் ஆர்வமும் மெல்ல மெல்லக் கரைந்து மறைந்தன. அவளுடைய சோகமும் குறைந்ததாகத் தோன்றியது. அழளுடைய முகத்தில் ஒரு அமைதி குடிகொண்டது - எந்த அசைவுமின்றி, சிலைபோல அவள் உட்கார்ந்திருந்தாள். அந்தச் சிறுபையன் தனக்குத்தானே ஏதோ விளையாட்டுக்களில் ஈடுபட்டவாறே தந்தையைப் பற்றி மறந்துவிட்டவன் போல இருந்தான். அவளும்கூட மறந்திருப்பாளோ? அவள் முகத்திலிருந்ததென்ன ஆறுதலா, அல்லது ஆழ்ந்த சோகமா?
சிதம்பரத்தால் ஒரு முடிவுக்கு வர முடிய வில்லை. அடுத்த ஸ்டேஷனில் அவன் காப்பி வாங்கிக் கொடுத்தபொழுது முதலில் அவள் மறுத்தாள். அவன் வற்புறுத்திய பிறகு, தானும் குடித்து சிறு பையனையும் குடிக்கச் செய்தாள். சிதம்பரம் நியூஸ் பேப்பரும் சில சஞ்சிகைகளும் வாங்கினான். அந்தச் சிறுவனுக்கு ஒரு பிஸ்கட் பொட்டலமும் ஒரு விளையாட்டு மோட்டாரும் வாங்கிக் கொடுத்தான். அவள் பலமாக ஆட்சேபித்தாள்; சிதம்பரம் ''பரவாயில்லை " என்று புன்னகை செய்து சமாளித்தான்.
காலை வெய்யிலில் நனைந்து கொண்டு ரயில் வேகமாக ஓடியது. நாளை இந்தப் பயணம் முடிந்துவிடும். பிறகு அவள் எங்கேயோ, அவன் எங்கேயோ? 'சீக்கிரம், சீக்கிரம்' என்றது மனம்.
சிதம்பரம் அந்தச் சிறு பையனைத் தன் மடியில் இழுத்து உட்கார்த்திக் கொண்டான்.
"உன் பெயர் என்ன சொல்லு?"
"பாலு."
"பாலுவா, வெரி குட்! பாலு, உனக்கு ரயில் எப்படி ஓடறது தெரியுமா?"
"இன்ஜின் ரயிலைக் கூட்டிண்டு போறது."
"இஞ்ஜின் எப்படி ஓடறது?"
"இஞ்ஜின் டிரைவர் இஞ்சினை ஓட்டிண்டு போவார் - கூ! சுக்சுக் சுக்சுக்.."
"நீ பெரியவனானப்புறம் இஞ்சின் டிரைவராப் போவியா?"
"மாட்டேன். நான் மோட்டார் டிரைவராத்தான் போவேன்."
அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது, இந்தப் பதிலைக் கேட். பதிலைவிடச் சிரிப்பை ரசித்தான் அவன்.
"மாமாவுக்கு பொயட்ரி சொல்லிக் காட்டு பாலு!" என்றாள் அவள்.
பையன் பாடினான்: "பா பா பிளாக் ஷிப். ஹாவ் யூ எனி வுல்? யெஸ் ஸார் யெஸ் ஸார், த்ரீ பாக்ஸா ஃபுல்!"
நடுவே அவனுக்கு மறந்து போகும் வரிகளை அவனுடைய அம்மா நினைவூட்டினாள். இப்படி நாலைந்து பாட்டுச் சொன்ன பிறகு, அவன் ஒரு கதை சொல்லத் தொடங்கினான்: "ஒரே ஒரு காட்டிலே ஒரு குண்டுச் சிங்கம் இருந்தது.."
கதையை ரசித்தவாறே அவனுடைய அம்மா சிதம்பரத்தின் அருகிலிருந்த சஞ்சிகைகளில் ஒன்றை எடுத்துப் புரட்டத் தொடங்கினாள். ஓரக் கண்ணால் இந்தச் செய்கையைத் திருப்தியுடன் கவனித்தான் சிதம்பரம். அவர்களிடையே வளர்ந்து வந்த சகஜபாவம் அவனுக்கு உற்சாகமளித்தது.
பகல் சாப்பாட்டை மூவருமாகச் சேர்ந்துதான் சாப்பிட்டார்கள். சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் பேசினார்கள். அவள் கணவனைப் போலவே அவளும் டில்லியைச் சேர்ந்தவள்தான் என்று சிதம்பரம் தெரிந்து கொண்டான். சிதம்பரம் படித்த பள்ளிக்கூடத்தில்தான் அவளும் படித்திருந்தாள். பள்ளிக்கூடப் பரிபாஷைகளும், வாத்தியார்களின் கேலிப் பெயர்களும் கூட அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. பழைய நாட்களைப் பற்றிப் பேசியவாறே பொழுதை ஓட்டினார்கள்.
பிறகு பாலுவைப் படுக்க வைத்துத் தானும் படுத்துக் கொண்டாள். சீக்கிரத்திலேயே தூங்கியும் போனாள். சிதம்பரம் சிகரெட் குடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். 'எவ்வளவு அழகாகத் தூங்குகிறாள்' என்று நினைத்தான். எவ்வளவு குதூகலமாக அவனுடன் பேசினாள். கணவனைப் பற்றிய கவலையெல்லாம் மறந்து விட்டது போலிருக்கிறது; சுகமாகச் சாப்பிட்டுவிட்டு மெய்மறந்த தூங்குகிறாளே, பதிபக்தியாவது மண்ணாங்கட்டியாவது..
டில்லியில் அவனுக்குப் பரிச்சயமான நாகரிக குடும்பத்துப் பெண்களை அவன் நினைத்துக் கொண்டான். அவனுடைய கம்பெனியில் இப்போது ரிஸப்ஷனிஸ்டாக இருக்கும் சாந்தா மணமான பிறகும் 'ஸோஷியல் ஆக்டிவிடீஸ்' என்ற பெயரில் எவருடனெல்லாம் நடமாடுகிறாள்! பேபியும் ரத்னாவும் கல்லூரி மாணவிகள். ஆனால் கல்லூரியில் பிராக்ஸிக்கு ஏற்பாடு செய்துவிட்டு யாருடனெல்லாமோ ஊர் சுற்றுகிரார்கள். மிஸஸ் முகர்ஜி வங்காளம் கற்றுத் தருகிறேனென்று தன் வீட்டில் பகல் வேளைகளில் நடத்தும் வகுப்புகளுக்கு இளைஞர்களே அதிகமாக வருகிறார்கள். இந்தப் பெண்களுடைய பலவீனங்களைச் சிதம்பரம் பயன்படுத்திக் கொண்டதுண்டு--அது வேறு விஷயம். விலையுயர்ந்த பண்டம் நடுவீதியில் காலில் இடறி ஆசையைத் தூண்டினால் பண்டம் தான் குற்றவாளி. எடுப்பவனல்ல. சிதம்பரம் இப்படித்தான் நினைத்தான். அவனென்ன, சீர்திருத்தவாதியா? ஆசைகளும், சபலங்களும் உள்ள ஒரு சாதாரண மனிதன்தானே?
எதிரே தூங்கிக்கொண்டிருந்த பெண்மணியின் தோற்றம் அவன் உள்ளத்தில் ஏதோதோ கற்பனைகளைக் கிளர்ந்தெழச் செய்தது. அப்படியே அவன் தூங்கி விட்டான் போலிருக்கிறது. "மாமா, மாமா" என்று சிறுவன் தட்டியெழுப்பியதும் தான் திடுக்கிட்டு எழுந்தான். மணி மூன்றடித்து விட்டிருந்தது. ரயில் ஏதோ ஸ்டேஷனில் நின்றிருந்தது. சிதம்பரம் சிறுவனின் முகத்தில் செல்லமாகத் தட்டிவிட்ட வெளியே செற்ற வெயிட்டரிடம் சொல்லி காப்பி வரவழைத்தான். காப்பி வந்ததும், காப்பி கலக்கும் சாக்கில் சிறுவனும் அம்மாவும் உட்கார்ந்திருந்த பெஞ்சில் தானும் போய் உட்கார்ந்தான்.
காப்பிக்குப் பிறகு, பேச்சு சிதம்பரம் நம் சினிமாக்களைக் கேலி செய்து ஏதேதோ பேசினான். அவள் சிரித்தாள். பிறக அவளும் ஏதோ பேசினாள். இருவரும் பேசினார்கள். நிறையப் பேசினார்கள். அலுக்காமல் பேசினார்கள்.
சிதம்பரத்துக்கு மெல்ல நம்பிக்கை பிறந்தது. தான் பாயக்கூடிய தொலைவுக்குள் வந்து விட்ட இரையைப் பார்த்த புலிபோல அவன் தயாரானான்.
திடீரென்று ரயில் ஒரு குகைக்குள் நுழைந்தது. பெட்டியில் இருள் சூழ்ந்தது. சிதம்பரத்தின் நெஞ்சு வேகமாகப் படபடத்தது. குகைகள் நிரம்பிய இந்தப் பிரதேசத்தை அவன் அறிவான். குகையிலிருந்து ரயில் வெளிப்பட்டதும் எதிரேயிருந்தவளின் முகத்தைப் பார்த்தான். சலனமேயில்லை.
அடுத்த குகைக்குள் ரயில் நுழைந்ததும் அவன் யோசிக்கவேயில்லை, சட்டென்று அவளைக் கட்டி யணைத்துக் கொண்டான். அவனுடைய கைப்பிடியில் அவளுடைய சதை அழுந்தியது. திடுக்கிட்டுத்தான் போய் விட்டாள் அவள். எதிர் பாராத அதிர்ச்சியில் செயலற்றுப் போனாள். ஆனால் ஒ கணம் தான். மறுகணமே பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. நெருப்பைத் தீண்டினவன் போல அவன் சரேலென்று கைகளை எடுத்துக் கொண்டான். அதே சமயம் குகையிலிருந்து ரயில் வெளிப்பட்டது. கண் சிமிட்டும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. பளீரென்ற வெளிச்சத்தில் அவன் கண்கள் கூசின. அருகிலிருந்தவளை நிமிர்ந்துபார்க்கத் துணிவின்றி, அவசரமாக எழுந்து பெட்டியின் ஓரத்தை நோக்கி நடந்து சென்றான். திறந்த கதவருகே நின்றவாறு வேகமாக வீசிய எதிர்க் காற்றின் குளுமையில் தன் தடுமாற்றத்தையும் அவமானத்தையும் கரைக்க முயன்றான்.
சே, வெட்கம், வெட்கம். இனி என்ன செய்வது?
குகைகள் வந்து வந்து போயின. இருளும் வெளிச்சமும் மாற் மாறி வந்தது. சிதம்பரத்தின் மனம் அலைபாய்ந்து தத்தளித்தது. 'ஆ' என்று ஓங்கரித்தவாறு ஒரு பெரும் புகைமண்டலத்தை இஞ்சின் காரித் துப்பியது. அவனுடைய இரு கண்களிலும் கரித்துகள் வந்து விழுந்தது.
கண்களிலும் மனத்திலும் உறுத்தலுடன், சுய வெறுப்புடனும் மனக் கசப்புடனும், தலைகுனிந்தவாறு மீண்டும் தன் இடத்தில் வந்து உட்கார்ந்தான் அவன். 'முட்டாள் முட்டாள்' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
டில்லியில் அவனுக்குத் தெரிந்த பெண்கள் யாராவது, அவன் இப்படி நடந்ததற்காகக் கன்னத்தில் அறைந்திருப் பார்களா, என்று யோசித்துப் பார்த்தான். ஒவ்வொரு பெயராகத் தள்ளிக் கொண்டே வந்தான். கடைசியில் யாருமே மிச்சமில்லை - ஆனால், ஆனால்-
அபர்ணா!
சிதம்பரத்தின் நெஞ்சுக்குள்ளே அடைத்துக் கிடந்த மதகு ஒன்று திடீரென்று திறந்து, கிடுகிடுவென்று உடலெல்லாம் வெள்ளம் பாய்வது போலிருந்தது. ஆமாம், அபர்ணா. அவளுக்குப் பிடித்திருக்காது, அவன் இப்படிச் செய்திருந்தால். ஆனால் அவள் அவனைக் கன்னத்தில் அறைந்திருக்க மாட்டாள். ஏனென்றால் அவளுக்கு அவனைப் பிடிக்கும். அவளுக்கு அவன் மேல் உண்மையான அன்பு. ஒரு வேளை வெறுமனே முகத்தைச் சுழித்திருப்பாள். அல்லது குற்றஞ்சாட்டும் பார்வையொன்றை அவன் மேல் வீசியிருப்பாள். அபர்ணாவிடமிருந்து வரும்போது, இதுவே ஒரு பெரிய தண்டனைதான்.
"அபர்ணா, என்னை மன்னித்துவிடு!" என்று கதற வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஓடும் ரயிலிலிருந்து குதித்து வந்த வழியே திரும்பி வேகமாக ஓட வேண்டும் போலிருந்தது.
வந்த வழியே! ஒரு ஸ்டெனோகிராபராக இருந்தபோது இந்தப் பெண்மணியிடம் இப்படி நடந்து கொண்டிருப்பேனா? என்று அவன் யோசித்தான். இன்று அவன் விற்பனைப் பிரதிநிதி. பெரிய பெரிய வட்டாரங்களில் புழங்கி, படாடோபத்திலும் ஆடம்பரத்திலும் நீந்தி, இந்த உலகத்தில் எல்லாமே விற்பனைக்கு என்றெண்ணும் மனப்பான்மை வந்துவிட்டது.
ஆனால் என்ன விலை கொடுத்தாலும் கைக்கு வராத பொருள்கள் சில இருக்கின்றன.
ஆரம்பத்தில் அவள் இட்டிலியும் தயிர்சாதமும் கொடுத்த போது இப்படி அவன் செய்வானென்று எதிர் பார்த்திருப்பாளா? அபர்ணாவின் வீட்டில் சாப்பிட்ட எளிய ஆனால் ருசியான சாப்பாடுகள் அவன் நினைவில் எழுந்தன. அபர்ணாவின் ஆபீஸ் அவன் ஆபீஸுக்கு அருகில்தான் இருந்தது. மத்தியான வேளைகளில் ஒரு குறிப்பிட்ட கஃபேயில் அவர்கள் டிபனுக்காகச் சந்திப்பார்கள். சில சமயங்களில் அவன் தன் ஆபீஸில் வெகு நேரம் வரை அமர்ந்து வேலை செய்வான். அப்போது அவளும் அவனுடன் வந்து உட்கார்ந்திருப்பாள். பிறகு அவளுடன் அவன் அவளுடைய வீட்டுக்குச் சாப்பிடப் போவான். அவளுடைய வீட்டில் அவனை மாப்பிள்ளையென்றே அழைக்கத் தொடங்கியுருந்தார்கள். லீவு நாட்களை அவளுடைய வீட்டில்தான் கழிப்பான்.
பிறகுதான் இந்திராணி வந்தாள். அவன் விற்பனைப் பிரதிநிதியானான். புதிய சூழ்நிலை; புதிய நண்பர்கள்-அவன் அபர்ணாவை விட்டு மெல்ல மெல்ல விலகிச் சென்றான்.
தனக்காகக் கூட அவள் கவலைப்படவில்லை. ஆனால் அவனுக்காகக் கவலைப்பட்டாள். அவன் முதலில் சிகரெட் குடித்தபோது, மது அருந்தியது தெரிந்த போது, அவள் எப்படி அழுதாள்; எப்படிக் கெஞ்சினாள். இப்போது எல்லாம் குழந்தைப் பிராயத்து நினைவுகள் போலத் தோன்றுகின்றன...
"மாமா, கதை சொல்லட்டுமா, கதை சொல்லட்டுமா?" என்று சிறுவனின் குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது. பதிலுக்கு உயிரற்ற ஒரு உலர்ந்த புன்னகைதான் அவ்னால் செய்ய முடிந்தது. "மாமாவைத் தொந்தரவு படுத்தாதேடா!" என்று அவள் சிறுவனைத் தன்னருகில் இழுத்துக் கொண்டாள். அவனுக்குச் சவுக்கடி பட்டது போலிருந்தது.
தான் ஒரு கயவன் என்ற உணர்வுடனேயே அவள் தன்னைவிட்டுப் பிரியப் போகிறாளே என்று எண்ணியவாறு அவமானத்தால் குறுகி உட்கார்ந்திருந்தான் அவன். பகல் கழிந்து இரவு கவிந்ததே அவனுக்குத் தெரியவில்லை. அந்தச் சிறுவனுக்குத் திடீரென்று ஜுரம் அடிக்கத் தொடங்கியபோதும் தெரியவில்லை.
பிறகுதான் கவனித்தான்-கண்களைத் திறக்காமல் சிறுவன் துவண்டு படுத்திருந்ததையும், அவனுடைய தாய் கவலையுடன் அவன் நெற்றியில் அடிக்கடி கை வைத்துப் பார்ப்பதையும். சிதம்பரத்துக்குத் திடீரென்று தான்தான் அவர்களுடைய கஷ்டங்களுக்குப் பொறுப்பாளி என்ற விசித்திரமான எண்ணம் தோன்றியது. ஒரு குற்ற உணர்வினால் சங்கடப்பட்டவாறு, சிறுவனையும் தாயாரையும் அவ்வப்போது தயக்கத்துடன் தலை நிமிர்ந்து பார்ப்பதும், பிறகு மறுபடி தலைகுனிவதுமாக இருந்தான். ரயில் ஒரு பெரிய ஜங்ஷனில் நின்றதும், தேடிப் பிடித்து ஒரு டாக்டரை அழைத்து வந்தான். அவர் சிறுவனுக்கு மருந்து கொடுத்தா. சிதம்பரம் சிறுவனுக்காக பிளாஸ்க்கில் வெந்நீர் வாங்கி வந்தான். சாத்துக்குடிப் பழம் இரண்டு வாங்கினான்.
இரவு அவள் சாப்பிடவில்லை. அவனும் சாப்பிடவில்லை. வெகு நேரம் வரை சிறுவனுக்காகக் கண் விழித்து உட்கார்ந்திருந்தான். அவனுக்கு ஒரு தடவை ஜுரமாக இருந்தபோது அபர்ணா இப்படித்தான் இரவெல்லாம் கண் விழித்துச் சிசுரூஷை செய்தாள்.
சிதம்பரத்துக்குத் துக்கம் பொங்கியது. அந்தச் சிறுவனிடம் தனக்கு ஒரு பாசம் வளர்ந்து விட்டதை அவன் உணர்ந்தான். அபர்ணாவை மணந்து கொண்டு ஒரு சிறிய வீட்டில் அவர்கள் எளிய வாழ்க்கை நடத்த வேண்டும். ஓரிரு குழந்தைகளே பெற வேண்டும் என்றெல்லாம் பலவாறாக அவன் கண்ட அழகிய கனவுகள் இப்போது அவன் நினைவில் எழுந்து கண்களைக் கலங்கச் செய்தன. எளிமையும் இது போன்ற இதமான அன்னி யோன்னியத்தையும் அமைதியையும் இனி அவன் பெறப் போகிறானா?
சென்ட்ரல் பிளாட்பாரம் மாறவில்லை. இந்திராணி மாறவில்லை.
"இவர் என் பிரண்ட் மிஸ்டர் மணிவண்ணன்" என்று தன்னுடன் இருந்தவரை இந்திராணி அறிமுகப்படுத்தினாள். "ஹலோ!" என்று மனசில்லாமல் கூறி மனசில்லாமல் கைகுலுக்கினான் சிதம்பரம். பாலுவும் அவன் அம்மாவும் பிளாட்பாரத்தில் அவர்களை வரவேற்க வந்திருந்த உறவினர்களின் அரவணைப்பில் சங்கமமாசதை அவன் கண்கள் திருப்தியுடன் கவனித்தன.
"போகலாமா?" என்றாள் இந்திராணி.
"உம்".
காரை அடைந்ததும், "நான்தான் ஓட்டுவேன்" என்றான் சிதம்பரம். இந்திராணியும் மணிவண்ணனும் பின் சீட்டில் உட்கார, சிதம்பரம் காரைக் கிளப்பினான். இந்திராணியும் மணிவண்ணனும் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டே யிருந்தார்கள். சிதம்பரத்தையும் பேச்சுக்கு இழுத்தார்கள். ஆனால் அவன் சிந்தனையில் மூழ்கிக்கிடந்தான். ரயிலில் அந்தப் பெண்மணி இருந்த இடத்தில் இந்திராணி இருந்திருந்தால் என்ன செய்திருப்பாள்? அவர்கள் முறை தவறி நடந்தால் இவள் கன்னத்தில் அறைவாளா அல்லது...
"இஸ்ஸ்-ஸில்லி" என்று இந்திராணி கிசுகிசுப்பது கேட்டது. மணிவண்ணன் அவள் மேலிருந்த கையை எடுப்பதை ரியர் வியூமிரரில் பார்த்தான் சிதம்பரம். அவன் தலை வேகமாகச் சுற்றத் தொடங்கியது. ‘இவள் இல்லாதபோது ரயிலிலும் டில்லியிலும் நான் என்ன செய்தேன்? நான் இல்லாதபோது இவள் என்ன செய்திருப்பாள்?
கல்யாணத்துக்குப் பிறகு தனித்திருக்க நேரும் சமயங்களில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?’
கிரீச்!
காரின் முன்னால் ஓடிய ஒரு சிறுவன் மயிரிழையில் தப்பினான்-பாலுவைப் போலவே ஒரு சிறுவன். சிதம்பரம் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான். "மிஸ்டர் மணிவண்ணன், நீங்கள் ஓட்டுகிறீர்களா? எனக்கு என்னவோ போல இருக்கிறது."
"ஷ்யூர்".
இருவரும் இடம் மாற்றிக் கொண்டார்கள். கார் மீண்டும் ஓடத் தொடங்கியது. மணிவண்ணன், பார்க்கும்படியாக, இந்திராணியின் தோளின் மேல் கை போட்டுக்கொண்டான் சிதம்பரம். "எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" என்றான்.
"எனக்கும்தான்."
"ஆறு மாதங்களில் எப்போதாவது என்னை நினைத்ததுண்டா?"
"நிறைய."
சிதம்பரம் அவள் புன்னகை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனும், அவன் தாயாரும், அபர்ணாவும், இப்போது அவனுக்கு நினைவில்லை. அவனுடைய நெஞ்சில் இருவேறு மட்டங்களிலிருந்து உணர்வு களிடையே அழகிய உணர்வுகளெல்லாம் மீண்டும் ஆழத்தில் தள்ளப்பட்டு விட்டிருந்தன; இந்திராணியைச் சார்ந்து நின்ற அவனுடைய பெரிய மனிதனாகும் ஆசைகள்தான் இப்போது மேலெழும்பி நின்றன.
அப்பர் பெர்த்தில் காலூன்றிய பிறகு, கீழிறங்க மனம் வருவதில்லை.
-----------------------------------------------------------
10. ஒரு தற்கொலை
கதவைத் தட்டும் சத்தத்தில் ரகு சட்டென்று விழித்துக் கொண்டான். பகல் தூக்கம்; முகமெல்லாம் வியர்வை.
'டொக் டொக், டொக் டொக்' என்று மறுபடியும் சத்தம். ரகு எழுந்திருக்கவில்லை. வேறு யாராவது போய்த் திறக்கட்டும்; தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தவுடனேயே படுக்கையி லிருந்து எழுந்து விட அவனுக்கு மனம் வருவதில்லை. அப்படியே சற்று நேரம் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே குருட்டு யோசனைகள் செய்து கொண்டிருக்க வேண்டும். 'இந்த உலகம், இந்த மனிதர்கள், தலைவிதி தன்னுடைய வாழ்க்கையின் போக்கு...' தூங்கி விழிக்கும் நேரத்தில்தான் எண்ணங்கள் தெளிவாகவும் நிர்ப்பய மாகவும், தளைகள் இன்றி வரையரையின்றி சுயேச்சையாக மேய்ந்து திரிகின்றன.
படபடவென்று மீண்டும் சத்தம். சே, என்ன தொந்தரவு! ரகு எழுந்தான். "ம்ம்ம்ம்ம்...அம்மாடி!" பிரமாண்டமான சோம்பல் முறிப்பு; பகலில் தூக்கம், இரவில் தூக்கம். தூக்கம், தூக்கம் - சுத்தச் சோம்பேறியாகப் போயாகிவிட்டது.
லடக்கென்று தாழ்ப்பாளைத் திறந்தான். அகிலா அவனுடைய தங்கை. இப்போது அவளுக்கு பரீட்சை நடக்கிறது. சீக்கிரம் வந்து விடுகிறாள். பள்ளி இறுதிப் பரீட்சை.
ரேடியோ ஸ்விட்சைப் போட்டுவிட்டு, ரகு பாத்ரூமுக்குச் சென்றான். சோப், நுரை, தண்ணீர், டவல்-ரேடியோ சளபுளவென்று இரையத் தொடங்கியது. ஓடி வந்து ஸ்டேஷனில் திருப்பி வைத்தான்- சினிமா பாட்டு.
சமையலறையில் அகிலாவும் அம்மாவும் பேசிக் கொண டிருந்தார்கள். "த்சு, த்சு, ஐயோ பாவம். அக்கிரமமாக இருக்கிறதே!" என்றாள் அம்மா.
"யாரு பாவம்? எது அக்கிரமம்?" என்றவாறு ரகு அங்கு சென்றான்.
"இவள் கிளாஸிலே படிக்கிற ஒரு பெண், தற்கொலை பண்ணிக் கொண்டு விட்டாளாம்டா!"
"நிஜமாவா?"
"ஆமாண்டா. நேற்றுக் காலையில்தான்-சீ பாவம்" என்றாள் அகிலா.
"உடம்பெல்லாம் மண்ணெண்ணெய் விட்டுக் கொண்டு, கொளுத்திக் கொண்டு விட்டாள்".
"இஸ்ஸ், பகவானே!" என்றான் ரகு. கேட்கும்போதே என்னவோ செய்தது. என்ன கொடுமை, என்ன பயங்கரம். திகுதிகுவென்று பற்றியெரியும் ஒரு பெண்-தங்கையின் வயதே ஆன சிறு பெண்-அவன் கற்பனையில் தோன்றினாள்.
"எதற்காக இப்படிப் பண்ணினாள்?" என்று ரகு மெதுவாய்க் கேட்டான். அந்தப் பெண்ணின் தற்கொலை தன் மனத்தை மிகவும் உலுக்கி விட்டது என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொள்ள முயலுபவனைப் போல அவன் தங்கையிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான். "பரீட்சை கிரீட்சை சரியாக எழுதவில்லையா?"
"அதெல்லாம் ஒன்றுமில்லையடா. அவளுடைய சித்தி அவளை ரொம்பக் கொடுமைப்படுத்துவாள். அது தாங்காமல் தான்".
தன் வீட்டில் எல்லா வேலைகளையும் அந்தப் பெண்தான் செய்யுமாம் (என்று அகிலா சொன்னாள்) விருந்தாளிகள் வரும்போது மட்டும் சித்திதான் எல்லா வேலைகளையும் செய்வதாகக் காட்டிக் கொள்வாளாம். இந்தப் பெண் துணிகளையெல்லாம் துவைத்துப் பிழிந்து வைக்குமாம். பிழிந்த துணிகளை சித்தி வெளியே கொண்டு உலர்த்து வாளாம்- பார்க்கிறவர்கள் இவள்தான் துவைத்தாள் என்று நினைத்துக் கொள்வதற்காக.
அந்தப் பெண் வெளியே வந்தால் குற்றமாம். நாலு பேரிடம் பேசினால் குற்றமாம். சிநேகிதிகள் அவளைப் பார்க்கச் சென்றால், சித்தியும் கூடவே இருந்து பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பாளாம்.
"நல்லவேளை, பள்ளிக்கூடத்துக்குப் போவதையாவது தடுக் காமல் இருந்தார்களே".
பள்ளிக்கூடத்தில் கூட இந்தப் பெண் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து விடும், பாவம்!" என்றாள் அகிலா. "வீட்டில் நாளெல்லாம் வேலை செய்த களைப்பு. பரீட்சை சமயத்தில் கூட அவளுடைய சித்தி படிக்க விட மாட்டாளாம். படிக்க உட்கார்ந்தால் வேலை ஏவுவாளாம். 'எரிஞ்சு போயேண்டி, எரிஞ்சு போயேண்டி' என்று வைவாளாம். நேற்றுக் காலையில் இவள் பாத்ரூமுக்குச் சென்று இப்படி நிஜமாகவே தன்னை எரித்துக் கொண்டு விட்டாள், பாவம். ஏதோ புகை வருகிறதே என்று வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்துப் பார்த்தார்களாம். அவசரமாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். கொஞ்சம் ஸ்மரணை வந்ததாம். ஆனால் நேற்று சாயங்காலம் உயிர் போய் விட்டது. போலீசுக்கு வாக்குமூலம் கொடுத்தபோது கூட,'அப்பா மேலேயோ சித்தி மேலேயோ எந்தத் தப்புமில்லல் என்மேலேதான் தப்பு" என்று சொன்னாளாம்.
அகிலா பேசிக் கொண்டே போனாள். 'இன்று அகிலாவுக்கு நல்ல ஆடியன்ஸ்' என்று ரகு நினைத்தான். அம்மா கடைசி அகப்பை மாவை எடுத்துக் கல்லில் ஊற்றினாள். 'இஸ்ஸ்...' என்ற மாவின் முறையீடு. சூடு பொறுக்காமல் தவித்து ஒலியெழுப்புகிறதோ? அந்தப் பெண்ணுக்குச் சூடு பொறுத்திருக்குமா? தலைமயிர், கண், உடல், நகம், இதெல்லாம் எரியும்போது எப்படியிருந்திருக்குமோ? ஆனாலும் அந்தப் பெண் கத்தவில்லையாமே! என்ன தைரியம், என்ன பொறுமை! ரகுவுக்குப் புல்லரித்தது.
இரண்டு தோசைதான் தின்ன முடிந்தது.
"ஸ்டவ்வை அணைத்து விடு" என்றாள் அம்மா. ரகு திரிகளின் உயரத்தை இறக்கி, பூ, பூ வென்று ஊதினான். அணையவில்லை. "இந்தத் திரிஸ்டவ்வில் இதுதான் கஷ்டம்" என்றாள் அம்மா. ரகு பலத்தையெல்லாம் திரட்டி மீண்டும் ஊதினான். பொக்கென்று ஸ்டவ் அணைந்தது. வாயெல்லாம் மண்ணண்ணெய் நெடி. இலேசாகக் குமட்டியது. அந்தப் பெண் தலை வழிய மண்ணெண்ணெயைக் கொட்டிக் கொண்டாளாம். என்ன தைரியம்! ரகுவின் உடல் இலேசாக நடுங்கியது; ஹாலுக்கு வந்தான். ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. அநதப் பெண் என்றாவது விச்ராந்தியாக ரேடியோ கேட்டிருக்குமோ என்னவோ இருந்த நாளெல்லாம் வேலை செய்து கொண்டேயிருந்தது. பிறகு ஒருநாள் அல்பாயுசில் தன்னை மாய்த்துக் கொண்டது. ஒரு சிறு பெண்ணின் சோகக் கதை.
பட்டென்று ரேடியோவை அணைத்தான்.
சட்டை, பாண்ட், செருப்பு,ரகு வீட்டைவிட்டு வெளியே வந்தான். வானத்தை நிமிர்ந்து பார்த்தான். மேற்கே, மாலைச் சூரியன் மேகப் பெண்களுடன் ஏதோசல்லாபித்தவாறே அவர்கள் மேல் செம்மை படருவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். நாணத்தில் மேனி முழுதும் சிவக்கும்படி அப்படியென்ன சொல்லியிருப்பான்? வானத்தின் மறுகோடியில், அடுத்துவரும் தன்னுடைய காட்சிக்காக மேடைக்குப் பின்னால் காத்திருக்கும் நடிகன் போலச் சந்திரன் மங்கலாகத் தெரிந்தான். சந்திரனுடைய பொறுமையைச் சோதிப்பதே போலச் சூரியன் மேகப் பெண்களுடன் தன் சல்லாபத்தை நீடித்துக்கொண்டே சென்றான்.
கீச்சு பீச்சு என்று கிளிக் கூட்டம் ஒன்று பறந்து சென்றது. ரகு சாலையில் நடக்கத் தொடங்கினான். மார்ச் மாத பிற்பகுதி. மரங்களிலிருந்து உதிர்ந்த சருகுகள் சாலை மேல் பாய் விரித்திருந்தன. சருகுகள் உதிரட்டும், பரவாயில்லை. ஆனால் பச்சைப் பசேலென்ற இளந்தளிரை வெடுக்கென்று பறித்துவிட்டாயே, கடவுளே. இதெந்ன விளையாட்டு?
ஏன் இப்படி?ஏன்?
உலக நினைவே இன்றிக் கைகோத்துச் செல்லும் காதல் ஜோடிகள், தம்பதிகள்; ஐஸ் ப்ரூட் சப்பிக் கொண்டு சென்ற கான்வென்ட் சிறுமிகள்; பேரனின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வரும் ஒரு தாத்தா; ஹாக்கிக் கம்புகளைச் சுழற்றிக் கொண்டு வரும் முரட்டுச் சீக்கிய இளைஞர்கள்; ஹனுமார் கோயிலருகே கச புசவென்று பேசிக் கொண்டு சரக் புரக்கென்று நடந்து போன பாவாடை மேலாக்கு கும்பல்; 'ரிவோலி' வாசலில் நன்கு பாதுகாக்கப்பட்ட ஆரோக்கியமான சரீரங்களிலிருந்து விலை யுயர்ந்த ஒப்பனைச் சாமக்கிரியைகளின் நறுமணம் கமழ, பளபளக்கும் கார்களிலிருந்து இறங்கி தியேட்டரின் குளுமையை நோக்கி மிதந்து சென்ற மேல் சொஸைட்டி ராணிகளும் ராஜாக்களும், காதி நிலையத்துக்கு வெளியே பாலிஷ்காரனிடம் ஷூவை ஒப்படைத்து நின்ற கணவரும், பக்கத்தில் பூக்காரனிடம் பூ வாங்கிக் கொண்டிருந்த அவர் மனைவியும்; ‘ஸ்டாண்டார்டு’க்குள்ளிருந்து, ஒரு கையில் புதிதாக வாங்கிய மதுப் புட்டிகளுடன், இன்னொரு கையால் நாயைப் பிடித்தபடி வந்த வெளிநாட்டு இளைஞர்-ரகுவுக்கு எதைப் பார்த்தாலுமே எரிச்சலாக இருந்தது.
சீச்சீ! என்ன உலகம் இது! ஒவ்வொருவருக்கும் தங்கள் குறுகிய வாழ்க்கைகளைப் பற்றித்தான் கவலை; தங்கள் சொந்த சுகங்கள்தான் பெரிது. மற்றவர்கள் எப்படிப் போனாலும் அக்கறையில்லை.
அந்தப் பெண்?
பாவம், ஐயோ பாவம், ரொம்பப் பாவம். ‘பெண்ணே, பெண்ணே சமத்துப் பெண்ணே, அநியாயமாகச் செத்துப் போனாயே சின்னப் பெண்ணே! இப்படியும் ஒரு வாழ்க்கையா?’
ரகு காப்பி ஹவுஸ்ஸுக்குள் நுழைந்து, இங்குமங்கும் பார்த்தவாறே மேஜைகளுக்கிடையில் நடந்தான்.
"ஹலோ!" என்ற குரல்.
ரகு திரும்பிப் பார்த்தான். கிருஷ்ணன் உட்கார்ந்திருந்தான். "ரொம்ப நேரமாக இருக்கிறாயா?" என்று ரகு புன்னகையுடன் அவனருகே இருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தான்.
"பத்து நிமிஷமாச்சு-மத்தப் பசங்கள் எங்கே?"
"வந்து விடுவார்கள்" என்று ரகு சுற்றிலும் நோட்டம் விட்டான். வழக்கமான கூட்டம். அதே மனிதர்கள், அதே முகங்கள். போர், போர், போர். உடுப்புகளை மாற்றிக் கொள்வதுபோல முகங்களையும் அவ்வப்போது மாற்றிக் கொள்ளட்டுமே! வாழ்க்கையில் கொஞ்சம் மாருதல் இருக்கும்.
கிருஷ்ணன், ரகு, இன்னும் சில சினேகிதர்கள் எல்லோருமாகத் தினசரி மாலையில் காப்பி ஹவுஸில் கூடுவார்கள். உலகத்துப் பிரச்னைகளையெல்லாம் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டு பரிவோடும் கவலையோடும் அலசுவார்கள்; காப்பி, சிகரெட், பேச்சு, காப்பி, சிகரெட், பேச்சு, பேச்சு, பேச்சு, பேச்சு.
சே!
இன்று ரகு பேசும் ‘மூடில்’ இல்லை. அங்குமிங்கும் அலைந்தாடும் வெயிட்டர்களைப் பார்த்தான். பரிதாபமாக இருந்தது. வெயிட்டரின் கையிலிருந்த தட்டைத் தன் கையில் வாங்கிக் கொண்டு அவனை நாற்காலியில் உட்காரச் சொல்லலாம் போலிருந்தது.
"என்ன, பேசமாட்டேன் என்கிறாயே?" என்றான் கிருஷ்ணன்.
"த்சு-பேச ஒன்றுமில்லை".
"அதோ சந்திரனும் பாஸ்கரனும் வருகிறார்கள்".
சந்திரனும் பாஸ்கரனும் வந்து உட்கார்ந்தார்கள்.
"என்ன இவ்வளவு லேட்?" என்றான் கிருஷ்ணன்.
"உன்னைப் போல அரசாங்க உத்தியோகமா? வேலையை முடித்துவிட்டுத்தான் வரமுடியும்" என்றான் பாஸ்கர். அவன் ஒரு டிராவல் ஏஜன்ஸியில் வேலை பார்த்து வந்தான்.
"மேலும் காபி ஹவுஸில் நாம் கழிக்கும் நேரத்தைக் குறைப்பது நல்லதுதான்" என்றான் சந்திரன்.
"ஏனோ?"
"யூஸீ, மேல் நாடுகளில் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டியாகி விட்டது. அவர்கள் ஹோட்டலில் இளைப்பாறலாம், மணிக்கணக்காகப் பேசலாம். ஆனால் நம்மிடம் அவ்வளவு நேரமில்லை; நாம் கடுமையாக உழைக்க வேண்டும், ஒவ்வொரு நிமிடமும்".
"ஹியர், ஹியர்" என்றான் கிருஷ்ணன்.
"ரகுப் பாப்பா ஏன் பேசமாட்டேன்கிறது?" என்றான் பாஸ்கர்.
"என்னிடம் பேச நேரமில்லை; மேல்நாட்டு இளைஞர்கள்தான் பேசலாம்" என்று ரகு கண்ணைச் சிமிட்டினான்.
எல்லோரும் சிரித்தார்கள்.
"நீ வந்து ரொம்ப நேரமாகிறதோ?" என்று பாஸ்கர் ரகுவைக் கேட்டான்.
"முதலில் நான் வந்தேன். பிறகு அவன் வந்தான்" என்றான் கிருஷ்ணன்.
"ஆனால் நான்தான் தினம் முதலில் வருகிறேன் - ஞாபகமிருக்கட்டும்" என்றான் ரகு.
"உனக்கென்னப்பா. அதிர்ஷ்டசாலி. நினைத்தபோதெல் லாம் வரலாம்".
"வஞ்சகப் புகழ்ச்சியா?" என்றான் ரகு.
ரகு இஞ்சினியரிங் பரீட்சை எழுதிவிட்டு இதுவரை வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தான். ஒரு நல்ல வேலைக்காக அவன் காத்துக் கொண்டிருந்தான். அவனு டைய அப்பாவும் காத்துக்கொண்டிருந்தார்.
"வேலை தேவை - ஓர் இளம் இஞ்சினியரிங் கிராஜுவேட்டுக்கு. ஆரம்பச் சம்பளம் ஆயிரம் ரூபாய். நல்ல காப்பி ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள் உள்ள இடத்தில் போட்டால் நல்லது. பகலில் விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் பையன் வஞ்சனை இல்லாமல் வேலை செய்வான். அறையில் ஏர் கண்டிஷனர் இயங்கும்போதோ, ரேடியோ பாடும்போதோ கூட பையனால் தொடர்ந்து வேலை செய்ய முடியும்; பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளலாம். நல்ல குணம் நல்ல மானர்ஸும் உள்ளவன். மேலதிகாரி காப்பியோ சிகரெட்டோ அளித்தால் தட்டமாட்டான். (மேலதிகாரிகள் தங்கள் பிராண்டுகளைக் குறிப்பிடவும்).
பையன் சிவப்பாக, லட்சணமாக இருப்பான். எந்த ஆபீஸுக்கும் சோபை தரக்கூடிய ஆள். லேடி ஸ்டெனோக்கள் உள்ள கம்பெனிகள் (ஐரோப்பியனாக இருந்தால் நல்லது) மட்டுமே விண்ணப்பிக்கவும்".
"ஐரோப்பிய ஸ்டெனோவா, ஐரோப்பிய கம்பெனியா?"
"எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம்".
"எக்ஸலன்டுடா! நாளைக்கே உன் பேப்பரில் போட்டு விடு" என்றான் கிருஷ்ணன். சந்திரன் ஒரு நியூஸ் பேப்பரில் ரிப்போர்ட்டராக இருந்தான்.
"எனக்குச் சிரிப்பே வரவில்லை" என்றான் ரகு.
"கிச்கிச்சு மூட்டட்டுமாம்மா?" என்றான் பாஸ்கர்.
வெயிட்டர் வந்தான்.
"வெயிட்டர், நாலு காப்பி சுடச் சுட சீக்கிரம்!"
ஆமாம், சீக்கிரம், சீக்கிரம். அழகான இளமைப் பருவம்; உடல் முழுவதும் சக்தி; மனம் முழுவதும் சந்தோஷம். எங்கே எதைப் பார்த்தாலும் குதூகலம், கோலாகலம். அனுபவிக்க வேண்டிய பருவமே இதுதான். பருவம் தீருவதற்குள் அனுபவிக்கலாம். சீக்கிரம் கொண்டு வா வெயிட்டர், சுடச் சுடக் கொண்டு வா.
பாஸ்கர் சிகரெட் பாக்கெட்டை எடுத்தான்.
"சிகரெட்?"
சிகரெட் பட்டுவாடா; சந்திரனுக்கு ஒன்று, கிருஷ்ணனுக்கு ஒன்று, ரகுவுக்கு ஒன்று. சற்றே தயங்கிவிட்டு ரகு சிகரெட்டை எடுத்துக் கொண்டான். 'சரக்' என்று பாஸ்கர் நெருப்புக் குச்சியை உரசினான். நெருப்பு...ரகுவுக்குத் திடீரென்று தூக்கிவாரிப் போட்டது. அந்தப் பெண், எரிந்து போன அந்தப் பெண்! அமிழ்ந்திருந்த அவள் நினைவு இப்போது மீண்டும் மேலே எழும்பியது. எரியும் தீக்குச்சி தன் வாயருகே வரும்போது ரகு உதட்டில் பொருத்திய சிகரெட்டைச் சட்டென்று அகற்றினான்.
"டேய், என்ன ஆச்சுடா?"
"நான் ஸ்மோக் பண்ணவில்லை".
"ஏன்?"
"வேண்டாம்".
"சரி தான் குடிடா".
"நோ, நோ"
"குடிக்க மாட்டே?"
"ஊகூம்".
"திடீர்னு என்னடா உனக்கு?"
"என்னவோ, இப்போ குடிக்கணும் போல இல்லைடா".
"வேறே எப்படி இருக்கு?"
"...................."
"படுத்தாதேடா கண்ணு. குடிச்சுடும்மா. சமர்த்து இல்லை?"
"எனக்கு வேண்டாம்டா பாஸ்கர். ப்ளீஸ், தொந்தரவு பண்ணாதே".
தீக்குச்சியில் நெருப்பு விரலை நெருங்கி விட்டது. பாஸ்கர் அவசரமாகத் தன் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு குச்சியை எறிந்து விட்டு விரலை உதறினான். அந்த விரலை வாய்க்குள் விட்டு உமிழ்நீரால் தைலமிட்டான். இந்தச் சூடே இவனுக்குத் தாங்கவில்லையே! அப்படியானால் அந்தப் பெண்ணின் சாதனை! ஈசுவரா, பயங்கரம்!
காப்பி வந்து எல்லோரும் பருகத் தொடங்கும்வரை ரகு காத்திருந்தான். பிறகு,"இன்று சோகமான ஒரு நிகழ்ச்சி நடந்தது" என்று தொடங்கினான். தன் மனச் சுமையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினான் அவன். "என் தங்கையின் வகுப்பு சிநேகிதி சிறு பெண்...என்று அந்தப் பெண்ணைப் பற்றிக் கூறிக் கொண்டு போனான்.
உணர்ச்சி வசப்பட்டவனாய், தான் கேள்விப்பட்ட வற்றையும், தன் மனத்தில் எழுந்த எண்ணங்களையும் ஒன்றுவிடாமல் சொன்னான் ரகு. ஆனால் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தவர்களுடைய முகங்களைப் பார்க்கும்போது அவனுக்கு ஏமாற்றந்தான் உண்டாயிற்று. அந்தப் பெண்ணின் தற்கொலை அவனைப் பாதித்தது. அவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அல்லது ஒருவேளை அவர் களுடைய நெஞ்சைத் தொடும் விதமாய் அவனுக்குச் சொல்லத் தெரியவில்லையோ என்னவோ!
"அவ்வளவுதான் கதை. ஒரு சிறு பெண், அநியாயமாகச் செத்துப் போனாள்" என்று ரகு கூறி முடித்தான்.
"சே சே! மோசம்" என்றான் பாஸ்கர்.
"சில பேருக்கு இதயமே கிடையாதப்பா" என்றான் கிருஷ்ணன்.
"இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்ட அப்பாதான் குற்றவாளி. இரண்டாவது மனைவியும் சிறு பெண்தானே. அவளுக்கு இது முதல் கல்யாணம். கணவனுடைய அன்பு முழுவதையும் பங்கு போட்டுக் கொள்ளாமல், முதல் மனைவியின் குழந்தைகளுக்குக் கூடப் பங்கு தராமல், தானே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வு, பொறாமை" என்று சந்திரன் விவரித்தான்.
பிறகு சிறிது நேரம் மௌனம். அது ஒரு சோகமான நிகழ்ச்சி என்று அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். அந்தப் பெண்ணுக்காக அனுதாபப்பட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் இப்படியொரு விஷயத்தை அவன் பிரஸ்தாபித்து மாலை நேர மகிழ்ச்சியைக் கெடுத்திருக்க வேண்டாம் என்று அவர்கள் நினைப்பதாக ரகு உணர்ந்தான். "இந்த உலகமே துன்பங்கள் நிறைந்த பயங்கர சமுத்திரமடா ரகு; அதற்காக நீ என்ன செய்ய முடியும், நாங்கள் தான் என்ன செய்ய முடியும்?" என்று அவர்கள் கேட்பது போலிருந்தது.
"தற்கொலை செய்வது கோழைத்தனமா? அல்லது துணிச்சலான செயலா?" என்று மௌனத்தைக் கலைத்தான்.
"கோழைத்தனம்தான்" என்றான் கிருஷ்ணன்.
"அப்படிச் சொல்லிவிட முடியாது" என்றான் பாஸ்கர். "ஒரு தனி மனிதனின் தற்கொலை சில சமயங்களில் கம்பீரமும் வலிமையும் தூய்மையும் அழகும் நிரம்பியதாக இருக்கக் கூடும். தன் நெஞ்சில் அவன் கொண்டிருந்த ஓர் உறுதியான நம்பிக்கையைத் தனக்காகவும் மற்றவர்களுக்காவும் நிரூபிக்கக் கூடிய ஒரே சாதனமாகத் தற்கொலைதான் மிஞ்சி இருக்கக் கூடும். டைரக்டர், ‘பெர்க்மானி’ன் ஒரு படத்தில், ‘ஐயோ சீனர்கள், அணுகுண்டு தயாரிக்கிறார்களாமே. பொறுப்புடன் நடந்து கொள்வார்களோ என்னவோ, இனி உலகத்தின் கதி என்ன? என்ற கவலையிலேயே ஒரு மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான்".
பாஸ்கர் பேசிக் கொண்டே போனான். சினிமாவைப் பற்றிப் பேசாவிட்டால் இவனுக்குத் தூக்கம் வராதென்று ரகு நினைத்தான். பெர்க்மான், குரஸோவா, ஃபெலினி, பொலன்ஸ்கி, ரே, முதலிய சர்வதேச டைராக்டர்களின் பெயர் அவன் பேச்சில் சர்வசாதாரணமாக அடிபடும். தானும் ஒரு சினிமா டைரக்டராகப் போக வேண்டுமென்ற ஆசை பாஸ்கருக்கு இருந்தது. ஆனால் வாழ்நாளை ஸ்டூடியோக்களில் கழிக்காமல் ஏதோ ஒரு டிராவல் ஏஜன்ஸியில் கழித்துக் கொண்டிருந்தான். உலகத்துக்கு ஓர் இளம் டைரக்டர் நஷ்டம்.
"பாஸ்கர் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன்" என்றான் சந்திரன்.
"தன்னை வெறும் கவர்ச்சிப் பொம்மையாக நினைக் கிறார்களே, உணர்ச்சிகளும், ஆசாபாசங்களும் உள்ள நடிகை மரிலின் மன்றோ ஏங்கினாள். கடைசியில் அவளை எல்லோரும் புரிந்து கொண்டார்கள். டால்ஸ்டாயின் அன்னகரீனாவும், ஃபிளாபர்ட்டின் மேடம் பொவேரியும் தற்கொலை செய்து கொள்வதாகப் படிக்கும்போது நமக்கு வருத்தம் உண்டானாலும் கூடவே ஒரு மனநிறைவும் பரவசமும் ஏற்படவில்லையா? ஹெமிங்க்வே தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! இந்தத் தலைமுறையின் முரட்டுத்தனத்தையும் அர்த்தமின்மையையும் தன் எழுத்தில் நிரூபித்தது போலவே தன் சாவின் மூலமும் அவர் நிரூபித்துவிட்டார்".
பெரிய வார்த்தைகள், பெரிய சர்ச்சைகள் "அந்தச் சிறு பெண்ணைப் பற்றி நினைத்துப் பாருங்கள்" என்றான் ரகு. "வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்காமல் சிறு வயதி லேயே இறந்து விட்ட பெண்-துன்பத்திலே வாழ்ந்து துன்பத்திலேயே இறந்தவள்-அவளைப் பற்றி எழுத வேண்டும், சினிமா எடுக்க வேண்டும்".
"எடுக்கலாம்" என்றான் பாஸ்கர். "நமக்குப் பிடிக்காத ஒரு நடிகைக்கு அந்தப் பெண்ணின் வேஷத்தைக் கொடுத்து, நிஜமாகவே கொளுத்தி விடலாம். ரியலிஸத்துக்கு ரியலிஸமும் ஆச்சு!"
"சித்தி கொடுமைப் படுத்துவதெல்லாம் பழைய ‘தீம்’ அப்பா, இதையெல்லாம் வைத்து எவ்வளவு தடவைகள் தான் எழுதுவது?" என்றான் சந்திரன்.
சந்திரன் முன்பெல்லாம் நிறைய எழுதுவான். இப்போதெல்லாம் எழுதுவது இல்லை. எழுதியதொன்றும் பிரசுரமாகாத ஏமாற்றம் கசப்பாக மாறிவிட்டது. இலக்கியத்தையும், இலக்கிய ஆசிரியர்களையும் கேலி செய்யத்தான் இப்போது அவனுக்குத் தெரிகிறது.
இனி அவர்களுடன் பேசிப் பயனில்லை. ரகு பேசாமல் இருந்தான். ‘அந்தப் பெண் இப்படி ஹோட்டலுக்கெல்லாம் வந்திருப்பாளோ? எஸ்பிரஸோ காப்பி குடித்திருப்பாளோ? ‘டூட்டி ப்ரூட்டி’ ஐஸ்கிரீம் தின்றிருப்பாளோ? கனாட்பிளேஸ், குதுப்மினார், ஜூ, 70 எம்.எம். சினிமா இதெல்லாம் பார்த்திருப்பாளோ?’
இரவில் சாப்பிட்டு விட்டு அவன் வராந்தாவில் நின்று கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வானம் முழுவதும் நட்சத்திரங்கள். அந்தப் பெண் ஒரு நட்சத்திரமாக மாறியிருப்பாள். அல்லது, சொர்க்கத்தில் ஆதரவாக அணைத்துக் கொள்வார்கள். அன்பைச் சொரிந்து திணற அடிப்பார்கள். விதவிதமான உடைகளும் நகைகளும்-இனி அந்தப் பெண்ணுக்கு யோகந்தான்.
தங்கையின் இங்கிலீஷ் புத்தகத்தில் ஆன்டர்ஸன் எழுதிய ‘தீப்பெட்டிச் சிறுமி’ என்ற கதை இருக்கிறது. தீப்பெட்டி விற்கும் ஓர் இளஞ்சிறுமி சாலையோரத்தில் குளிர் இரவைக் கழிக்க நேருகிறது. கிறிஸ்துமஸ் சமயம். பனி பெய்கிறது. அந்தப் பெண் குளிர் காய்வதற்காக தீக்குச்சிகளை ஒவ்வொன்றாகக் கிழிக்கிறாள். ஒவ்வொரு தீக்குச்சி எரியும் போதும் பல அழகிய காட்சிகள் அவளுக்குத் தெரிகின்றன. அவள் விலையுயர்ந்த உடைகள் உடுத்தி யிருப்பது போலவும், மாளிகையில் நடனமாடுவது போலவும், விருந்து சாப்பிடுவது போலவும்-இப்படியே இரவு முழுவதும் பல இன்ப அனுபவங்கள். பொழுது விடிந்ததும் சாலையில் போகும் மக்கள், ஒரு சிறுமி இறந்து கிடப்பதையும் சுற்றிலும் தீக்குச்சிகள் இறைந்திருப்பதையும்தான் பார்க்கிறார்கள். அவள் கண்ட அழகிய காட்சிகளை இவர்கள் எங்கே கண்டார்கள்? ஒரு வேளை இந்தப் பெண்ணும் பாத்ரூமில் தன்னைப் பற்ற வைத்துக் கொண்ட கணத்திலிருந்து ஒரு புதிய இன்ப உலகத்தில் பிரவேசித்திருக்கலாம்; யார் கண்டது?
உள்ளே அகிலா அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைப் பற்றித்தான். ரகுவும் பேச்சில் கலந்து கொண்டான். ‘இன்று பரீட்சை ஹாலில் அந்தப் பெண்ணின் நாற்காலி காலியாக இருந்திருக்கும்; இல்லையா?" என்றான்.
"ஊஹும் இல்லை. அவளுடைய நாற்காலியை எடுத்துவிட்டு, மற்ற நாற்காலிகளைக் கொஞ்சம் நகர்த்திப் போட்டுவிட்டார்கள்".
ரகுவுக்குச் சுருக்கென்றது. இதுதான் நியதி, உலகத்தின் பயங்கர நியதி. அப்படியொரு பெண் இருந்ததாகவே நினைவில்லாததுபோல், தன் பாட்டில் இயங்கிக் கொண் டிருக்கும். பரீட்சை அட்டென்டன்ஸ் தாளில் முதல் இரண்டு நாட்கள் பிரஸன்ட், பிறகு ஆப்ஸென்ட், ரிஜிஸ்தர்களில் அவள் பெயருக்கு எதிராக ஒரு சிவப்புக் கோடு-ஒரு சிறு பெண் இந்த உலகத்தில் வாழ்ந்தாள், ஸ்கூல் பைனல் வரக் படித்தாள் என்பதற்கு மிஞ்சக் கூடிய சான்றுகள் இவைதான்.
பேப்பரில் ரிசல்ட் வரும். அந்தப் பெண்ணின் பெயர் இருக்காது. அகிலா காலேஜில் சேருவாள். பி.ஏ., படிப்பாள். எம்.ஏ., படிப்பாள். கறுப்பு கவுன் அணிந்து போட்டோ எடுத்துக் கொள்வாள். பிறகு ஒரு நாள் கூறைப் புடவை அணிந்து போட்டோ எடுத்துக் கொள்ளும் தருணமும் வரும். கல்யாணம், கணவன், குழந்தைகள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு கட்டங்கள்! ஆனால் அந்தப் பெண்தான் பாவம், எதையுமே பார்க்காமல் அனுபவிக்காமல் போய்விட்டது.
அவனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்தாலே பரிதாபமாக இருந்தது. ஆனால் அவனுடைய நண்பர்களுக்கு ஏனோ அது பெரிய விஷயமாகத் தோன்றவில்லை?
‘நான் வேலையில்லாமல் உட்கார்ந்திருப்பதால் இதைப் பற்றியெல்லாம் அதிகம் யோசிக்கிறேன் போலிருக்கிறது. ஒருவேளை, நானும் வேலைக்கு போகத் தொடங்கிய பிறகு..."
வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு மனிதர்கள் அவனைக் கவர்ந்திருந்தார்கள். பெரியவனான பிறகு அவர்களைப் போலத் தானும் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறான். ஐந்து வயதில் இஞ்ஜின் அல்லது பஸ் டிரைவர்கள், பத்து வயதில் அவனுடைய ‘லெஃப்டினன்ட்’ அத்திம்பேர், பதினைந்து வயதில் அவனுடைய அடுத்த வீட்டு ஓவியர், அவர் படம் வரைவதைப் பார்த்து, அவனும் படம் வரையத் தொடங்கினான். ஓவியர் மிகவும் சந்தோஷப் பட்டார். "டாலன்ட் இருக்கிறது. ‘டெவலப்’ பண்ணு" என்று சொல்லிக் கொண்டு இருந்தார். இந்தப் பதினைந்து வயது ஆசை உண்மையான ஆசை, மனப்பூர்வமாக அவனால் உணரப்பட்ட ஆசை, ரகு ஆர்ட் ஸ்கூலில் சேர விரும்பினான். ஒரு கலைஞனின் வாழ்க்கை அவனை மிகவும் கவர்ந்தது.
ஆனால் அப்பாதான் சம்மதிக்கவில்லை. தற்செயலாக, தான்தோன்றியாக, மனதுக்கிசைந்தவாறு அமைக்கப்படும் ஒரு வாழ்க்கையின் சந்தோஷங்கள் அவருக்குப் புரியவில்லை. உலகத்தில் தன் கடைசி நாள் வரை, ஒவ்வொரு நாளுக்காகவும் முன் ஜாக்கிரதையாகத் திட்டங்கள் போட்டு வைக்கும் மனப்பான்மை அவருக்கு. குழந்தையைத் தன் போக்கில் தனியே நடக்க விட்டால் தடுக்கி விழுந்தால்கூட அழாது. இதை அவர் உணரவில்லை.
நான் தடுக்கி விழவில்லை. இனித் தடுக்கி விழவே மாட்டேன். இன்று நான் இஞ்சினியர். ஆனால் இது எனக்கு லாபமா, நஷ்டமா? என்று ரகு சிந்தித்தான். சில வருஷங்கள் முன்வரை அவன் மனத்தில் எண்ணற்ற உணர்வுகளும் ஏண்ணங்களும் வண்ணச் சேர்க்கைகளும் தோற்றங்களும் தோன்றிய வண்ணமிருந்தன. ஏதேதோ படமெழுத வேண்டுமென்ற வெறி இருந்தது. இப்போது உணர்வுகள் தான் மிச்சம்; வெறி இல்லை. இன்னும் சில வருடங்களில் உணர்வுகளும் மறைந்துவிடுமோ? அப்போது யாரோ ஒரு தற்கொலை செய்து கொண்டாள், அது என்னை அவ்வளவாகப் பாதிக்காதோ என் சிநேகிதர்களைப் போல எனக்கும் அனுதாபம், பிரிவு முதலிய மெல்லிய உணர்வுகளின் கூர் மழுங்கி விடுமோ?
பிறகு சந்திரனைப் போலவும் பாஸ்கரைப் போலவும் நானும் சும்மா கலையைப் பற்றியும் கலைஞர்களைப் பற்றியும் வறட்டுக் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருப்பேன். உயிர் இருக்காது, உணர்ச்சிகள் இருக்காது, இலட்சியங்கள் இருக்காது. தேஜோமயமாக என்னுள்ளே நிரம்பியுள்ள உணர்வுகள் செத்துக் கொண்டே போகும்.
இதுவும் தற்கொலைதானே?
ரகுவிற்குத் தன் இதயத்தை யாரோ அழுத்திப் பிசைவது போலிருந்தது. மண்டையில் சம்மட்டிகளால் பளார் பளார் என்று ஓங்கி அறைவது போலிருந்தது. வெட்ட வெளிக்கு வேகமாக ஓடிப் போய்க் கோவென்று கதறியழலாம் போல் இருந்தது இதுவும் தற்கொலைதான், இதுவும் தற்கொலை தான். கலை உணர்வுகளுக்கும் மென்மையான இலட்சியங் களுக்கும் மதிப்பில்லாத சமூகத்தில் இது போல எவ்வளவு தற்கொலைகள்.
வாழ்க்கையை முழுவதும் உணராமலேயே அந்தப் பெண் செத்து விட்டாள். மெல்ல மெல்ல செத்துக் கொண்டே போவதை உணராமல், நாங்கள் வாழ்ந்து கொண்டே-யிருப்போம்.
அவள் அதிர்ஷ்டசாலி.
-----------------------------------------------------------
11. இண்டர்வியூ
சுவாமிநாதன் அப்பாவுடன் கடைத் தெருவில் நடந்து கொண்டிருந்தான்.
எவ்வளவு கடைகள், எவ்வளவு ஜனங்கள், எவ்வளவு காட்சிகள். ஆனால் சுவாமிநாதன் இதொன்றையும் கவனிக்க வில்லை. அப்பாவுடன் நடக்கிறோம். அப்பாவுடன் நடக்கிறோம் என்ற பெருமையில் அவன் மிதந்து கொண்டிருந்தான். திடீரென்று, 'ஐஸ்கிரீம் வேணுமாடா?" என்றார் அப்பா. சுவாமிநாதனுக்கு அப்பாவின் கேள்வி வியப்பாகவும் சற்றே ரோஷமாகவும் இருந்தது. "வேண்டாம்பா. நான் குழந்தையா என்ன?" என்றான். அப்பா சிரித்தார்...
கிணுகிணுவென்ற சத்தம். அப்பா சிரிக்கும் சத்தமா? சாலையில் போகும் ஏதாவது சைக்கிள் மணிச் சத்தமா? அல்லது - சுவாமிநாதன் திடுக்கிட்டுப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். கிணுகிணுவென்று கடிகாரத்தின் அலாரம் இறுதிவரை ஒலித்து ஓய்ந்தது.
ஆ! இன்று இன்டர்வியூ.
படுக்கையைச் சுற்றி வைத்தபிறகு, இரவில் அக்காவிட மிருந்து திருட்டுத்தனமாக எடுத்து வந்திருந்த கடிகாரத்துடன் அவன் மெல்ல அடுத்த அறைக்குச் சென்றான். தூங்கிக் கொண்டிருந்த அக்காவருகில் கடிகாரத்தை வைத்தான். அப்போது அலாரம் மீண்டும் இலேசாகக் கிணுகிணுத்தது - அழுது ஓய்ந்து தூங்கிப் போன குழந்தை தூக்கத்தின் நடுவே ஒருமுறை விசும்பிக் கொள்வது போல. நல்லவேளை, சத்தத்தில் அக்கா எழுந்திருக்கவில்லை.
பல்பொடியின் சுறுசுறுப்பான இனிப்பும் மொரமொரப்பும்; அவன் பேட்டியைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான்.- பேட்டி அறைக்குள் நுழையும்போது "குட்மார்னிங்" அல்லது "குட் ஆப்டர்னூன்" (புன்னகையுடன்?) கேள்விகளுக்கெல் லாம் பயப்படாமல் டக்டக்கென்று பதில் - எதற்காகப் பயப்பட வேண்டும்? அவனுக்கு எப்படி வேலை தேவையோ அப்படியே அவர்களுக்கும் ஆள் தேவை. அந்த ஆள் அவனாகவே இருக்கலாம். அதைத்தான் இன்று சோதித்துப் பார்க்கப் போகிறார்கள்.
இப்போதைக்குஅவன் அவர் களுக்காக விண்ணப்பத்தாளில் எழுதப்பட்ட ஒரு வெறும் பெயர், பாஸ்போர்ட் அளவுப் புகைப்படத்தில் சுய உணர்வுக் கூச்சத்துடன் விழித்துக் கொண்டிருக்கும் இளைஞன் ரத்தமும் சதையுமாக அவனை அவர்கள் இனிமேல்தான் சந்திக்க வேண்டும். யார் இந்தச் சுவாமிநாதன்? எப்படிப்பட்டவன்? தைரியசாலியா? கோழையா? புத்திசாலியா, முட்டாளா? சுறுசுறுப்பானவனா, சோம்பேறியா? நாணயமுள்ளவனா, மோசக்காரனா? உபயோகமுள்ளவனா, உதவாக்கரையா? அவனுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது? இவ்வளவையும் இன்று ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களில் அவர்கள் கண்டுபிடிக்கப் போகிறார்கள். அடேயப்பா! அவனுக்கே இந்த இருபது வருடங்களில் தன்னைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு விட்டதாகச் சொல்ல முடியாது. சில சமயங்களில் தன் மீது இரக்கமும் சில சமயங்களில் கோபமாகவும் இருந்தது. இருபது வருடங்கள், அதாவது ஏழாயிரத்து முன்னூறு நாட்கள் இவற்றுள் ஒரு சில நாட்களில் ஒரு சில கட்டங்களில் மட்டுமாவது அவன் வேறு விதமாக நடந்து கொண்டிருந்தால் - வேறுவிதமான முடிவுகள் செய்து வேறு விதமான பாதைகளில் அடியெடுத்து வைத்திருந்தால்! - இன்று அவன் இன்னொரு விதமான மனிதனாக, இன்னொரு விதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான்...
திடீரென்று பால்காரன் கூப்பிடும் சத்தம் கேட்டது. அவன் பாலை வாங்கி ஸ்டவ்வில் வைத்தான். அதற்குள் அம்மாவும் எழுந்து கொண்டாள்.
நியூஸ்பேப்பரைப்* படித்து முடிக்கும்போது அம்மா கையில் காப்பியுடன் வந்தாள். "எத்தனை மணிக்குச் சாப்பிடுவாய்?" என்றாள்.
"எட்டு மணிக்கு"
"அவ்வளவு சீக்கிரமாகவா?"
"பஸ் கிடைச்சுப் போக வேண்டாமா? ஈசுவர மாமா வீட்டுக்கு வேறே போகணும்."
"சரி .. கறிகாயை மட்டும் சித்தே நறுக்கிக் கொடுத்தா யானால் தேவலை."
"இம்"
வீட்டுக்குள்ளே சுற்று வேலைகளெல்லாம் அவன்தான் செய்ய வேண்டும். ஜானு சம்பாதிக்கிறாள். அவளை வேலை செய்யச் சொல்ல அம்மாவுக்குத் தைரியமில்லை. அவன் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு?
அவன் கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்தபோது ஜான வந்தாள். "இன்றைக்கு என்னவோ அலாரம் அடிச்சதே காதிலே விழவில்லை" என்றாள். "நீ ஏதாவது விஷமம் செய்தாயோடா?"
"எனக்கொன்றும் தெரியாது உன் கடிகாரத்தைப் பத்தி." என்றான் சுவாமிநாதன்.
"அவன் என்னடி செய்தான், பாவம்" என்றாள் அம்மா.
அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையே அபாயகரமான அன்னியோன்னியமும் ரகசிய உடன்படிக்கைகளும் நிலவுவ தாக ஜானுவுக்குத் தோன்றியது. "நீ ஒன்றும் அவனுக்காகப் பரிந்து கொண்டு வராதே" என்றாள். "அவன் இப்படித்தான் வேணுமென்றே ஏதாவது செய்வான். ஒருநாள் என் ஹேர் பின்னையெல்லாம் ஒளித்து வைத்திருந்தான்."
"நீ தான் முதலில் என் ஷேவிங் ஸெட்டை ஒளித்து வைத்திருந்தாய்" என்றான் சுவாமிநாதன்.
"தினசரி நான் ஆபீசுக்குப் போகிறெ நேரம் பார்த்து நீ டிரஸ்ஸிங் டேபிளுக்கெதிரில் க்ஷவரம் பண்ணிக் கொள்ள உட்காரத் தொடங்கினாய். அதனால்தான் ஒளித்து வைத்தேன்".
"உனக்கு எப்படி ஆபீஸ் போகிற நேரமாயிருந்ததோ, அப்படியே எனக்கும் காலேஜ் போகிற நேரமாயிருந்தது."
"முகத்திலே ஒரு மயிரு கூட முளைச்சிருக்கவில்லை உனக்கு, அப்போதெல்லாம் - அதுக்குள்ளே ஒரு க்ஷவரம். க்ஷவரம் பண்ணிக் கொள்ளாவிட்டால் காலேஜுக்குள்ளே விடமாட்டார்களா என்ன?"
"பவுடரையும் ஸ்நோவையும் அப்பிக்கொண்டு போகாவிட்டால் உங்க ஆபீசுக்குள்ளே விடமாட்டார்களா என்ன?"
"ஜாஸ்தி பேச வேண்டாம்".
"உன்னைவிடக் குறைச்சலாகத்தான் பேசினேன்".
"நான் ஆபீசுக்குப் போனதினாலேதான் நீ காலேஜுக்குப் போக முடிந்தது - ஞாபகம் வச்சுக்கோ" என்று ஜானு சீறினாள்.
'அப்பா பணத்திலேதான் நான் போனேன்".
"ஆமாம்; தாத்தா பணம். நான் ஒருத்தி சம்பாதிக்காவிட்டால் அப்போ தெரிஞ்சிருக்கும், நாலு காசு சம்பாதிக்கத் துப்புக் கிடையாது; வெக்கமில்லாமல் என்னுடன் சண்டைக்கு வராதே".
சுவாமிநாதனுக்குச் சுருக்கென்றது; மேலே பேச முடியாமல் மௌனமானான். பாணம் தைத்து விட்டதை உணர்ந்த திருப்தியுடன் ஜானுவும் மௌனமானாள். 'நான் சம்பாதிக்கிறேன். நான் மட்டுந்தான் சம்பாதிக்கிறேன்' - இது அவளுடைய பிரம்மாஸ்திரம்.
ஜானுவுக்குக் காப்பி கொடுத்து விட்டு அம்மா சமையலறையிலிருந்து சென்று விட்டிருந்தாள். சுவாமிநாதன் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, காய்கறி முழுவதையும் நறுக்கி முடித்தான். பிறகு வேகமாகப் பாத்ரூமை நோக்கி நடந்தான். ஆசை தீர அழுது தீர்க்கலாமென்று. ஆனால் பாத்ரூமில் அம்மா குளித்துக் கொண்டிருந்தாள். சுவாமிநாதன் ஆத்திரத்துடன் படபடவென்று கதவை இடித்தான். இவளுக்கு என்ன இப்போது அவசரம்?
"யாரு?" என்றாள் அம்மா.
"எனக்கு லேட்டாச்சும்மா".
"இதோ - அஞ்சே நிமிஷம்".
அம்மா வருவதற்கு ஐந்து நிமிடங்குளுக்கு மேலேயே ஆயிற்று. சுவாமிநாதன் பொறுமையிழந்தவனாகக் குறுக்கும் நெடுக்கமாக உலவினான். கடைசியில் ஒரு வழியாக அம்மா வந்தாள். "குழாயிலே ரொம்பக் கொஞ்சமாக ஜலம் விழறதுடா" என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
சுவாமிநாதன் ரவிக்கையணியாமல் வெறும் புடவையைச் சுற்றிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்க்கக் கூச்சப் பட்டுக் கொண்டு வேறு பக்கம் பார்த்தான். அவர்கள் இரண்டு பெண்கள், அவன் ஒரே ஓர் ஆண். இப்போது அப்பா மட்டும் உயிருடன் இருந்திருந்தால்!
பாத்ரூமில் குழாயைத் திறந்து விட்டுவிட்டுச் சுவாமிநாதன் யோசித்தான். 'முன்பெல்லாம் அப்பா செத்துப் போவதற்கு முன்பெல்லாம் - ஜானுவும் நானும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம்! எப்போதும் விளையாட்டு, கூச்சல், சிரிப்பு, அமர்க்களம். "டேய்! சித்தநாழி பேசாமலிருக்கமாட்டீர்கள்?" என்று அப்பாவின் அதட்டல், உடனே சற்று அமைதி. பிறகு மீண்டும் அமளி.
'ஆனால் இப்போது சிநேகிதமும் இல்லை, விளையாட்டும் இல்லை. சதா சண்டைதான்...'
அவன் குளித்துவிட்டு வரும்போது ஜானு சினிமாப் பாட்டொன்றை முனகியவாறு டிரஸ்ஸிங் டேபிளுக்கெதிரில் உட்கார்ந்து தலைமயிரில் எண்ணெய் தடவிக் கோதிக் கொண்டிருந்தாள். என்ன பாட்டு, என்ன ஆனந்தம். அவனுக்கு எரிச்சல் மூட்டுவதில் அவள் தேர்ந்தவள். டிரஸ்ஸிங் டேபிள் டிராயருக்குள் அவனுடைய பனியன் இருந்தது. "டிராயரைத் திறக்கணும்" என்றான். அவள் இடத்திலிருந்து எழுந்திராமல் சற்றே ஒருக்களித்து உட்கார்ந்தாள். சுவாமிநாதன் கூசியவாறே அவளுடைய விலாப்பக்கத்தருகே குனிந்து டிராயரைத் திறந்து தேடிக் கொண்டிருந்தபோது கூந்தலை மேலிருந்து கீழாக சீவிக் கொண்டிருந்தாளாகையால் அவளுடைய முழங்கை அவன் மேல் இரண்டு மூன்று தடவை இடித்தது. அவளுடைய புடவைத் தலைப்பு அவனுடைய வெற்று முதுகின் மேல் உரசியது. கூந்தலை அவள் நீவும்போது உண்டான கலகலவென்ற வளையலோசை; கிளுகிளுப்பான நறுமணம்- சுவாமிநாதனுக்குக் கண நேரத்துக்கு அவள் மேலிருந்த வெறுப்புக் குறைந்து ஒரு பூரிப்பும் இன்பக் கிளர்ச்சியும் உண்டாயிற்று. சில சமயங்களில் அவளைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட உணர்வுகள்தான் ஏற்படுகின்றன. உடனேயே இதற்காகத் தன் மீது கோபமும் வருகிறது. அலட்சியப்படுத்த முடியாத ஏதோ ஒன்றைப் பெற்றிருக்கும் காரணத்துக்காக அவள் மீது பொறாமை உண்டாகிறது.
அவன் தலைவாரிக் கொள்ளும்போது அவள் குளிப்பதற்காக எழுந்தாள். ஒருகணம் அவன் பின்னால் நின்று கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். சுவாமிநாதனுக்கு மீண்டும் எரிச்சலாக இருந்தது. தன் முகத்தில் அவனுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை, அதைப் பிறர் முன்னிலையில் பார்க்க அவன் கூசினான்.
நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு அவன் சுவாமியை நமஸ்காரம் செய்தான். சாப்பிட உட்கார்ந்தான். அவன் சாப்பிடத் தொடங்கும்போது திடீரென்று பாத்ரூமிலிருந்து ஜானு கூப்பிட்டாள்: "அம்மா! அம்மா!"
அம்மா பாத்ரூமுக்குச் சென்றாள். சுவாமிநாதன் குழம்புச் சாதத்தைச் சாப்பிட்டு முடித்தான். தட்டில் மிச்சமிருந்த கறியையெல்லாம் தின்றான். கைவிரல்களையெல்லாம் ஒவ் வொன்றாக நக்கிக் கொண்டான். அம்மா வரவேயில்லை. அவனுக்குக் கோபம் வந்தது. அம்மா குளித்து லேட்டாக்கினது போதாதென்று இப்போதும் லேட்டாக்குகிறாள். அம்மாவும் ஜானுவுமாக அவனைத் தாமதப்படுத்திச் சதி செய்கிறார்களோ? "ஏ அம்மாவ்!"
அம்மா ஓடி ஓடி வந்தாள். "முதுகைத் தேய்ச்சு விடணுமென்றாள்..." என்றவாறு அவசரமாக அவனுக்குச் சாதம் பரிமாறினாள். "போதும்! போதும்!" என்று ஒரு பிடிச் சாதத்தை அவன் ஒதுக்கினான்.
"சாப்பிடறதேயில்லையே நீ".
"இப்படிச் சாதம் போட மூணு மணி நேரமாக்கு: நிறையச்' சாப்பிடலாம்".
"நீ உட்கார்ந்திருப்பதே மறந்து போச்சு".
"என்னை உனக்கு மறந்து தான் போகும்".
"நன்றாகக் கோபம் வரது உனக்கு, உங்கப்பா மாதிரி" என்ற அம்மா மோர் ஊற்றத் தொடங்கினாள்.
அவசரமாகச் சாப்பிட்டு முடித்தான். சட்டையும், பாண்டும் அணிந்து கொண்டு அவன் ஸாக்ஸ் அணியும்போது ஜானு குளித்து விட்டு வந்தாள். ஸாக்ஸ் நுனியில் ஒரு ஓட்டை. ஜானுவின் புடவைகளும் ரவிக்கைகளும் கைக்குட்டைகளும், செருப்புகளும் வீடெங்கும் இறைகின்றன. அவனுக்கோ ரகத்துக்கு ஒன்றுகூட இருப்பதில்லை. அப்பா இருந்தவரை அவனுக்கு வேண்டியதையெல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கி வருவார்.
"எங்கேடா உனக்கு இன்டர்வியூ" என்று புடவை மடிப்புகளைச் சரி செய்தவாறே ஜானு கேட்டாள். அவன் தான் போகும் கம்பெனியின் பெயரைச் சொன்னான்.
"பைசா ஏதாவது வேணுமா?"
"ஒண்ணும் வேண்டாம்".
அவள் முகத்தில் ஒரு புன்னகை ரேகை. 'சிரி, சிரி. எனக்கு வேலை கிடைத்த பிறகு நானோ அம்மாவோ உன்னிடம் பிச்சை கேட்கவேண்டியிராது' என்று நினைத்தவாறு கர்சீப், பேனா, பர்ஸ், சர்ட்டிபிகேட்டுகள் முதலியவற்றைத் திரட்டிக் கொண்டு அவன் கிளம்பினான். "போயிட்டு வரேம்மா".
"தைரியமாய்ப் போயிட்டு வா, சுவாமியை நினைச்சுக்கோ".
வீட்டிற்கு வெளியே வந்து நெற்றி விபூதியை அழித்துக் கொண்டான். சுவாமியை நினைத்துக் கொள்ளத்தானே வேண்டும்? காலை வெய்யிலில் நடப்பது உற்சாகமாக இருந்தது. சாலையைப் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு தோட்டி அவனைப் பார்த்து, "மணி என்ன?" என்று கேட்டான். ஒரு கணம் தடுமாறிவிட்டு,"எட்டரை" என்றான் சுவாமிநாதன். சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு ஒரு நல்ல ரிஸ்ட் வாட்ச் வாங்க வேண்டும். பிறகு, எல்லாருக்கும் கரெக்டாக மணி சொல்லலாம்...
ஈசுவர மாமா தன் வீட்டு வராந்தாவிலேயே உட்கார்ந்திருந்தார். அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். "எத்தனை மணிக்கு இன்டர்வியூ? என்றார்.
"பத்து மணிக்கு".
"இன்று செவ்வாயா? - 'திண்டுக்கல் சத்திரத்திலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டவன் விழுப்புரத்திலே செத்தான் ஞாயிற்றுக் கிழமை' - இன்று மூன்று மணிக்கு ராகு காலம்; கவலையில்லை" என்றார் அவர். பிறகு, "உன் சர்டிபிகேட் ரெடி. கமலி! அந்தப் பையை எடுத்துக் கொண்டு வா" என்றார் தன் பெண்ணிடம்.
நடத்தை சர்டிபிகேட் வேண்டுமென்று அவரிடம் கேட்டிருந்தான் அவன். கமலி பையை எடுத்து வரும்போது அவளுடைய அம்மாவும் வந்தாள். "என்னப்பா சுவாமிநாதா, சௌக்கியமா?" என்றாள்.
"உம்"
"உங்கம்மா இந்தப் பக்கம் வரதேயில்லையே".
"வேலை சரியாயிருக்கு" என்றான் சுவாமிநாதன். 'எனக்கு வேலை கிடைத்து நான் நல்ல நிலைமைக்க வந்த பிறகு எங்கம்மா எல்லோரையும் பார்க்க வருவாள்' என்று நினைத்தான்.
சர்ட்டிபிகேட்டை வாங்கிக் கொண்டு அவன் புறப்படும் போது, "என்கூடவே காரில் வந்து விடேன்" என்றார் ஈசுவரன். புதிய கார், குலுக்கலில்லாத ஓட்டம். மெத்தென்ற ஆசனம். அம்மாவும் ஜானுவும் அவனைத் தாமதப்படுத்த நினைத்தார்கள். ஆனால் அவனுக்குக் காரில் லிஃப்ட் கிடைத்து விட்டது. அப்பாவைப் போலவே அப்பாவின் சிநேகிதர்களும் நல்லவர்கள்.
ஈசுவரன் ஏதோ ராகத்தை முனகிக் கொண்டே கார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்பாவும் இப்படித்தான் ஏதாவது ராகத்தை முனகிக் கொண்டே இருப்பார். ஈசுவரனுக்கு உச்ச நிலையில் சொட்டை விழத் தொடங்கியிருந்தது, அப்பாவைப் போலவே. அவனுக்குத் திடீரென்று அப்பாவுடன் டாக்ஸியில் போன நினைவுகள் எழுந்தன. காலையில் சொப்பனத்தில் பார்த்த அப்பா எவ்வளவு அழகாக இருந்தார்.
பேட்டிக்கு அழைத்திருந்த கம்பெனி வாயிலில் அவனை இறக்கிவிட்டு,'ரைட்டோ - குட்லக்!' என்று ஈசுவரன் காரைச் செலுத்திக் கொண்டு போனார்.
சுவாமிநாதன் எதிரே இருந்த பெரிய கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான் - உயரமான, அழகான கட்டிடம். கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவுடன் கீழே விரிக்கப்பட்டிருந்த அழகிய மாட்டிங்க், கண்ணாடியாலும் பிளாஸ்டிக்கினாலும் பிளைவுட்டினாலும் அமைக்கப் பட்டிருந்த சுவர்களும் தூண்களும், பளபளக்கும் மேஜையருகே அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்த ரிஸப்ஷனிஸ்ட் மங்கை... இவ்வளவையும் பார்த்துத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது.
ரிஸப்ஷனிஸ்ட் மிகவும் அழகாக இருந்தாள். சிவப்புப் புடவைக்கும் கறுப்பு ரவிக்கைக்கும் மூடப்படாமல் தப்பி அவளுடைய வெள்ளை வெளேரென்ற சருமம் இங்குமங்குமாய்த் தென்பட்டுக் கொண்டிருந்தது. சுவாமிநாதன் அவளருகே சென்றவுடன்,"யெஸ் ப்ளீஸ்" என்றாள் அவள் புன்னகையுடன். சுவாமிநாதனுக்கு இதயம் படபடவென்றது.* "இன்டர்வியூவுக்கு வந்தேன்" என்று தடுமாற்றத்துடன் கையிலிருந்த கடிதத்தை அவளிடம் காட்டினான். "ஸெகண்ட் ஃப்ளோர் ப்ளீஸ் - ரூம் நம்பர் டூ நாட் டூ" என்றாள் அவள் அதே புன்னகையுடன்.
இரண்டாவது மாடியில் ஒரு மூலையில் பேசிக் கொண்டிருந்த மூன்று பியூன்களிடம் இருநூற்றிரண்டாம் நம்பர் அறைக்கு வழி கேட்டுக் கொண்டு அவன் மேலே நடந்தான். பின்னால் அவர்கள் சிரிக்கும் சத்தம் கேட்டது; தன் காரணமாகத்தான் சிரிக்கிறார்களோ என்னவோ? இவர் களுக்கு வேலை கிடையாதோ? அவன் இங்கே வந்த பிறகு இவர்களுக்கு நிறைய வேலை கொடுப்பான்.
இருநூற்றிரண்டாம் நம்பர் அறைக்குள் ஏற்கனவே பல இளைஞர்கள் காத்திருந்தார்கள். அவன் உள்ளே நுழைந்ததும் எல்லார் கண்களும் அவனை நோக்கித் திரும்பின. சுவாமிநாதன் கூச்சத்துடன் காலியாக இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். அவனைப் பார்த்துக் கொண் டிருந்தவர்கள் மெல்லப் பார்வையை வேறு திசைகளில் திருப்பினார்கள். இவன் ஒரு பிரமாதமான போட்டியாக வரக் கூடியவனில்லை என்று நினைத்தவர்கள்போல. சுவாமி நாதன் அவர்களை ஒரு நோட்டம் விட்டான். அவர்களில் சிலரையாவது அவனால் தோற்கடிக்க முடியாதா?
திடீரென்று ஒரு நறுக்கு மீசை இளைஞன் "ஹலோ!" என் றான் சுவாமிநாதனைப் பார்த்து. முன்பு எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் சந்தித்திருந்த அந்த இளைஞனை அடையாளம் கண்டு கொண்டு,"ஹலோ" என்றான் சுவாமிநாதனும். எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் பொசுக்கும் வெய்யிலில் நீளமான கியூவில் நின்றிருந்தபோது பொதுவான ஒரு எரிச்சலிலும் தவிப்பிலும் முளை விட்டிருந்த அவர்களுடைய நட்பு இப்போது மீண்டும் ஊட்டம் பெற்றது.
"இன்னும் வேலையொன்றும் கிடைக்கவில்லையா?"
"ஒரு இழவுமில்லை."
பரஸ்பர அனுதாபங்கள்; யோசனைகள்.
ஹோஹோவென்ற ஒரு அட்டகாசசவ் சிரிப்பு -எதிரே உட்கார்ந்திருந்த ஒரு பருமனான இளைஞன்தான் அப்படிச் சிரித்தான். தான் சென்றிருந்த பல பேட்டிகளைப் பற்றிய அனுபவங்களை அவன் விவரித்துக் கொண்டிருந்தான்.:
"காலேஜ் பாஸ் பண்ணிவிட்டு இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாய்?"
"உங்களுடைய விளம்பரத்துக்காகக் காத்துக் கொண்டிருந் தேன்."
"நீ இந்த வேலைக்கு ஏற்றவனென் நினைக்கிறாயா?"
"நிச்சயமாய். ஆனால் இந்த வேலைதான் எனக் அவ்வளவு ஏற்றதில்லை."
"டைப்பிங் தெரியுமா உனக்கு?்
"தெரியாதே ஸார்; யார் அவர்?"
"எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறாய்?"
"உங்களுக்கும் எவ்வளவு கட்டுபடியாகும்?"
குண்டு வாலிபனின் ஒவ்வொரு வாக்கியத்தையும் தொடர்ந்து குபீரென்ற சிரிப்பு. மௌனம் பூதாகரமாக வளர்ந்து திகிலையும் தவிப்பையும் எழுப்புவதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் சிரித்தார்கள். தங்களுடைய பயங்களையும் பலவீனங்களையும் மறைப்பதற்காகவும், தங்களைப் பற்றிய உண்மையை மறப்பதற்காகவும் சிரித்தார்கள். பேட்டியில் உண்மை வெளியாகப் போகிறது.. அந்தக் கணம் வரையில் சிரித்துக் கொண்டேயிருக்கலாம்...
திடீரென் ஒரு மூக்குக் கண்ணாடி ஆசாமி கையில் ஒரு பெயர்ப் பட்டியலுடன் அறைக்குள் வந்தான். "ஸைலன்ஸ் ப்ளீஸ்!" என்று கூறினான். "உங்களைப் போன்ற படித்த இளைஞர்கள்.." என்று ஒரு சொற்பொழிவு, அவர்கள் யாரும் பேசவில்லை. கம்பெனியிடம் காரியம் ஆக வேண்டியிருக்கும் போது, கட்டுத்தறியின் உளறலையும் சகித்துக் கொண்டுதானே ஆக வேண்டும்.
மூக்குக் கண்ணாடி ஒவ்வொருவராக அழைத்து அவர்களுடைய சர்டிபிகேட்டுகளைப் பரிசோதித்தான். பிறகு ஒரு தள்ளு கதவைத் திறந்து பக்கத்து அறைக்குள் எட்டிப் பார்த்து ஏதோ கூறிவிட்டு, "ஆல்ரைட்! நான் பெயர் கூப்பிடுபவர்களெல்லாம் ஒவ்வொருவராக எழுந்து இந்த அறைக்குள் செல்லுங்கள் - முதலில், மிஸ்டர் ..." என்று பட்டியலில் இருந்த முதல் பெயரை வாசித்தான். கூப்பிடப்பட்ட இளைஞன் எழுந்து சென்றான்.
முதல் பெயர் தன்னுடையதாக இல்லையே என்று சுவாமிநாதனுக்கு ஆறுதலாக இருந்தது. இயல்பாகவே அவன் முதல் ஆசாமியுமல்ல, கடைசி ஆசாமியுமல்ல. அவன் வேண்டியதெல்லாம் இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு மறைவான இடம். முதலாவதாக இருப்பதற்கும் கூச்சம். கடைசியாக இருப்பதற்ம் வெறுப்பு.
ஒன்று, இரண்டு, மூன்-பெயர் வாசிக்கப்படுபவர்கள் ஒவ்வொருவராக எழுந்து சென்றார்கள். 'எல்லாம் வெறும் ஐ வாஷ்' என்றான் குண்டு வாலிபன். "வேலைக்கு வேண்டிய ஆளை ஏற்கனவே தேர்ந்தெடுத்திருப்பார்கள் சிபாரிசு மூலமாய். நம்முடைய சர்ட்டிபிகேட்டுகள் வீண்; நாம் இங்கே வந்தது வீண்.."
குண்டு வாலிபனின் பிரசங்கமாரி, பிரசங்கப் புயல் ஒரு அரசியல் தலைவனாக அவன் வரக்கூடும். ஒரு ஆபீஸ் நாற்காலியில் அமர்ந்து இன்னொருவர் கீழ் வேலை செய்பவனாக அவனைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. பார்க்கப் போனால் தன்னைக்கூட நாள் முழுதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவனாக சுவாமிநாதனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை- எந்த விதமான வேலையோ? 'ஆபீஸ் உதவியாளன்' என்று விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது. யாருக்கு எந்த விதமான உதவி? அவனுக்குக் கீழே அவனுக்கு உதவி செய்யும் யாராவது இருப்பார்களா? வராந்தாவில் இருந்த பியூன்கள் - ஆ! அவர்களை அவன் விரட்டலாம்.. ஒரு பெரிய அறையில் வேறு சில மனிதர்களுடன் அவன் உட்கார்ந்திருப்பான். இதைப் போலவே ஒரு அறை.
சுவாமிநாதன் அறையைச் சுற்றித் தன் பார்வையைச் சுழலவிட்டான். மேலே கூரையில் லொடக்கு லொடக்கு என்று சத்தமிட்டவாறு ஒரு மின் விசிறி சுழன்றது. சுவரில் ஒரு பல்லி உட்கார்ந்திருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியே இருந்த ஒரு மரத்தின் பச்சை இலைகளும், தூரத்தில் நீல வானமும் தெரிந்தன. வெய்யிலின் கிரணங்கள் தரையில் ஜன்னல் வடிவத்தில் ஒரு ஒளிக் கட்டத்தைப் படிய விட்டிருந்தன; ஜன்னல் கண்ணாடியின் மீது 'ஙொய்ங்...' என்ற ரீங்காரத்துடன் ஒரு குளவி தன் தலையை மீண்டும் மீண்டும் மோதிக் கொண்டிருந்தது. அருகில் எங்கிருந்தோ படபடவென்று டைப் அடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
குண்டு வாலிபனும் நறுக்கு மீசையும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்; அறையிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து பேட்டி அறைக்குள் சென்றார்கள். சுவாமிநாதன் அந்த அறையைப் பற்றியும் தன்னைப் பற்றியும் பேட்டியைப் பற்றியும் மறக்க முயன்றான். வெளியே பளிச்சென்ற வெய்யிலில் நடக்கும் காட்சிகளைக் கற்பனை செய்து பார்த்தான். படபடவென்ற ஸ்கூட்டர் ஒலிகள், வெவ்வேறு ஹாரன் ஒலிகள், டர்ரென்று தரையை அதிர வைத்தவாறு சென்ற லாரிகளும் பஸ்களும்- இப்படிப் பற்பல ஓசைகள் வெளியிலிருந்து அவ்வப்போது மிதந்து வந்தன. பிரகாசமான பகல் வெய்யிலில் உலகம் எப்படியிருக்கு மென்று இனி அவனால் பார்க்க முடியாது. காலையிலும் மாலையிலும்தான் பார்க்க முடியும்.
சுவாமிநாதன் கண்களை இறுக மூடிக் கொண்டான். லொடக்கு லொடக்கு என்ற விசிறிச் சத்தம்; குண்டு வாலிபனின் பேச்சுக் குரல்; டைப்ரைட்டிங் சத்தம்; குளவியின் ரீங்காரம். சுவரில் இருந்த பல்லி திடீரென்று 'கிர், கிர்' என்று கத்தியது. சுவாமிநாதன் கண்களைத் திறந்து பார்த்தான். பரீட்சை ஹாலில் இப்படித்தான் ஒரு பல்லி உட்கார்ந்திருந்தது. தினசரி பாதி நேரத்தில் பேப்பரை முடித்து விட்டு மிச்ச நேரமெல்லாம் அவன் ஆசிரியர் முகத்தையும் சுவர்களையும், ஜன்னல்களையும், பல்லியையும் பேனாவையும் மாறிமாறிப் பார்த்தவாறு வேறு யாராவது முதலில் பேப்பர் கொடுத்துவிட்டுப் போகிறார்களா என்று கவனித்துக் கொண்டிருந்தான். அப்போது எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருந்தது, எல்லாப் பரீட்சைகளையும் மூன்று மணிநேரம் எழுதியிருந்தால் மூன்றாம் வகுப்பில் பாஸ் பண்ணி இன்று இந்த உதவாக்கரைப் பேட்டிக்காகக் காத்திருக்க வேண்டாம்.
இப்போது அம்மாவும் அக்காவும் என்ன செய்து கொண்டிருப்பார்களென்று அவன் யோசித்தான். அம்மா பகல் தூக்கம் தூங்கி எழுந்திருப்பாள். அக்கா ஸ்டெனோ- ஏதாவது டைப் அடித்துக் கொண்டிருப்பாள், அல்லது பென்சிலையோ, நகத்தையோ, கர்ச்சீப்பையோ கடித்துக் கொண்டிருப்பாள். சும்மா உட்கார்ந்திருக்கும் போதெல்லாம் எதையாவது கடித்துக் கொண்டிருப்பது அவள் வழக்கம். அவளுடைய ஆபீசை அவன் பார்த்திருக்கிறான்; சுத்தப் பழங்காலத்துக் கட்டிடம்-அக்காவுடைய ஆபீசை விட அழகியதொரு ஆபீசில் அவனுக்கு வேலை கிடைக்கப் போகிறது. இந்த ஆபீஸில் சில நாட்களில் மிகவும் பிரபலமாகி விடுவான். நிறைய நண்பர்களைப் பெறுவான். அக்காவுடனோ, அம்மாவுடனோ அவன் தெருவில் செல்லும்போது இவர்கள் எதிரே வந்தால் அவனைப் பார்த்துப் புன்னகை செய்வார்கள். சுவாமிநாதன் பெரியவனா அல்லது ஜானு பெரியவளா என்று பிறகு அம்மாவே தீர்மானித்துக் கொள்ளட்டும். பெரிய பெரிய மனிதர்களெல்லாம் அவன் வீடுதேடி வருவார்கள். "சுவாமிநாதன் இருக்கிறானா?" "மிஸ்டர் சுவாமிநாதன் வீடு இதுதானே?", :மே ஐ ஸ்பிக் டு சுவாமிநாதன்?" என்று கேட்பார்கள்.
சுவாமிநாதன், சுவாமிநாதன், சுவாமிநாதன்.
"சுவாமிநாதன்!"
திடுக்கிட்டவனாய் அவன் நிமிர்ந்தான். கூப்பிட்டது மூக்குக் கண்ணாடி ஆசாமிதான்-அதற்குள்ளாக அவனுடைய முறை வந்துவிட்டதா?
மூக்குக் கண்ணாடியைத் தாண்டி பேட்டி அறைக்குள் நுழைந்தவுடனேயே இவ்வளவு நேரமாக வரவழைத்துக் கொண்ட தைரியமெல்லாம் போன இடம் தெரியவில்லை. எதிரே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு-நான்கு ஆசாமிகள். நான்கு ஆசாமிகளுக்கு எதிராக அவன் ஒரே ஒருவன், "குட் ஆஃப்டர்னூன்" என்று அவன் கூற விரும்பினான். ஆனால் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டதெல்லாம் உருவமற்ற ஒரு ஒலிச் சேர்க்கை-பயத்தில் வேக வேகமாக வெளிப்பட்ட மூச்சுக் காற்றிலே காதுக்கெட்டாத முணுமுணுப்பாகத் தேய்ந்துவிட்ட வார்த்தைகள்.
"ஸிட்டௌன்".
நாற்காலியில் சாய்ந்து உட்காராமல் முன் புறம் குனிந்து தர்மசங்கடத்துடன் உட்கார்ந்த சுவாமிநாதனை எதிரேயிருந்த நாலு ஜோடிக் கண்கள் கூர்ந்து கவனித்தன. அவனைக் கூசித் தடுமாறச் செய்த நாலு ஜோடி ‘மெர்க்குரி லைட்’ விழிகள்; அவனை ஊடுருவி ஆராய்ந்த நாலு எக்ஸ்ரே காமிராக்கள்...
"நீர்தான் மிஸ்டர் சுவாமிநாதனா?"
எதிரே பருமனாகக் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தவர் தான் இந்தக் கேள்வியைக் கேட்டவர். "ஆமாம்" என்று அவரைப் பார்த்துக் கூறினான் சுவாமிநாதன்.
"என்ன வயதாகிறது உங்களுக்கு மிஸ்டர் சுவாமிநாதன்?"
"இருபத்தொன்று".
"மிகச் சின்னவனாகத் தோன்றுகிறதே உங்களைப் பார்த்தால்"
"என் தப்பில்லை ஸார்!" என்றான் சுவாமிநாதன். இதற்கு அவர்கள் சிரிப்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஆனால் யாருமே சிரிக்கவில்லை. அவனுக்குச் சங்கடமாக இருந்தது.
எதிரே இருந்தவருடைய இன்னும் சில கேள்விகளுக்கும் பதிலளித்த பிறகு அவனுக்குச் சற்றே பயம் விலகியது. ஆனால் இந்தச் சமயத்தில் வலது ஓரத்திலிருந்தவர் சட்டென்று ஒரு கேள்வியைக் கேட்டார். எதிரேயிருந்தவரையே கவனித்துக் கொண்டிருந்த சுவாமிநாதன் இந்தப் பக்கவாட்டுத் தாக்குதலால் மீண்டும் தடுமாறிப் போனான். அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது இடது ஓரத்திலிருந்தவர் இன்னொரு கேள்வி கேட்டார். டென்னிஸ் விளையாட்டைப் போல இங்குமங்குமாய் வந்து விழுந்த பல கேள்விப் பந்துகளை அவன் சமாளிக்க வேண்டியிருந்தது. நாலு எதிராளிகள்; எண்ணற்ற பந்துகள். ‘ஸெர்வீஸ்’ எப்போதும் அவர்கள் கையில்.
அவந்தான் மூத்த பிள்ளையா? பாஸ் பண்ணி விட்டு இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தான்? இன்றைய தினசரியில் தலையங்கம் என்ன? அவன் கடைசியாகப் படித்த புத்தகம் எது? இதுவரை அவன் உட்கார்ந்திருந்த அறையில் எவ்வளவு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன?...
எதிரே உட்கார்ந்திருந்தவர்களின் கேள்விகளுக்குப் பயத்துடனும் தயக்கத்துடனும் பதிலளித்துக் கொண்டிருந்த சுவாமிநாதனுக்குத் திடீரென்று அவர்கள் மேல் கோபமாக வந்தது. மிகவும் புத்திசாலிகளாகவும் பாரபட்சமில்லாதவர் களாகவும் அவர்கள் பாசாங்கு செய்வதாகத் தோன்றியது. அவர்கள் வேலையில் சேர்ந்தபோது இப்படி இன்டர்வியூ மூலமாக வந்திருப்பார்களா, அல்லது வேறு வழிகள் மூலமாகவா? தங்களுடைய தற்போதைய பதவியை அவர்கள் அடைந்திருப்பது நேர் வழிகள் மூலமாகத்தானா? காலியாயிருக்கும் இடத்துக்கு ஏற்கனவே தங்களுடைய ஆளை அமர்த்தியிருப்பார்களா இல்லையா? அவர்களுடைய வரவழைத்துக் கொள்ளப்பட்ட முகபாவங்களையும் பெரிய மனிதத் தோரணையையும் கலைக்க-அவர்கள் திடுக்கிடும்படி பதறும்படி ஏதாவது செய்ய-அவன் ஆசைப்பட்டான். அவர்களுடைய வாழ்க்கையின் கழிந்துபோன அத்தியாயங் கள் அவர்களுடைய முகங்களின் சுருக்கங்களிலும் மேடு பள்ளங்களிலும், அவர்களுடைய நரைத்த அல்லது வழுக்கை விழுந்த தலைகளிலும், அவர்களுடைய உடலின் தடிப்புக்களிலும், மடிப்புக்களிலும் தெளிவாக எழுதப் பட்டிருந்தன. அவர்கள் எதையெல்லாம் சம்பாதித்திருந்தாலும் பெற்றிருந்தாலும் ஒன்றை மட்டும் நிரந்தரமாக இழந்து விட்டிருந்தார்கள். இளமையை, இளமையின் புதுமையை, தூய்மையை, துடிப்பை. அவர்களுடைய பணத்தையும் பதவியையும் அனுபவத்தையும் சுவாமிநாதனாலும் பெற முடியும். ஆனால் அவனுடைய இளமையை-இன்னும் ஒரு அத்தியாயம் கூட எழுதப்படாத அவனுடைய சுத்தமான நிஷ்களங்கமான முகத்தை-அவர்களால் பெறவே முடியாது.
சுவாமிநாதனுக்கு ஒரு அலட்சியமும் கர்வமும் உண்டாயிற்று. அவனுடைய வாழ்க்கை முழுவதுமே முன்னால் விரிந்து கிடந்தது. இந்தப் பேட்டிக்காகவும் இந்த முட்டாள்களுக்காகவும் அவன் ஏன் பயப்பட வேண்டும்? இந்த ஏர்கண்டிஷன் அறைக்கு வெளியே வெய்யில் அடித்துக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை இருக்கிறது. அவன் தைரியமாகவும் மிதப்பாகவும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினான். ஆனால் அவனுக்குத் தைரியம் வந்த சமயத்தில் பேட்டி முடிந்து விட்டது.
மாலை வெய்யிலிலும் சிலுசிலுவென்ற காற்றிலும் சுவாமிநாதன் பேட்டியைப் பற்றி யோசித்தவாறே நடக்கத் தொடங்கினான். வீதி முனையில் சாலையைக் கடப்பதற்காகச் சற்றே நின்றான். சிவப்பு விளக்கு வருவதையும் வண்டிகள் நிறுத்தப்படுவதையும் எதிர்பார்த்தவாறு நின்று கொண் டிருந்தவன், நிமிர்ந்து எதிர்ச் சாரியை ஒரு கணம் பார்த்தான். ஒருகணம், இரண்டுகணம்.... எதிர்ச்சாரியில் நடந்து சென்று கொண்டிருப்பது யார்? சுவாமிநாதனுக்குத் தலை சுற்றியது.
ஜானு-அவள் கூடவே ஒரு இளைஞன். ஜானு அவனைக் கவனிக்கவில்லை. அவள் சந்தோஷமாக இருந்தாள்; சிரித்துக் கொண்டிருந்தாள். அந்த இளைஞனும் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் வாட்டசாட்டமாக கருப்புக் கண்ணாடியணிந்து சினிமா ஹீரோ போலிருந்தான். சிவப்பு விளக்கு வந்து வண்டிகள் நின்றுவிட்டன. சுவாமிநாதன் எதிர்ச்சாரியைப் பார்த்தவாறு சாலையைக் கடக்காமல் நின்று கொண்டேயிருந்தான். மீண்டும் பச்சை விளக்கு வந்து வண்டிகள் ஓடத் தொடங்கின. சுவாமிநாதன் அந்தச் சாலையிலேயே மெல்ல நடக்கத் தொடங்கினான்.
சற்றுத்தூரம் நடந்ததும் ஒரு சினிமாத் தியேட்டர்; அவனுக்குப் பிடித்த நடிகை நடித்த படம். படத்தின் புகைப்படங்களை அவன் பார்க்கத் தொடங்கினான். அந்த நடிகையின் பலவித போஸ்கள். கம்பெனியில் பார்த்த ரிஸப்ஷனிஸ்ட்டை அவன் நினைத்துக் கொண்டான். அக்காவையும் கருப்புக் கண்ணாடி வாலிபனையும் நினைத்துக் கொண்டான். ஒரு பிரம்மாண்டமான சூன்ய உணர்வும் ஏக்கமும் அவனைப் பிடித்து உலுக்கின. சட்டென்று ஒரு டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் நுழைந்தான்.
சினிமாத் தியேட்டர்கள் அவனுக்குப் பிடித்திருந்தன. அங்கே தான் சுவாமிநாதன் என்பதையும் தன்னுடைய பல்வேறு கவலைகளையும் மறந்து விட முடிகிறது. ஆனால் இன்று மனம் சினிமாவில் லயிக்கவில்லை. பேட்டியைப் பற்றியும், அக்காவைப் பற்றியும், அம்மாவைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தது. அம்மா தனக்காகக் கவலைப் படுகிறாளோ என்னவோ -நாழியாகிறதே என்று. அம்மாவுக்கு நாள் முழுவதும் வீட்டிலே உட்கார்ந்து கவலைப்படுவதுதான் வேலை. திடீரென்று, அம்மா சினிமாப் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன என்று அவனுக்குத் தோன்றியது. அப்பா இருந்தபோது எல்லாரையும் அழைத்துச் செல்வார்...
இடைவேளை. சுவாமிநாதன் எழுந்து வெளியே வந்தான். சுற்றிலும் சந்தோஷமான குடும்பங்கள். அப்பா இருந்திருந்தால் அவர்களும் இப்படி சந்தோஷமாக இருந்திருப்பார்கள்; அப்பா வுடன்தான் அவர்களுடைய பொதுவான உலகம் இருந்தது. அப்பா இறந்த பிறகு அவர்கள் தனித்தனியாகத் தங்கள் உலகங்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அம்மா வீட்டின் நான்கு சுவர்களுக்ககிடையில்; ஜானு கருப்புக் கண்ணாடியணிந்த அந்த இளைஞனைப் போன்றவர்களிடம்; சுவாமிநாதன் பேட்டி அறைகளில். பேட்டி அறைகளில், அப்பாவின் பகல் பொழுதுகள் கழிந்த வெளியுலகத்தை அவன் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான். அந்த உலகத்தின் இரக்கமற்ற கடுமையையும் தாங்கிக் கொள்ளச் சக்தியின்றி, சினிமாத் தியேட்டரின் இருட்டுக்குள்ளே தன்னை ஒளித்துக் கொள்கிறான்.
இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தியேட்டருக்குள் போக அவனுககுப் பிடிக்கவில்லை. பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்.
பஸ் ஸ்டாண்டில் கூட்டமேயில்லை. சுவாமிநாதன் தன் யோசனைகளுடன் தனித்து விடப்பட்டான். அவனுக்கும் ஜானுவுக்கும் வீடு திரும்புவதே பிடிப்பதில்லை. வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் ஆணாயிருந்தும் அப்பாவுடைய பொறுப்பு களை இன்னும் ஏற்றுக் கொள்ளாதது அவன் மனத்தை உறுத்துகிறது. ஒரு செல்லப் பெண்ணின் சலுகைகளை இழந்து வேலை பார்க்க வேண்டியிருப்பது அவளுக்கு எரிச்சல் மூட்டுகிறது. வீட்டுக்குப் போனதும் பேட்டியெல்லாம் நன்றாகபுர் பண்ணினாயா என்று அம்மா கேட்பாள். அவனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று அவளுக்கு ஆசையாக இருக்கிறது. அப்போது அவனுடைய அப்பாவை மீண்டும் அவனிடத்தில் அவள் காண்பாள். கர்வத்துடன் வெளியே செல்லத் தொடங்குவாள். ஜானுவும் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறாள் - தன்னுடைய விடுதலைக்காக. அவர்களை விட்டு விலகித் தன் சொந்த உலகத்தை அமைப்பதற்காக ஒரு வேலை கிடைத்து விட்டால் பிறகு இந்த ஜானுவின் தயவை எதிர்பார்க்க வேண்டாமே என்று சுவாமிநாதனுக்குத் தோன்றுகிறது.
ஆனால் அவனுக்கு வேலை கிடைத்துவிடக் கூடாதேயென்றும் அவர்கள் பயப்படுகிறார்கள். ஜானுவைப் போல அவனும் தன்னுடைய உலகத்தை விட்டு நழுவி விடுவானோ என்று அம்மா பயப்படுகிறாள். தன் சுயேச்சையும் சர்வாதிகாரமும் பறி போய்விடுமே என்று ஜானு பயப்படுகிறாள். கவலைகளற்ற தன் பகல் பொழுதுகள் இனி வேற்று மனிதர்களுக்குச் சொந்தமாகி விடுமேயென்று சுவாமிநாதன் பயப்படுகிறான்.
இந்தப் பஸ் ஏன் வரவே மாட்டேனென்கிறது? இதுவே சினிமாவாக இருந்தால் அந்த அழகிய ரிஸப்ஷனிஸ்ட் இப்போது ஒரு அழகிய காரில் சட்டென்று தோன்றி அவனை ஏற்றிச் சென்றிருப்பாள். பிறகு அவளுடைய அப்பாதான் கம்பெனி முதலாளி என்பபதையும் அவன் கண்டுபிடிப்பான். சினிமாவாக இருந்தால் இடைவேளைக்குப் பிறகு அவனுடைய அப்பா உயிருடன் திரும்பி வந்து விடுவார். பிறகு அவன் வேலை தேட வேண்டிய அவசியமே இருக்காது. சினிமாவைப் போல வாழ்க்கை இருந்தால் கஷ்டமில்லை.
வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? ஏன்? - சுவாமிநாதன் பஸ் ஸ்டாணடில் நின்றவாறே யோசித்துக் கொண்டேயிருந்தான்.
-----------------------------------------------------------
12. இறந்தவன்
லஞ்ச் டயத்துக்குச் சரியாகப் பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது அவன் அவளுடைய அறைக்கு வந்தான். சுரீரென்று அவளுள் பரவிய சிலிர்ப்பு...ஆம், சந்தேக மில்லை.
This is it.........Love.
அவன் பார்வை அவள் முகத்தின் மேல் விழுந்து, ஆனால் அங்கு தங்காமல் வழுக்கிச் சென்று மிஸஸ். பிள்ளையின் மேல் போய் நிலைத்தது. அவன் அவளருகே சென்றான். அவளைத்தான் பார்க்க வந்தது போல.
"ஹலோ!"
"ஹலோ!" என்றாள் மிஸஸ். பிள்ளை."உட்காருங்கள்".
அவன் உட்கார்ந்தான். பார்வை எழும்பத் தயங்கியவாறு மேஜை மேல் புரண்டது. "என்ன நடந்து கொண்டிருக்கிறது?" என்றான்.
அவள் உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தாள்.
அவன் மேஜை மேல் கிடந்த ப்ரூப்கள், புகைப்படங்கள் குவியலிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். சிரிக்கும் ஜாக்குலீன்.
"இவளைப் பற்றி என்ன வெளியிடப் போகிறீர்கள்?" என்றான்.
"ஆராய்ச்சிக் கட்டுரை - அடுத்ததாக அவள் யாரை மணக்கக்கூடும் என்பது பற்றி".
"மை காட்!"
"ஏன்?"
"அசிங்கமாக இல்லை?"
"எது? அவள் மறுமணம் செய்து கொள்வதா?"
இல்லை; அது பற்றி இவ்விதமாக...."
"வியாபாரம்" என்று மிஸஸ். பிள்ளை தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.
"ஜாக்குலீன் உயிருள்ள உண்மை. அதே சமயத்தில் கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றின் அபூர்வத் தன்மையும் சுவையும் நிரம்பியவள் - அதாவது ஒரு சராசரி மிடில் கிளாஸ் வாசகனுக்கு..."
"ஐ ஸீ!"
"இவர்களில் பலர் வெறும் கற்பனைக் கதைகள் படிக்கும் மட்டத்துக்கு மேல் உயர்ந்து விட்டதாக நம்ப ஆசைப் படுகிறவர்கள்... அதே சமயத்தில் இவர்கள் விரும்புவ தென்னவோ சுவையாக, ரஞ்சகமாக எதையாவது படிக்க வேண்டுமென்பது..."
"ஸோ?"
"ஸோ நீங்கள் உங்கள் தினசரியில் அரசியல்வாதிகளின் காரசாரமான - ஆனால் உண்மையில் பொருளோ பயனோ அற்ற - பேச்சுக்களைத்தான் அதிகம் வெளியிட விரும்பு கிறீர்கள். போட்டியிடும் அரசியல் சக்திகள் பற்றிய ஊகங்களையும் தீர்ப்புகளையும் பூதாகரமாகவோ, நேரடி யாகவோ மர்ம நாவல் பாணியில் விறுவிறுப்பாக எழுதுகிறீர்ககள் - எக்ஸ் இப்படி, ஒய் அப்படி, இது சரி, இது தப்பு..."
"நீங்கள், ஜாக்குலீன் பற்றி எழுதுகிறீர்கள்".
"ஆமாம்".
அவன் புன்னகை செய்தவாறு, நிஜமாக யார் பக்கம் பார்க்க விரும்பினானோ, யாரைப் பார்க்க அங்கே வந்தானோ அவளைப் பார்த்தான். அவளும் புன்னகைத்தாள். அப்பாடா! இறுக்கம் தளர்ந்தது.
முதல் சுவர் தாண்டியாயிற்று.
"இந்தியர்கள் myth-ல் ஊறியவர்கள் - உண்மையை உள்ளபடியே ஏற்றுக் கொள்ள அவர்களுடைய இந்தப் பின்னணி தடையாயிருக்கிறது....the Indian's subconscious mythifies reality before accepting it.........நல்ல சக்திகள், தீய சக்திகள்; ஸூப்பர்உறீரோஸ், ஸூபர்டெமன்ஸ்; புனிதமானவை. பாபகரமானவை..... நம்முடைய காப்பிடலிஸ்ட் தினசரிகளும் Let's face it-- இந்த myth கள் நீடித்திருக்கவே உதவுகின்றன, அது லாபகரமான கொள்கையென்பதனால். உண்மை உணர்ந்து கொள்ளக் கடினமானது. அசுவாரசியமானதும் கூட......truth doesn't sell........"
"நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா, மிஸஸ் சென்?" என்றான் அவன். இன்னொரு சுவர் தாண்டும் முயற்சி, அத்தனை லாவகமான முயற்சியும் அல்ல. எனினும் எந்த முயற்சியும் வரவேற்கப்பட வேண்டியதே, ஊக்குவிக்கப்பட வேண்டியதே.
மிஸஸ் சென் அவனுடைய முயற்சியின் அங்கீகாரமாக அன்னியோன்னியமானதொரு விஷமத்தைப் பார்வையில் ஏற்றி அவன்மேல் வீசினாள். "எது" என்றால்.
"அதை நீ ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது" என்று அவளைப் பார்த்துக் கூறிய மிஸஸ். பிள்ளை, "ஷீ இஸ் ஆல்ஸோ ஏ ரொமான்டிக்-உங்கள் இலட்சிய வாசகர்களில் ஒருத்தி" என்றாள் அவனிடம். "அவள் வேண்டுவது எஸ்கெப்.... Catharis! ............. அரசியல் அரங்கம் முழுவதும் அவளைப் பொறுத்த வரையில் ஸஸ்பென்ஸ், த்ரில்ஸ் நிறைந்த ஒரு நாடக மேடை".
"இது அவரவர் இயல்பைப் பொறுத்து நிகழும் ஒரு பரஸ்னல் அனுபவம் என்று தானே ஆகிறது? எதன் நிமித்தம் வேண்டுமானலும் இது நிகழக்கூடும்... தினசரியை எப்படி நீங்கள் குறை கூறலாம்?"
"நீங்கள் இந்த இயல்பைப் பயன்படுத்திக் கொள்ளவே முயலுகிறீர்கள், அதைச் சரியான திசையில் செலுத்து வதில்லை. என்பதுதான் என் குறை...... what you give them are mere names and faces...... their speeches............. இவை அவர்களுடைய உள் மனதிலுள்ள myth-ல் கரைந்து வகை வகையான பிம்பங்களாகத் துளிர்க்கின்றன...... தவறான பிம்பங்கள்....."
"என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்?"
"சரியான பிம்பங்களை அவர்கள் மனதில் விதையுங்கள்....... tell them there are no heros...... no supermen. நமக்கு வேண்டியது புனிதமான ஒரு god figure அல்ல, இன்றைய சர்வதேச அரசியலின் உண்மைகளுக்குள் பொருந்தி இயங்கக் கூடிய செயல் வீரர்கள் திடமானவர்கள், தமக்குரியதை மிரட்டிப் பெறக் கூடியவர்கள்... வணிக ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தேசங்கள் ஒன்றையொன்று நுட்பமாக மிஞ்ச முயன்று கொண்டிருப்பதும், தம் பலத்தைப் பெருக்க முயன்று கொண்டிருப்பதும் தான் இன்றைய உண்மை: காந்தீய வார்ப்பில் உருவான அரசியல்வாதிகளை இன்று தேட முயல்வது சரியான அப்ரோச் அல்ல.."
அவன் கை தட்டினான். மிஸஸ். பிள்ளை முகத்தில் சலனமின்றி, "இதுவும் பழமையான பிம்பங்களின் விளைவுதான், இந்தக் கைதட்டல்" என்றாள். "ஒரு பெண்மண்யிடமிருந்து எத்தகைய பயனுள்ள கருத்துக் களையும் நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. வேடிக்கையாகக் கைதட்டி இந்நிகழ்ச்சியைத் தள்ளுபடி செய்கிறீர்கள்."
"மிஸஸ் பிள்ளை, you make me feel nervous."
"Relax. I am going" என்று அவள் தன் மேஜையை அவசரமாக ஒழுங்குபடுத்தி, மேலே கிடந்த சிலவற்றை இழுப்பறைக்குள் தள்ளி, கைப் பையைத் தூக்கிக் கொண்டு எழுந்தாள். "ஓ. கே!" என்று இருவரையும் பார்த்துக் கையை ஆட்டிவிட்டுக் கொண்டு கிளம்பினாள்.
இப்போது அவர்களிருவரும் தனியே.
"ஸோ!" என்றான் அவன் அவசரமாக, மௌனத்துக்கு, அதன் சங்கடங்களுக்கு, இடம் கொடுக்க விரும்பாதவன் போல. மௌனம் சிந்தனைகளையும் உணர்வுகளையும் தடை யின்றிப் பாயச் செய்வது, உணர்த்துவது. எனவே அபாயகரமானது. 'எப்போதும் எதனுடனும் ஒன்றாமல் வழுக்கி வழுக்கி ஓடியவாறு..." என்று அவள் அவனைப் பற்றி நினைத்தாள்.
"மிஸஸ் பிள்ளை அரசியலில் இருக்க வேண்டியது" என்றான் அவன்.
அவள் அவனுக்குப் பதில் கூற முடியாமல் மௌனமாக அவனைப் பார்த்தாள். 'இதுவல்லவே நீங்கள் பேச விரும்புவது?' என்று கூறும் பார்வை.
அவன் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். மௌனம்...
அவனுடைய செழிப்பான தலைமயிர், அகன்ற நெற்றி, எடுப்பான நாசி.
அவளுக்கு அவனுடைய மூக்கைத் தொட வேண்டும் போலிருந்தது.
மிகச் சாதாரணமான விஷயம். இருந்தாலும் இது எவ்வளவு கஷ்டமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது, இந்தத் தொடுகிற சங்கதி. எத்தனை சுவர்கள், போர்வைகள்.
எத்தனை வார்த்தைகளும்தான் வேறு!
பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப்...
"ஸோ.." என்று மறுபடி கூறியவாறு நிமிர்ந்தான். அவளுடைய அந்தப் பார்வையைச் சந்தித்தவுடன் மறுபடி சங்கடம் கொண்டு, அந்தச் சங்கடத்தை ஒளித்துக் கொள்ள முயன்று கொண்டு...
"மறுபடியும் நாம் தனியாக இருக்கிறோம்" என்றான் அவன்.
"--------------"
"பேசப் போவதில்லையா எதுவும்?"
"நான்தான் எப்போதும் பேசுகிறேன்.. இன்று நீங்கள் பேசுங்கள்."
அவன் தோள்களைக் குலுக்கியவாறு மேஜை மேல் விரல்களால் தாளம் போட்டான். அவள் அந்த விரல்களைப் பார்த்தாள். நீண்ட விரல்லள், மென்மை தொனிக்கும் விரல்கள். எதற்கோ தவிக்கும், தேடும், விரல்கள். மேஜை மேலிருந்த அவள் கைக்கு வெகு அருகில். Why doesn't he touch my hand, why doesn't he grip my shoulders?
God, why doesn't he do something?
"ஹவ் இஸ் யுவர் வைஃப்?" என்றாள் அவள். (ஆமாம்). வேறு வழியில்லை, இன்றைக்கும் கடைசியில் அவள்தான் பேச வேண்டி வந்தது.
"ஃபைன்."
"லெட்டர் வந்ததா?"
"உம். நேற்று."
அவள் ஏதோ சொல்வதற்குத் தொடங்கி, பிறகு வேண்டாமென்று நினைத்தவள் போலப் பேசாமலிருந்தாள். மறுபடி மௌனம்...
"நான் சாப்பிடுவதற்கு என்ன செய்கிறேனோவென்று ரொம்பக் கவலைப்பட்டுக் கொண்டு எழுதியிருக்கிறாள். சுவாமிக்கு விளக்கு ஏற்றுகிறேனா, குழாயில் ஜலம் நிற்கிறதுக்கு முன்னாலே குளிக்கிறேனா, வேலைக்காரன், தோட்டியெல்லாம் ஒழுங்காக வருகிறார்களா, ஸ்டவ்வை ரிப்பேர் பண்ணியாயிற்றா, என்றெல்லாம் கேட்டிருக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தன் அன்பைத் தெரிவித்திருக்கிறாள்".
அவள் ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் அவளிடம் சொல்வானேன்? சராசரி* இந்து மனைவியின் கேலிச் சித்திரமா? or just for the sake of making conversation? எப்படியோ, அவன் பேசட்டும். பேசப் பேச இறுக்கம் தளரும். இவன், இந்த இன்டலெக்சுவல், கவசங்கள் உதிர்ந்து மிருதுப்படுவான். உணர்ச்சிகளால் தீண்டப்படக் கூடிய நிலையை அடைவான்.
"இன்று காலை நானே சமைத்தேன். சாதம் பேஸ்ட் மாதிரி இருந்தது. சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டது. கத்தரிக்காய்க் கறி சிலது வேகவில்லை..."
(இன்றிரவு மறுபடி என் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அவனை அழைக்கலாமா? ஆனால் இப்போது, முதலில் அவன் பேசி முடியட்டும்).
அவள் சிரித்து,"சமையலும் சுலபமானதொன்றல்லவென்று தெரிந்ததல்லவா!" என்றாள்.
"நிச்சயமாக இல்லை... மிகக் கடினமான, மிக நுட்பமான...'
(அன்பே! நாம் ஏன்; இப்படி வேஷமாடிக் கொண்டிருக்கிறோம். நீ பேச விரும்புவது இதல்ல. Come on> Open out)
"தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எவ்வளவு எரிச்சலூட்டக் கூடியதாக இருக்குமென்பதை இப்போதுதான் உணர்ந்தேன்.... உயர்ந்த பதவியிலிருந்து திடீரென்று வீழ்ச்சியடைந்தது போன்ற உணர்வு, என் மேலேயே ஒரு இரக்கம்...பிரபுத்வ மனப்பாங்கின் சாயல் தொனிக்கிறதல்லவா? நானோ, Progressive கருத்துக்களைச் சார்ந்தவனாக என்னை நினைத்துக் கொள்ள ஆசைப்படுகிறவன்..."
"யாரும் எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்டாக இருக்க முடியாதல்லவா?"
"உண்மை."
அறையை ஒட்டியிருந்த மாடிப்படிகளில் திடீரென்று திபுதிபுவென்று காலடியோசைகள், பேச்சுக் குரல்கள்.
மணி ஒன்றாகி விட்டது.
"லஞ்சுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?் என்றாள் அவள்.
"வெளியில்தான் எங்கேயாவது போக வேண்டும். கையில் எதுவும் இன்று கொண்டு வரவில்லை."
"நானும் கொண்டு வரவில்லை.. ஷால் வீ கோ?"
ஒன்றாக நடந்து செல்லும்போது அவனுடைய தேகத்தின் அண்மை- அதன் நிஜம்-பளிச்சென்று அவளைத் தாக்கியது. மீட்டப்பட்ட தந்தியைப் போல உடலெங்கும் அதிர்வு. அவளுக் கேற்ற உயரம், உடலமைப்பு. கூப்பிட்டவுடன் வந்து விட்டான்...
இரண்டு நாட்களுக்கு முன் அவளுடைய ஃப்ளாட்டுக்குச் சாப்பிட வந்திருந்தபோது, ஓரிரு தடவைகள் அவளுடைய உடலின் மேடுகள், சரிவுகள் மேல் அவன் திருட்டுப் பார்வை வீசும்போது 'பார்வையும் களவுமாக'ப் பிடித்தாள்.
அவள் பிடிக்காத தருணங்களும் இருந்திருக்கலாம்.
அவர்கள் பேசியதென்னவோ, அன்று, மார்லன் பிராண் டோவின் படங்கள் பற்றி.
இன்று அவனுடைய வீட்டு வேலை பற்றிப் பேசியது போல.
கூப்பிட்டால்தான் வருவான்.
தன் ஆசைகளை வெளிப்படுத்த விரும்பவில்லை, அல்லது தெரியவில்லை.
hypocrite, or just clumsy?
ரெஸ்டாரண்டில் போய் உட்கார்ந்தார்கள். இதமான இருட்டு. சன்னமான இசை இன்றும், பழைய இந்திப் படப்பாட்டுகள்.
அன்றொரு நாள் இங்கு உட்கார்ந்திருக்கையில்தான் அவள் தன் வாழ்க்கைக் கதையின் Synopsisஐ அவனுக்குக் கூறினாள். பத்தொன்பது வயதில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது பற்றி, முப்து வயதில் அந்தத் திருமணம் கலைந்தது பற்றி. போர்டிங் ஸ்கூலில் படிக்கும் அவளுடைய பையன் பற்றி...காதலென்பது என்னவென்று அந்தப் பத்தொன்பதாவது வயதில் தனக்குத் தெரிந்திருக்கவில்லை, என்று அவள் அவனுக்கு விளக்கினாள். அவன் அவளுடைய லெக்சரர். Good features, forceful speaker. Swept off her feet.
Only to come down crashing, later.
இந்தப் பேச்சுக்கெல்லாம் பின்னணியாக அன்றும் இந்தப் பழைய படப் பாட்டுகள்தான் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த சினிமா பார்த்திருக்கிறீர்களா, அந்தக் காட்சி நினை விருக்கிறதா, என்று நடு நடுவே அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவன் எல்லாம் பார்த்திருந்தான். அவனுக்கும் எல்லாம் நினைவிருந்தது.
திடீரென்று ஒரு அந்நியோன்னியம் அவர்களிடையே முளைத்தது.
பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பார்த்திருந்த படங்கள் இந்த அந்நியோன்னியத்துக்கு அஸ்தி வாரமாக அமைந்ததை நினைத்தபோது அவளுக்கு ஆச்சரிய மாக இருந்தது.
பத்து, இருபது வருடங்கள் முன்பே இது தீர்மானிக் கப்பட்டிருந்ததா, அப்படியானால்? இப்படி அவர்கள்...
பொதுவான ஒரு சரடு அந்நியோன்னியத்தை உருவாக்கு கிறதா, அல்லது அந்நியோன்னியதுக்கான தேவைதான் பொதுவான சிலவற்றைப் பரபரப்புடன் தேடி நிறுவ முயல்கிறதா?
"அமரிடமிருந்து நேற்று கடிதம் வந்தது" என்றாள் அவள்.
அவன் முகத்தில் கேள்விக்குறி தெரிந்தது.
"என் பிள்ளை" என்று அவள் விளக்கினாள். "அடுத்த மாதம் ஏழாந்தேதி அவன் பரீட்சைகள் தொடங்குகின்றனவாம்.."
"எந்தக் கிளாஸில் இருக்கிறான் இப்போது?"
"ஒன்பதாவது."
ஆம். ஒன்பதாவது. முகத்தில் பூனைமயிர் அரும்பத் தொடங்கியாயிற்று. அமர் அடுத்த மாதம் பரீட்சை முடிந்து லீவுக்காக இங்கு வந்து விடும்போது, அவள் யாரையாவது வீட்டுக்கு அழைத்துச் செல்லும்முன் யோசிக்க வேண்டியிருக்கும்.
வெயிட்டர்.
"இரண்டு சாப்பாடு - வெஜிடேரியன்.
"காய்கறி என்ன வேண்டுமென்று வெயிட்டர் கேட்டான்.
"என்ன இருக்கிறது?"
"கத்தரிக்காய் கொத்சு, உருளைக்கிழங்கும் தக்காளியும், உருளைக் கிழங்கும் கீரையும், காலிஃப்ளவர், வெண்டைக் காய்..."
"என்ன வேண்டும்?" என்ற பாவனையில் அவள் அவனைப் பார்த்தாள்.
"ஆர்டர் எனி திங்க் யூ லைக்" என்றான் அவன்.
இவனுக்கென்று ஒரு விருப்பம் கிடையாதா? இந்த 'எதுவானாலும் பரவாயில்லை' மனப்போக்கு எரிச்சலூட்டு கிறது.
இது அவளைப் பாதுகாப்பாக உணரச் செய்யவில்லை.
வெயிட்டர் போன பிறகு மறுபடி அவளுக்கு அவனுடைய மூக்கைப் பிடித்து ஆட்ட வேண்டும் போலிருக்கிறது. Look, why don't you say you want this, you want that. Say You want me.
ஆனால் அவனைச் சொல்லியும் குற்றமில்லை. அவன் உருவான சூழ்நிலை.
அதனை ஊக்குவிக்கும் ஒன்றல்ல. மரபு என்ற பெயரில் "தானை" ஒடுக்கும் கட்டுப்பாடுகள். பண்பாடு என்ற பெயரில் மூடப் பழக்கங்கள். அவனே சொன்னது போல typical inhibited middle class South Indian Brahmin household.
ஆமாம். அன்று அவள் தன்னைப் பற்றியெல்லாம் கூறிய அன்று - அவனும் தன்னைப் பற்றிக் கூறினான். தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த சிலவற்றை இறக்கி வைத்தான். முதலில் அவன் டில்லியிலிருந்தே பிறந்து வளர்ந்ததைப் பற்றி brief resume. பிறகு அவள் முன்பு செய்த தவறைத் தானும் சமீபத்தில் செய்ய நேர்ந்தது பற்றி. கல்யாணம்...
"ஒவ்வொரு கல்யாணமும் தவறாக இருக்க வேண்டிய தில்லை".
"ஆமாம். தவறாமலிருக்கத்தான் மிகவும் எச்சரிக்கை எடுத்துக் கொள்ளப்படுகிறதே"இ என்றான் அவன். அவளும் ஐயர். அவளும் வடமாள். இட்டிலி, தோசை பண்ணத் தெரியும்.
பாடத் தெரியும், பூஜை பண்ணத் தெரியும், இருட்டில் கணவனுக்காகத் தேவடியாளாக இருக்கத் தெரியும்...
சில மனிதர்கள் இத்தகைய மனைவிகளுடன் சந்தோஷ மாக இருக்கிறார்கள்தான்.
"நீங்கள் இல்லையா?" என்று அவள் கேட்டாள். உடனேயே. அடடே, அளவு மீறிய ஆர்வத்துடன் இதைக் கேட்டதாக அவனுக்குப்பட்டிருக்கலாம், என்று உணர்ந்து தன்னையே கடிந்து கொண்டாள்.
"I don't know" என்றான் அவன் ஒரு தேவதாஸ் பெருமூச்சுடன். "I don't know" எல்லாருக்கும் தற்காலிக மாகவாவது- அல்லது தற்காலிகமாக மட்டுமே-தேவதாஸாக இருக்க ஆசை. Tragic hero.
நான் பார்த்திருக்கும் ஹாலிவுட் அல்லது இந்திப் படங்களை அவள் பார்த்ததில்லை, என்றான் அவன். பாடல்களைக் கேட்டதில்லை. புத்தகங்களைப் படித்ததில்லை.
Except சிவகாமியின் சபதம்.
என்ன? என்று இவள் கேட்டாள்.
"ஒரு பிரபல தமிழ் சரித்திர நாவல்" என்று அவன் விளக்கினான். பிறகு தொடர்ந்து:
"பிராண்டோ, சாப்ளின், லாரென், ஷெர்லி, திலீப், குருதத், ஸைகால், பங்கஜ் மல்லிக், ஸுரையா, லதா- என் இளமையின், அதன் கனவுகளின், ஒரு பகுதியாக என்னுள் கரைந்துவிட்ட பெயர்கள் - but these names don't mean anything to her இன்ஃபாக்ட் இந்தியே தெரியாது அவளுக்கு..."
"இங்கிலீஷ்?"
"சென்னை சர்வகலாசாலை பி.ஏ.- நாங்கள் இருவருமே படித்துள்ள நாவல்கள், Pride and Prejudice, David Copperfield, Good Earth."
"அவற்றைப் பற்றிப் பேசலாமே!"
அவன் சிரித்தான். சோகச் சிரிப்பு, தேவதாஸ் சிரிப்பு. அவன் மனைவிக்கு இந்த தேவதாஸ் ஸ்டைல் புரியாது. What a pity.
"லுக், இங்கேயே டில்லியில் பிறந்து வளர்ந்த ஒருத்தியை மணக்காமல் உன்னைத் தடை செய்வது யார்?"
"ஜோஸ்யாஸ்" என்றான் அவன். "என் ஜாதகம் இந்தப் பெண்ணுடையதுடன்தான் பொருந்தியது".
"ஹவ் ரிடிகுலஸ்!"
இதுதான் எங்கள் வாழ்க்கை, என்பதுபோல அவன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.
வெயிட்டர்.
சாப்பாடு - சப்பாத்தி, சப்ஜி, பருப்பு...
"ரைஸ்?" என்றாள் அவள்.
"ஸாரி, தீர்ந்துவிட்டது".
"அடடா!" என்று அவள் அவனைப் பார்த்தாள்.
"Don't look so sad. எனக்கு ரைஸ்தான் பிடிக்கும் என்பது ஒன்றுமில்லையே" என்றான் அவன். "சப்பாத்தி இஸ் ஓ.கே".
தன்னை ஒரு டிபிகல் ஸவுத் இந்தியனல்லவென்று காட்டிக் கொள்ள இவன் மிகவும் பிரயாசைப்படுகிறான். ஆனால் உண்மையில்? -
"நேற்று நான் உப்புமா பண்ணினேன்" என்றாள் அவள், அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறு, ரொட்டியின் ஒவ்வொரு விள்ளலையும் கையில் வைத்துக் கொண்டு எதில் தோய்த்துக் கொள்வது என்பதை ஒரு பெரும் பிரச்னை போல யோசித்தவாறு அவன் தயங்குவதை ரசித்தவாறு.
"ரியலி?"
"நன்றாக வந்திருந்தது...நீங்கள் சாப்பிட்டிருக்க வேண்டும்".
"கொண்டு வருவதற்கென்ன?"
"அப்போது மிஸஸ். பிள்ளை அதைக் காலி பண்ணியிருப்பாள்".
அவன் சிரித்தான். (குட், இறுக்கம் தளர்ந்து வருகிறது).
"ஐ ஸே, இந்த மிஸஸ் பிள்ளை என்னைப் பயங்கொள்ள வைக்கிறாள்..."
"ஷீ இஸ் நைஸ்" என்றாள் அவள். அவன் தோள்களைக் குலுங்கிக் கொண்டான். கெரி கிராண்ட் போல. பீடர் ஒடுல் போல. அவனுடைய மனைவிக்கு இந்த தோள் குலுக்கல் புரியாது, அநேகமாக. ஸோ என்னோடு இருக்கும்போது இவன் அடிக்கடி தோள் குலுக்கினாலும் நான் மைன்ட் செய்யக் கூடாது...
"பருப்பைத் தொடவேயில்லையே?" என்றாள்.
"உம், உம்",என்றான் அவன். தான் சாப்பிடுவதில் அவளுடைய நுணுக்கமான சிரத்தையினால் சங்கடமடைந்தவனாக.
"மிஸஸ் பிள்ளையிடம் என்ன பயம்?" என்றாள் அவள். "அரசியல் பேசுவதாலா?"
"நோ, நோ" என்று ஒரு கணம் ரொட்டியை மௌனமாகச் சுவைத்தான். விழுங்கினான். தண்ணீர் குடித்தான். "நீ சாப்பிடவில்லையே!" என்றான்.
"நீங்கள் முதலில் சொல்லுங்கள்".
"வந்து...ஐ மீன்... நம்மைப் பற்றி அவள் ஏதோ சந்தேகப்படுகிறாளோ என்று...."
"என்ன சந்தேகம்?"
மறுபடி கேரிகிராண்ட்.
"எனக்குப் புரியவில்லை" என்றாள்.
"யூ நோ..நமக்குள்ளே..."
"நமக்குள்ளே?"
அவன் பேசாமலிருந்தான்.
"ஏதாவது இருக்கிறதா, நமக்குள்ளே?"
"............"
அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள். நன்றாக மாட்டிக் கொண்டான். ஆமாம் சொல்லப் பயம். இல்லை சொல்லவும் பயம்.
"சொல்ல வேண்டாம்" என்று சட்டென்று தன் இடது கையால் அவனுடைய இடது கையைப் பற்றினாள். குப்பென்று மின்சார அதிர்வு போல... அவன் ஆட்சேபிக்க வில்லை. கையை அசையாமல் வைத்திருந்தான். அவள் அவன் புறங்கை மேல் சற்றுநேரம் வருடிக் கொண்டிருந்தாள். தோசையைத் திருப்புவது போல கையைத் திருப்பி, "நைஸ் ஹாண்ட்" என்று உள்ளங்கை மேலும் வருடினாள். "அழகிய விரல்கள் உனக்கு, தெரியுமா?" என்று ஒவ்வொரு விரலாக மீண்டும் மீண்டும் வருடி வருடி....
சட்டென்று அவன் தன் விரல்களை அவள் விரல்களுடன் கோர்த்துக் கொண்டான். அழுத்தினான்.... தன் கையால் மெதுவாக அவள் கை மீது வருடத் தொடங்கினான்.
அவளுடைய சேலைத் தலைப்பு நழுவி விழுந்தது. அவன் பார்வை அவளுடையதை நாடியது. அவள் சிரித்தாள்.
"ஐ ஆம் ஹாப்பி" என்றாள். "ஐ ஆம் ஹாப்பி வித் யூ"
"நானும்" என்றான் அவன், இலேசான புன்னகையுடன். ஆனால் அதில் பூரண நிச்சயமில்லை. Spontaneity இல்லை.
Isn't he even sure when he's happpy?
ஆனால் அவன் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறான். இது அவனுக்கே தெரிந்தாலும் தெரியாவிட்டாலும். அவன் காது நன்றாகச் சிவந்து விட்டது.
வெயிட்டர்.
அவர்கள் கைகளைத் தொடாமல் வைத்துக் கொண்டார்கள். அவள் சேலைத் தலைப்பைச் சரி செய்து கொண்டாள்.
ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? வெயிட்டர், பிஸ்தா. இரண்டு.
அன்று அவளுடைய வீட்டில், மார்லன் பிராண்டோவின் துல்லியமான பாவங்கள் பற்றி, உதட்டசைக்காமல் பேசும் முறை பற்றி. அவன் நெற்றி பற்றி, பிறகு அவன் உதடுகள் பற்றிப் பேசினார்கள். அவள் சொன்னாள். You also have nice lips.
அப்போதும் அவன் காது சிவந்து போயிற்று. அன்று அவன் குறைந்த பட்சம் அவளை முத்தமிடவாவது செய்வா னென்று அவள் எதிர்பார்த்தாள். அன்று அவர்களிடையே நிலவிய மௌனங்கள் எத்தனை உஷ்ணம் நிரம்பியன வாயிருந்தன. எததனை முறை அவர்கள் தம் கவசங்களை நழுவவிட்டு, ஒருவரோடொருவர் மிக இயல்பாக உணர்ந்து தம் ஆழங்கள் மற்றவரால் தொடப்பட்டுக் கிளர்ச்சி யடைந்து அணைப்பின் விளிம்புவரை சென்று மௌனங்களில் சிக்கிக் கொண்டு -
தயக்கம் - பயம் -
சந்துகளில் திரும்பி அந்தக் கணத்தைக் கலையவிட்டு, மீணடும் உருவாக்கி மீண்டும் கலைத்து -
அன்று அவர்கள் கைகளைக் கூடப் பற்றிக் கொள்ள வில்லை.
இன்றுதான் அது நிகழ்ந்திருக்கிறது.
மிக மெதுவான பயணம். இந்த ரீதியில் - அவளுடைய மகன் வந்துவிடுவான். அவனுடைய மனைவி வந்துவிடுவாள். நேரம் அதிகமில்லை.
உண்மையைச் சந்திக்க இவன் ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்?
உண்மை அழகானது. அன்பே.
நமக்கிடையே நிகழ்ந்து கொண்டிருப்பது ... இதுதான் உண்மை ...
வா, இதை முழுமையாக வெளிக் கொணருவோம்.
ஐஸ்கிரீம்.
என்ன செய்யப் போகிறானென்று அவனைக் கேட்க வேண்டும். அவள்தான் கேட்க வேண்டும். அவன் தான் கேட்க மாட்டானே.
எதுவுமில்லை, என்று அவன் கூறுவான். அவள் கேட்க வேண்டுமென்றுதான் அவன் எதிர்பார்க்கிறான்.
என்னுடன் டின்னர் சாப்பிடலாம், என்று அவள் உடனே கூற, அவனும் சரியென்பான்.
ஆனால் அவனே கேட்டால் நன்றாயிருக்கும்.
அவன் மௌனமாக ஐஸ்கிரீம் தின்று கொண்டிருக்கிறான். நடுவே நிமிர்ந்து அவள் பார்வையைச் சந்தித்து, சட்டென்று வேறிடம் தாவுகிறது அவன் பார்வை.
சும்மாதான் பார்த்தேன், என்பது போல.
சும்மாதான் உன்னுடன் வந்தேன்.
சும்மாதான் உன்னுடன் சாப்பிடுகிறேன்.
சும்மாதான்.
ஆனால் நீ கூப்பிட்டால் வந்துவிடுவேன்.
This fellow is getting on my nerves.
அவள் பேசாமலிருந்தாள். மௌனம் அவனைப் பதட்டம் கொள்ளச் செய்யட்டும். அவன் எதையாவது பேச முயலட்டும்.
ஒரு கணம், இரண்டு கணம்...
ஸ்பூன்கள் கிண்ணத்தில் சுரண்டும் ஓசை மட்டும் பூதாகாரமாகக் கேட்கிறது.
அவன் திடீரென்று, "ஒரு சாவைப் பார்த்தேன் இன்று" என்றான்.
அவள் முகத்தில் கேள்விக் குறியுடன் அவனுடைய முகத்தை - அவன் இப்போது அவள் பக்கம்தான் பார்த்துக் கொண்டிருந்தான் - துழாவினாள்.
"நான் வழக்கமாக ஏறும் பஸ் ஸ்டாண்டில் ஒருவன் ஓடும் பஸ்ஸில் தொத்தி ஏறும்போது சறுக்கி விழுந்தான். பின்னாலேயே வந்து கொண்டிருந்த இன்னொரு பஸ் அவன் மேல் ஏறி - இஸ்! It was horrible"
இப்போது அவள் தன் முகத்தில் அனுதாபத்தைக் காட்ட வேண்டும்.
தன் பார்வையின் சவால் பிளஸ் ஆதங்கம் Combination ஐ ஸ்விச் ஆஃப் செய்ய வேண்டும். இது இப்போது பொருத்தமற்றதாயிருக்குமென்பதால்.
I hate him.
நெருக்கமான இந்தக் கணம் அவன் மேல் சுமத்துகிற பொறுப்பைத் தட்டிக் கழிக்க அவன் கையாளும் உபாயம்.
விபத்துகள் தினசரி நிகழ்கின்றன. மனிதர்கள் தினசரி இறக்கிறார்கள்.
But you and I are alive at this moment.
அவள் எதுவும் பேசவில்லை.
"எனக்கு மனசே சரியில்லை. அதைப் பார்த்த பிறகு" என்றான் அவன், மறுபடி.
பின் எதற்காக என்னுடன் வந்தாய்? எதற்காக ஐஸ் கிரீம் சாப்பிட்டாய்?
இறந்தவனுக்கு எத்தனை வயது, என்று ஏதோ கேட்டு வைத்தாள்.
அவன் சொன்னான்.
அவன் சொன்னதெதுவும் மனதில் பதியவில்லை. உதடுகள் அசைவதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். எத்தனை அழகிய உதடுகள் நிஜமாகவே.
வெயிட்டர்.
அவன் பணம் கொடுக்க யத்தனித்தான். ஆனால் அவள் பிடிவாதமாக அதை எதிர்த்து, தான் பணம் கொடுத்தாள்.
அவனைப் பழி வாங்கி விட்டது போல ஒரு திருப்தி.
இருவரும் வெளியே வந்தார்கள். இரண்டே கால். இப்போது மறுபடி அக்கட்டிடத்தின் வெவ்வேறு மாடிகளில், வெவ்வேறு அறைகளில், அவர்கள் சிறைப்பட வேண்டும்.
அவன் நாளைய தினசரியை, அவர்கள் அடுத்த மாதத்து, பெண்கள் உலகத்தை உருவாக்குவதில் முனைய வேண்டும். ஒரே முதலாளியின் இறுவேறு முகங்களை உருவாக்க வேண்டும்.
But what about our own faces?
நீ நீயாக, நான் நானாக, ஒருவர் அண்மையில் ஒருவர் உணரக்கூடிய உண்மைக்காக நீ பரபரக்கவில்லையா?
நான்தானா கூப்பிடவேண்டும்?
நீ என்னைத் தேவடியாளாக உணரச் செய்கிறாய்.
உனக்கு வேண்டியது தேவடியாள்தான் பொலும்.
தோசை வார்க்கும், பூஜை செய்யும் தேவடியாள்.
அவள் புன்னகை செய்தாள். 'என்ன?' என்பது போல அவன் அவளைப் பார்த்தான்.
ஒன்றுமில்லையென்பதுபோல அவள் தலையை அசைத்தாள்.
அவர்கள் அலுவலகத்தை நோக்கி நடக்கத் தொடங்கி னார்கள்.
-----------------------------------------------------------
This file was last updated on 30 October 2011.
.